நூல் மதிப்புரை – படித்ததில் பிடித்தது பேரா. G. ராமமூர்த்தி நூல் : இந்திய தமிழ் சித்த மருத்துவத்தில் சர்க்கரை, டெங்கு (வைரஸ்), நுண்கிருமி தீர்வுக்கான களம் – பாகம் 1 நூல் ஆசிரியர் : கவிஞர் க. கலையரசன்

நூல் மதிப்புரை – படித்ததில் பிடித்தது
பேரா. G. ராமமூர்த்தி
நூல் : இந்திய தமிழ் சித்த மருத்துவத்தில்
சர்க்கரை, டெங்கு (வைரஸ்), நுண்கிருமி தீர்வுக்கான களம் – பாகம் 1
நூல் ஆசிரியர் : கவிஞர் க. கலையரசன்
முதல் பதிப்பு : 2017, பக்கங்கள் : 144, விலை : ரூ.120.
*******
நூல் பற்றி :-
அரசு சித்த மருத்துவர் S.சுப்பிரமணியன், மற்றும் முன்னாள் மாவட்ட நூலக அலுவலர் திரு. சே. அய்யாப்பிள்ளை உட்பட பலரும், இந்நூலாசிரியருக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளனர். சர்க்கரை நோய் மற்றும் டெங்கு தொற்று நோய் முதலானவற்றை வருமுன் காப்பதோடு மட்டுமல்லாது, வந்தபின்னர் நோயைக் குணப்படுத்தும் முறையையும் இந்நூலில் எடுத்துக் காட்டியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்று கூறுகின்றனர். நோயற்ற வாழ்வுக்குப் புதுவழி காணலாம்.
எந்த நோயையும் உடலை விட்டு விரட்டி அடிக்கும் பேராற்றல் இயற்கையாகவே நமது உடலுக்கு உண்டு. நோயாளிகள் மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவது என்பது, வெறும் சம்பிரதாயம், சடங்குகள் தான் எனக் கூறுகிறார். அமாவாசை அன்று வெட்டிப்போடும் மரம் 1000 ஆண்டுக்கும் புழுக்காது. அப்படியே இருக்கும். அமாவாசை அன்று பசித்திரு (விரதம் இரு), பௌர்ணமி அன்று புசித்திரு (நன்கு சாப்பிடு) என்று மூதாதையர்கள் கூறியதை இங்கே சுட்டுகிறார். இது மெய்ஞானத்தின் அடிப்படையில் கூறப்பட்டது என்றும் கூறுகிறார்.
வெற்றிலை + வெள்ளைப்பூண்டு = மேக நீர் பத்துக்கு தலைசிறந்த மருந்து. போகம் கூடினால், ஞான நிலை சுலபமாகி விடும் என்கிறார். தமிழ் சித்த மருத்துவத்தில் உள்ளது போல் வசதி வாய்ப்புகள் வேறு எந்த மருத்துவ முறையிலும் கிடையாது. நுண்கிருமிகளை (வைரஸ்) மனித உடலில் இருந்து அப்புறப்படுத்தும் பேராற்றல், தமிழ் சித்த மருத்துவத்திற்கு உண்டு என்கிறார். மனிதன் தோன்றிய காலத்திலேயே சர்க்கரை நோயும் தோன்றியிருக்க வேண்டும்.
மனம் இணங்காத எந்த கலையும் தோல்வியுறும். மனம் கொண்டு செய்யப்படும் எந்தக் கலையும் மிகப்பெரிய வெற்றியைத் தரும். சித்த மருத்துவம் பெரும் மனம்கொண்டு செய்யப்பட்ட வாழ்வியல் கலைகளில் ஒரு பிரதானக் கலையாகும். உயிர் காக்கும் பிரதான மருத்துவப் பொருட்கள் சில : அருகு, துளசி, சுருளி, சங்கு, வெற்றி(லை), பாக்கு, சுண்ணா(ம்பு), மகிழி, நெசிழி, தொகிழி, நெத்தி பசலி, அத்தி, நெல்லி, மல்லி, புதினா, இஞ்சி, பூசணி, ஆலம், அரசு, வேம்பு, மூங்கில், தாமரை, கனகா, அல்லி, பதநீ, இளநீ, ஏலம், சுக்கு, மிளகு, கடுகு, சீரகம் போன்றவை.
சித்த மருத்துவ கலைக்கு ‘என்றும் சாகாக்கலை’ என்று பெயர் உண்டு. தமிழ் சமையல் கலையில் பாதி சித்தர் மருத்துவக் கலையே ஆகும். தமிழ் சித்த மருத்துவக் கலைகள் என்பது 108 பிரதான வாசலைக் கொண்ட ஒரு பிரம்மாண்ட கலையாகும். தமிழ்மொழியை யாராலும் அழிக்க முடியாது. மண் தோன்றாக் காலத்திற்கும் முன் தோன்றிய தமிழ். ஐந்தறிவு ஜீவனும் ‘அம்மா’ என்றழைக்கும் ஆயத்தமிழ். பஞ்சாபில் இருக்கும் பசுவின் கன்றும் தன் தாய்ப்பசுவை அழைக்கும் போது ‘அம்மா’ என்று தான் அழைக்கிறது. ஜெர்மனிவாழ் காக்கையும், ‘கா, கா’ என்றே கரைகிறதாம். தமிழின் சிறப்பு அது.
சுவையை அறிகின்ற ஆற்றல் நாவிற்கே அதிகம் உண்டு. எந்த உயிரிலும் மலம் வெளியேறும் பாதை (வவ்வாலைத் தவிர) பின்னால் தான் இயற்கையாக உள்ளது. அதை முன்னால் வைத்திருந்தால் எவ்வளவு பெரிய தர்மசங்கடத்தை உண்டாக்கி இருக்கும். தொற்று நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகி விடும். உலகில் நாள் ஒன்றுக்கு 3 இலட்சம் குழந்தைகள் பிறப்பதாக, கணக்கெடுப்பு வட்டாரம் தெரிவிக்கிறது. நிலையில்லா வாழ்வில் எது நிலையானது, அதிலும் மாற்றங்கள் என்பது இயற்கையின் பொது நீதி.
மாலை நேர சூரியனிலும் மருத்துவ குணமுண்டு. அதிகாலை குடிக்கும் தண்ணீருக்கும் அதிக சக்தி உண்டு. அதிகாலை அரசமர காற்று உயிர்க்காற்றும், வேம்புக்கு நோய்களைத் தீர்ப்பதில் வேங்கையின் குணமுண்டு. கபத்தை, பினிசத்தை அறுத்தெறியும் ஆற்றல் துளசிக்கு உண்டு. வீரியமற்ற உணவுமுறைகளால் தான் 30 வயதிலேயே மூட்டு வலி ஏற்படுகிறது. உயிர் வளர்க்க உதவிய பாரம்பரிய குழம்புகள் போய், ஆயுளைக் குறைக்கும் சால்னாக்கள் வந்துவிட்டது. வாழ்வியல் மலைகளில், உடலுழைப்பு இல்லாமை அதிகரித்து விட்டது. பன்னாட்டு கலாச்சார சாக்கடையில் விழுந்து சமூகம் விழிபிதுங்கி கிடக்கிறது. தெரிகின்ற நோய்களுக்கு மட்டுமே மருத்துவம் என்பது மானிட சமூகத்தின் விதி. தமிழ்பதி துணைகொண்டு நோய்களின் ஆணிவேரையே வெட்டுவதை விட்டு விட்டு கிளைகளை வெட்டுவதால் முழுபலன் பெற முடியாது.
ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து ஆவணக் காப்பகங்களில், நம் தமிழ் சித்த மருந்துக்கலை நூல்கள் நிறைந்துள்ளன. வேறு எந்த மொழியாலும் தமிழ் சித்த மருத்துவத்தை நெருங்க முடியாது. அலோபதி மருத்துவம் அப்பாவின் குணம் கொண்டது. தமிழ்பதி மருத்துவமோ அம்மாவின் குணம் கொண்டது. கரையான் புற்று மண்ணிலே, புற்றுநோயைத் தீர்த்த புண்ணிய பூமி இது. இங்கே தான் கொசுக்கடியில் சிக்கி, உயிர்இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறான். எய்ட்ஸ், எபலோ, டெங்கு, ஜியா பிக் பீவர், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் இருக்கிறது. தமிழக அரசின் சுகாதாரத் துறை சில சமயங்களில் அலோபதி + சித்த மருத்துவம் என்ற கூட்டுமுயற்சியில், இந்நோய்களைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்கிறது. உலகில் வந்த எந்த மருத்துவ-முறைக்குள்ளும் இந்திய தமிழ் சித்த மருத்துவம் இருக்கிறது. தமிழ் சித்த மருத்துவத்தில் ஒரு நோய் தீரவில்லை என்றால், பிறகு வேறு எந்த மருத்துவத்திலும் அது முடியாத ஒன்று என்று தனது 50 ஆண்டு கால அனுபவத்தில் இவர் கூறுகிறார்.
எதையும் நாம் நன்றாக தெரிந்து கொள்வதற்கு கட்டாயம் முயற்சியுடன் கூடிய பயிற்சி அவசியம். எந்த ஒரு காரிய சித்திக்கும் முதல்படி அனுபவம் ஆகும். தமிழ் சித்த மருத்துவத்திற்கு பயிற்சி தேவை. நாம் என்ன செய்தோமோ, அதுவே திரும்பி வரும். திருச்செந்தூரிலும், திருவண்ணாமலையிலும் போய் இறைவனைப் பார்க்க முடியாது, புண்ணியத்தைத் தேட முடியாது. இல்லறக்-கடமைகளை ஏற்று, அதை இன்புற்று செய்பவனே இறைவனைக் காண முடியும். அன்பால், பண்பால், குணத்தால், ஈகை இரக்கத்தால் உயர்பவனே மனிதன். பயம் அற்றுப் போகும் இடத்தில் துணிவு பிறக்கிறது. அகததியர் இனம் கண்ட எந்த மூலிகைகளும் தாய்ப்பாலுக்குச் சமமான ஒன்று.
அகத்தியர் முறைகளில் வரும் மூலிகைகள் உடலில் இருக்கும் விசத்தை முறிக்கும் மூலிகைகள் ஆகும். எக்காரணத்தைக் கொண்டும் எந்த காலத்திலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தாது. போகர் முறை, விசத்தை மருந்தாக்கும். இவை அகோர சக்தி பெற்றவை. இது நோய்களைக் குணப்படுத்தி தீர்வு காணும் என்பதற்கு, போகரின் பழனிமலை நவபாசாண முருகன் சிலை. ஆனால் விச மருந்துகளை தயாரிக்க நாம் ஒருபோதும் முயற்சிக்க கூடாது. போகர் போல் இனி ஒருவர் விசத்தை மருந்தாக்கி காட்டிவிட முடியாது. பழமையை பழமை என்று ஒதுக்கி வைத்து விட்டு, யாரும் எந்த புதுமையும் செய்து காட்டி விட முடியாது. மிக பழமையே இன்றைய புதுமையாக உள்ளது. பழமை என்பது மரத்தின் வேர் போன்றது. புதுமை என்பது மரத்தின் கிளைகள் போன்றது. வேர் வாழும் வரை மரமும் வாழும். இலைகள் உதிரந்த பின்பும் மரம் சாய்வதில்லை. மறுபடியும் மரம் தளிர்விடும். இலைகள் வரும்.
சமூக மக்கள் பண்பட வேண்டும். கொடிய நோயான எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு தேவை. தனி மனித ஒழுக்கம் அவசியமே. எய்ட்ஸ் நோயின் தன்மை கீழ்வருமாறு : 1) வெக்கை நோய், 2) வெப்பு நோய்,
3) இரத்த பகுப்பு, 4) அரையாப்பு, 5) மேக நோய், 6) வெள்ளை வெட்டை (எய்ட்ஸ்). நமது பண்பாடு கலாச்சார நாகரீக மரபுகள் எந்தக் காலத்தாலும் அசைக்க முடியாதவை. ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் தமிழர் கலாச்சார் நாகரீக மரபாகும். இது கற்காலத்திற்கு முன்பே கடைப்பிடித்து வந்திருப்பதாகக் கூறுவர்.
அம்மை நோய் ஒரு தொற்று நோய். சுத்தத்துடன் சுகாதாரமாக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய நோயையும் எளியோருக்கும் எட்டுகின்ற இடத்தில் இருந்து நோய்களைத் தீர்த்து வைக்கிறது, நம் சித்த மருத்துவம். எந்த நோயினை பொருட்டும் உலக பொது மருத்துவத்தில் தற்காலிகமாக உடனடி விடுதலை. ஆனால் சித்த மருத்துவம் நோய்களை தீர்ப்பதில் காலதாமதம் ஏற்பட்டாலும், மருந்தை எடுத்துக்கொள்ளும் முதல் நாளே உடலை ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து வைத்துவிடும். மேலும், முறையான சித்த மருத்துவர்களை இனம் கண்டு சிகிச்சை பெற்று முழு குணம் அடையலாம்.
பாதுகாப்பு முறைகள் :-
குடிக்கும் தண்ணீரை கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும். தூய ஆடைகள் அணிய வேண்டும். படுக்கை அறைகளை தூய்மையாகப் பேண வேண்டும். குடும்ப வாழ்வில் கணவன் – மனைவி உறவு மேம்பட புரிதல் அவசியம். உடல் பராமரித்தல் என்பது, பசித்த பின்பே புசிக்க வேண்டும். எந்த உணவும் முக்கால் வயிறே நிரம்ப வேண்டும். காலையில் கஞ்சியும் தண்ணியும், மதியம் திட உணவு, இரவு பால், பழம், தேன் – இந்த உணவுமுறையைக் கடைபிடித்தால் 95% நோயே வராது. மருத்துவச் செலவு வராது. 3 மாதத்திற்கு ஒருமுறை பேதிக்கு சாப்பிட வேண்டும். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டும். மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே புணர்ச்சியில் (உடல் உறவில்) ஈடுபட வேண்டும். தினமும் காலை, மாலை இருமுறை மலம் கழிக்க வேண்டும்.
உணவு என்பது கால அளவுகோலின்படி சமச்சீர் முறையில் இருக்க வேண்டும். நம் அளவு எது என்று தெரிந்து நாமே நிறுத்திக் கொள்ள வேண்டும். சுய கட்டுப்பாடு இல்லாமல் கூடி விடும் சோற்றுக்குப் பெயரே தண்டச்சோறு. உடலின் உள்ளே இருக்கும் உணவு இயந்திரத்தின் அளவு ஒரு நாளைக்கு 850 கிராம் என்பது தான் சரியான அளவு. இது தவிர்த்து, வரைமுறையற்ற உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் நோய்களும் ஆயுள்குறைப்பும் உண்டாகும். சமச்சீர் உணவுகளை மேற்கொள்பவர்களுக்கு, சர்க்கரை நோய், நெஞ்சுவலி, இரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மலச்சிக்கல், குடல் பூச்சி நோய், மூல நோய் போன்றவை வராது என உறுதியாகக் கூறலாம்.
சித்த மருந்துகளை சாப்பிடும்போது, அலோபதி மருந்துகளை சாப்பிடலாமா? சாப்பிடலாம். ஏனெனில், இவை மூலிகை (உணவு) சார்ந்தவை. அலோபதி மருத்துகள் பெரும்பாலும் சாப்பாட்டிற்குப் பின்பும், சித்த மருந்துகள் பெரும்பாலும் சாப்பாட்டிற்கு முன்னும் உட்கொள்ள வேண்டும். டெங்கு வைரசுக்கு, நிலவேம்பு, மலைவேம்பு, பப்பாளி இலைச்சாறு போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும். தொற்று நோய் பரவும்போது, மதங்களைப் பார்த்து தாக்குவதில்லை. மனிதர்களைப் பார்த்து தான் தாக்குகிறது.
உடலின் உள்பகுதியில் இருக்கும் பித்தப்பையே, நமது உடலுக்கான எரிசக்தி, சீரண சக்திக்கான நெருப்பு. பூமியின் தட்பவெப்ப நிலைக்குத் தகுந்தாற்போல் நமது உடல் தட்பவெப்ப நிலையை சமன்படுத்த முடியாத நேரத்தில்தான் நோய்கள் நம்மை தொற்றிக் கொள்கின்றன. பொதுவாக காய்ச்சல் இருக்கும்போது பழச்சாறு, பன், பிரட், பால் போன்ற மிக எளிமையான உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். பித்தப்பையின் சமச்சீர் முறை தடைபடும்போது, கல்லீரல் பாதிக்கக் கூடும். நாம் எவ்வளவு உணவு உட்கொள்கிறோமோ அதன் சீரான சக்திக்கு தேவையான அளவு மட்டுமே பித்தப்பையில் இருந்து பித்த நீர் சுரக்கும். என்ன வேலை பார்த்தாலும் சரி, ஒருவேளை உணவைக் கூட தள்ளக்கூடாது. நேரத்திற்கு உணவருந்தி செரிமானத்திற்கு நீர் அருந்த வேண்டும். விருந்தை, மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆட்டுக்கறிக்கு அகப்பை சோர் கூடும் என்பார்கள். அளவான உணவால் மட்டுமே உயிர் வளர்க்க முடியும். மனித உடலில் நீர், மலம், காற்று அதன் அதன் வழியில் பயணித்து விட்டால், 90% நோய்கள் வராமலே வாழ்ந்து காட்டி விடலாம். தேடித் தின்பவன் தெய்வப் பிறப்பு. கிடைத்ததைத் தின்பவன் நாய் பிறப்பு என்பார்கள், நம் மூதாதையர்கள். குளிர்காலங்களில், உடல் சூடேற்றம் தரும் உணவுகளை தேடி உண்ண வேண்டும். அரைக்கீரை, கரிசலாங்கண்ணி கீரை, மணத்தக்காளிக் கீரை, வெள்ளைப் பூண்டு, மஞ்சள் போன்றவை உடல் சூடேற்றம் தரக்கூடிய உணவுகளாகும்.
வெயில் காலங்களில் வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், பதநீர், வெந்தயக் கஞ்சி, மோர் கஞ்சி, தயிர் சாதம், லெமன் சாதம் போன்றவற்றை மாற்றி உண்ணலாம். மிகுந்த நிதானத்துடன் எடுக்கும் எந்த முடிவும் மிகச் சரியானதாக இருக்கும்.
பாரம்பரிய மது என்பது பனங்கள், தென்னங்கள். திராட்சை ரசம் போன்றவை போதை தரும் பொருட்கள் என்றாலும், உடல் நலத்திற்கு பெரும் தீங்கு ஏற்படுத்தாது. தற்காலத்தில் உள்ள மது வகைகள் பெரும்பகுதி ஆல்கஹாலில் தயார் செய்யப்படுகிறது. இது உடலை எரிக்கும் சக்தி கொண்டது. மது போதைக்கு அடிமையானவர்களுக்கு நிச்சயம் பித்தப்பை அதன் இயற்கையான செயல்பாட்டில் இருந்து முரண்படும். ஆத்திரத்தை அடக்கினாலும், மூத்திரத்தை அடக்கக் கூடாது என்று சொல்வார்கள். எந்தக் கழிவுகளும் உடலை விட்டு வெளியேற முயற்சிக்கும் போது நாம் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கழிவுகள் மிக சரியான நேரங்களில் வெளியேற்றப்பட்டாலே சர்க்கரை கட்டுப்படும்.
பித்த நீர் என்ற நெருப்பு நம் உடலில் இல்லை என்றால், நாம் உண்ணும் உணவு ஜீரணிக்காது. பித்த நீரின் துணையோடு உணவு சீரணிக்கப்பட்டு சத்துக்கள் பிரிக்கப்பட்டு உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது பித்த நீர். பொதுவாக கழிவுகளைப் பிரித்து வெளியேற்றுவது சிறுநீரகத்தின் வேலை. சிறுநீருடன் பித்த நீர் வெளியேறினால் கருவாயில் கடுகடுப்புடன் கூடிய எரிச்சல் இருக்கும். மாதக்கணக்கில், வருடக்கணக்கில் பித்தப்பையின் செயல்பாடுகள் முரண்பட்டால், உடலின் உள்நடக்கும் ஒரு தவறான பரிமாற்றமே சர்க்கரை நோய். பித்த நீர் கலந்த இரத்த ஓட்டம், நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். மலத்தை இளக்குவதில் மிக முக்கிய பங்காற்றுவது வாழைப்பழம் + சீரகம். வாழைப்பழத்தை எடுத்து தோல் நீக்கி விட்டு அதில் ஒரு கிராம் அளவுக்கு சீரகத்தை வறுத்து சேர்த்து பிசைந்து இரவு சாப்பாட்டிற்குப் பின், படுக்கப் போகும் முன்பு சாப்பிட்டு வர மலச்சிக்கல் ஏற்படாது.
உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது, மனமும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் நிலைகுலையும் போது, மனமும் நிலைகுலைந்து போகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது 8 மணி நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் அளவு தைரியம் ஏற்படும். சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால், சொந்தவீட்டில் இருக்கும் முதல் மாடியும், எவரெஸ்ட் சிகரமாகத் தெரியும். மனம் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். சிரிப்பு, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மருந்து. எந்த உணவையும் முக்கால் வயிறே புசிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாடுகள் பற்றி இந்நூலில் விரிவாகக் கூறியுள்ளார். மூலிகை தைல குளியல், தோலுக்கு நல்லது. இச்சா பத்தியம் என்பது இல்லறக் கட்டுப்பாடு. சித்த மருந்து உட்கொள்ளும் காலங்களில் கண்டிப்பாக புணர்ச்சியில் (உடல் உறவில்) ஈடுபடக் கூடாது. உடல்உறவு அவசியப்படும் போது முதல்நாள் மருந்தை நிறுத்திவிட்டு மறுநாள் உடல்உறவில் ஈடுபடலாம். அதுபோல, மாமிச உணவை சாப்பிட வேண்டுமென்றால், மருந்தை முதல் நாளே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ் சித்த மருத்துவத்தில் இனம் காணப்பட்ட நோய்கள்
3 வகை : 1. வாதம் – நரம்பு மண்டலம். 2. மூலம் – இரத்த மண்டலம்,
3. ரோகம் – எலும்பு மண்டலம். தமிழ் மருத்துவத்தில் சித்தர்கள் மட்டுமின்றி, கவி ஞர்களையும் இணைத்து பல கருத்துக்களைக் கூறியுள்ளார். தமிழ்பதி மருத்துவ ஆராய்ச்சிக்கு, நிறைய புலன்கள் உள்ளதாகக் கூறுகிறார். தனது ஆயுள் 500 ஆண்டுகள் என்றாலும், 10% பகுதி தான் தன்னால் கற்க முடியும் என்று கூறுகிறார்.
மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், தோல் மருத்துவம், கருத்தரித்தல் மருத்துவம், இரத்த அழுத்தம் போன்றவை குறித்தும் இவர் விரிவாகப் பேசுகிறார்.
சில மருத்துவக் குறிப்புகள் :
1. கீழாநெல்லிப் பொடி 100 கிராம், 2. கரிசலாங்கண்ணிப் பொடி 100 கிராம், 3. வெள்ளருகு பொடி 100 கிராம் முதலியவற்றைக் கலந்து வைத்துக் கொண்டு, அதில் 5 கிராம் அளவில் மருந்து உட்கொள்ளலாம். (சர்க்கரைக்கு). வாரம் ஒருமுறை ஓமம் கசாயம் இரவு சாப்பாட்டிற்கு பின்பு சாப்பிட வேண்டும். மாதம் இருமுறை நிலவேம்பு கசாயம் சாப்பிடுவது நோயை விரைந்து தீர்க்க உதவும்.
கடுக்காய், கடல் உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, கருவேலம்பட்டை பொடி, நாயுருவி வேர் பொடி போன்றவற்றை சம அளவில் எடுத்து அரைத்து வைத்துக் கொண்டு பல்பொடியாக பயன்படுத்தலாம். மூலிகை பல்பொடி சுரப்பிகளை சுரக்க வைக்கும் ஆற்றல் உண்டு.
எலுமிச்சை ரசம், தக்காளி ரசம், கானை ரசம், முடக்காத்தான் ரசம், மூங்கில் இலை ரசம், கொண்டைக் கடலை ரசம், புளிச்ச கீரை ரசம் போன்றவை மருத்துவ குணம் உடையவை. வெள்ளைப்பூண்டு குழம்பு வாயுத்தொல்லை நீக்க உதவும். குழம்பில் மிளகாய் பயன்படுத்துவதை தவிர்த்து, மிளகைப் பயன்படுத்தலாம். குழம்பில் சுண்டவத்தலைச் சேர்த்தால் குடல்புழு ஒழியும். தமிழ் மருத்துவ உலகின் அடித்தளம் மஞ்சள். மஞ்சளை நிறைந்து உபயோகிக்கலாம். சுக்கு மல்லி காபியில் துளசி சேர்த்தால் தலை நீர் இறங்கும். பாக்கெட் பதார்த்தங்கள் குழந்தைகளுக்கு ஆகாது. முலைக்காம்பை நன்கு சுத்தம் செய்து, சிற்றாமணக்கு எண்ணெயை நன்கு தடவி விட்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், குழந்தைக்கு மலம் இளக்கமாகப் போகும். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை நிறைந்து கொடுத்திருக்கிறார் இந்நூலில். இருப்பினும், நம்பகத்தன்மைக்கு, சிறந்த சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொண்டால், உடல் ஆரோக்கியம் பெறும். புத்தகப் பிரியர்கள், பயனுள்ள இந்நூலை வாங்கிப் பயனடைய கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
*****
நூல் குறித்த தங்களின் மேலான கருத்தைப் பதிவிட வேண்டுகிறேன்.
பேரா. G. ராமமூர்த்தி

கருத்துகள்