நீங்காத நினைவலைகள்! தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.




நீங்காத நினைவலைகள்!
தொகுப்பு :
மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்)
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவிவெளியீடு :  அனைத்துலக தமிழ்மன்றம்,
இல. 10, ஐஸ்வர்யா நகர், க.க. நகர், திருச்சி-620 021.
அலைபேசி : 94431 64467
*****
நூல் தொகுப்பு ஆசிரியர் மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் அவர்கள், இனிய நண்பர், மறைந்தும் மறையாத துருவ நட்சத்திரம் இலக்கிய சிற்பி சிந்தை பார்த்திபன் விட்டுச் சென்ற இலக்கியப் பணியினை செவ்வனே செய்து வருபவர். திட்டமிட்டபடி கவிதை தொகுப்பு நூல்களை வெளியிட்டவர். கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளார்.
மும்தாஸ்க்காக ஷாஜஹான் தாஜ்மகால் கட்டினான் என்பார்கள். வே.த. யோகநாதன் அவர்கள் காதலித்துக் கரம் பிடித்த மனைவி
சாந்தி யோகா அவர்களின் மறைவிற்குப் பின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் ‘நீங்காத நினைவுகள்’ நூலினை வெளியிட்டு வாசகர்களின் மனதில் நீங்காத நினைவலைகளை ஏற்படுத்தி உள்ளார், பாராட்டுக்கள்.
தொகுப்பாசிரியர் தன்னுரையில் மனைவி சாந்தி யோகா பற்றிய நீங்காத நினைவலைகளை நன்கு பதிவு செய்துள்ளார். எழுத்தில் உண்மை இருந்தால் படிக்கும் எல்லோருக்கும் பிடிக்கும். இவரை செம்மைப்படுத்தி ஆசானாக, வழிகாட்டியாக, இலக்கியப் பணியில் மகளிர் அணி பொதுச் செயலாளராக இருந்து துணைநின்ற மனைவியின் மகத்துவத்தை விளக்கி கண்கலங்க வைத்துள்ளார்.
ஆணாதிக்கச் சமுதாயத்தில், பெரும்பாலான ஆண்களுக்கு வாழும் காலத்தில் மனைவியின் அருமை புரிவதே இல்லை. மனைவி மறைந்த பின்னே மனைவியின் மகத்துவம் அறிந்து புலம்பி வருகின்றனர். இந்த நூல் படித்தபோது வாழும் காலத்திலேயே அருமை மனைவியைப் போற்றி வாழ வேண்டும் என்ற கருத்தை மனதில் பதித்து வெற்றி பெறுகின்றது இந்த நூல்.
இனிய நண்பர் இனிய நந்தவனம் இதழ் ஆசிரியர் உலகம் சுற்றும் வாலிபர் நந்தவனம் சந்திரசேகரன் முதல் கட்டுரையிலேயே ‘அன்பென்ற மழையில்’ என்று தலைப்பிட்டு, “சாந்தியம்மாவுக்கு முதலாண்டு நினைவேந்தல் நிகழ்வாம். என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் நினைவை சுமந்து கொண்டே திரிபவன் நான்” என்று குறிப்பிட்டுள்ளார். கவிதையாகவும் கட்டுரையாகவும் உறவுகளும் நண்பர்களும் யாத்து உள்ளனர்.
மாமியா? மம்மியா? என்ற தலைப்பிட்டு திருமதி சஜீனா சரீத் அவர்கள் எழுதிய கட்டுரை நெகிழ வைத்தது. தாய்மாமனின் மனைவி சாந்தி யோகா அவர்கள் தன் மகள் போலவே மருமகளை வளர்த்து உள்ளார். கல்வி, கலை, எழுத்து என அனைத்திற்கும் ஆசானாக இருந்து, சமையல் வரை கற்றுக்கொடுத்து, கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து, அத்தை-அம்மாவாக மாறி வளர்த்த கதை, சாந்தி யோகா அவர்களின் உயர்ந்த உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டி உள்ளார் வலிமையான உணமையான எழுத்துக்களால்.
திருமதி பிரகதீஸ்வரி இராஜப்பன் அவர்கள் இலங்கை வானொலியில் சாந்தி யோகா அவர்கள் கொடிகட்டிப் பறந்த மலரும் நினைவுகளைப் பதிவு செய்து உள்ளார். கணவன்-மனைவியா? நண்பர்களா? என்று பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு வாழ்வாங்கு வாழ்ந்த இணையர் வே.த. யோகநாதன்-சாந்தி யோகா பற்றி மிகவும் பெருமையாக எழுதி உள்ளார். ‘தோழியா? இல்லை சகோதரியா?’ என்று தலைப்பிட்டு கட்டுரையை எழுதி உள்ளார்.
      பொதுவாக மனைவியின் மாண்பு குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் பலரும் எழுதி உள்ளனர். எழுதிய அனைவருக்கும் பாராட்டு. கவிதையின் தலைப்பு ‘மனைவியின் மகிமை’ என்பதால் அவரவர் தங்கள் மனைவியின் மகிமை வைர வரிகளால் பாமாலையாக கட்டி உள்ளனர். அவரவர் எழுதிவிட்டு தன் மனைவியிடம் கவிதையைக் காண்பித்து பாராட்டு பெற்று இருப்பார்கள். மனைவியைப் பற்றி மதிக்காதவர்களைக் கூட மதிக்க வைத்திட்ட தொகுப்பாசிரியர் வே.த. யோகநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
      பெருமை சேர்த்த பேரழகி!
                                          பாவலர் கருமலைத் தமிழாழன்
      எங்கிருந்தோ வந்தவள் தாம் என்னுள் ஒன்றி
      என்னவளாய் ஆகி விட்டாள்! தன்னை ஈன்ற
      தங்கநிகர் பெற்றோரைப் பிரிந்து வந்த
      தனிமையெனும் துயர் வாட்டி வதைத்த போதும்
      மங்கலமாய் புதுவாழ்வு மனையோர் தம்மின்
      மனம் மகிழத் தன் முகத்தில் சிரிப்பைக் காட்டி
அறப்பணி ஆசிரியப் பணியிலிருந்து பணி நிறைவு பெற்றப் பின்னர் கவிதைப் பணியில் தனி முத்திரைப் பறித்து பரிசுகளும் விருதுகளும் பெற்றுவரும் மரபுக்கவிஞர் கருமலைத் தமிழாழன் கவிதை மிக நன்று. இப்படி பலரும் மனைவியின் மாண்பை எடுத்து இயம்பி உள்ளனர்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் கவிதை விருந்தும் கட்டுரை விருந்தும் வைத்துள்ளார், பாராட்டுக்கள்.
ஆண்கள் மட்டுமல்ல, பெண் கவிஞர்களான கவிக்குயில்களும் மனைவியின் மகிமை பற்றி கவிதை யாத்துள்ளனர். யாவும் நனி நன்று.
இல்லறத்தை இனிமையாக்குவது எப்படி? என்ற தலைப்பிலான கட்டுரைகளில் சங்கத்தமிழ் காட்சிகளை எல்லாம் காட்சிப்படுத்தி கட்டுரைகள் வடித்து உள்ளனர். மொத்தத்தில் கணவன்-மனைவி இருவரும் படிக்க வேண்டிய நூல்.


.

கருத்துகள்