நூல் மதிப்புரை – படித்ததில் பிடித்தது பேரா. G. ராமமூர்த்தி சிறுகதைத் சாளரம் டாக்டர் க. ரத்னம்
நூல் மதிப்புரை – படித்ததில் பிடித்தது
                                          பேரா. 
G. ராமமூர்த்திசிறுகதைத் சாளரம்டாக்டர் க. ரத்னம்
ஐந்திணைப் பதிப்பகம், சென்னை – 5.
நூல் வெளியிட்ட ஆண்டு : 2009 ; விலை : ரூ.85/-  ; பக்கங்கள் : 304
*******
நூல் பற்றி :-
      1980-களில் வார, மாத இதழ்களில் வெளியான நூற்றுக்கணக்கான சிறுகதைகளை தொகுத்து, அக்கதைகளுக்கான மதிப்புரையையும், விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் டாக்டர் க. ரத்னம். இன்றைய அவசர உலகில், நாவலை விட, சிறுகதைகள் படிப்பதையே விருப்பமாகக் கொண்டுள்ளனர் வாசகர்கள் எனக் கூறுகின்றார்.
      எழுத்தாளர் சா. கந்தசாமி முதல் பிரபஞ்சன் வரை 40-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து அதற்கு மதிப்புரை வழங்கியுள்ளார். மேலும், சிறுகதைகளில் உள்ள குறைகளையும் சுட்டிக் காட்டி, அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளும் முறை பற்றியும் தீரத்துடன் எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்கது.  ரத்னம் அவர்கள் நூற்றுக்கணக்கான சிறுகதைகளுக்கு மதிப்புரை வழங்கி உள்ள போதிலும், இங்கு ஒரு சில கதைகளுக்கான மதிப்புரையை, என் பார்வையில் வழங்குகின்றேன்.
மதிப்புரை :-
      பால்வண்ணன் எழுதிய “சாட்சி – என்ற சிறுகதையில் நாயகன் துரைசாமி நாயக்கர், ரெஜிஸ்டர் ஆபிசில் காத்திருந்து, வேண்டியவர்-களுக்கு சாட்சி கையெழுத்து போட்டு, அதனால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்துபவர். இதில் வெள்ளி, செவ்வாய், சனி, ஞாயிறு, அஷ்டமி, நவமி, பண்டிகை நாட்களில் வருமானம் இருக்காது.  இடையில் அலுவலகத்தில் குடிநீரும், அலுவலர்களுக்கு தேநீரும் வாங்கி வரும் வேலையையும் செய்ய வேண்டும். உடலில் வலிமை-யிழந்து விட்ட வயோதிகத்தில், பெற்ற பிள்ளைகள் கைவிட்ட நிலையில் உண்மைக்து துணை போகும் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதால் அவர் படும் இன்னல்கள், படிப்பவர் மனம் பரிதாபப்படும் படியாக சித்திரமாக்கியுள்ளார் பாவண்ணன்.
      “மேடு பள்ளங்கள் – கதையில் ஊதாரித்தனமாக செலவு செய்து திரியும் தன் தங்கையின் கணவனின் நடத்தையால், தன்னுடைய மேடான வாழ்க்கையை, பள்ளத்தில் இறக்கிக் கொள்ளும் பொறுப்புள்ள ஒரு அண்ணனுடைய வாழ்க்கையின் அவலத்தை சித்தரித்துள்ளார் பாவண்ணன். இதனால் அவன் மனைவி படும் தொல்லைகளுக்கு ஈடு கொடுத்து அன்பினார் சரி செய்யும் முறையை அழகுற எடுத்துரைக்கிறார்.  வாழ்க்கை வண்டி மேடு பள்ளங்களில் ஏறி இறங்கினாலும் கவிழ்ந்து விடாமல் இருக்க, இத்தகைய ஒட்டுறவு அவசியமல்லவா என முடிக்கிறார்.
      கோனாங்கி எழுதிய “இருட்டு, கரிசல் காட்டு வறட்சியிலிருந்து, வளமான தஞ்சை மண்ணை நோக்கி ஒரு குடும்பம் புறப்பட்ட கதை. வானம் பார்த்த பூமியை நம்பி வாழும் மக்கல் வாழ்க்கை, மழை பொய்த்து விடும் ஆண்டுகளில் இருண்டு போகத் தானே செய்யும் என்பதனை விளக்கும் கதை. உடைந்த சிம்னி விளக்கு வெளிச்சத்தில் புழங்கும் குழந்தைகளுக்கு, பசியைப் போல, இருட்டும் காலப்போக்கில் பழக்கமாகி விடுகிறது. வறட்சியின் கோரம் இதில் சித்தரிக்கப்படுகிறது.
      கோணாங்கி எழுதிய “ஆதி விருட்சம் என்ற கதையில் என்ன சொல்லப்படுகிறது என்று புரியாத குழப்பமே மிஞ்சுகிறது. இவ்விதம் கதையில் சித்தரிக்கின்ற படிமங்களின் பூரணத்துவம் இல்லாதபோது, குழப்பமான மனோநிலையே ஏற்படுகிறது என விமர்சித்துள்ளார்.
      மேலாண்மை பொன்னுசாமி எழுதிய, “ஜீவியத்தின் உள்வட்டம் கதை, கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் விதவை பற்றியது. கிராமத்து ரேசன் கடையில் 20 நாட்களுக்குப் பிறகு போடும் அரிசியை வாங்க, கடனாக ரூபாயை புரட்டிக்கொண்டு, ரேசன் கடைக்கு ஓடுகிறாள். காலதாமதமாக வந்ததால், ரேசன் கடைக்காரர் நேரம் முடிந்து விட்டதாகக் கூறி, அரிசி போட மறுக்கிறார்.  அவள் மகன் அந்நேரம் அங்கு வந்ததால், கோபமடைந்த அவள், அவனை கன்னத்திலும் முதுகிலும் ஓங்கி அடிக்கிறாள். அடி தாங்காமல், அழுவது கண்டு, ரேசன் கடைக்காரர் அவளுக்கு ரேசன் பொருட்களை அளித்து, குழந்தையை ஏனம்மா அடிக்கிறாய்? என்று கண்டித்து அனுப்புகிறார். மனித நேயத்துடன் கூறிய அந்த வார்த்தை அவளை மனம் மாறச் செய்கிறது. தன்னுடைய கோபத்தை தனித்து, மகன் மீது அன்பு பொழிவதாக கதையை முடிக்கிறார்.
      விமலாதித்த மாமல்லன் எழுதிய, “குப்பை – கதை, காகிதம் பொறுக்கும் 3 சிறுவர்களின் வாழ்க்கைப் போராட்டம் பற்றியது. அச்சிறுவர்களின் உரையாடலும், நடத்தையும், பழக்கவழக்கங்களும் கற்பனையின்றி இயல்பாக அமைந்துள்ளது சிறப்பாகும். “நியமம் – என்ற கதையில், ஓய்வு பெற்ற ஒருவரை, மனைவியும், மக்களும், அவரை எவ்வளவு வேதனைக்கு உள்ளாக்குகின்றனர் என்பது பற்றியது. வீட்டாரின் புறக்கணிப்பும், ஏசலும் அவரை எவ்வளவு பாதிக்கிறது என்பதை இக்கதை மூலம் விளக்குகிறார்.
      அம்பை, பெண் உரிமைக்காகப் போராடும் பெண் எழுத்தாளர். சமையறையை ஆக்கிரமித்து, தன் உரிமையை நிலைநிறுத்துவதாக கூறும் பெண், உண்மையை அடிமைத்தளையில் விலங்கு பூட்டப்பட்ட-வர்களாக வாழ்நாள் முழுவதும் கழிக்கின்றனர்.  இதை அறுத்துக்-கொண்டு சுதந்திரமாக பெண் உலவ வேண்டும் என்று முடிக்கிறார். முற்போக்கு எண்ணம் கொண்டு, தொழிற்சங்க இயக்க நடவடிக்கையில் ஈடுபடும் ஓர் இளம் ஜோடி, போலீஸ் காவலில் எவ்வளவு சித்ரவதை அனுபவிக்கின்றனர் என்பதை எடுத்துரைக்கிறார், “கறுப்புக் குதிரை சதுக்கம் என்ற சிறுகதையில்.
      தமயந்தி எழுதிய, “திரும்ப வருகிற நாட்கள் – என்ற கதையில் சம்பாதித்துப் போடும் அண்ணன்-அண்ணியிடம், படித்து வேலையில்லாது இருக்கும் இளைஞனின் உள்ளத் தவிப்பை வெளிப்படுத்தும் சித்திரம். அவன் மீது வீண் பழி சுமத்தும் இவர்களை, முதிய தாய் – தந்தை கூட தடுக்க இயலாத தன்மை. மனிதாபிமானமாக நடந்து கொள்ளக் கூட இயலாத மனித முகங்கள்.
      பாலகுமாரன் எழுதிய “கயமை என்னும் கதையில் கயமைத்-தன்மையுடைய முதியவர் பிரச்னையை எடுத்தியம்புகிறார். முதியவர்களின் உள்ளப்போக்கினைப் புரிந்து கொள்ளும் வகையில் இந்தக் கதையை நுட்பம் நிறைந்ததாகப் படைத்துள்ளார். இவர்களின் கயமைத்தனத்தால், கள்ளம் கபடமற்ற குழந்தைகள் கூட தவறான முடிவுகளை மேற்கொள்ளும் துயர் உள்ளதாகக் கூறுகிறார்.
      வளவள் எனவும், சளசள எனவும் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும் பாமர மக்கள், அந்தக் குழந்தைகளைப் பேணி வளர்க்க அறியாத மூடர்களாகவும் உள்ளனர் என்பதனை உணர்த்தும், மல்லிக் ரங்கநாதன் எழுதிய, “அம்மன் கோயில் கிணறு, பொறுப்பற்ற தாயும், குழந்தையின் அறியாமையும், மீன் பிடிக்கச் சென்ற அந்த குழந்தைக்கு சாவுக்கு காரணமாகிறது என துயரத்துடன் கதையை முடிக்கிறார்.
      ஒரு காலத்தில் தன் மனைவிக்குத் துரோகம் செய்த கணவன் இன்று அவர், அவளிடம் எவ்வளவு பரிவும் பாசமும் உடையவராக உள்ளார் என்பதனை விளக்கும், “தர்மபத்தினி – என்ற இன்னொரு இவர் கதை.
      இந்த உடம்பு ஒரு சுமை. அழுக்கு மூட்டை, பாபக் கிடங்கு, சபலக் குகை, ஊன் சுமை என சித்தர்களும், ஞானிகளும் கூறுவர். இந்த சுமையை சுமந்தபடி திரிந்து மனித சமுதாயத்திற்கு தன்னால் இயன்ற உதவியை இறுதி நாள் வரை ஆற்ற விரும்பும் ஒரு பரதேசியின் கதை தான், “ஊன்.
      வீடே இல்லாமல் நடைபாதையில் மரமே கூரையாக, வாழ்க்கை நடத்தும் ஏழைகள் பற்றிய கதை, திலீப்குமார் எழுதிய, “கண்ணாடி – என்ற கதை. நாடோடிகளாக ஈயம் பூசும் தொழில் செய்து பிழைக்கும் ஏழைத் தம்பதி பற்றிய கதை.  ஏழை மக்களின் வாழ்க்கையில் பகலில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் இரவின் இருளில் ஒதுங்கி விடும் தன்மை கொண்டது. “மூங்கில் குருத்து கதையில் ஒரு தையல் கடையில் வேலை பார்க்கும் வறுமையில் உழலும் தொழிலாளியின் அவலத்தை சிறப்புற எடுத்துரைக்கிறார். மூங்கீல் குருத்து ஓர் உருவகமாக நின்று இளைஞர்களின் சாதாரணக் கனவுகள் கூட நிறைவேறாத வகையில் வாடி வதங்கிப் போவதை உணர்த்துகின்றது.
      சமுத்திரத்தின் “குணமெனும் குன்றேறி என்னும் சிறுகதை நாகாலாந்துக்கு மாற்றலாகிச் சென்ற இளைஞனின் இழிந்த காதல் சேஷ்டையினையும், அதனால் கொதிப்படைந்த மானத்தைப் பெரிதாக மதிக்கும் நாகர்களின் பண்பாட்டு உயர்வையும் விளக்கும் வகையில் கதை பின்னியுள்ளார். நாகர் இனத்தவர்களின் பண்பாட்டை அறிமுகப்படுத்தும் கதையாக உள்ளது.
      இளமையிலே கணவனை இழந்து, புகுந்த வீட்டில் எவ்வளவு தான் தியாகம் செய்து குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருந்தாலும், அமங்கலி என்ற காரணத்துக்காக ஒதுக்கித் தள்ளப்பட்டு சிறுமைகளுக்கு உள்ளாகும் பெண்களின் அவலநிலையினை சித்தரிக்கிறது “மறுமணம் – என்ற இவரது இன்னொரு சிறுகதை.
      பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய “பால் – என்ற சிறுகதை, கல்லுக்குப் பால் அபிசேகம் செய்யும் மூடநம்பிக்கையை எதிர்த்து பகுத்தறிவு இயக்கம் நடந்த இந்த நாட்டில், நடிகர்களுக்கு (கட் அவுட்) பாலாபிஷேக ஆராதனைகள் நடத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மனநிறைவு காணும் சிறுமையினை விளக்குகிறார்.
      கரிச்சான் குஞ்சு எழுதிய “ஞானோதயம் – கதை, தூரத்தே தெரியும் கானல் நீரான இலட்சிய வாழ்க்கையைக் குறிக்கோளாகக் கொண்டு தன்னையும் தன் குடுமப்த்தையும் அன்றாடம் அல்லலுக்கு உள்ளாக்கி வரும் இளைஞர்களின் வீட்டில் நடக்கும் இலட்சியத்திற்கும், நடைமுறைக்குமான போராட்டத்தை எதிரொலிக்கிறது. இவரின் மற்றொரு கதை, “காதம்பரி – வரலாறு தழுவிய கதை. கவி பாணபட்டனுக்கும் பேரரசன் ஹர்சனுக்கும் இடையே ஏற்பட்ட உரசலையும், விரிசலையும் விவரிப்பது. நாட்டு மன்னனுக்கு அடிமையாக விலை போக விரும்பாத கவிஞன் எப்படி ஒரு காட்டு கன்னி வசப்படுகிறான் என்பதையும் கூறுகிறார்.
      தொ.ச.ரா எழுதிய “உத்தராயணம் – கதை, வாழ்க்கையின் கடைசி காலத்தில் வயதானவர்கள், குடும்பத்தவர்களால் புறக்கணிக்கப்படுவது நாகரீகம் வளர்ந்து விட்ட மேலை நாடுகளில் கூட ஒரு சமூகப் பிரச்சனையாக வளர்ந்துள்ளது.  இது என்றும் எங்கும் தீராத பிரச்சனை என்பதை தெளிவுபடுத்துகிறது. இது வயது முதிர்ந்தவர்களுக்கு ஆறுதல் தரும் கதை. “ஆடு புலி என்ற கதை, விளையாட்டு வேதனையில் முடிகின்ற ஒரு அவலத்தை விவரிக்கின்றது.  தோற்க விரும்பாத ஓர் ஆணின் வெறித்தனம் விவரிக்கப்படுகின்றது. காமவெறியில் தனக்கு வசப்படாத ஒரு பெண்ணை வன்முறையில் வசப்படுத்தும் முரட்டுத்தனம் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
      செங்கை செல்வராசன் எழுதிய “கடைசி பாடம் என்ற கதையில் கல்வி அறிவு பெறாத நாட்டுப்புற மக்களின் மனப்பாங்கை படம்பிடித்துக் காட்டியுள்ளார். நேர்மையான பள்ளி ஆசிரியர்கள் தன்னலம் கருதாது சிறுவர்களின் நல்வாழ்வுக்காகவே உழைக்கிறார்கள். அவர்கள் வறுமையும் வாழ்க்கைப் போராட்டங்களும் அவர்களுக்கும் பெருமையே கொடுக்கும் என்பதை அழுத்திக் கூறுகிறார். சிறுவர், சிறுமியர் மனநிலையை ஆசிரியர் புரிந்து கொண்டால் தான் திறமையான ஆசிரியராக விளங்க முடியும் என்பதை, “ஒரு டீச்சர் பாடம் கற்கிறாள் என்ற சிறுகதை மூலம் எடுத்துக் கூறுகிறார்.
      ஈழத்து எழுத்தாளர் நந்தி, “கண்களுக்கு அப்பால் – என்ற சிறுகதையில் கண்தானம் எவ்வாறு உயர்சாதி மக்களுக்கு சாதி மறுப்பு கருத்தை கொண்டு சேர்க்கிறது என்பதை விளக்குகிறது. வர்க்கப் போராட்டம், உழைப்பவர்களுக்கும், அவர்களை ஆளும் மேல் வர்க்கத்தினருக்குமிடையே மட்டுமல்ல, தலைமுறைகளுக்கிடையிலும் நடைபெறுகிறது என்ற சமுதாய உண்மையையும் விளக்குகிறது.
      பிரபஞ்சன் எழுதிய “3 நாள் சிறுகதை கல்யாணமாகி புகுந்த வீடு சென்ற இளம் மனைவி, கணவனின கையாலாகாததனத்தால், மாதவிலக்காகும் 3 நாட்கள், ஒவ்வொரு மாதமும் மாமியாரால் பிறந்த வீட்டிற்கு அனுப்பப்படும் விவரிக்கும் செயல், இளம்பெண்ணின் அப்பா-அம்மாவின் மனதை உடைந்து போகச் செய்ததோடு, அது ஊருக்கே வெளிச்சமாகி, அவர்களுக்கு தலைகுனிவை ஏற்படுவதாகக் கதையை முடிக்கிறார்.
      இன்னொருவன் காதலித்து கைவிட்டு ஓடிய ஒரு பெண்ணின் மேல்கொண்ட கருணையினால், அவளைத் தன் மனைவியாகவும், அவள் அந்த காதலனுக்கு பெற்ற குழந்தையை தன் குழந்தையாகவும் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரத்தைக் கொண்ட “ஆண்பிள்ளை என்ற கதையில் பிரபஞ்சன் எழுதியதையும் இங்கு மதிப்புரை செய்கிறார்.
      இறுதியாக, ரத்னம் எழுதிய கதைகளுக்கும் மதிப்புரை தருகிறார். அறுபதுகளில், தான் எழுதிய, முதல் கதை, “தாத்தா எங்கே போகிறார்? ஆனந்த விகடனில் பிரசுரிக்கப்பட்டதாகக் கூறுகிறார். அடுத்து எழுதிய “விளையாட்டு மைதானம் கதையில், விளையாட்டு மைதானம், காவல் துறையினரின் பயிற்சி வகுப்பும், பிற விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்று களை கட்டும்.  எந்த நிகழ்வுகளும் நடைபெறாத நேரத்தில், ஆட்டுக்குட்டிகளும், மாடுகளும் மேய்வதாகவும் வருந்துகிறார். பண்ணையத்து ஆளாக தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் மாதானி என்ற தலித்தை பற்றியது. அவன், தான் புதிதாக தைத்திருந்த செருப்பை, தன் பள்ளி செல்லும் பேத்திக்குக் கூட கொடுக்காமல், பண்ணையத்தில் இருக்கும் கான்வெண்டில் படிக்கும் வசதியாக குழந்தைக்குக் கொடுக்க, அதை அவள் வாங்க மறுத்து, “உன் பேத்திக்கே கொண்டு கொடு என்று அவமதித்து விரட்டும் கதை, “பழசும் புதுசும். சமூகவியலின் கூறுகளை புரிந்து கொள்ள உதவுவதாகக் கூறுகிறார்.
      தன் கல்லூரிப் பணியின் பின்னணியில் படைக்கப்பட்ட, “எண்ணும் எழுத்தும் – என்ற கதை, கல்வி நடைமுறை மற்றும் முறைகேடுகளை விளக்கும் விதமாக எழுதப்பட்டது. முறைகேடான வழக்கத்திற்கு துணை போகாத நடுநிலை பிறழாத ஆசிரியரையும், முறைகேட்டிற்கு துணை போகும் ஆசிரியரையும் இங்கு சுட்டிக் காட்டுகிறார். “யாருடைய பரிந்துரையும் இல்லாமல், தரமான படைப்புகள் நிச்சயம் வெளிச்சம் காணும் என்ற நம்பிக்கையை இளம் எழுத்தாளர்களுக்கு தன் மதிப்புரை கொடுக்கும் என முடிக்கிறார்.
      டாக்டர் க. ரத்னம் அவர்கள், இந்நூலில், நூற்றுக்கணக்கான சமுதாய சீர்திருத்த நோக்கம் கொண்ட சிறுகதைகளுக்கு மதிப்புரை வழங்கியிருந்தாலும், அதிலிருந்து சுமார் 25 சிறுகதைகளுக்கு மட்டுமே ‘என் பார்வையில் மதிப்புரை வழங்கியுள்ளேன். சிறந்த சிறுகதைகளை உள்ளடக்கிய இந்நூல் அனைவருக்கும் பயன் தரும் என நம்புகிறேன். படித்து இன்புற வேண்டுகிறேன்.
தங்களின் மேலான கருத்துக்களைப் பதிவிட வேண்டுகிறேன்.
-    பேரா. G. ராமமூர்த்தி

கருத்துகள்