எனது ஹைக்கூ... நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ச. தமிழரசன் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி






எனது ஹைக்கூ...நூல் ஆசிரியர் : 
கவிஞர் முனைவர் ச. தமிழரசன்
நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
*****
‘எனது ஹைக்கூ நூலின் பெயரே மிகவும் பிடித்தது, காரணம் எனக்கு மிகவும் பிடித்தது ஹைக்கூ. நூலாசிரியர் முனைவர் கவிஞர் ச. தமிழரசன் அவர்கள் தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் பயின்று பட்டம் பல பெற்று தகுதிகள் வளர்த்து அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர். அறப்பணியான ஆசிரியப்பணிக்கு இடையை இலக்கியப் பணியும் செய்து வருபவர். காலந்தோறும் மதுரை என்ற முதல் நூலின் மூலம் பரவலான பாராட்டைப் பெற்றவரின் இரண்டாவது நூல் இது.
ஹைக்கூ என்ற சொல் சப்பானியச் சொல்லாக இருந்தாலும் அந்த வடிவம் அனைவரையும் ஈர்த்த வடிவமானது. நூலாசிரியரின் முதல் ஹைக்கூ நூல் இது. தான் உணர்ந்த உணர்வை வாசகர்களையும் உணர வைத்துள்ளார். பாராட்டுகள்.
பதச்சோறாக நூலை வாசிக்கும் முன் எனக்குப் பிடித்த ஹைக்கூ கவிதைகளை மேற்கோள் காட்டுவது அணிந்துரையில் எழுதும் மரபு.
நெஞ்சம் நிமிர்த்தும்
       நித்தியப் புகழ் தரும்
       நேர்மை!
முதல் ஹைக்கூ கவிதையிலேயே முத்தாய்ப்பாக எடுத்து இயம்பி நேர்மைக்கு மகுடம் சூட்டி நிமிர வைத்துள்ளார், பாராட்டுகள். நேர்மைக்கும் என்றும் மரியாதை மதிப்பு உண்டு, தேசப்பிதா காந்தியடிகள் இன்றும் உலகம் முழுவதும் போற்றிடக் காரணமாக அமைந்தது அவரது நேர்மையே. இப்படி பல நினைவுகளை மலர்வித்தது.
எட்டி உதைக்கின்றன
       எழுத்துக்கள்
       எதை நீர் கடைபிடித்தீர்!
உண்மை தான். படித்தவற்றை படித்தவர்கள் கடைபிடிக்கவில்லை. மனசாட்சியோடு நடந்து கொள்வதில்லை. படித்தவர்களும் அறம் மறந்து சிலர் ஊழல் புரிகின்றனர். அவர்களைப் பார்த்து எழுத்துக்கள் எட்டி உதைத்து புத்தி புகட்டுவதாக வடித்த ஹைக்கூ நன்று.
முகச் சவரம் செய்தோம்
       அழகானோம்
       அகச்சவரம் செய்தோமா?
‘புறத்தூய்மை நீரால் அமையும் என்ற திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழிந்து புறம் அழகாக இருந்தால் போதுமா? அகம் அழகாக இருக்க வேண்டாமா? என்று உணர்த்தியது சிறப்பு.
நிலம் விற்பனைக்கு
       நீர் விற்பனைக்க்கு
       காற்றும் விரைவில்!
சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் விலைக்கு வாங்கும் வழக்கம் இல்லை. ஆனால் இன்று விலைக்கு வாங்குகிறோம். விரைவில் சுவாசக் காற்றையும் விலைக்கு வாங்கும் நிலை வரும் என்று தொலைநோக்கு சிந்தனையுடன் எச்சரிக்கை செய்துள்ளார். காற்று மாசுபடாமல் தவிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஒப்புக் கொள்ளுங்கள்
       எனக்குத் தெரியாதென்று
       உயரும் அறிவு!
இது தான் அறிவு நாணயம். தெரியாததை தெரியாது என்று சொன்னால் தெரிந்து கொள்ள வாய்ப்பு வரும். தெரியும் என்று பொய் சொன்னால் தெரியாமலே போய் விடும். இன்னும் சில வாய்ச்சொல் வீரர்கள் எல்லாம் எனக்குத் தெரியும் என்று அள்ளி விடுவார்கள். அவர்களைப் பார்த்து சமுதாயம் எள்ளி நகைக்கும்.
கரைந்த யாப்பு
       சுருங்கிய புதுக்கவிதை
       ஹைக்கூ!
ஆம், மரபுக்கவிதையான யாப்பு கரைந்து விட்டது. பல வரிகளில் வந்த புதுக்கவிதை மூன்று வரியாக சுருங்கிய வடிவம் ஹைக்கூ. ஹைக்கூ விளக்கம் சுருக்கம் நன்று.
உரையாற்ற அழைப்பு
       ஊழல் பேர்வழிக்கு
       தலைப்பு அறம்!
இன்றைய அரசியல்வாதிகளை நினைவூட்டியது. அறம் பற்றி மேடையில் வாய் கிழியப் பேசுவார்கள். ஆனால் ஊழல்புரிவதில் மன்னராக இருப்பார்கள். அவர்களை நினைவூட்டியது,ம நாட்டு நடப்பைச் சுட்டியது.
துடிக்கிறது மனது
       கர்ப்பிணிகளை நினைத்து
       குண்டும் குழியுமான சாலை!
உண்மை தான். கர்ப்பிணிப் பெண் சாலையில் சென்றால் மருத்துவமனை செல்லுமுன் பிரசவம் நடந்துவிடும். தானியீல் எழுதி வைத்திருப்பார்கள். பிரசவத்திற்கு இலவசம் என்று, இனி சாலையிலும் எழுதி வைக்கலாம், பிரசவம் இலவசம் என்று. அந்த அளவிற்கு தமிழகத்தின் சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளன.  அதனை காட்சிப்படுத்தி உள்ளார் ஹைக்கூவின் மூலம்.
இருண்ட மனம்
       ஒளியேற்றும்
       புத்தகம்!
மனித குலத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பான புத்தகத்தின் பயனை குறைவான சொற்களின் மூலம் நிறைவாக உணர்த்தி உள்ளார்.
வாழ்நாள் நீட்டிப்பு!
       மனதிற்கோர் மாமருந்து
       சிரிப்பு!
தேசப்பிதா காந்தியடிகள் ‘நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லை என்றால் நான் எப்போதே தற்கொலை செய்து இருப்பேன் என்றார். இயந்திரமயமான உலகில் மனதிற்கு இதம் தருவது சிரிப்பு. நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நூலாசிரியர் கவிஞர் முனைவர் ச. தமிழரசன் எழுதியுள்ள எல்லா ஹைக்கூ கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன். நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும். ஹைக்கூ உலகிற்கு ஒரு புதிய வரவு நல்வரவாகட்டும். இலக்கிய உலகம் இனிதே வரவேற்கும். அன்பான வேண்டுகோள். இனிவரும் காலங்களில் ஆங்கிலச் சொற்கள் தவிர்த்திடுங்கள்

கருத்துகள்