நட்சத்திரங்கள் விழும் இரவினில்! கவிஞர் இரா. இரவி !




நட்சத்திரங்கள் விழும் இரவினில்!

கவிஞர் இரா. இரவி !



இயந்திரமயமான வாழ்க்கையிலிருந்து விடுபடுங்கள்
இரவினில் வாணத்தை இனிதே ரசியுங்கள்!



வானம் போதிமரம் என்றார் கவியரசு வைரமுத்து
வானம் உங்களுக்கு வாழ்க்கையை கற்றுத்தரும்!



வானில் தோன்றிடும் வானவில் அழகுதான் மறையும்
வானிலிருந்து சில நிமிடங்களில் ! அழகு நிரந்தரமன்று!



வானத்தில் தெரியும் நிலவோ அழகோ அழகு
வான்நிலவை மேகங்கள் மறைத்து விளையாடும்!



நிலவென்னும் இளவரசியின் தோழிகளாக நட்சத்திரங்கள்
நிதமும் தோன்றும் வெவ்வேறு விதமாக!



எண்ணிப் பார்த்து தோற்றுவிடுகிறோம் நட்சத்திரங்களை
எண்ணிலடங்கா மகிழ்ச்சியை மலர்வித்து மகிழ்கின்றன !



வானை ரசிக்க பொறுமையும் ரசனையும் வேண்டும்
வானின் வண்ணங்களை ரசிப்பது தரும் இன்பம்!



இரவு மிக நீளமானது கவலையில் வாடுவோருக்கு
இரவு மிக சுருக்கமானது ரசித்து வாழுவோருக்கு !



தேய்வது போல தோன்றும் தேய்வதில்லை நிலவு
வளர்வது போல தோன்றும் வளரவுமில்லை நிலவு!



அமாவாசையன்று வானில் தெரிவதில்லை நிலவு
அமாவாசையன்றும் நிலவு இருப்பது உண்மை!



முழுநிலவு நாளில் காணக் கண் இரண்டு போதாது
முழுவதுமாகக் கொள்ளை அடித்து விடும் மனதை!



பசித்தவனுக்கு தோசையாகத் தெரியும் நிலவு
புசித்தவனுக்கு விளக்காகத் தெரியும் நிலவு!



சூரியனின் ஒளியைப் பகிர்ந்திடும் நிலவு
சுந்தரமாக சுண்டி இழுக்கும் வனப்பு நிலவு!



இனியாவது இரவில் ரசியுங்கள் வானத்தை
இயந்திர வாழ்வு இனிமையாக அமையும்!

கருத்துகள்