கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு! அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு!
அறிவியலை கணிதத்தை அனைவருக்கும்
அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும்
கவிஞர் இரா. இரவி.
******
ஆரம்பக்கல்வியை அழகுதமிழில் தாருங்கள்
அது குழந்தைக்கு அறிவுத்திறன் வளர்க்கும் பாருங்கள்
தானாக சிந்திக்க உரம் தரும் நம் தமிழ்
தன்னம்பிக்கையை வளர்த்து வளம் தரும் நம் தமிழ்
தமிழ்வழிக் கல்வி தாய்ப்பாலாகும் அறிந்திடுக
தமிழ் தவிர மற்றமொழி புட்டிப் பாலாகும் அறிந்திடுக
தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டு
தமிழ்வழிக்கல்வியில் அறிவு வளர்க்கும் சக்தி உண்டு
ஆரம்பக்கல்வி தாய்மொழியிலேயே வேண்டும் என்று
அண்ணல் காந்தியடிகள் அன்றே உரக்க உரைத்தார்
இரவீந்திரநாத் தாகூரும் அன்றே உரைத்தார்
என்றும் இனிமை நிறைந்தது தாய்மொழியே என்று
அறிவியல் அறிஞர்கள் பலரும் பயின்றது
அவரவர் தாய்மொழியில் ஆரம்பக்கல்வி இருந்தது
தமிழே அறியாமல் வேறுமொழி அறிவது என்பது
தன்விழிகள் மூடி முகமூடி அணிவது போலாகும்
சொந்தப் பார்வையாக தமிழ்மொழி இருக்கையில்
சொத்தைக் கருப்புக் கண்ணாடியாக பிறமொழி எதற்கு?
எல்லா வளமும் தமிழ்மொழியில் உண்டு
எல்லா அறிவும் தமிழ்மொழியில் உண்டு
உலகின் முதன்மொழி தமிழ் உணர்ந்திடுங்கள்
உங்கள் குழந்தைக்கு தமிழ்மொழியைக் கற்பியுங்கள்
கணிதம் அறிவியல் அனைத்துப் பாடங்களும்
கன்னித்தமிழில் கற்பித்தால் அறிவு வளரும்
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை
உருப்படியாக உன்னதத் தமிழை மட்டும் கற்பியுங்கள்
ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் பயிலட்டும்
ஆரம்பத்திலேயே ஆங்கில நச்சு கலக்க வேண்டாம்
தமிழ்நாட்டில் தமிழ் படிக்க கெஞ்சும் நிலை
தமிழருக்கு அவமானம் தரும் அவல நிலை!
கருத்துகள்
கருத்துரையிடுக