இலக்கிய இணையர் படைப்புலகம்! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்,
இலக்கிய இணையர் படைப்புலகம்!

நூல் ஆசிரியர்  கவிஞர் இரா. இரவி !

(பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு)

நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்,

நிறுவனர், முத்தமிழ் அறக்கட்டளை,
பதிவு எண் : 969, 10, ராமமூர்த்தி ரோடு, சின்ன சொக்கிகுளம்,
மதுரை-625 002.  தொலைபேசி : 0452 2533 524,
அலைபேசி : 94437 43524


நூல் பதிப்பகம் :  வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.
பக்கங்கள் : 230.  விலை : ரூ.175/

*****

            “மாதா, பிதா, குரு, தெய்வம்” “இலக்கிய இணையர் படைப்புலகம்” நூலின் ஆசிரியர் இரா. இரவி அவர்கள் ஒரு பகுத்தறிவுக்காரர் என்பதால் தெய்வத்தை ஏற்காதவர். என்றாலும் முதல் மூன்றின் கலப்பான, நான்காவதான தெய்வம் என்று ஒன்று உண்டானால் அது எனக்கு புன்னகை மன்னன், தமிழ்த் தேனீ இரா.மோகன் மட்டுமே! என்பதால் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன்.

அவர் காட்டிய வழித்தடத்தில் நடந்து 21 நூல்களை படைத்துள்ளார். எந்த நிலையிலும் தடம்புரளாது, தனது தெய்வத்தை இலக்கியத் தேரில் அமர்த்தி வடம் பிடித்திருப்பது பாராட்டுக்குரியது.  இந்த செல்லப் பிள்ளை இரா. இரவியின் நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடநூலாக வந்திருப்பது பெருமைக்குரியது.

      ‘இலக்கிய தெய்வம்’ என்ற சொல்லுக்கு அடைக்கலமான இரா. மோகன் அவர்கள் ஒரு படைப்பாளி மட்டுமல்ல, இலக்கிய தொண்டிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் எழுத்துத் தொழிலாளி.

      “இன்றைய சமுதாயத்தின் சீர் கெட்ட சூழ்நிலையை சமாளிப்பதற்கே நேரமில்லாத போது, பண்டைய இலக்கியங்களை படித்து என்ன ஆகப் போகிறது” என்ற மக்களின் மனோநிலையை மாற்றி, பழைய இலக்கியங்களை அறிந்து ஆராய்ந்து தனக்குரிய பாணியில் எளிய நடையில் எழுதி, அனைவரையும் படிக்கத் தூண்டிய பெருமை இரா. மோகன் அவர்களையே சாரும்.

      இரண்டு இரும்பு உருளைகளுக்கு நடுவே இலக்கியக் கரும்பைக் கொடுத்து, சாறு பிழிந்து தனது செல்லப் பிள்ளை இரா. இரவியிடம் கொடுக்க, அந்த சாற்றை நன்றாகக் காய்ச்சி கூழாக்கி, அந்த இலக்கியக் கூழில், அச்சுவெல்லமாக நூல் படைத்து நமக்குத் தந்துள்ளார்.

      தான் பழகிய இலக்கிய மேதைகள், பழகாது அறிந்த இலக்கிய ஆர்வலர்கள் பற்றியும் அலசி ஆராய்ந்து, கருத்தாழத்தோடு நூலாடை நெய்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியுள்ளார் இரா.மோகன் அவர்கள்.

எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல. நடந்ததை, நடப்பதை எழுத வேண்டும். எழுதுவது போல நடக்க வேண்டும் என்பதே இரா.மோகனின் தனி வழி. அந்த வழி நடப்பதே என் வழி என்கிறார் செல்லப்பிள்ளை இரா. இரவி.

விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரின் படைப்புக்களை படிக்கும் போதே நம்மை அறியாமல் அந்தக் காலத்தில் வாழ்வது போன்ற பிரமையை உருவாக்கி விடுகின்றனர். ஆர்வி அவர்களின் ‘பிரளயம்’, மு.வ. அவர்களின் ‘கரித்துண்டு’, சேவர்க்கொடியோனின் படைப்புகள், முக்கியமாக கல்கி அவர்களின் சரித்திரப் படைப்புகள். தன் ஆட்காட்டி விரலால் அடையாளம் காட்டும் இரா. மோகனின் மற்ற மூன்று விரல்களும் மடங்கி அவரையே அடையாளம் காட்டும். கட்டை விரல் மட்டும் பக்கவாட்டில் நீண்டு தன் செல்லப்பிள்ளை இரா. இரவியை அடையாளம் காட்டுகிறது.

பண்டைய இலக்கியங்களில் காதல் ரசமும் உண்டு. அதனை வெளிப்படுத்தும் போது காமன், கரும்பை வில்லாக வளைத்து, மலரம்பு தொடுப்பது போல் படைத்துள்ள இரா. மோகன் அதே கரும்பை நிமிர்த்தி பட்டினத்தார் கையில் கொடுத்து வாழ்க்கை தத்துவங்களை வெளிக்காட்டலும் தவறவில்லை. படைப்புலக பிரம்மா, இரா. மோகன் அவர்கள், அவரின் செல்லப் பிள்ளை நல்ல பிள்ளை என்பதை தன் படைப்பிலும் படையலாகப் படைத்துள்ளார். மக்கள் ரசனை புரிந்ததால், இரு கோடுகளில் ஒரு நேர் கோணத்தை காட்டியுள்ளார்.

 திருமகனான இரா. இரவியும் ‘என்னவள்’ என்ற நூலில் முப்பரிமாணம் காட்டி தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

சீரழிந்து விடும் இன்றைய மனித குலத்திற்கு ‘மூவரியில் விழிப்புணர்வும்’ ஏற்படுத்தியுள்ளார். முன்பு சொன்னது போல நடப்பதை எழுத வேண்டும், எழுதுவது போல் நடப்பவனே எழுத்தாளன். (இரா. இரவியும் நல்ல எழுத்தாளரே)

 "நான் அகத்தே கொண்ட கருத்துக்களை நூறு நூல்களில் வெளிப்படுத்தி விட்டேன். (நான் ... நூறு) இப்போது கூடு விட்டுக் கூடு பாய்ந்து உன்னுள் (நிர்மலா மோகன்) வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காரணம் .. புறத்தே நீயும் நூறு நூல்களை படைக்க வேண்டும் (புறம்- நானும் நூறு (புறநானூறு) என்பதாலேயே! "

நான் நிறைய பட்டிமன்றங்கள் கேட்டிருக்கிறேன். பேச்சாளர் பேசும் போது குறுக்கே பாய்ந்து தன் மேதா விலாசத்தை காட்டுபவர்களே அதிகம். இரா. மோகன் வழி தனி வழி. கொடுக்கப்பட்ட தலைப்பிலிருந்து எள்ளளவும் மாறாமல், பேச்சாளர்களுக்கு தனிச் சுதந்திரம் கொடுத்து, முழுமையாக கேட்ட பின்னரே தன் கருத்தை புன்னகையோடும், நாகரீகமான நகைச்சுவை உணர்வோடும் சுருக்கமாகக் கூறி விளக்கம் கூறுவதில் வல்லவர் இரா.மோகன் அவர்கள்.

நான் மட்டுமே எழுத வேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற சுயநலமான எண்ணம் விடுத்து மற்றவர்களையும் எழுதத் தூண்டும் பொதுநலம் கொண்டவர் இரா. மோகன். அந்தப் பொதுநலன் அவரின் பிரதான சீடரான இரா. இரவியை ‘இலக்கிய இணையரின் படைப்புலகம்’ படைக்க வைத்துள்ளது.

இப்படிப்பட்ட துரோணரின் சீடரான ஏகலைவன் இரா. இரவி கூறும் அறநெறி ...

“வாத்தியார் பிள்ளை மக்கல்ல
      ஆசிரியர் பிள்ளை
      பேராசிரியர்”                       (நிரூபணம்)

“குருதியோடு
      உறுதியானது
      தமிழ்மொழி”                       (தமிழ்ப்பற்று)

“மூச்சுள்ளவரை இயங்கினால்
      மூச்சு நின்ற பின்னும்
      நினைக்கப் படுவோம்”             (குரு காணிக்கை)

முடியுமா என்பது மூடத்தனம்
      முடியாது என்பது மடத்தனம்
      முடியும் என்பது மூலதனம்       (தன்னம்பிக்கை)

“மூன்றாவது கை
      ஏழாம் அறிவு
      நண்பன்”               (ஏழாவது அறிவு எனக்கும் இருக்கிறதோ!)

அன்பு நண்பர் இரா. இரவியே!

பரிவட்டம் கட்ட வேண்டிய உன் படைப்புலகம் ஒரு தனி வட்டம். மனித வாழ்வை அளக்கின்ற “ரசமட்டம்” (கட்டிடக் கலைக்கு தேவையான ஒரு அளவுகோல்).

எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம் என நினைக்கும் நீவிரும் ஒரு தெய்வப் பிறவியே! பிறப்பின் சிறப்புணர்ந்த இரா. இரவியே! உன் படைப்புக்கள் ....!

பரிமேல் அழகராகும் கருத்துக்களின் – தேரோட்டம்
      பரிமாணம் காட்டும் எழுத்தோவியம் – நீரோட்டம்
      பரிணாம வளர்ச்சியின் அழகுக் – கரகாட்டம்!

வாழ்க, வளர்க!

இரா. மோகனுக்கு இறப்பே கிடையாது
இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...
இலக்கிய உள்ளங்களில்...


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://tamil.pratilipi.com/search?q=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%20.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF

கருத்துகள்