ஏர்வாடியார் கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை மதுரை செல்லூர் உபாத்தியாயர் முனைவர் ச.தமிழரசன் ! உதவிப்பேராசிரியர் (சுயநிதி), தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை – 625009. அலைபேசி - ௯௭௮௭௮௦௦௭௦௭.




ஏர்வாடியார் கருவூலம் !

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !


நூல் மதிப்புரை  மதுரை செல்லூர் உபாத்தியாயர்
முனைவர் ச.தமிழரசன் !

உதவிப்பேராசிரியர் (சுயநிதி), தமிழ்த்துறை,
தியாகராசர் கல்லூரி, மதுரை – 625009.
அலைபேசி -91 - 9787800707
DR.S..TAMILARASAN 
(National Eligibility for Assistant Professor)
M.A.,M.Phil.,Ph.D., NET & J.R.F., D.G.T., D.C.A.,  C.T.T.,
ASSISTANT PROFESSOR (SF),
DEPARTMENT OF TAMIL,
THIAGARAJAR COLLEGE,
MADURAI - 625009. 
TAMIL NADU, INDIA.
MOBILE : +91 - 9787800707



23.தீனதயாளு தெருு.தியாகராயர் நகர்.சென்னை 6000017.பேச 044-24342810.பக்கம் 114.விலை 70 ரூபாய்..

வெள்ளென விடிந்ததோர் நற்காலைப் பொழுதில் என்னுடைய நூலின் அணிந்துரைக்காக
ஹைக்கூ திலகம் கவிஞர் இரா. இரவி அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். “ஏர்வாடியார்
கருவூலம்” எனும் நூலை எனக்குப் பரிசளித்தார். இந்நூலின் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி
அவர்களே. சென்னையிலுள்ள வானதி பதிப்பகம் டிசம்பர் 2019 இல் வெளியிட்டுள்ளது.
படித்துப்பார்த்தேன். பரவசமடைந்தேன். கவிஞர் பெருமக்கள் இருவருடைய வாழ்க்கையைக்
கவிதைக்காக ஒப்படைத்தமைக்கான சான்று இந்நூல். உவப்பத்தலைக்கூடுதல் புலவர்
தொழில் என வள்ளுவர் உரைப்பார். அப்படி உவகைப் புலவர்களாக இருக்கும் கவிதை
உறவின் ஆசிரியர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்களும் ஹைக்கூ திலகம் கவிஞர் இரா.
இரவி அவர்களும் நூலிழைபோல் பின்னிப்பிணைந்து நட்புபாராட்டியிருப்பது இந்நூலின்
பெருமைக்கணியாகும்.

ஏர்வாடியார் கருவூலம் என்னும் இந்நூல் 17 கட்டுரைகளை இருபிரிவுகளில் தொகுத்த
கவிதையருவியாக எனக்குப்படுகிறது. ஒரு எழுத்தாளன் மற்றொரு எழுத்தாளனை எப்படிப்
பாராட்டி மதிப்பளிக்க வேண்டும் என்பதற்கு அருஞ்சான்றாய் இந்நூலின் முதற்பகுதி
இருக்கிறது. கவிஞர் இரா. இரவி அவர்கள் தன் உதவிச் சுற்றுலா அலுவலர் பணிக்கிடையே
கவிஞராக நாடறியப்பட்டவர். அதை அவர் வாங்கிய விருதுகளே செப்பும். எத்தனை நல்ல
மனிதர்களின் தொடர்பு, எத்தனை உரத்த சிந்தனை, எத்தனை நயத்தகு நட்புபாராட்டல் என
எண்ண எண்ண அவரைப்பற்றிய பெருமிதம் இதயத்தில் இனிக்கிறது. தன்னை கவிதை
உலகிலும் பேச்சுலகிலும் உயர்த்திய பேரா. இரா.மோகன் மீது அவர் கொண்டிருக்கும் பாசமும்
நேசமும் அதைப் பலமுறை தன் பல நூல்களில் கவிஞர் இரவி அவர்கள் நினைவுகூர்வதும்,
தொடர்ந்து அவரின் எழுத்துப் பயணத்ததைக் கவனித்துவருபவர்களுக்கு நன்கு தெரியும்.

வங்கி அதிகாரியாக இருந்த ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்கள் புரட்சிக்கவிஞர்
விருதைப்பெற்றவர். ஏர்வாடியாரின் கவிதை அனுபவங்களை தான் நடத்தும் கவிதை உறவில்
ஏழாம் பக்கக் கவிதைகளாக அவர் வெளியிட்டமையை, கவிஞர் இரவி அவர்கள் யாரும்
யாராகவும், ஏர்வாடியாரின் மனதில் பதிந்தவர்கள், ஏர்வாடியாரின் படைப்புலகம்,
ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு, ஏர்வாடியம், எல்லோரும் நலம் வாழ ஏர்வாடியாரின்
சிந்தனைகள் என ஏர்வாடியார் மீதான தன் மதிப்பீடுகளைத் கட்டுரைகளாகத்
தொகுத்துத்தந்துள்ளார்.

நூலின் இராண்டாம் பகுதி கவிஞர் இரா. இரவி அவர்களின் நூல்களுக்கு கவிதை உறவில்
அதன் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் எழுதிய மதிப்புரைகள்
தொகுத்துத்தரப்பட்டுள்ளன. எத்தனை கோணங்களில் கவிஞர் இரவி அவர்களை இரசிக்க
முடியுமோ அத்தனை வழிகளிலும் ஏர்வாடியார் அவர்கள் கவிஞரை இரசித்துச்
சொல்லியிருக்கிறார். மனதில் பதிந்தவர்கள் கட்டுரையில் இரவி அவர்களின் வாழ்வியல்
ஊடாட்டங்களையும் வெற்றியையும் பதிவுசெய்திருக்கிறார். பெயருக்குப்பின்னால் பட்டம்
இல்லாதவரென்றாலும் அவரது கவிதைகளைப் பல கல்லூரிகள் பாடமாக
வைக்கப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்லிப் பெருமைப்படுத்தியிருக்கிறார். இத்தனைக்கும்
மேலாக கவிஞர் இரவி அவர்களுக்கு அமெரிக்காவிலுள்ள மெரிலேண்ட் உலகத் தமிழ்ப்
பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிய சிறப்பினை நமக்குக் காட்டியிருக்கிறார்.
வலைத்தளங்களில் நிரம்பி வழியும் ஹைக்கூக்களால் உலகறியப்பட்டவர் இரவி அவர்கள்
என்பதை அவர் பெயரில் இயங்கிவரும் கவிமலர் இணைய தளமே பறைசாற்றும். இதை
ஏர்வாடியார் தான் எப்படி இணைய தளம் தொடங்கினேன் என்ற செய்தியைச் சொல்லவரும்
முன் அடையாளங்காட்டுகிறார்.
ஏர்வாடியார் மனம் மட்டுமல்ல எல்லோருடைய மனங்களிலும் நிறைந்த கவிஞர் இரா.இரவி அவர்களின் கவிதைகளில் சில 

தொகை கூடக்கூட
துணி குறைவானது
நடிகைக்கு.!

கைரேகையில் இல்லை
கைகளில் உள்ளது
எதிர்காலம்.!

இறுதியில் வெல்லும் சரி
இடையில் ஏன் தோற்றது
தர்மம்?

இவை கவிஞர் இரா. இரவி அவர்களின் பல்நோக்குச் சிந்தனைகளை நமக்குக் காட்டுகின்றன.
எங்கெங்கிருந்தெல்லாம் வரும் நீரானது ஒரு சேரக் கடலில் கலப்பது போல. சமுதாயத்தின்
எல்லாத் திசைமுகங்களிலிருந்தும் வெளிப்பட்டு நிற்கும் கருத்துகள் கவிதை எனும் கடலில்
சங்கமிக்கின்றன. அப்படி சங்கமித்தவைதான் கவிஞர் இரா. இரவி அவர்களின் ஹைக்கூக்
(கவிதை) கடல். இவரின் பயணம் ஆழ அகலமாயிருக்கும் மின்கடலின் மீதானது. சுறாக்களைத்
தாண்டி முத்து எடுப்பதுபோல, சோதனைகளைத் தாண்டி சாதனைகளைச் சூடியிருக்கிறார்.
நூல் மதிப்பால் நம் நுண்மதிப்பு மேம்படும். வாசிப்பை நேசிப்போம். மனம் நிறைந்த வாஞ்சை
வாழ்த்துகள்.


--

.

கருத்துகள்