தமிழ் என் மூச்சு! கவிஞர் இரா. இரவி !
குருதியோடு கலந்திட்ட மொழி தமிழ்
உறுதியோடு உலகில் முன்நிறுத்துவோம் தமிழ்!
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அன்றே
மொழிந்தார் உலகின் முதல்மொழி தமிழ்!
உலகின் முதல் மனிதன் தமிழன்
உலகமே உணர்ந்தது ஆய்வால் இன்று!
தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம்
தன்னிகரில்லா நாமக்கல்லாரின் வரிகளை நினைப்போம்!
ஆங்கில மொழியிலும் தமிழ்ச்சொற்கள் உண்டு
அங்கே கொரியா மொழியிலும் தமிழ் உண்டு!
மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழி தமிழ்
மொழி ஆய்வாளர்கள் உரைக்கின்றனர் இன்று!
தமிழ்மொழியின் பெருமையை தரணி அறிந்தது
தமிழன் தான் இன்னும் அறியாமல் இருக்கின்றான்!
தேமதுரத் தமிழோசை உலகெங்கும் ஒலிக்கின்றது
தரணியில் தமிழன் இல்லாத நாடே இல்லை!
கீழடியின் காலடியில் உள்ளது நாகரிகம்
கீழடியில் கிடைத்த கீறல் உரைத்தது தமிழ்!
எழுத்தறிவோடு அன்றே வாழ்ந்தவன் தமிழன்
எடுத்து இயம்பி விட்டது கீழடியின் தாய்மடி!
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழன்
அனைத்து வசதிகளுடன் வாழ்ந்து உள்ளான்!
கழிவறை அறிவியல் அறிந்தவன் தமிழன்
கண்ணியமான வாழ்வு வாழ்ந்தவன் தமிழன்!
தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்பேன்
தமிழின் அருமை பெருமை உரக்க உரைப்பேன்!
ஒரு எழுத்திற்கு பல பொருள் உள்ள தமிழ்
ஒரு எழுத்து மாறினால் பொருள் மாறி விடும் தமிழ்!
கோவலன் கால் மறந்தால் கேவலன் ஆகிவிடும்
மாவட்ட ஆட்சியர் கால் கூடினால் மாவாட்ட ஆட்சியர் ஆகும்!
உலகின் முதல்மொழியை உணர்ந்து படிப்போம்
உலகின் முன்னே தமிழை உயர்த்திப் பிடிப்போம்!
கருத்துகள்
கருத்துரையிடுக