ஊர் சுற்றுவோம் ! கவிஞர் இரா. இரவி, மதுரை. நன்றி .நமது மண் வாசம் மாத இதழ் !ஊர் சுற்றுவோம் !

கவிஞர் இரா. இரவி, மதுரை.

நன்றி .நமது மண் வாசம் மாத இதழ் !

சுற்றுலா செல்வது ஒரு மனிதனை மேம்படுத்தும், செம்மைப்-படுத்தும், செதுக்கும், சீர்தூக்கும், சிறப்படைய வைக்கும். இந்தியாவில் கல்வி கற்றவர்கள் அதிகம் வாழும் மாநிலம் கேரளா, மேற்கு வங்காளம். இந்த இரண்டு மாநில மக்களும் சுற்றுலா செல்வதை தங்கள் வாழ்நாள் கடமையாகவே வைத்துள்ளனர். கோடை விடுமுறை வந்து விட்டால் போதும், கொண்டாட்டத்துடன் சுற்றுலா செல்வார்கள்.

மேற்கு வங்க மாநில மக்கள் சுற்றுலா பற்றிய விபரங்களை, முன்னர் சென்று வந்தவர்களிடமும் ஊடகம், இணையம் வழியாகவும் நன்கு அறிந்துகொண்டு திட்டமிட்டு வருவார்கள். மகிழுந்து தனியாக எடுத்து வருவதை விட்டுவிட்டு தொடர்வண்டியில் வந்து, அந்தந்த நகரங்களில் நடத்தும் நகர சுற்றுலாவில் கலந்துகொண்டு சுற்றிப் பார்ப்பார்கள்.

இந்திய அளவில் தமிழகம் சுற்றுலாப் பயணிகள் வருகையில், பல ஆண்டுகளாக முதலிடம் வகித்து வருகின்றது. தமிழகம் சுற்றுலா துறையில் சிறந்து விளங்குகின்றது. ஆனால் தமிழக மக்களிடம் சுற்றுலா பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லை என்றே சொல்ல வேண்டும். சுற்றுலா செல்வதிலும் தமிழகம் முதலிடம் பெற வேண்டும் என்பது என் விருப்பம்.

மதுரையில் பிறந்து, வளர்ந்து, பல ஆண்டுகள் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் கூட இன்னும் கலையம்சம் மிக்க மீனாட்சியம்மன் கோயிலையும், ஆயிரம்கால் மண்டபத்தையும், திருமலை நாயக்கர் மகாலையும், காந்தி அருங்காட்சியகத்தையும் பார்க்காதவர்கள் பலர் உண்டு. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மதுரையைக் கண்டு வியந்து போகின்றனர். நமது கலையம்சம் மிக்க கோயிலையும், அரண்மனையையும் நாம் இன்னும் காணாது இருப்பது நல்லதன்று.

நேரம் ஒதுக்கி திட்டமிட்டு, முதலில் உள்ளூரில் உள்ள முக்கிய இடங்களைப் பார்க்க வேண்டும். மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள உலகத் தமிழ்ச்சங்கத்தை உள்ளே சென்று பார்க்க வேண்டும். பின்னர் அருகில் உள்ள இடங்கள், பின்னர் வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் சென்று பார்க்க வேண்டும்.

சுற்றுலா பலவகை உண்டு. கோயில்கள் சுற்றுலா, நீர்வீழ்ச்சி சுற்றுலா, மலைகள் சுற்றுலா, கடற்கரை சுற்றுலா இப்படி பலவகை உண்டு. அவரவர் விருப்பம் போல விருப்பமான சுற்றுலாவை மேற்கொள்ளலாம்.

நமது தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி இரண்டு மலை நகரமும் அவசியம் காண வேண்டியவை. இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும், காண்பதற்கு கண்கள் இரண்டு போதாது. அங்கு சென்றுவிட்டால் காண வேண்டிய இடங்களை பட்டியலிடுவார்கள். அழைத்துச் செல்வார்கள். வழிகாட்டிகள் சிறப்புகளை எடுத்து இயம்பி சுற்றுலாவை இனிமையாக்குவார்கள். உரிய தகவல் தருவதற்கு சுற்றுலா அலுவலகமும் உண்டு.

மகாபலிபுரம் மிக பிரபலமாகி விட்டது. இலவசமாக அனுமதிக்கப்பட்ட இடத்தில் கட்டணம் வசூலித்து கூட்டத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு கூட்டம் கூடி வருகிறது. கலைஅம்சம் மிக்க மகாபலிபுரத்தை காணாதவர்கள் கண்டு வாருங்கள், கவலைகள் காணாமல் போகும்.

வெளிநாடுகளில் பலர் வருடம் ஒருமுறை சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்து உள்ளனர். கோடி பணம் கொடுத்தாலும், விடுமுறை காலங்களில் சுற்றுலா செல்லாமல் இருங்கள் என்று கட்டுப்படுத்தினாலும் கட்டுப்பட மாட்டார்கள். மதுரையில் சுற்றுலாத் துறையின் சார்பில் நடக்கும் பொங்கல் விழாவினைக் காண வருடா வருடம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுடன் பேசி இருக்கிறேன், புகைப்படமும் எடுத்து இருக்கிறேன். நமது கலைஅம்சம் மிக்க கிராமிய கலை நிகழ்ச்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

வருடம் முழுவதும் உழைக்கின்றோம், வருடத்தில் ஒரு மாதம் அல்லது 15 நாட்கள் அதுவும் இயலாவிட்டால் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது சுற்றுலா சென்று வாருங்கள். சுற்றுலா செல்வதற்கு முன்பு இருந்த உங்கள் மனநிலையும், சுற்றுலா முடுத்து வந்தபின் உள்ள உங்கள் மனநிலையும் முன்னேறி இருக்கும், மனம் மகிழ்ச்சியாக இருக்கும், புத்துணர்வு பிறக்கும்.

தஞ்சை பெரிய கோயில் சென்று பாருங்கள். கோபுரத்தின் நிழல் விழுவதில்லை. பிரமாண்டமான கோயில், நந்தி சிலை, தலையாட்டும் பொம்மை, தஞ்சை அரண்மனை, கண்காட்சிக் கூடம், சரஸ்வதி மகால் நூலகம் இப்படி பல இடங்கள் உண்டு, சென்று பாருங்கள்.

மதுரையைச் சுற்றி சமண சிற்பங்கள் பல இடங்களில் உள்ளன. குறிப்பாக திருப்பரங்குன்றம் கிரிவலம் வரும் பின்புறம் பாறையில் உள்ள சமண சிற்பங்கள், நரசிங்கப் பெருமாள் கோயில் வழியில் உள்ள யானைமலையில் உள்ள சமண சிற்பங்கள், சமணர் படுகைகள், நாகமலை புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள கீழ்க்குயில்குடி சமண சிற்பங்கள், மதுரை மக்களில் பலர் இன்னும் இவற்றை பார்க்காமல் உள்ளனர். அவசியம் சென்று பாருங்கள்.

இரும்பு, சிமிண்ட் இல்லாத காலாத்தில் 1636ஆம் ஆண்டு திருமலை நாயக்கர் அரண்மனை கட்டப்பட்டது. 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தியாவின் வடக்கே ஆக்ரா நதிக்கரையில் தாஜ்மகால் என்றால், மதுரையின் வடக்கே வைகை நதிக்கரை அருகில் திருமலை நாயக்கர் மகால். பிரமாண்ட தூண்கள், சுதைச் சிற்பங்கள், கண்காட்சிக் கூடம், தொல்லியல் முதுமக்கள் பானை, நாணயங்கள், ஓவியங்கள், சிலைகள் எல்லாம் உள்ளன. குறைந்தபட்சம் திருமலை நாயக்கர் அரண்மனையைச் சென்று பாருங்கள். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கண்டுகளிக்கலாம். விடுமுறையின்றி தினமும் திறந்து இருக்கும். மாலையில் 6.45 மணிக்கு ஆங்கிலம், இரவு 8.00 மணிக்கு தமிழ் ஒலி ஒளிக் காட்சியும் கண்டுகளிக்கலாம்.

மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை கட்டுவதற்க்கு மண் எடுப்பதற்காக தோண்டிய பள்ளத்தையே மாரியம்மன் தெப்பக்குளமாக கட்டி அமைத்தார். மண் தோண்டும் போது கிடைத்த பெரிய பிள்ளையார் சிலையைத் தான் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைத்து உள்ளனர்.

இப்படி பல சுற்றுலா செல்லும் போது அந்த இடத்தின் வரலாறு அறிய முடியும். அதன் சிறப்பை உணர முடியும்.

குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது குடும்பத்திற்குள்ளும் புரிதல் ஏற்படும். அன்பு, பாசம், நேசம் பலப்படும். பகிர்ந்து உண்ணுதல், விட்டுக்கொடுத்தல், கலந்துரையாடுதல் என வாழ்வின் இனிமையை, மேன்மையை சுற்றுலா கற்றுத் தரும். சுற்றுலாவின் பயன் சொல்லில் அடங்காது. சுற்றுலாவால் அரசுக்கும் வருவாய் வருகின்றது. அந்நிய செலாவணி கிடைக்கின்றது.  நம் நாட்டின் அருமை பெருமை உலகம் அறிகின்றது. நாமும் அறிய வேண்டும்.

கருத்துகள்