நூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
நூல் : இலக்கிய இணையர் படைப்புலகம்
நூலாசிரியர் : கவிஞர் இரா இரவி
மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
நூல் பதிப்பகம் : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.
பக்கங்கள் : 230. விலை : ரூ.175/
அனுதினமும் சங்கத் தமிழாம் தங்கத் தமிழை பறைசாற்றும் விதமாக தமிழிலக்கிய நிகழ்வுகளையும், தேன் தமிழ் புத்தக மதிப்புரைகளையும், ஹைக்கூ கவிதைகளையும் எழுத்தாளர்கள் வேறுபாடின்றி அனைவர் பதிவுகளையும் அனைவருக்கும் பரிமாறி எழுத்தாளர்களுக்கு பெருமை சேர்த்தும், தம் அலுவலகப் பணியுடனே தொய்வின்றி செய்துவரும் கவிஞர் இரா.இரவி அவர்களின் 21-ஆம் நூல் "இலக்கிய இணையர் படைப்புலகம்" நூலை படித்தவுடன் இந்த அழகிய மதிப்புரைகள் வழங்கி இலக்கிய இணையரை கௌரவித்து இதன் மூலம் எண்ணற்ற தமிழறிஞர்களை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியுள்ள இலக்கிய மாலை தொடருக்கு என் அறிவில் எட்டிய வரை சில வரிகளை இந்த புத்தகத்துக்கு மதிப்புரையாக கொடுத்து பேராசிரியர் முனைவர் இரா மோகன் அவர்களுக்கு காணிக்கையாக்க விழைகிறேன்.
விநாயகப் பெருமான் தாய் தந்தையரை சுற்றிவந்து ஞானப்பழம் பெற்றது போல தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா மோகன் அவர்களது அற்புத இலக்கியப் படைப்புகளையும் அவரது துணைவியார் முனைவர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களது செறிவான படைப்புகளையும் ஒரு சுற்று சுற்றிவந்து மொத்த இலக்கிய சாறுகளை ஞானப் பழமாக பெற்று உண்டு உள்வாங்கி இந்தப் பயன் உள்ள படைப்பாம் இலக்கிய இணையர் படைப்புலகத்தை வாசகர்களுக்கு வரமாக கொடுத்துள்ளார் கவிஞர் இரா இரவி அவர்கள்.
எனக்கு நீண்ட நாட்களாக நாம் தமிழை ஏன் இளநிலை முதுநிலை கல்வியாக எடுத்துப் படிக்கவில்லை என்ற ஒரு ஏக்கம் உண்டு. அடிப்படையில் எந்த இலக்கிய நூல்களைப் படித்து நம் தமிழின் பெருமையை உணர்ந்துகொள்ள வேண்டும் தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எனது எண்ண ஓட்டங்களுக்கு விடை கிடைத்தது இரா.ரவி அவர்களின் அழகிய படைப்பு "இலக்கிய இணையர் படைப்புலகம்" நூலில்.
முக்கியமான ஒரு விசயத்தை புரிந்துகொள்ள முடிந்தது என்னவெனில் முதுமுனைவர் இ.ஆ.ப. அவர்களைப் பற்றி பேராசிரியர் தமிழ் தேனீ, இரா மோகன் அவர்கள் அவர்களது படைப்புகளில் குறிப்பிடுவதையும், அதைவிட இரா இரவி அவர்கள் தன் பெரும்பான்மையான மதிப்புரைகளில் குறிப்பிட்டு பெருமைப் படுத்துவதையும், திருமிகு இறையன்பு அவர்களின் பன்முகத்தன்மையை கருத்துக்களுடன் வாசகர்களிடம் பகிர்வதையும் அறிய முடிந்தது.
இந்நூலின் சிறப்புக் கூறும் மனதைத் தொட்ட பதிவுகளில் சிலவற்றை பகிர்கிறேன் இங்கு.
திருக்குறள் கணினி நூல் யுகத்திற்கு
திருவள்ளுவர் :
படித்ததுமே மூலப் புத்தகத்தை வாசித்த திருப்தி கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது கவிஞர் ரவியின் அகண்ட மதிப்புரை. நூலாசிரியர் அறிஞர்களை எல்லாம் மேற்கோள்காட்டி கட்டுரைகள் வடித்துள்ளார் என்கிற செய்தியை சொல்லி பெயர்களைக் குறிப்பிட்டு இருப்பது மூலப் புத்தகத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாகவும் வாசகர்கள் புத்தகத்தின் படைப்பின் தரத்தை உணர்த்துவதாகவும் உள்ளது. இந்த மதிப்புரையை வாசித்தவுடன் மு. வ. வின் திருக்குறள் பொருள் விளக்கத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு தான் அடுத்த மதிப்புரையை வாசிக்க தொடங்கினேன்.
மதிப்புரையில், நூலாசிரியர், நூலாசிரியர் படைப்புகளில் பல தமிழ் அறிஞர்கள் பற்றிய தகவல்களும், அவர்களின் படைப்புகளும், தமிழறிஞர்களின் படைப்புகளில் சங்க தமிழ் படைப்புகள் பற்றிய செய்திகள், மூல தமிழ் இலக்கியங்கள் என பரந்து விரிந்த தமிழ் உலகத்தை படம் பிடித்துக் காட்டி, தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன் அவர்களையும் மிஞ்சும் வகையில் இலக்கிய சிந்தனைகளை கனிச்சாற்றின் ஒட்டுமொத்த சுருக்கமான சொட்டாக கொடுத்துள்ளார் கவிஞர் இரவி அவர்கள் தன் மதிப்புரைகளில்.
சங்க கால இலக்கியங்கள், கவிதைகள் முதல் தற்கால இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள் வரை படைப்பாசிரியர் பெயரிட்டு குறிப்பிட்டுள்ளது நிறைஞர் / முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு உறுதுணையாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
மதிப்புரையிலும் இவ்வளவு தகவல்களையும் தரத்தையும் மூல நூலின் சுருக்கத்தையும் தர முடியுமென்றால் அது கவிஞர் இரவி அவர்களால் தான் முடியும். வாசிப்பை தலையாய பணியாய் வைத்து மதிப்புரை வழங்கி நூலாசிரியர்களை சிறப்பிப்பதை மூச்சாக வைத்திருக்கிறார் கவிஞர் இரா இரவி அவர்கள்.
இலக்கிய இணையர்கள் தங்கள் படைப்புகளுக்கு கொடுத்திருக்கும் தலைப்புகள் ஒவ்வொன்றும் தமிழுக்கு புகழ் சேர்ப்பதாகவும் இலக்கிய ஆர்வத்தை தூண்டுவதாகவும் தமிழைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆற்றலை பெருக்குவதாகவும் உள்ளது. இவற்றை ஒருங்கே ஒருமுகப்படுத்தி கொடுத்த கவிஞர் இரா இரவி அவர்களுக்கு நன்றிகள்.
பதசோறாக கொடுத்திருக்கும் பதிவுகள் / கவிதைகள் யாவும் முழு புத்தகத்தின் செறிவை அறியப்படுத்தினாலும் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்டுவது சிறப்பு.
கவிஞர் இரா இரவி அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது போல ஒரு சிறந்த புத்தகத்தின் வரிகளை படிக்கும் போதே அது தொடர்பான அனைத்து சிந்தனைகளும் நம் மனதில் படமாக, காட்சியாக, பல பரிமாணங்களாக விரியும். இந்த நூலும் அத்தகைய உணர்வையே ஏற்படுத்துகிறது ஒவ்வொரு வரியை வாசிக்கும் போதும். மிக சிறப்பு.
சங்க இலக்கிய மாண்பு, சங்க இலக்கிய சால்பு, சங்க இலக்கிய சாறு, பன்முக நோக்கில் புறநானுறு, பன்முக நோக்கில் குறுந்தொகை, தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க இலக்கிய பாடல்கள், இலக்கிய முற்றம், இலக்கிய உலா, இலக்கிய அமுதம், இலக்கிய மாலை, என நம் தமிழ் இலக்கியங்களை வரிசைப்படுத்தி முனைவர் இரா மோகன் அவர்கள் தொடுத்த தமிழ் மாலைகளுக்கு கவிஞர் இரா இரவி அவர்கள் வழங்கியுள்ள மதிப்புரைகள் மூலம் நிறைய தமிழ் சார்ந்த செய்திகளை நம் அறிவுக்கு புலப்படுத்துவது சிறப்பு.
"யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோரன்ன, சாதலும் புதுவது அன்றோ ! வாழ்தல் இனிது என மகிழ்தன்றும் இலமே"
புறநானூற்று பாடலை "தமிழராக பிறந்ததற்கு உலக தமிழர் யாவரும் பெருமைப்பட இந்த ஒரு பாடல் போதும்" என்று பறைசாற்றி இருப்பது சாலப்பொருந்தும்.
தமிழ் விருந்து நூலுக்கு வழங்கியிருக்கும் மதிப்புரையில் கவிஞர் தாராபாரதி அவர்களின் "வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்" வரிகளை "வைர வரிகள்" என்று பேராசிரியர் இரா மோகன் அவர்கள் பாராட்டி தன் புத்தகத்தில் பதிவிட்டதை கவிஞர் இரவி அவர்கள் எடுத்துரைத்திருப்பது இந்நூல் வாசிப்பவர்களையும் சென்றடைந்து உற்று நோக்க வைக்கிறது.
"சங்க இலக்கிய பாடல்கள் பார்க்க பலாப்பழம் போல கடுமையாக இருக்கும். ஆனால் நூலாசிரியர் தமிழ் தேனீ இரா மோகன் போன்றவர்கள் கையில் சான்றோர் மேற்கோள் என்னும் எண்ணையை தடவி ஆய்வு கத்தியால் பலாப்பழம் நறுக்கி இலக்கிய விருந்து என்ற பலாச்சுளை தரும்போது படிக்க படிக்க இனிக்கும் சங்க இலக்கியம்" என்ற கவிஞர் இரவி அவர்களின் விளக்கம் இலக்கிய இணையரின் நூல்கள் அனைத்தையும் வாங்கிப் படித்து தமிழ்த்தேன் பருக அவாவை ஏற்படுத்துகிறது.
"இலக்கிய அலைவரிசை" நூல் பற்றிய கவிஞர் இரவி அவர்களின் மதிப்புரையில் கவிஞர் வாலி காமராஜரை கண்முன் நிறுத்தி கவிதையில் சிறப்பித்திருப்பதை அழகாக பதிவு செய்துள்ளது அருமையிலும் அருமை.
"கவிதை களஞ்சியம்" நூல் மதிப்புரையில் உள்ள எல்லாக் கவிதைகளுமே சிறப்பு.
உவமைக்கவிஞர் சுரதா அவர்களின் தமிழ் மொழியைப் பெருமைப்படுத்தும் கவிதை ஒன்று முதுகெலும்பை நிமிர்த்துவதாக இருந்தது.
"படுத்திருக்கும் வினாக்குறி போல் மீசை வைத்த பாண்டியர்கள் வளர்த்த மொழி" - அருமை !
பன்முக ஆற்றலாளர், தமிழக கூடுதல் தலைமை செயலர் முனைவர் வெ இறையன்பு அவர்களை இலட்சிய கவிஞர் எனக் குறிப்பிட்டு அவரது விழிப்புணர்வூட்டும் கவிதையை எடுத்தியம்பியுள்ளார்.
"மற்ற நாட்டினர் செவ்வாய்க்கும் புதனுக்கும் வியாழனுக்கும் செல்ல ஆயத்தமாகி விட்டார்கள் ! நாம் மட்டும் சாதியை ஆராய்ந்து கொண்டு சனியிலேயே இருக்கிறோம் !"
மூட பழக்கங்களை புறந்தள்ள முடுக்கி விடப்பட்ட வாசகங்களுக்கு நன்றிகள்.
"என்ன படித்து என்ன மனதை அலங்கரிக்க தெரியாமல் " கவிஞர் வெற்றிச்செல்வனின் வரிகளில் இன்றைய நாட்களில் உள்ளங்களில் அன்பைத் தேட வேண்டிய சூழ்நிலையை வெகு அழகாக கவிதையில் காட்டியுள்ளார்கள்.
மு. வ. அல்லது முன்னேற்ற வரலாறு - பெயரை காரணப்பெயர் ஆக்கிய மகான் பேராசிரியர், முன்னை பல்கலை துணைவேந்தர் மு.வரதராசனார் அவர்களை தனது அற்புத படைப்புகளில் தன் குருவாக குன்றேற்றி புகழாரம் சூட்டி உள்ளதை கவிஞர் இரவி அவர்கள் விளக்காக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் தனது மதிப்புரையில்.
தமிழ் உன்னை வளர்த்தது, தமிழை நீயும் வளர்க்க வேண்டும் " என்று தொடங்கி அவருடைய இலக்கிய படைப்புகளை விவரித்து மோகன் அவர்களை விஞ்சும் வகையில் மு.வ. அவர்களுக்கும் அவர்களின் படைப்புகளுக்கும் பெருமை சேர்த்து நல்லவர்களாக ஒரு சிலர் இந்த உலகத்தில் கிடைத்தால் போதும் பலருடைய பழக்கமும் அறிமுகமும் வேண்டியதில்லை. அப்படிப்பட்ட சிலருக்கு இடையில் வாழ்ந்து மகிழ்ச்சியோடு செத்து போகலாம் என்று தனது " அல்லி " நூலில் பேராசிரியர் மு.வரதராசனார் அவர்கள் சொன்ன வாசகங்களை நினைவு கூர்ந்து எனக்கு கிடைத்த நல்லவர்கள் சிலரில் ஒருவர் நூலாசிரியர் பேராசிரியர் இரா மோகன் அவர்கள் மற்றொருவர் முனைவர் வெ இறையன்பு என புகழாரம் சூட்டி படைப்பாளிகளை பெருமைப்படுத்தியதோடு, நாம் வாழும் காலத்தில் வாழும் அன்பான நல்ல மனிதர்களையும் கவிஞர் ரவி அவர்கள் தம் இதய சிம்மாசனத்தில் அமர்த்தி சாமரம் வீசியுள்ளது மிகச்சிறப்பு.
பேராசிரியர் இரா.மோகன் அவர்களின் "ஏர்வாடியாரின் சிந்தனைகள்" நூலுக்கு தன் அணிந்துரையால் மகுடம் சூட்டிய கூடுதல் தலைமைச் செயலர், முனைவர் இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் வைர வரிகளையும் கவிஞர் இரவி தன் மதிப்புரையில் தொடுத்துள்ளார்.
"பேராசிரியர் இரா மோகன் பெருந்தன்மைக்கு சொந்தக்காரர், பெரும்பாலும் எழுதுபவர்கள் அடுத்தவர் எழுத்தை கொண்டாடுவது அரிது. ஆனால் மோகன் அவர்கள் இந்தப் பணியை இடைவிடாமல் செய்து வருகிறார். அரிய செய்திகளைத் திரட்டி வந்து தேன்கூடு ஆக்கி தரும் இலக்கியத்தேனீ அவர். எண்ணற்ற நூல்களை தொடுத்துக் கொண்டே வரும் இடைவிடாத உழைப்புக்குச் சொந்தக்காரர்."
பேராசிரியர் இரா மோகன் அவர்களது படைப்புகளை காணும்போது முனைவர் வெ.இறையன்பு அவர்களின் கூற்று சாலப் பொருந்துவதாக உள்ளது.
முனைவர் நிர்மலா மோகன் அவர்களின் இலக்கிய பங்களிப்பின் பெருமையை மிக அழகாக பகிர்ந்துள்ளார் தன்மதிப்புரையில்.
இயந்திரமயமான உலகில் சிற்றிலக்கியங்கள் அனைத்தும் படிப்பதற்கு வாய்ப்பில்லை. முனைவர் நிர்மலா மோகன் அவர்களின் குறவஞ்சி இலக்கியம், சங்கச் சான்றோர் ஆளுமைத்திறன், ஆய்வுக் களஞ்சியம், படித்தாலே இனிக்கும் போன்ற நூல்களை படித்தாலே போதும் சிற்றிலக்கியங்கள் பல படித்த மனநிறைவு வந்துவிடுகிறது. பழச்சாறு போல பிழிந்து இலக்கியச் சாறாக, தமிழில் சொல் வளம், கருத்து வளம், நில வளம், நீர் வளம், பண்பாட்டு வளம் அனைத்தும் உணர்த்திடும் நூல்கள் முனைவர் நிர்மலா மோகன் அவர்களது என இந்நூல் வாசிப்பவர்களையும் மூலநூலை வாசிக்க முன்னுரை வழங்குகிறார் கவிஞர் இரா இரவி அவர்கள்.
எளிமையின் சிகரமாகவும் சிந்தனையின் ஊற்றாகவும் விளங்குகின்ற முது முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் பேராசிரியர் இரா மோகன் அவர்களின் "நகைச்சுவை நாயகர்கள்" மற்றும் "எல்லோரும் நலம் வாழ ஏர்வாடியாரின் சிந்தனைகள்" ஆகிய இரண்டு நூல்களுக்கு சிறப்பாகவும் மகுடமாகவும் அணிந்துரை கொடுத்துள்ளது மேலும் அழகு சேர்க்கிறது என்று கவிஞர் இரா இரவி அவர்கள் குறிப்பிட்டுள்ளார் இந்நூலில்.
"பேராசிரியர் எழுதிய புத்தகங்களை அடுக்கி வைத்தால் அது அவரது உயரத்தை அனேகமாக இந்நேரம் தாண்டி இருக்கும் என்று கருதுகிறேன். தொடர்ந்து இயங்கும் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று கருத்துக்கள் பொருந்திய நகைச்சுவையுடன் திருமிகு வெ.இறையன்பு அவர்கள் தனது அணிந்துரையில் வாழ்த்தி சிறப்பித்துள்ளதை கவிஞர் ரவி மிக அழகாக தனது மதிப்புரையில் தொடுத்து, தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தனது மரியாதையையும் அன்பையும் தெரிவித்துள்ளார். நன்றிகள்.
கவிஞர் ரவி அவர்களின் மதிப்புரையில் "சிற்பியின் படைப்புலகம்" நூலை பேராசிரியர் இரா மோகன் அவர்களும் முனைவர் நிர்மலா மோகன் அவர்களும் இணைந்து படைத்து பேராசிரியர் மற்றும் இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்று தமிழுக்கு மகுடம் சூட்டி கொண்டிருக்கும் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் ஐயா அவர்களை பெருமைப்படுத்தி தமிழ் கூறும் நல்லுலகுக்கு சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார்கள் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.
பேராசிரியர் இரா மோகன் அவர்கள், சிந்தனையை தூண்டி எண்ணத்துக்குள் புகுந்து, மனதுக்குள் ரசவாதம் செய்து, ஆழப்பதியனிடும் எழுத்துக்களால் வாசிப்பவர்களின் செயல்பாடுகளை சீர்படுத்தும் முதுமுனைவர் இறையன்பு அவர்களது படைப்புகளை திரட்டி "இறையன்பு களஞ்சியம்" நூலை தொகுத்துள்ளது சிறப்பிலும் சிறப்பு. இந்நூலுக்கு அற்புதமானதொரு மதிப்புரை கொடுத்துள்ளார் கவிஞர் இரவி அவர்கள். நூலாசிரியருக்கும் மதிப்புரை தொடுத்த கவிஞர் ரவி அவர்களுக்கும் நன்றிகள்.
"இறையன்பு களஞ்சியம்" நூலின் மதிப்புரைக்கு மட்டுமே இரண்டு பக்க விளக்கம் கொடுக்கலாம். "ஆயிரம் சாதனைகளைக் காட்டிலும் ஒரே ஓர் உள்ளத்திலாவது நம்பிக்கை விளக்கு ஏற்றுவது வாழ்க்கையின் பொருளை முழுமையாக்குவது" என்பார் இறையன்பு என்று தொகுப்பாசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளதை எடுத்துரைத்து, "இதயம் இரும்பானால் இரும்பு யுகம், உள்ளம் கரும்பானால் தங்க யுகம் அவ்வளவுதான்" என்ற வைர வரிகளை விரித்து, "வார்த்தைகளால் ஒருவரை குணப்படுத்தவும் முடியும் ரணப்படுத்தவும் முடியும்" என்று 'கனியிருப்ப காய் கவர்ந்தற்று' திருக்குறளுக்கு விளக்கம் கொடுப்பது போன்ற இறையன்பு அவர்களின் சொல்லாடலை சுவைபட சொல்லிச் செல்கிறார் கவிஞர் இரவி. மிக்க மகிழ்ச்சி. முது முனைவர் இறையன்பு அவர்களின் படைப்புகள் மிகவும் ஆற்றலுடையவை.
தமிழையும் வரலாற்றையும் பாடமாக எடுத்துக் கொண்டிருக்கிற பிஹெச்டி மாணவர்கள் முதலில் கவிஞர் ரவி அவர்களின் புத்தகங்களை ஒரு புரட்டு புரட்டினால் அவர்களுக்கு ஆய்வுக்கு தலைப்பும் கிடைக்கும், குறிப்பும் கிடைக்கும், நூலுக்கு விளக்கமும் கிடைக்கும்.
செந்தமிழுக்கு நாள்தோறும் நற்பங்களிப்பை நல்கி வரும் கவிஞர் இரா இரவி அவர்கள் ஹைக்கூ கவிதை எழுதுவதில் வல்லவர் என்பதைத் தாண்டி தன் மதிப்புரைகள் மூலம் தமிழில் ஆகச் சிறந்த நூல்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வருவது மிகப்பெருமை! மனம் நிறைந்த பாராட்டுக்கள்! வாசகர்கள் சார்பில்.
கருத்துகள்
கருத்துரையிடுக