இலக்கிய இணையர் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் ஆய்வுரை கவிஞர் கே ஜி ராஜேந்திர பாபு







இலக்கிய இணையர் படைப்புலகம் !

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் ஆய்வுரை கவிஞர் கே ஜி ராஜேந்திர பாபு 

78926 27066 

வெளியீடு வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17.
பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
மதிப்புரைக்கு மதிப்புரை

நண்பர்களின் எழுத்துச் சிறப்பை தருணம் கிடைக்கும் போதெல்லாம்
பாராட்டும் பண்புமிக்க அமரர் தமிழ்த்தேனீ இரா.மோகனைக் குருவாகக் கொண்ட
ஹைக்கூ இரா.இரவி எழுதிய நூல் “இலக்கிய இணையர் படைப்புலகம்”. தமிழ்த்தேனீ
இரா.மோகன் அவர்களும் அவரது இணையர் பேரா. நிர்மலா மோகன் அவர்களும்
இணைந்தும்-தனித்தும் எழுதிய நூற்களுக்கு இரா.இரவி எழுதிய மதிப்புரைகளின்
தொகுப்பு இந்நூல். ஐம்பது நூற்களுக்கு மதிப்புரை எழுதியுள்ளார். வானதி
பதிப்பகத்தின் அழகான வெளியீடு.
“பன்முக நோக்கில் புறநானூறு” என்ற நூலுக்கு எழுதிய மதிப்புரையில்..
“ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் சங்க இலக்கியம் தொடர்பாக
சான்றோர்கள் எழுதிய கருத்துக்களை மேற்கோளாக வைத்து எழுதி இருப்பது நல்ல
உத்தி ஆகும். கட்டுரையை முழுவதும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும்
விதமாக உள்ளன.. சங்க இலக்கியம் தொடர்பாகத் தமிழறிஞர்கள் எழுதிய பல்வேறு
நூல்கள் படித்து அதிலிருந்து தேன்துளி போல சேகரித்து மேற்கோள் காட்டியுள்ளது
சிறப்பு”
இந்நூல் எழுதுவதற்கு துணை நின்றவை 86 நூல்கள் என்று இரா.இரவி
எழுதியதைப் படித்தபோது தமிழ்தேனீயின் உழைப்பு-சேகரிப்பு உணரமுடிகிறது
“பன்முக நோக்கில் குறுந்தொகை” க்கு எழுதிய மதிப்புரையில்…
“இன்று பெண்கவிஞர்கள் மிகக் குறைவாக உள்ளனர். சில பெண் கவிஞர்கள்
திருமணமானதும் எழுதுவதையே நிறுத்தி வருகின்றனர். இந்நிலை மாறவேண்டும்.
இப்படிப் பல சிந்தனைகளை எழுப்பியது இந்நூல்” என்பது இரவியின் கூற்று.
முனைவர்.இரா.மோகனின் நூல் இரவிக்கு உருவாக்கிய சிந்தனை இது.
“மு.வ. அல்லது முன்னேற்ற வரலாறு” என்ற நூலைப் படித்த இரவி,”இன்றைய
எழுத்தாளர்கள் அனைவரும் மு.வ. அவர்களின் படைப்புகளைப் படித்து அறிய
வேண்டும். பிறமொழி கலப்பு இன்றி அழகு தமிழ்நடையில் தெளிந்த நீரோடை
போன்று எழுதி உள்ளார் என்பதை அறிய முடிகிறது” என்று மு.வ. தமிழின் சிறப்பை
தமிழ்தேனீ நூல் மூலமாக அறிந்து சொல்லியுள்ளார்.
“தமிழில் முனைவர் பட்டம் பெற்றமைக்காகப் பாராட்டு விழா நடத்த அனுமதி
கேட்டபோது பாராட்டு விழா வேண்டாம் என்று மறுத்த பண்பாளர் மு.வ.அவர்களின்
புகழைப் பறைசாற்றும் நூல் இது. இன்றைய இளைய தலைமுறை அனைவரும் படிக்க
வேண்டிய அற்புத நூல்” என்று பரிந்துரைக்கும் போதே ஒரு நல்ல தகவலை எடுத்துத்
தந்துள்ளார் கவிஞர் இரா.இரவி.
பேராசிரியராக இருந்துகொண்டே படைப்பிலக்கியத்தில் வெற்றி பெற்ற
மு.வ.வின் நூல்கள் கையில் இருப்பதே பெருமை என்றிருந்த காலம் அன்றிருந்தது.

“கவிஞர் மீரா படைத்த நூல்கள் கொஞ்சம். ஆனால் அதன் வீச்சு மிகமிக
அதிகம். அந்தக் காலத்து இளைஞர்கள் கைகளில்
கனவுகள்+கற்பனைகள்+காகிதங்கள் என்ற நூல் இருக்கும். மனதில் காதல் இருக்கும்.
ஒரே ஒரு கவிதை நூலின் மூலம் உச்சம் அடைந்தவர் மீரா. இந்த நூலில் உள்ள
கவிதைகள் திரைப்படத்திலும் இடம்பெற்றன.” இந்திய இலக்கியச் சிற்பிகள்
வரிசையில் “மீரா” குறித்து எழுதப்பட்ட நூல் குறித்த மதிப்பீடு இது.
“தமிழ்வழிக் கல்வியைத் தமது இறுதி மூச்சு வரை வ.சு.ப. மாணிக்கனார்
வற்புறுத்தி வந்தார். அதன் தொடக்க முயற்சியாக, மேலைச் சிவபுரியில் தமிழ்வழி
மழலையர் பள்ளியை அவர் நிறுவினார்”. இப்படிப் பல அரிய தகவல்களை அறிந்திட
வாய்ப்பாக வந்துள்ள உயரிய நூல் என்று ‘தமிழ்க்கதிர் வ.சு.ப. மாணிக்கனார்” நூல்
பற்றி எழுதியுள்ளார்
“பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்” என்ற நூலுக்கான
மதிப்புரையில் ஒரு துளி.
“இந்நூலை இந்த நூலின் நாயகர் ஔவை நடராசன் படித்து முடித்ததும் அவரது
வாழ்நாளில் இன்னும் பல ஆண்டுகள் கூடிவிடும் என்பது உண்மை. படிக்கும்
-- வாசகர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி சம்பந்தப்பட்ட படைப்பாளிக்குக் கூடுதல்
மகிழ்ச்சியைத் தரும்.”
“ஔவை நடராசன் அவர்கள், கர்ணனுக்கு கவச குண்டலம் போல நகைச்சுவை
உணர்வு உடன்பிறந்த்து “என்பதை அவரது நகைச்சுவைகள் மூலம் விளக்கி உள்ளார்
நூலாசிரியர்.
சங்க இலக்கியங்களில் வரும் 41 பெண்பாற் புலவர்கள் பற்றி ஔவை
நடராசன் அவர்கள் தொகுத்து எழுதிய விளக்கங்கள் நூலில் உள்ளன என்கிறார்
இரா.இரவி.
“இலக்கிய இணையர்கள் இணைந்து எழுதிய “சிற்பியின் படைப்புலகம்” என்ற
நூல் குறித்து “கவிஞர் சிற்பி அவர்களின் படைப்புகள் என்ற கடலில் மூழ்கி
முத்தெடுத்து முத்து மாலையாக்கி இந்த நூலை வழங்கியுள்ளனர். மகாகவி பாரதி
பற்றி கவிஞர் சிற்பி எழுதிய கவிதை மிக நன்று.”
“காசிக்குப் போகிறவர்கள்/ விட்டு விட வேண்டுமாம்/ சிலவற்றை விட்டு
விட்டேன்/ குடுமியை/ குறுகிய பார்வையை/ குருட்டு நம்பிக்கைகளை/ தலைப்பாகை
தரித்தேன்/ தேசபக்தியை வரித்தேன்/ இனிது என் தாய்மொழி/ எனும் உணர்வைப்
பெற/ பன்மொழி பயின்றேன்”
இந்த கவிதையை நாம் படிக்கும் போது பாரதி பலமொழி படித்ததன் காரணம்
“இனிது தமிழ் மொழி என்றுணர” எனச் சொல்லியிருப்பது அருமையாய்-புதியதாய்
இருக்கிறது எனலாம்
“எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும்படி, புண்படும்படி அல்ல-
இதமாக-நாகரிகமாக சொல்லுங்கள். எதையும் எதிர்மறையாகக் காணாமல்,
நேர்முகமாக எதிர் கொள்ளப் பழகுங்கள். பழைய போக்கிலேயே செல்லாமல் புதிய
கோணத்தில் மாற்றிச் சிந்தியுங்கள்” வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய
வாழ்வியல் நெறியை வெற்றிக்கான சூத்திரத்தை
இயல்பாகவும் எளிமையாகவும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதியுள்ள
நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள் என்று “மகிழ்ச்சி மந்திரம்” என்ற நூலுக்கு
எழுதியுள்ளார்.
நண்பர்களின் எழுத்துச் சிறப்பை தருணம் கிடைக்கும் போதெல்லாம் பாராட்டும்
பண்பினர் அமரர் தமிழ்த்தேனீ மோகன் என்பதற்கு எடுத்துக்காட்டு இதோ
“நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன், வானதி பதிப்பகம்
பதிப்புச் செம்மல் இராமநாதன் வெற்றி கூட்டணியின் தரமான படைப்பாக நூல்
உள்ளது. 40 சிறிய கட்டுரைகளின் தொகுப்பு நூல். ‘இனிய நண்பர் கவிஞர் கே ஜி
ராஜேந்திர பாபு தினமலர் வாரமலரில் தன்னம்பிக்கை விதைக்கும் கவிதை எழுதி
இருந்தார். படித்துவிட்டு அலைபேசியில் அழைத்து அவரைப் பாராட்டினேன். அதில்
வரும் ஒரு வரி ‘என்றும் மகிழ்ச்சி இதுவே மந்திரம்” என்று பெயர் சூட்டிய காரண
காரியத்தை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார் என்று “மகிழ்ச்சி மந்திரம்” என்ற
நூலுக்கான மதிப்புரையில் எடுத்துக் கொடுத்துள்ளார் இரா.இரவி.
“மோர் ஊற்றும் போது ஒன்ஸ்மோர் என்று சொல்லிக் கையில் வாங்கி
உறிஞ்சிக் குடித்துப் பாருங்கள். உங்கள் அன்பு மனைவியின் முகம் அன்றலர்ந்த மலர்
போல மலரும்” என்ற வாசகம் “திறமைதான் நமது செல்வம்” என்ற நூலில் என
இரா,இரவி சொல்கிறார்.
இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை இனிவரும் உலகம் நம்ப மறுக்கும்
என்று காந்தியடிகளைச் சொன்னார்கள். அம்மொழி மாமனிதர் அப்துல் கலாமிற்கும்
பொருந்தும் என்பதை மெய்ப்பிக்கும் நூல் என்பது “கனவெல்லாம் கலாம்” என்ற
நூலுக்கான மதிப்புரை.
“குலோத்துங்கம் பண்ணையில் கொய்த மலர்கள்” என்ற நூலில்,
“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு கேள்விப்பட்டு இருக்கின்றோம். எதிர்முக
சிந்தனையை நேர்முக சிந்தனையாக சிந்தித்துள்ளார் வா.செ.கு.
“ஆறிலும் கல்வி, நூறிலும் கல்வி
இன்றைய பணி இன்றைய கருவி!”
.இன்றைய பணியை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய
பணியை நேற்றைய கருவி கொண்டு செய்யும் மக்களின் நாளைய வாழ்வு நலியும்”.
என்று இரா.மோகன் எழுதியதைத் தந்துள்ளார் இரவி.

“தாமரை நூறு இதழ்கள் தி.க.சி யின் ஆக்கத்தில் தான் வந்தன.
அவருடைய ஆகப்பெரிய கொடையும் சாதனையும் இதுதான்- “தி.க.சி என்னும்
ஆளுமை”என்ற நூல் “இலக்கிய ஞானி தி.க.சி என்ற மாமனிதர் பற்றிய ஆவணமாக
நூல் வந்துள்ளது. தமிழ்த்தேனீ இரா.மோகன், புதுகைத் தென்றல் இதழாசிரியர்
புதுகை மு.தருமராசன் ஆகிய இருவரும் பாராட்டுகுரியவர்கள்.” என்பது
இரா.இரவியின் கருத்து.

“ஆயிரம் சாதனைகளைக் காட்டிலும் ஒரே ஓர் உள்ளத்திலாவது நம்பிக்கை விளக்கு
ஏற்றுவது வாழ்க்கையின் பொருளை முழுமையாக்குவது என்பார் இறையனபு என்று
தொகுப்பாசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இது வெறும் வாசகமல்ல.”-
“இறையன்பு களஞ்சியம்” என்ற நுலுக்கான மதிப்புரையில் ஒரு துளி.
“நூலின்றி அமையாது உலகு”-என்ற நூலிலிருந்து ஓர் எடுத்துக்காட்டு.
“முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் புத்தகங்கள் பற்றிய கட்டுரையில் “இதயமே
இல்லாத சமூகத்தின் இதயம் எதுவென்றால் புத்தகம். அதுதான் உலகத்திலேயே
இல்லாத புதுமைகளையெல்லாம் நிகழ்த்திக் காட்டும் என்றார்”\
வாழும் கவிஞர்களின் படைப்புகளைப் பாராட்டி, கலைமாமணி ஏர்வாடியார்
நடத்தும் “கவிதை உறவு” என்னும் திங்கள் ஏட்டில் தமிழ்த்தேனீ முனைவர்
இரா.மோகன் எழுதிய கட்டுரைகள்
நூல்களின் தலைப்புகள் “கவிதைச் சுடர்”,” கவிதைச் சாரல்” கவிதைக்
களஞ்சியம்” “கவிதை ஒளி”, கவிதை வெளியினிலே”, “கவிதை அலைவரிசை” “அயலகக்
கவிதைக் குயில்கள்”
இரா.இரவி எடுத்துக்காட்டியுள்ள கவிதைகளில் சிலவற்றைத் தருகின்றேன்.
அப்துல் ரகுமான் தமிழுக்குக் கிடைத்த கலீல் ஜிப்ரான்
“ஆழமாகச் சிந்தியுங்கள்
புதுமையாகச் சொல்லுங்கள்/
கவிதையில் உங்கள் /
கையொப்பம் இருக்கிறதா?
என்று பார்த்துக் கொள்ளுங்கள்”.
**********
மு.மேத்தாவின் கவிப்பார்வை
“கம்பன் காவியத்தில் வாலி வதை
கண்ணே நீ செய்வது வாலிப வதை
நியாய விலைக் கடையில் நிற்பதுபோல/
நிற்கவைத்தாய் என் ஆசைகளை”
*********

தன்மானக் கவிஞர் முத்துலிங்கம்
“கங்கையம்மா வைகையம்மா
கழனி செழிக்கும் பொன்னியம்மா/
உங்களுக்குள் சண்டை வந்தா
ஒருமைப்பாடு பிழைக்காது! ஏலேலோ!”
தனித் தன்மை கவிஞர் தாரா பாரதி
“கிழக்கோடு கைகுலுக்கு
மேற்கோடு புன்னகை செய்
வடக்கோடு சேர்ந்து நட
தெற்கோடு கூடி உண்!”
**********
கவிஞர் பிருந்தாசாரதி
“நீ வரும் வரைதான்
அது பேருந்து
பிறகு விமானம்
******.
ஹைக்கூ மு.முருகேஷ்:
சிரித்துதான்
மறக்க வேண்டியுள்ளது
பசியை!
********
கவிஞர் நா.முத்துக்குமார்.
பெண்டாட்டி தாலியை/ அடகு வைச்சு
புஸ்தகம் போட்டேன் விசிட்டிங் கார்டு மாதிரி
ஓசியில் தர வேண்டியிருக்கு
\”அயலகக் கவிஞர்கள் 14 கவிஞர்கள் படைப்புகளை ஆய்வு செய்துள்ளார் தமிழ்த்தேனீ
சிங்கப்பூர் தேசியக் கவிஞர் அமலதாசன் எழுதிய வரிகளை நூலாசிரியர் தமிழ்த்தேனீ
அழகுற மேற்கோள் காட்டியுள்ளார்.

“சிறியது தான் சிங்கப்பூர்
கீர்த்தியிலோ மிகப் பெரியது
அரியணையில் தமிழையுமே!
அமர்த்திய நன்னாடு இதுவே!
தமிழர் தலைவர் தமிழ்வேள்!”

“எல்லோரும் நலம்வாழ “ ஏர்வாடியாரின் சிந்தனகள் தொகுப்பு. “மாத இதழ்
நடத்துவது என்பது நெருப்பாற்றிலில் எதிர்நீச்சல் போடுவது போலாகும்.
படைப்பாளியாகவும் இருந்து ஏழாம் பக்கம் கவிதையும் மனத்தில் பதிந்தவர்கள் பகுதி,
நூல் மதிப்புரை என்று எழுதி வருபவர் சகலகலா வல்லவர். இவரது நூற்றுக்கும்
மேற்பட்ட நூல்களில் இருந்து பழச்சாறாக, தேன் விருந்தாக இந்நூலை
வழங்கியுள்ளார் தமிழ்த்தேனீ முனைவர். இரா.மோகன் என்பது இரா.இரவியின்
கருத்து.
புதுயுகனின் தாத்தா இராமானுசக் கவிராயர் காந்தியவாதி மட்டுமல்ல ஒன்பது
வயதில் பாடிய வள்ளலார் போல கவிராயரும் கவிபாடி உள்ளார்.
உரையாசிரியராகவும் இருந்துள்ளார். அவரது பன்முக ஆற்றலைப் படம்பிடித்துக்
காட்டி உள்ளனர் நூல் ஆசிரியர்கள் இலக்கிய இணையர்கள்—“வேரும் விழுதும்” நூல்
குறித்து. இந்நூலில் புதுயுகன் கவிதை ஒன்று
“ வாழ்க்கை உன்னைக்
கசக்கிப் போட்டாலும்
மனதை அழகாக மடித்துவை
நாளைய பட்டுத்துணி நீயாகலாம்” (மழையின் மனதிலே பக்.87)
சென்னையில் இலக்கிய இணையர் என்றால் அது புதுகைத் தென்றல்
இதழாசிரியர் தருமராசன்-பேரா.பானுமதி தருமராசன். “வரலாறு படைத்த வைர
மங்கையர் என்ற இரண்டு தொகுதிக்கும் தமிழ்த்தேனீ அணிந்துரை எழுதியதைக்
குறிப்பிட்டுள்ளார் இரா.இரவி அணிந்துரை அணிவகுப்பு” நூல் குறித்து
மதிப்பிடும்போது.“குறவஞ்சி இலக்கியம்” குறித்து—“முனைவர் பட்ட ஆய்வை செதுக்கியும்,
புதுக்கியும் நூலாக்கி உள்ளார். குறவஞ்சி இலக்கியத்தை விரிவாக ஆய்வு செய்து
சிற்றிலக்கிய விருந்து வைத்துள்ளார். பாராட்டுக்கள். பதிப்பித்த மெய்யப்பன்
பதிப்பகத்திற்குப் பாராட்டுக்கள்.”
“இந்தநூல் படிக்கும் போது தமிழின் பெருமையும், தமிழரின் பெருமையும் நன்கு
அறிய முடிகின்றது. குறத்தி இருந்த மலைவளம் முதலான இயற்கை வளங்கள்
வாழ்வியல் முறைகள், குலப்பெருமை என யாவும் விரிவாக எழுதி உள்ளார்.
பாடல்களை எழுதி அதற்கான விளக்கம் எழுதி முடிவுரையும் எழுதி
உள்ளார்”—இரா.இரவியின் மதிப்பீடு.

முனைவர் நிர்மலா மோகன் எழுதிய ஆய்வுக் களஞ்சியம் தொகுதி.1 ஐயும் ,3-
ஐயும் மதிப்பீடு செய்துள்ளார். “இந்த நூலைப் படித்து முடித்ததும் “தமிழன் என்று
சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற நாமக்கல் கவிஞரின் வைர வரிகள்
நினைவிற்கு வந்தன “என்கிறார் இர.இரவி .
ஆய்வுக் களஞ்சியம் முதல் தொகுதியில்
“என்ன சொல்லி என்ன?
எழுதப் படிக்கத் தெரியாத்
எத்தனையோ பேர்களில்
எமனும் ஒருவன்
ஒரு கவிதை புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான்”
கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதியது (பொய்க்கால் குதிரைகள். வாலி)
******* *********
மூன்றாம் தொகுப்பில்
அம்மாவை நினைவூட்டும்/
வானத்து வெண்ணிலா
நிலாச்சோறு (இரா. இரவி)
****
ஆறித்தான் போயிருக்கிறது/
ஆனாலும் விரும்பி உண்கிறேன்
தோசையில் மனைவி மனம் (அமுத பாரதி)
******************
“உரை வேந்தர் ஔவை துரைசாமி” என்ற நூலில்..உரை மட்டும் எழுதாமல்
பாடலசிரியரும், பாடல் அமைந்த சூழலும், பாடல், உரை, விளக்கம் இப்படி நான்கு
பகுதிகளாகப் பிரித்து உரை எழுதி பாமரர்களுக்கும் பாடல் புரியும் வண்ணம்
எளிமையாக உரை எழுதிய காரணத்தால் தான் அவருக்கு (ஔவை துரைசாமிக்கு)
உரைவேந்தர் என்ற பட்டம் கிடைத்துள்ளது என்பதை உணர்த்தும் விதமாக நூல்
உள்ளது “என்கிறார் இரா.இரவி.
தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் எழுதிய” தமிழ் இலக்கியத்தில் உடன்பாட்டுச்
சிந்தனை “என்ற நூலிலிருந்து எடுத்துக் காட்டியுள்ள இரு கவிதைகள்

“ எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்
உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்” (கவிப்பேரரசு வைரமுத்து)
************
பத்தாவது தடவையாக் விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவனல்லவா?நீ (கவியருவி. ஈரோடு தமிழன்பன்)

வெளிவந்த போதே நூல்களைப் படித்து தெளிவாக மதிப்புரை எழுதியுள்ளார்
இரா.இரவி. தமிழ்த்தேனீ இணையர்கள் எழுதிய நூல்களைப் படிக்கவேண்டும் என்ற
ஆர்வத்தை ஊட்டும் வகையில் எழுதப்பட்ட மதிப்புரைகள். நிறைய
எடுத்துக்காட்டுக்கள் தந்துள்ளார். இந்நூலைப் படியுங்கள் மூல நூலுக்கு அழைத்துச்
செல்லும்.


கருத்துகள்