வான்மழை ! ஹைக்கூ கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கார்முகிலோன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




வான்மழை !
ஹைக்கூ கவிதைகள்
நூல் ஆசிரியர் : கவிஞர் கார்முகிலோன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
 
மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை,
சென்னை-600 018.  பேசி : 98414 36213

பக்கங்கள் : 64, விலை : ரூ.50*****

நூல் ஆசிரியர் கவிஞர் கார்முகிலோன் பெயர், புனைப்பெயர் மட்டுமல்ல, காரணப்பெயரும் கூட. பொதிகை மின்னல் உள்ளிட்ட பல்வேறு சிற்றிதழ்களுக்கு பரிசு மழை பொழியும் புரவலர், வள்ளல், பணமும் மனமும் அமையப்பட்ட பண்பாளர். ஒரே மேடையில் 24 நூல்கள் வெளியிட்ட சாதனையாளர், படைப்பாளர். அவரது ஹைக்கூ கவிதை நூலாக ஹைக்கூ மழை பொழிந்து வான்மழையாக வந்துள்ளது, பாராட்டுக்கள்.ஹைக்கூ கவிதையின்  முன்னோடி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களின் மகள் கு.அ. தமிழ்மொழி ஹைக்கூ நூல்கள் எழுதியுள்ள ஹைக்கூ படைப்பாளி. இந்த நூலிற்கு அணிந்துரை நல்கி இருப்பது சிறப்பு.எந்த ஒரு நூலையும் மிக நேர்த்தியாகப் பதிப்பிக்கும் செயல் வீரர் பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்கள் இந்த நூலையும் மிக நேர்த்தியாக அச்சிட்டு பதிப்புரையும் வழங்கி உள்ளார்.நறுக் சுருக் என சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஹைக்கூ படைப்பாளி உணர்ந்த உணர்வை வாசகனுக்கும் உணர்த்தும் நல் உத்திகளில் ஒன்று ஹைக்கூ கவிதை.மனமும் செயலும் வெவ்வேறாக
      மனிதன் மிருகம்
ஆகின்றான்
      மனம் ஒரு குரங்கு!
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது மனிதனுக்கு அழகு. அதை விடுத்து பேசுவது ஒன்றாகவும், செயல் மற்றொன்றாகவும் இருப்பதை குரங்கு குணம், விலங்கு குணம் என்று உணர்த்தியது நன்று

.தொண்டன் மோதிரம்
      அடகு கடையில்
      தலைவன் பிறந்த நாள்!

காந்தி, காமராசர், கக்கன் காலத்தோடு நல்ல தலைவர்கள் மறைந்து விட்டனர்.  இன்றைக்கு ஏமாற்றும் தலைவர்கள் மலிந்து விட்டனர். ஏமாளியாகவே தொண்டன் இருக்கிறான் என்பதை உணர்த்திய விதம் அருமை.

ஜெயித்த பின் மறந்தவை
      தொண்டனும் வாக்குறுதியும்
      கறிவேப்பிலைகள்!

உணவில் கறிவேப்பிலை வந்தால் எடுத்து, அதை வெளியே போடுவதைப் போல, வென்றவுடன் செருக்கு வந்து, தந்த வாக்குறுதியை மறந்து விட்டு தொண்டனை ஏமாற்றும் ஏமாற்று அரசியல் மலிந்து விட்ட காலமிது.

சாமான்யன் சாதனை
      பத்து தலைமுறைக்கு சொத்து
      வாழ்க அரசியல்!

சாமான்யர்கள் அரசியலுக்கு வந்து விட்டார்கள் என்று பெருமைப்பட்டால் வந்தவர்களே ஊழல் புரிவதில் உச்சம் தொட்டு கோடிகளைச் சுருட்டும் கொள்ளையர்களாக மாறிவிடுவது வேதனை, கசப்பான உண்மை.

உன் மௌனம் கவிதை
      ஏராள விளக்கத்தை
      எடுத்து இயம்புகிறது

!காதல் ஹைக்கூ கவிதைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. ஹைக்கூவில் எதையும் பாடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு தலைப்புகளில் பாடி உள்ளார்.

பண்பில்லா மனிதருக்கு
      படிப்பு மட்டுமல்ல
      வாழ்வும் வீண் தான்.

இன்றைக்கு சிலர் நன்கு படித்து இருந்தும் பண்பற்றவர்களாக மன நோயாளிகள் போல நடந்துகொள்கின்றனர். பண்பற்றவர்கள் வாழ்க்கை வீண் தான் என்று உணர்த்தியது நன்று.

மருமகள் வந்தவுடன்
      பெற்றோர் தனிக்குடித்தனம்
      முதியோர் இல்லத்தில்!

நம் நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகி வருவது பெருமை அல்ல, சிறுமை. முதியோர் இல்லம் தேவைப்படாத சமுதாயமாக விரைவில் மாற வேண்டும்.

உன்னை நான் மணக்க
      வரதட்சணை தர வேண்டுமா?
      வேசியா நீ ஆடவனே!

வரதட்சணைக் கேட்கும் மணமகனை நோக்கி மணமகள் கேட்பது போன்று சாட்டையடி ஹைக்கூவாக வடித்துள்ளார்,

பாராட்டுகள்.

கூசாமல் கேடிகின்றார்
      குலை நடுங்க வைக்கின்றார்
      மாப்பிள்ளைக் குடும்பத்தார்!

தங்கம் விலையோ விண்ணை முட்டும் அளவிற்கு ஏறிக்-கொண்டே இருக்கின்றது. பெண் குழந்தை பெற்ற பெற்றோர் யாவரும் தங்கம் விலை ஏற ஏற கவலை கொள்கின்றனர்.  மகனைப் பெற்ற பெற்றோர் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் 30 பவுன் போடுங்க, 50 பவுன் போடுங்க, 100 பவுன் போடுங்க, கார் வாங்கி கொடுங்க என்று கூசாமல் கேட்கும் அவலத்தை உணர்த்தி உள்ளார்.

சலிக்கும் வரை முயற்சித்தும்
      வேலை கிடைக்கவில்லை
      பட்டம் பயனற்றுப் போனது!

பொறியாளர்கள் பெருகிய அளவிற்கு வேலைவாய்ப்பு பெருகவில்லை. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது.  ஆட்சியில் இருப்போர் இதுபற்றிய கவலையே இன்றி புள்ளிவிவரங்களை மட்டும் தாள்களில் தந்து தப்பித்து வருகின்றனர்.வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்தால் தான் ஒரு நாடு வளம் பெறும். வல்லரசாவது இருக்கட்டும் முதலில் நல்லரசாகட்டும்!

தங்க கோபுரம் அழகாய்
      தரையில் ஏழைகள் அழுகை
      மௌனயாய் சாமி!

ஹைக்கூ கவிதையின் மூலம் சிந்திக்க வைத்து பகுத்தறிவு விதையும் விதைத்து உள்ளார். மொத்தத்தில் சமுதாயத்தை சீர்படுத்திட சிந்தித்துப் பார்த்து அறிவார்ந்த கருத்துக்களை எளிய ஹைக்கூ கவிதைகளாக்கி வழங்கி உள்ள நூலாசிரியர் கவிஞர் கார்முகிலோன் அவர்களின் ஹைக்கூ மழை தொடர வாழ்த்துகள்..

கருத்துகள்