மணல் நதியும் சில கூழாங்கற்களும்! ஹைக்கூ கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !





மணல் நதியும் சில கூழாங்கற்களும்!

ஹைக்கூ கவிதைகள் !

நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை – 600 011.  பக்கம் : 88, விலை : ரூ.90.


*****

நூல் ஆசிரியர் கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு கூட்டுத் தொகுப்புகளும் சேர்த்து இது 10வது ஹைக்கூ கவிதை நூல்.  1998ஆம் ஆண்டு தொடங்கிய ஹைக்கூ பயணம் 2020 வரை தொடர்ந்து வருவது பாராட்டுக்குரியது.

தாய் தந்தையருக்கும் தமிழை நேசிக்கும் வாசிக்கும் அனைவருக்கும் நூலை காணிக்கையாக்கி இருப்பது சிறப்பு. கவிஞர் சென்னிமலை தண்டபாணி, கவிஞர் க. அம்சப்ரியா மற்றும் இந்த நூலை வடிவமைத்த கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ஆகியோர் அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளனர்.

மூங்கில் தவம்
      கலைந்தது
      வழியும் குழலின் இசை!

கவித்துவம் சப்பானிய கவிஞர்களை மிஞ்சும் வண்ணம் இயற்கையை ரசித்து ருசித்து வடித்த ஹைக்கூ நன்று.

அமாவாசை இரவு
      நிலவின் தரிசனம்
      அவள் கடந்த கணம்!

இந்த ஹைக்கூ பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஹைக்கூவை நினைவூட்டும் விதமாக இருந்தது.

அமாவாசையன்று
      நிலவு
      எதிர்வீட்டு சன்னலில்!  ( கவிஞர் இரா .இரவி  )

ஒத்த சிந்தனையாக சில நேரங்களில் அமைவது உண்டு.

நான் சிலையாக
      என்னை செதுக்கியது
      காலம்!

உண்மை தான். தேவையற்ற பகுதிகளை நீக்கிட கிடைக்கும் சிலை தேவையற்ற சொற்களை நீக்கிட பிறக்கும் ஹைக்கூ கவிதை! பக்குவப்பட்ட மனிதனாக நம்மை மாற்றி விடும் காலம்!

ஊதுபத்தி விற்ற பணம்
      வாசம் வீசுகின்றது
      விழியற்றோர் உழைப்பு!

பார்வையற்றோர் பலர் பிச்சையெடுப்பதை விட்டு விட்டு தொழில் செய்து பிழைத்து வருவது கண்கூடு.

உதிரும் இலைகளில்
      பறக்கும் சில இலைகள்
      அட பச்சைக்கிளி!

இலைகளை பச்சைக்கிளி என்கிறாரா? பச்சைக்கிளிகளை இலைகள் என்கிறாரா? கண்ட காட்சியை காட்சிப்படுத்தி, இயற்கை ரசனையை ஹைக்கூ கவிதையாக்கி உள்ளார். நம் மனக்கண் முன்னே பச்சை இலைகளும் பச்சைக் கிளிகளும் வந்து போவது உறுதி!

ஒரே கருத்தை மையப்படுத்தி இரண்டு ஹைக்கூ வந்துள்ளன. அடுத்த பதிப்பில் தவித்திடுங்கள்.

      சாலை விரிவாக்கம்         நெடுஞ்சாலை விரிவாக்கம்
      வெட்டுண்ட மரங்கள்       கூடிழந்த பறவைகள்
      கூடு இழந்த பறவைகள்    உருமாறிய ஊர்!

சிந்திக்க வைக்கும் பல நல்ல ஹைக்கூ கவிதைகள் நூலில் இடம்பெற்றுள்ளன பாராட்டுக்கள்.

கூண்டுக்குள் சிங்கம்
      சில சமயம் வாலாட்டுகிறது
      வீசப்படும் இறைச்சிக்கு!

கம்பீரமான சிங்கம் கூட சிறையில் அடைபட்டதும், போடப்படும் இறைச்சிக்காக சிங்கம் என்பதை மறந்து நாயாக மாறி வாலாட்டுகின்றதாம். சூழ்நிலைக் கைதியாக மாறிவிட்ட சுயநல மனிதர்களையும் குறியீடாகக் கொள்ளலாம்.

மாதக் கடைசி
      யாரிடம் கையேந்துவது
      சில்லறையோடு பிச்சைக்காரர்!

உலகமயம் தாராளமயம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்-களுக்கு நம் நாட்டை தாரை வார்த்து மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.  மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வலுக்கட்டாயமாக தள்ளி வருகின்றது. இன்றைய சூழ்நிலை ஏழ்மையை மிக அழகாக படம்பிடித்துக் காட்டி உள்ளார். பாராட்டுக்கள்.

இலையில் கை வைக்கையில்
      காதில் ஒலிக்கிறது
      கிடாவின் கடைசி கதறல்!

கிராமங்களில் கோவிலுக்கு நேர்ந்துவிட்ட கிடா என்று வீட்டில், செல்லமாக வளர்ப்பார்கள். கோயில் திருவிழா வந்து விட்டால் வளர்த்த கிடாவை, அந்த ஆட்டை பலிகொடுத்து விடுவார்கள்.  அப்படி கறி விருந்து சாப்பிடும் போது வெட்டப்பட்ட ஆட்டின் கடைசி சத்தம் காதில் ஒலிப்பதாக உள்ளத்து உணர்வுகளை ஹைக்கூவாக வடித்தது சிறப்பு.

பற்றி எரியும் மூங்கில் காடு
      சாம்பலானது
      எத்தனை புல்லாங்குழல்!

நல்ல கற்பனை. இந்த ஹைக்கூ புகழ்பெற்ற அமுதபாரதி அவர்களின் ஹைக்கூவை நினைவூட்டியது.

இந்த காட்டில்
      எந்த மூங்கில்
      புல்லாங்குழல்!  (அமுதபாரதி)

பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கோணங்களில் சிந்தித்து ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூலாசிரியர் நிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பாராட்டுகள். பெயரிலேயே நிலா இருப்பதால் ஹைக்கூ கவிதைகளிலும் நிறைய நிலாக்கள் வந்துள்ளன.

விற்கப்பட்டு விட்டது குதிரை
      மனதிற்குள்
      குளம்படி ஓசைகள்!

குதிரையை விற்றவனின் மனநிலையிலிருந்து சிந்தித்து வடித்த ஹைக்கூ சிறப்பு.

குடல் வெந்து இறந்தவன்
      படையல்
      மீண்டும் சாராயம்!

குடியால் குடல் வெந்து செத்தவனுக்கு படையலாக குடியை வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் சிலர். அதனைக் காட்சிப்படுத்தி உள்ளார்.

நாய்களின் கூட்டத்தில்
      கலவரம்
      வீசியெறிந்த எலும்புத் துண்டுகளால்!

நாய்களை மட்டுமல்ல, இன்றைய சில மனிதர்களையும் குறிப்பிடுவதாகவே தோன்றுகிறது. பாராட்டுக்கள்.

குறிப்பு : சில இடங்களில் எழுத்துப்பிழை உள்ளன. அடுத்த பதிப்பில் பிழை நீக்கி விடுங்கள்.

--

.

கருத்துகள்