கொஞ்சம் பெரிய கட்டுரை: இறையன்பு நாவல்கள்- ஒரு ஒப்பீட்டு வாசிப்பு. - கலாப்ரியா







படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி !

கொஞ்சம் பெரிய கட்டுரை:
இறையன்பு நாவல்கள்- ஒரு ஒப்பீட்டு வாசிப்பு.
- கலாப்ரியா
என் நினைவுகள் சரியாக இருக்குமானால் திரு இறையன்பு அவர்களை முதன் முதலில் சந்தித்தது 1997 ஆக இருக்கும். அப்போதுதான் அவர் ஐக்கிய நாடுகள் சபையில் தன் பணிகளை நிறைவு செய்து விட்டு, தமிழ் நாடு அரசின் செய்தித் துறையின் செயலாளராகப் பணி ஒப்புக் கொள்ளும் நேரம்.அவருக்கு ஒதுக்கப் பட்டிருந்த அரசு இல்லத்தில் அன்றுதான் பொருட்களை எல்லாம் இறக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள் அவரும் அவரது துணைவியாரும். அது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்காக காலம் காலமாக இருந்து வரும் குடி அமைப்பில் உள்ள ஒரு வீடு.பழமையான அமைப்பும் குறைவான வசதிகளும் கொண்டிருப்பதாக எனக்குப் பட்டது. ஆனால் அவர் அது குறித்து எந்த விசாரமும் கொண்டிருப்பதாகத் தோன்றவேயில்லை. வீட்டில் பல பொருட்கள் இன்னும் ஒழுங்கு படுத்தப் படாமல் இறக்கி வைத்தது போலவே கிடந்தன. இன்னும் பல பெட்டிகளும், பொதிகளும் திறக்கப்படாமல் தாழ்வாரத்திலும் வரவேற்பறையிலும் கிடந்தன. இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையேயும் எந்தக் குறையுமில்லாமல், பதட்டமுமில்லாமல் வரவேற்றார்கள் அவரும், அவரது துணைவியாரும். என்னுடன் திரு பா.செயப்பிரகாசம் அவர்களும் வந்திருந்தார். நான் அவருடன் சென்றிருந்தேன் என்பதுதான் இன்னும் சரியாய் இருக்கும்.
• இந்த நினைவு மீட்டல் இப்போது எதற்கு என்றால், அந்த சந்திப்புக்கு கொஞ்ச நாட்கள் கழிந்து அவருடைய ‘ஆத்தங்கரை ஒரம்’ நாவலை வாசித்துக் கொண்டிருந்த போது அதில் வருகிற ‘சுதீர்’ என்கிற அதிகாரியையும், ’ராமனிருக்கும் இடம் அயோத்தியென’ எந்த ஆவலாதியும் இல்லாமல் கணவருடன் புறப்பட்டு விடுகிற அவரது மனைவி யூதிகாவையும் நெஞ்சில் நிறைத்துக் கொள்கிறபோது தவிர்க்க இயலாமல் இந்த சந்திப்புச் சம்பவம் நினைவு வந்தது.ஒரு நிமிடம் புத்தகத்தை மூடிவைத்து விட்டு அசை போட்டுக் கொண்டிருந்தேன்.ஓரிரு நிமிடம்தான் அதற்குள் நாவல் என்னை தன் பக்கங்களுக்குள் மீட்டு அழைத்துக் கொண்டது. அதில் வருகிற அதிகாரி இவர்தானோ என்று ஒரு பொழுது தோன்றினாலும்,kathai wikகதை நிகழும் இடமும் சூழல் விவரணையும்k,பாத்திரங்களின் அந்த மண்ணிற்குப் பொருத்தமான பெயர்களும்,அவர்களது பழக்க வழக்கங்களை நுணுக்கமாகச் சித்தரிக்கும் ஆசிரியரின் நடையும் அந்த நினைவை முற்றிலும்கரைத்து நம்மை ஒரு புது மண்ணில் பயிரிட்டு விடுகிறது. ”நீர் நிலையில் விழுந்த அரச மரத்து இலை மெதுவாக கரையொதுங்குவது’ போல் இழையும் இறையன்புவின் நடை அதை ஒரு புனைவு என்பதாகவே நகர்த்திச் செல்லுகிறது.
• ஆனால் அவர் போன்றோருக்கிருக்கிற, நாடும் அரசும் ‘இயங்கும் விதம்’ குறித்த தார்மீக வருத்தமும் ’அது இயங்க வேண்டிய விதம்’ குறித்த மெய்யான ஆதங்கமும் வெளிப்படுகிற ஒரு பாத்திரப் படைப்பை தன்னிலிருந்து அவர் படைத்திருக்கிறார் என்று புலப்படாமலும் இல்லை. அரசு இயந்திரத்தின் அச்சாணியாகவோ அல்லது குறைந்த பட்சம் ஒரு திருகாணியாகவோ இருக்கிற அல்லது இருந்து ஓய்வுபெற்ற பலர் எழுதியிருக்கிற ’கதைகளை’ நான் படித்திருக்கிறேன். அதில் அரட்டைக்கான ஒரு சுவாரஸ்யம் இருக்கும்.பல ஆகிருதிகளின் அந்தரங்கம் தெரிந்து கொள்கிற ‘குறு குறுப்பு’ இருக்கும். (உதாரணம் பண்டித நேரு பற்றி எம்.ஒ.மத்தாய் எழுதிய Reminiscences of the Nehru Age, 1978 and My Days With Nehru, 1979, இதில் அவரே ”இது ஒரு அரட்டை சமாச்சாரம் என்று குறிப்பிட்டிருக்கிறார்)
’ஆத்தங்கரை ஓரம்’ நாவல் இந்தத் தவறு எதையும் செய்யாத ஒரு அற்புதப் புனைவு. அதில் வருகிற, knit India movement ன் தலவர் ’பாபா ஆம்தே’யும் ‘தேரி’ அணைக் கட்டுமானத்தை எதிர்த்துப் போராடிய சுந்தர்லால் பகுகுணா’ வும்தான் உண்மையான பாத்திரங்கள். மற்றவர்களுக்கெல்லாம் யாருடைய சாயலாவது மட்டுமே இருக்கும். நாவலில் வருகிற பாத்திரமான ராதா படங்கரின் உறுதிப்பாடும், போராட்ட முறையும் நர்மதா அணைக்கட்டிற்கு எதிராகத் தன் தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வரும் ‘மேதா பட்கர்’ அவர்களை நினைவுறுத்தும். பிரம்மாண்ட தியாகங்கள் நிறைந்த ஒரு மாபெரும் நிகழ்வு ஒரு படைப்பாளியிடம் கிளர்த்தும் வலியை அவன் ஒரு ’சிந்தையிரங்கும்’ மனிதனாக உணர்ந்து தன் படைப்பில் கொண்டு வரும்போது அது வெறும் தகவலறிக்கையாக (reportage) மட்டுமே winru vitakkuutiya apaayam நின்று விடக் கூடிய துரதிர்ஷ்டம் நிகழ்வதுண்டு.அல்லது ராஜராஜ சோழனிடம் நாவலாசிரியனே மந்திரியாக, தளபதியாக இருந்தது போன்ற uNtuகேலிப் புனைவும் நிகழும்.அல்லது மகாத்மா காந்தி நம்முடைய கதாநாயகன் மடியில் விழுந்து “ஹே ராம்” சொல்லி உயிர் விடுவது போன்ற அபத்தங்களும் உண்டு.
இது போன்ற விபத்து எதுவும் நிகழாமல் இந்த நாவலை யாத்தித்திருப்பதே இறையன்புவின் எழுத்து வன்மை. யதார்த்தமும் புனைவும் சரியான அளவில் இருக்க வேண்டும். தாமஸ் ஹார்டி சொல்லுவார், “ஒரு நாவல் அதன் கதா பாத்திரங்கள் முழுமை பெறும் அளவிற்கு நீளமாக இருந்தால்ப் போதும்”,என்று. வளவளவென எழுதத் தேவையில்லை. ஒரு ‘மேக்னம் ஓபஸ்’ ஆகவே இருக்கட்டுமே அது கண்டிப்பாக தலையணை அளவு தடிமனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த அளவில் பார்த்தால் இது ஒரு கச்சிதமான நாவல். நாவலில் வரும் சிமன், மிருதுளா என்ற படிப்பறிவில்லாத பெண்ணை மனதார விரும்புகிறான். ஆனால், அதிகாரிகளின் பித்தலாட்டமான உறுதிமொழிகளை நம்பி அவளும் அவள் கிராமத்தாரும் எங்கோ போய் விடுகிறார்கள்.அது பற்றி தாலுகா அலுவலகத்தில் சென்று ஒரு குமாஸ்தாவிடம் விசாரிக்கிறான். பயனில்லை. இங்கே ஒரு ’யதார்த்த வாசகம்’ ஒன்றைச் சொல்லுகிறார் இறையன்பு. அது ஒரு பொன் மொழி.,”குமாஸ்தாவிடம் பேசுவதுதான் சிரமம்,அவர்களுடைய இலக்கே வேறாக இருக்கும்.” அரசு அலுவலகங்களில் ஏழை பாழைகள் படும் அவலத்தை சொல்லாமல் சொல்லியிருக்கிறார், இந்த ஒரு வாசகத்தில்.
அந்த மிருதுளாவை அவன் அப்புறம் சந்திப்பதே இல்லை.அவளை நினைத்து உருகுவதே அந்த உறவை அற்புதமான காதலாக நிலை நிறுத்தி விடுகிறது. அந்த ஏமாற்றத்தின் பின்னணிக் காரணி அவனில் அவனது அறப்போருக்கான கூடுதல் வலிவைத் தருகிறது. அந்தப் பாத்திரத்தை மறுபடி சந்திக்க வைத்து இந்த வலிவை நீர்த்துப் போக வைக்காததை நான் மிகவும் மதித்தேன். இதுதான் ஹார்டி சொல்லுவதும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய ஒரு சுற்றுச் சூழல் பிரச்சினையையும் அது சார்ந்த அரசியலையும் கோஷங்கள்,முழக்கங்கள் மூலமாக உணர்த்துவதை விட புனைவுகள் மூலம் நன்கு பரவலாக்க முடியும். ராகுல சாங்கிருத்தியாயன், ’வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலில் மனித குல வரலாற்றை புனைவுகளாகச் சித்தரித்திருப்பார்.மிக மிக அற்புதமான நூல். அது போல இந்த நாவல் ஒரு நாவலாகவும், சமுதாய்ப் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் படைப்புப் பிரதியாகவும் முழு வெற்றி கண்டிருக்கிறது.
மஹாஸ்வேதா தேவி என்ற ஞான பீட விருது பெற்ற வங்க நாவலாசிரியை எழுதிய Aranyer Adhikar நாவல் ஆதி வாசிகள் ஏகாதிபத்தியத்திற்கெதிராகப் பொங்கிய போராட்டத்தின் ஆகச் சிறந்த பதிவு. அதற்கு இணையாக இதைச் சொல்ல முடியும். இறையன்புவின் வாசிப்பும்,பயணங்களும் அனுபவங்களும் பல தரப்பட்டது. அவர், ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு இருக்கும் விதத்தில் தன் படைப்புகள் அமைய வேண்டும் என்று விரும்புபவர்.அதுதான் ஒரு நல்ல கலைஞனுக்கு அடையாளம்.கூறியன கூறல் இலக்கணக் குற்றம் என்பது கவிதைக்கு மட்டுமல்ல,எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். முதல் நாவலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது இரண்டாவது நாவல்.
வாஜ சிரவஸ் என்ற ரிஷி ஒரு யாகம் நடத்துகிறார்.அதில் கிழட்டுப் பசுக்களை தானம் கொடுக்கிறார்.அவரது மகன்,”இது தவறில்லையா” என்று சுட்டிக் காட்டுகிறான். அவர் உன்னை எமனுக்கு தானம் கொடுத்து விட்டேன் என்கிறார்.சொல்லி விட்டு வருந்துகிறார்.ஆனால் நசிகேதன் வருந்தாதீர்கள் என்று சொல்லி விட்டு எமனிடம் செல்கிறான்.அவன் மாளிகையில் மூன்று நாட்கள் காத்திருப்பிற்குப் பிறகு எமன் அவனை வரவேற்கிறான். உன்னைக் காத்திருக்க வைத்ததற்கு மூன்று வரங்கள் தருகிறேன் கேள் என்கிறான்.என் தந்தை கோபம் நீங்கி சமாதானம் அடையவேண்டுமென்று ஒரு வரம் கேட்க, தந்தேன் என்கிறான் எமன். பிணி மூப்பு சாக்காடு நீங்கி சொர்க்கத்திற்கு செல்லும் வழி கேட்கிறான். உபதேசிக்கப் படுகிறது. மூன்றாவதாக மரணத்திற்குப் பின்னால் மனிதனுக்கு என்ன நடக்கிறது தெரிந்து கொள்ள ஆசை என்கிறான்.அதைச் சொல்ல வெகுவாகத் தயங்கும் எமன் அது தேவ ரகசியம் என்றெல்லாம் சொல்லுகிறான்.கடைசியில் நசிகேதனுக்கு அந்த ரகசியத்தைச் சொல்லுகிறான். அப்போதும் ரகசியமாகவே சொல்லப்படுகிறது. இந்தக் கதை வரும் கடோபநிஷத்தைக் கரைத்துக் குடித்தவர்களாலும் கூட விளங்கிக் கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது.கேள்வி கேள்வியாகவே இருக்கிறது, இன்னும்.மிகச் சரியாகவே ‘சாகாவரம்’ நாவலின் கதாநாயகனுக்கு ‘நசிகேதன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்,இறையன்பு. நாவலின் நாயகனான நசிகேதனை சாவு துரத்துகிறது.
எனக்கு அடிக்கடித் தோன்றுவதுண்டு, நம்முடைய சாவில் நமக்கு பயம் இல்லை, நாம் செத்த பிறகு யார் எப்படிப் போனால் என்ன, எது எப்படி நடந்தாலென்ன.ஆனால் நமக்குப் பிரியமானவர்களின் சாவுதான் நம்மை அதிகம் துயரமும் பயமும் கொள்ளச் செய்கிறது. இறந்து போனவர்களை, இழந்து போனவைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதன் மூலம் நாம் நம்முடைய ‘இருத்தலுக்கு’ நியாயம் செய்வதில்லை. நசிகேதனைத் துரத்துவதும் அவனை நெருங்கியவர்களின் சாவுதான். அவன் முதலில் அவற்றால் பாதிக்கப்பட்டாலும் சாவை வெல்லும் வழி என்ன என்ற தேடலில் ஆழமாகக் ஈடுபட்டு விடுகிறான். ஒரு மனிதனை உயிர்ப்போடு வைத்திருப்பதே தேடல்தான். “குடை ராட்டினத்தின் குதிரைகளொன்றில் அமர்ந்தவன் தனக்கு முந்தியதில் அமர்ந்திருப்பவனை எட்டிப் பிடிக்க ஓடுவது போல,” சிலருக்கு தேடல் பொய்த்துப் போகிறதும் உண்டு.
இறையன்பு காட்டும் நசிகேதன் தீவிரமான தேடுதலில் இறங்குகிறான்.பல பொய்யான ஆன்மீகவாதிகளைச் சந்தித்து அவர்களது பொய்ம்மையையும், ஆன்மீகத்தை நிறுவனமாக்கி அவர்கள் பணம் சேர்ப்பதையும் கண்டு மேலும் ஏமாற்றத்திற்குள்ளாகிறான். ஆனால் தேடுகிறவர்கள் கண்டடைவார்கள் என்பது மாதிரி அவனுக்கும் ஒரு வழிகாட்டி கிடைக்கிறார்.அவர் வழக்கமான ‘சுவாமிஜி’ இல்லை. தன்னை ஒரு சக பயணியாகவே காட்டி நிலை நிறுத்திக் கொள்கிறார்.அவர் பெயர் பிரக்ஞா.பிரக்ஞா நசியை கொல்லிமலையில் இருக்கும் ஒரு ஞானியிடம் அனுப்புகிறார். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு அவரை சந்திக்கிறான்.இயற்கை தரும் வாழ்வு முறைகளைப் பயில்கிறான்.அவரிடம் இருக்கும் ஏட்டுச் சுவடிகளைத் தந்து படிக்கச் சொல்கிறார்.அவற்றை முழுமையாகப் படிக்கச் சொல்கிறார்.அங்கே ஒரு தவறு செய்கிறான்.அவன் தேடியது கிடைத்து விட்டது போன்ற ஒரு நிலையில்,மீதமிருக்கும் சுவடிகளைப் படிப்பதை நிறுத்தி விடுகிறான்.இதுதான் நாவலின் திருப்பம்.புனைவின் அதிசயமும் இதுதான்.ஹெர்மன் ஹெஸ்ஸீ என்ற ஜெர்மானியக் கலைஞர்- கவிஞர், நாவலாசிரியர், ஓவியர் – சித்தார்த்தன் என்றொரு நாவல் எழுதியிருக்கிறார். (இதை யாரும் படிக்கவில்லையென்றால் அவர்களுடைய வாழ்க்கை வீண் என்பேன் நான்). இந்திய ஞான மரபு குறித்த அவரது தேடலை நாவலாகத் தந்திருக்கிறார்.அதில் கதா நாயகனான ‘சித்தார்த்தன்’ என்பவன்,ஞானத் தேடுதலில் கௌதம புத்தரைச் சந்திக்கிறான்.புத்தரின் போதனைகளில் அவனுக்குப் போதுமான பதில் கிடைப்பதில்லை.புத்தர் சிரித்துக் கொண்டே சொல்லுகிறார்,” இனி உன் தேடுதலை நீயே கண்டுபிடி.. ஆனால் ஒரு பொழுதும் சாமர்த்தியம் காண்பிக்க நினைக்காதே என்கிறார்.”
இந்த நாவலில் வரும் ஞானியும் இப்படியொன்றைச் சொல்லுகிறார், நசிகேதனிடம். கடைசியாக அவனை விட்டு விட்டு அந்த ஞானியும் மரணமடைகிறார்.அவன் முழுமையாகச் சுவடிகளைப் படிக்காமல் மீதிப் பயணத்தைப் பொதிகை மலையில் தொடர்ந்து, சாவே இல்லாத ஒரு இடத்தை அடைகிறான்.அவனுடைய தேடலின் நோக்கம் அப்படியொரு இடத்தைக் கண்டு பிடித்து அங்கே தனக்கு விருப்பமானவர்களைக் கொண்டு போய் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது.ஆனால் அவன் கண்டதோ இறந்தகாலம் எல்லாம் மறந்து, மொத்த வாழ்க்கையே மறந்துபோன ஒரு சூன்ய நிலை.இதற்கா, இந்த நரகத்திற்கா நாம் எல்லோரையும் அழைத்து வர நினைத்தோம்,என்று நிலை தடுமாறி கல் போல உறைந்து போகிறான். இந்த நாவலைக் கட்டியமைப்பது சாதாரண விஷயமில்லை. முழுவதும் தர்க்கமாகவே கட்டி அமைத்தாலும்,நாம் மூடி வைத்துவிட்டு கொட்டாவி விட ஆரம்பித்து விடுவோம்.அதிகமும் புனைவாக இருந்தாலும் ஏதோ ஃபேண்டஸியான கதை போல் ஆகி விடும்.
பிரேம்-ரமேஷின் வார்த்தைகளைக் கடன் வாங்கிச் சொன்னால்,”கண்ணாடிச் சில்லுகள் பதித்த மதிலில் நடக்கும் பூனை” போல இயல்பான சாதுர்யத்தோடு எழுதியிருக்கிறார்,இறையன்பு. ”அவ்வப்போது லேசாகக் கிழித்து பூனையின் காலிலிருந்து சுவரில் வடியும் ரத்தத்தை நாம் நாவல் என்று கொண்டாடுகிறோம்.”
Freedom is what you do with what's been done to you.
Hell, Hell Is, Other, People
-Jean - Paul Sartre
- ஃப்ரெஞ்சு இருத்தலியல்வாதியான (Existentialist) ழான் போல் சார்த்ர் ( Jean- Paul Sartre) ” No Exit” என்று ஒரு நாடகம் எழுதியிருக்கிறார். மிகப் பிரபலமான நாடகம்.”மீள முடியுமா” என்ற பெயரில் தமிழில் வெ.ஸ்ரீராம் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார்.க்ரியா வெளியீடு வந்து 25 வருடங்கள் இருக்கும்.
இறந்த பின்பு நான்கு பேர் ‘அவ்வுலகில்’ சந்திக்கிறார்கள். அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடலே நாடகம்.நாடகத்தின் மையக் கருத்தே Hell, Hell Is, Other, People- நரகம் என்பதே மற்றவர்கள்தான்.
இறையன்பு அவர்களின் “அவ்வுலகம்” நாவல் அவரது மூன்று நாவல்களிலும் சிறந்தது எனச் சொல்வேன். சார்த்ர்-ன் நாடகம் பற்றிக் குறிப்பிட்டதன் காரணம்.அது போல் தமிழில் சிந்திக்க யாராவது இல்லையா என்ற ஆதங்கம்தான். சம்பத்தின் ‘இடைவெளி’ நாவல் ஒரு அனுபவத்தைக் கொடுத்தது. ஆனால் இந்த நாவலின் இயங்குதளம் நடுத்தரவர்க்க மனிதர்களும் அவர்களது உலகமும்தான். சார்த்தரின் நாடகத்தை பலவிதமாக வியாக்கியானம் (இண்டெர்ப்ரெட்) செய்வார்கள். இங்கே அதெல்லாம் தேவையில்லை. ஒரு நல்ல மனிதனாக வாழ்ந்தவன் இறக்கிறான்.அவன் அவ்வுலகம் செல்கிறான்.அங்கே தன்னுடன் வாழ்ந்தவர்களை மீண்டும் சந்திக்கிறான்.அந்த சந்திப்பு கணநேரங்களே நீடிக்கும்.அதற்குள் அவ்விருவரிடையே பூமியில் நடைபெற்ற வாழ்க்கை அனுபவங்கள் மீண்டும் அலசப்படும்.அவரவர் தவறுகள் ,பலம்,பலவீனம் எல்லாம் மறுபடி நினைந்து பார்க்கப்படும்.இதில் வாழ்வின் சாரமும் சாவின் மகத்துவமும் நிறுக்கப் பட்டு விடுகிறது. எங்கள் ஊரில் ஒரு ஒப்பாரிப்பாடலுண்டு.” செகம் பூரா ஆளலாமே திரும்பி நல்லாச் சாகலாமே...” என்று.
இந்த நாவலில் திரிவிக்ரமன் வாயிலாக நடைபெறும் சம்பவங்கள் இதை வலியுறுத்துவது போல் இருந்தது. திரும்பி நல்லாச் சாக யாரால் கூடும்.என் தாத்தா ஒரு கதை சொல்லுவார். ஒரு மகா பெரிய கஞ்சன். எந்த வேலைகளுக்கும் ஆள் வைக்க மாட்டான். எல்லாவற்றையும் அவனே செய்வான், காசு செலவாகி விடுமே என்ற பயத்தில்.நாய்த் தோலில் வடிகட்டிய கஞ்சனென்பார்களே அப்படி..அவன் செத்துப் போய் மேலுலகம் போனான்.அங்கே அவனை பட்டு மெத்தையில் உட்கார வைத்து கால் பிடிக்க ஆள், கை பிடிக்க ஆள் என்று ஏக உபசாரம் செய்தார்கள்.இயற்கை உபாதையைச் செய்யக் கூட அவனை எழ விட மாட்டார்கள். ஊட்டி விட ஆள், கை கழுவ ஆள், வாய் துடைக்க ஆள். சந்தோஷமாய் இருந்தான். ஆனால் போகப் போக அலுத்து விட்டது. “ என்னடா இது ஒன்னுக்கு கொல்லக்கி கூட சுதந்திரமா போக விடமாட்டேங்கானுங்களே...” என்று அலுத்து, ”கடவுளே எனக்கு சொர்க்கம் வேண்டாம் போரடிக்கி, நரகத்துக்கே மாத்திருங்க.” என்றான்.கடவுள் சொன்னார்.,”நீ இருப்பது நரகம் தாண்டா மடையா...” என்று. அவனுக்கு அதுதான் நரகம்.எண்ணெய்க் கொப்பரையோ,ஈயத்தைக் காய்ச்சி வாயில் விடுவதோ அல்ல. நரகம்.
இந்த நாவலிலும் ஒவ்வொருக்கும் வழங்கப்படும் அறையே அவர்கள் பூமியில் செய்த தகிடுதத்தங்களுக்கு ஏற்ப இருக்கிறது.சார்த்தரின் நாடகத்தில் இறந்த பின்னும் ஒருவன் ‘பூமியில்’ இன்னும் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பூமியை மேலிருந்து பார்ப்பான். இங்கே பழைய மனிதர்களை திரிவிக்ரமன் என்கிற பாத்திரம் மறுபடி சந்திப்பதில் அதே போல் ஒரு சிந்தனை முன் வைக்கப்படுகிறது.ஆனால் சார்த்தரைப் போல குழப்பம் நிறைந்து வியாக்கியானம் தேவைப்படுகிற வார்த்தைகளால் அல்ல.தமிழ் மண்ணுக்கான வார்த்தைகள்,தமிழ் வாழ்வுக்கான வார்த்தைகளென கடினமான ஒரு ‘தேடலை’ எளிதாக சுவாரஸ்யம் குறையாமல் எழுதிச் செல்கிறார். இங்கே ஒரு பழமொழி உண்டு,” மச்சு நெல்லும் குறையக் கூடாது,மக்கமாரு மொகமும் வாடக் கூடாது...”என்று. இது எளிதான காரியமா. வீட்டில் இருப்பும் குறையக்கூடாது,ஆனால் அதே சமயத்தில் பிள்ளைகளோட முகமும்வாடக் கூடாதுன்னா முடியுமா..? முடிந்திருக்கிறது இறையன்பு அவர்களால்.
நாவலின் வரிகளில் ஒளிரும் தர்க்கமும், பொட்டிலடித்தாற்போல் எழும் கேள்விகளும் நீண்ட, தீர்க்கமான யோசனைக்குப் பின்னரே எழுத முடிந்திருக்க்க் கூடியவை.
“மரிப்பது நியதி,மரணத்திற்குப் பின் என்ன என்று கேட்டுக் கொண்டிருக்கிறாயே பிறப்புக்கு முன் என்ன எப்போதாவது யோசித்திருக்கிறாயா?’”
”ஒரே இடத்தில் நீடிக்க வேண்டும் என்ற எண்ணமே மரணத்தின் முதல் அறிகுறி.அது எந்த இடமாக இருந்தாலும், இருக்க வேண்டும் என ஆசைப் படுகிற இடத்திலிருந்து நிகழும் சின்ன இடமாறுதல் கூட நமக்குள் ஏற்படுத்தும் வெற்றி டமும் மரணமே ! நம்மைச் சுற்றியுள்ளவர்களை விட்டு விலகும் தூரம் அனைட்தும் மரணம்.மரணம் என்பது ஒரே நிகழ்வு அல்ல: பல நிகழ்வுகளின் ஒட்டு மொத்த தொகுப்பு.”
நாவலில் அடிக்கோடிட வேண்டுகிற, என்னைக் கவர்ந்த வரிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் உங்கள் அனுபவம் வேறு சிலவற்றில் உங்களைக் குவிய வைக்கும்.அந்த அளவு ‘thought provoking’ நாவல் இது.இது ஏற்படுத்தும் அதிர்வுகளும், எழுப்பும் கேள்விகளும் அனந்தம்.
The stupidity of people comes from having an answer for everything. The wisdom of the novel comes from having a question for everything....The novelist teaches the reader to comprehend the world as a question. There is wisdom and tolerance in that attitude. In a world built on sacrosanct certainties the novel is dead. The totalitarian world, whether founded on Marx, Islam, or anything else, is a world of answers rather than questions. There, the novel has no place.”
― Milan Kundera,
A novel is like a window, open to an infinite landscape. -Isabel Allende –
இந்த சொற்கள் இறையன்பு அவர்களின் நாவல்களுக்கு மிகவும் பொருந்தும்.அவருக்கு என் வாழ்த்துகள்.

கருத்துகள்