தொழிலாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி!
தொழிலாளர் தினம் தொழிலாளருக்கு துன்ப தினமானது
தொழிலாளர் அனைவரும் வாடுகின்றனர் பட்டினியில் !
தினக்கூலி தொழிலாளர் வாழ்க்கை கேள்விக்குறியானது
தினம் உழைக்க வழியின்றி கூலி பெற வழியின்றி தவிப்பு !
ஒரு நாள் ஒரு வாரம் பதினைந்து நாள் என்றபடியே
ஒவ்வொரு நாளும் ஊரடங்கை நீட்டியபடி உள்ளனர் !
கொரோனா சாவை விடு பட்டினிச்சாவு கூடி விடும் போல
கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் வழியைப் பாருங்கள் !
ஒருமாதம் தாண்டி விட்டது ஊரடங்கு நடைமுறைக்கு வந்து
ஒரு ஆயிரம் எப்படி போதும் ஏழைகளுக்கு சிந்தியுங்கள் !
வாழ்வாதாரம் இழந்து வாடி வருகின்றனர் ஏழைகள்
வாழ்வா ? சாவா ? என போராட்டமானது வாழ்க்கை !
தனியார்கள் ஊதியம் வழங்கிட வேண்டும் என்றனர்
தனியாரோ ஒரு சிலர் தவிர பலர் வழங்கவில்லை !
பசி பட்டினியில் தினமும் செத்துப் பிழைக்கின்றனர்
பாமரர்களின் வாழ்க்கையை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் !
தினமும் தரும் இறப்பு புள்ளி விபரங்கள் குறைந்தபாடில்லை
தவித்து வரும் ஏழைகளுக்கு வாழ வழி சொல்லுங்கள் !
தொழிலாளர் தினம்கொண்டாட மனமின்றி தவிக்கும்
தொழிலாளர் வாழ்வில் துன்ப இருளை அகற்றிட முயலுங்கள் !
கருத்துகள்
கருத்துரையிடுக