எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !





http://www.tamilauthors.com/04/528.html 

. எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்!

நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வேடந்தாங்கல் பதிப்பகம், 2-1-98, மேற்கு கோட்டைவாசல் 4வது தெரு, பரவை, மதுரை-625 402 அலைபேசி : 94435 72505

பக்கங்கள் : 108, விலை : ரூ.80

*****

அசுரன் படத்தின் பாடலின் மூலம் புகழ்பெற்றுள்ள பாடலாசிரியர் ஏகாதேசி மதுரைக்காரர் இவரது ஹைக்கூ நூலிற்கு முன்பே மதிப்புரை எழுதி உள்ளேன். இந்த நூல் வெளியீட்டு விழா மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர்
பி.வரதராசன்அவர்களின் தலைமையில் நடந்தது. நூல் பற்றி பொதுவுடைமை இயக்கம்  பெருமாள் அவர்கள் பேசினார்கள்.

இந்த நூலின் பெயரே வித்தியாசமாக இருந்ததால் பலரும் பல பெயர் சூட்டினார்களாம். முகநூலில் பதிந்த கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். ‘இருட்டு இருட்டல்ல’ என்று நான் பெயர் சூட்டுகின்றேன்.

இருட்டு என்றால் பயம் என்ற முந்தைய கற்பிதங்களைத் தகர்க்கும் வண்ணம், இருட்டும் ரசனைக்குரியதே என இருட்டை ரசித்து ரசித்து வித்தியாசமாக கவிதை வடித்துள்ளார். பாராட்டுகள்.

பகற்பொழுது பகற்பொழுதாக
     இருந்திடவே விரும்புகிறோம்
     இரவு நம்மை
     என்ன தான் செய்ததோ!
     இரவாக
     இருந்திட விரும்புவதில்லை!

சிலர் இரவை, இருட்டை விரும்புவதில்லை, எப்போது விடியும் என்று எதிர்பார்ப்பார்கள். இன்னலின் குறியீடாக இருளை வைத்து வாழ்க்கை விடியவில்லை என்று சொல்பவர்களும் உண்டு.

கள்ள ஓட்டைத் தடுக்கக் கூட
     விரல் நகத்தில்
     இருட்டுச் சித்திரம் தான்
     இடுகிறார்கள்!

தேர்தலின் போது விரலுக்கு மை வைப்பதை இருட்டுச் சித்திரம் என்கிறார், நல்ல சொல்லாட்சி!

பூ பூக்காத
மரமும்
நிழல் காய்க்கிறது!

பூ பூக்காத மரங்களும் உண்டு. பூமியில் ஆனாலும் அவைகளுக்குக் நிழலும் உண்டு. அந்த நிழலை காய்க்கிறாது என்று சொன்ன கற்பனை நன்று.

     இருட்டு பேய்
     இருட்டில் பேய்
     இரண்டும் பொய் !

     பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வைர வரிக்ளை நினைவூட்டும் விதமாக ‘வேப்பமரம் உச்சியில்’ வரியை நினைவூட்டி மூடநம்பிக்கை சாடிய விதம் அருமை.

     இரவில் நாமெல்லாம் தூங்கி விடுகிறோம்
     நம்மைப் பாதுகாத்தபடி
     நடமாடிக் கொண்டே தான் இருக்கிறது
     இந்த இருள்!

இருள் நம்மை பாதுகாக்கின்றது என்கிறார். இருளை ஆய்ந்து ஆராய்ந்து ரசித்து 100 புதுக்கவிதைகள் வடித்துள்ளார். இந்த நூல் படித்து முடித்தால் இருளை ரசிக்கத் தொடங்கி விடுவார்கள். அந்த அளவிற்கு இருளின் மீது காதல் கொண்டு இருளை உயர்த்திப் பிடித்துள்ளார். நூலாசிரியர் கவிஞர் ஏகாதேசி.

     ஓர் அழகிய கண்ணையோ
     ஓர் அழகியின் கண்ணையோ
     வரைந்துவிட முடியாது
     இருட்டு வண்ணம் கொஞ்சம்
     எடுத்துக் கொள்ளாமல்!

கருப்பு வண்ணத்தையும் இருட்டாகவே எடுத்துக் கொள்கிறார். நல்ல கற்பனை.

ஒரு நாய்க்குட்டியைப் போன்றுதான்,
நம் காலைச் சுற்றியே திரிகிறது
இருட்டு. நாம் கூட செல்லமாக
நிழல் என்று பெயர்
 வைத்து அழைக்கின்றோமே!

நம் நிழலை நாய்க்குட்டி போல என்கிறார். உண்மை தான் நம்மை விட்டு உறவுகள், நண்பர்கள் யார் பிரிந்தாலும் பிரியாமல் நம் உடன் வருவது நிழல் தான்.

     இருட்டின் குழந்தைகள்
     பின்வருவன காக்கை
     மலை எறும்பு
     யானை மற்றும்
      நான்!

‘நான்’ என்று இருட்டை எழுதி உள்ளார். இருட்டு பற்றிய கவிதையை எழுதத் தொடங்கி இருட்டாகவே மாறி விட்டார். உணர்த்து வடித்த கவிதைகள் நன்று.

     விளக்கை ஏற்றினால் தான்
     வெளிச்சம்
     இருட்டை
     ஏற்ற வேண்டியதில்லை!

உண்மை தான். இருட்டை ஏற்ற வேண்டியதில்லை. இருட்டு தானாகவே பரவி விடும். இருட்டு என்பது இருட்டு அல்ல, குறைந்த ஒளி. ஒளி என்பது ஒளி அல்ல. குறைந்த இருட்டு. இப்படி பல சிந்தனைகளை விதைத்தன கவிதைகள்.

இருட்டை
அருந்தாமல்
இத்தனை
வெளிச்சம்
ஏது
சூரியனுக்கு!

ஆம, சூரியன் வந்ததும் இருட்டு என்பது ஓடி ஒளிந்து கொள்கின்றன. ஆனால் கவிஞர் ஏகாதேசியோ இருட்டை சூரியன் அருந்தி விடுகிறான் என்று கற்பனை செய்த விதம் சிறப்பு.

     குழந்தைகளை மட்டுமா
     தாய்களையும் தான்
     இருட்டு
     தாலாட்டுகிறது!

இருட்டு குழந்தைகளை மட்டுமல்ல, தாய்களையும் தாலாட்டுகிறது. இருட்டில் எல்லோரும் இமை மூடி தூங்கி விடுகிறோம். ஆனால் நூலாசிரியர் தூங்காமல் இருந்து, இருட்டை ரசித்து ஆராய்ந்து கவிதைகள் வடித்துள்ளார்.

   
     ஒரு அமாவாசை நாளில்
     விளக்குகளுக்கு விடுமுறை தந்து
     வேடிக்கை பாருங்கள் !
     தேரழகென்ன தேரழகு
     இருள்தான் பேரழகு!


இருள், தேரை விட அழகு, பேரழகு என்று எழுதி, இருளை உச்சத்திற்கு கொண்டு போய் விட்டார். இருளில் இவ்வளவு உள்ளதா? என வியக்க வைத்து விட்டார். இரவு 10.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 வரை 31 கவிதைகளை முகநூலில் பதிந்து உள்ளார். அதற்கு வந்த விருப்பங்கள், பின்னோட்டங்கள் காரணமாக ஐந்து நாட்களில் 100 புதுக்கவிதைகள் எழுதி நூலாக்கி உள்ளார். அறிஞர் அண்ணா உரையை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நூலாக்கிய "வேடந்தாங்கல் பதிப்பகம்"
இந் நூலை வெளியிட்டுள்ளது. பாராட்டுக்கள் 

கருத்துகள்