க்ளிக்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

க்ளிக்!
நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி!
 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி 
வெளியீடு : கி. முரளிதரன், தொடர்புக்கு : 98429 63972
14/7/17, நர்மதா நதி முதல் குறுக்குத் தெரு,
மகாத்மா காந்தி நகர், மதுரை-14 muralipri@yahoo.co.in
பக்கங்கள் : 128, விலை : ரூ.80.
.******நூலாசிரியர் மதுரை முரளி, தன் பெயருடன் மதுரையை இணைத்துக் கொண்டவர். தென்னக இரயில்வேயில் மூத்த பகுதிப் பொறியாளராக பணியாற்றிக் கொண்டே இலக்கியத்தின் மீதும் ஈடுபாடு கொண்டு மதுரை வானொலியில் 18 படைப்புகள் படைத்தவர். பல்வேறு இதழ்களிலும் பிரசுரமான புதுக்கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். நூலின் தலைப்பு (‘கிளிக்’ என்பது) ஆங்கிலச் சொல். அதனைத் தவிர்த்து தமிழில் பெயர் சூட்டி இருக்கலாம் என்பது என் கருத்து.புகைப்படத்திற்காக எழுதிய கவிதையா? அல்லது கவிதைக்காக வைக்கப்பட்ட புகைப்படங்களா? என பட்டிமன்றம் நடத்தலாம். மிக நேர்த்தியான படங்கள், அச்சு வடிவமைப்பு என யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. பாராட்டுகள். நூலை பெற்றோருக்கு காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு.கவி பாஸ்கர், செந்தமிழ்க் கல்லூரியின் துணை முதல்வர் ரேவதி சுப்புலெட்சுமி, யாதவர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.த. பரந்தாமன், பட்டதாரி தமிழாசிரியர் க. பாலமுருகன் ஆகியோர் அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளனர்.
பலி - பாதசாரி காலன் வாகனம்
கட் அவுட்கலியுகம் !
அண்மையில் சென்னையில் கட் அவுட்டால் பலியான பெண்ணின் நினைவு வந்தது. உயிர்பலிக்குப் பின்னரே கட் அவுட் கலாச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது.
பூசணியில் திருஷ்டி கழிந்தது விழுந்தவன்
முகத்தில் சாலையில்!
திருஷ்டி கழிப்பதாக சாலையில் பூசணியை உடைத்து விடுகின்றனர். உண்ண வேண்டிய பூசணியை வீணாக்குவது மட்டுமல்ல, வாகனத்தில் செல்பவருக்கு விபத்து நேரும் அவலத்தை எண்ணிப் பார்த்து பூசணி உடைக்கும் மூட நம்பிக்கைக்கு முடிவு கட்டுங்கள் என்று அறிவுறுத்தும் விதமாக உள்ளது கவிதை.
சிட்டுக்குருவி ... கூடு கோவில் கோபுரம்
கல்லறை டவர் கோபுரங்கள் !
கோவில் கோபுரம், அலைபேசி கோபுரம் ஒப்பீடு நன்று. அலைபேசி கோபுரங்களின் கதிர்வீச்சு காரணமாக சிட்டுக்குருவி இனமே அழிந்து வருவது உண்மை. முன்பெல்லாம் வீடுகளில் சிட்டுக்குருவி கூடு கட்டும். இப்போது வீடுகளில் கூடு கட்ட குருவி இனமே இல்லை.
ஆடு மாடு மேய்ப்பு உழைப்பு ஆரோக்கியம்
நாய் நாயாய்மூச்சிரைக்க நடைப்பயிற்சி
கிராமம் நகரம்!
கிராமம், நகரம் ஒப்பீடு நன்று. கிராமத்து மக்கள் உழைப்பதால் அவர்களுக்கு நோய் வருவதில்லை. தனியாக நடைப்பயிற்சி தேவையில்லை. நகரத்தில் உழைப்பு இல்லாத காரணத்தால் நோய் வருகின்றது. நடைப்பயிற்சி தேவையாகின்றது.
பேக்கரி பெயரில் ஐயங்கார் கல்லா
மேசையில் கர்த்தர் பிசினஸ் !
முரண்சுவையுடன் புதுக்கவிதை நன்று. அடுத்த பதிப்பில் ஆங்கிலச் சொற்கள் நீக்கிடுங்கள். பேக்கரி – அடுமனை, பிசினஸ் – வணிகம்.
நேற்று வைகை அழுக்கு அழகர் இறக்கம்
வெளுப்பு இன்று ஆட்டோ இறக்கம்.
நாளை!
சில வரிகளின் மூலம் வைகை ஆற்றை கண்முன் நிறுத்தி விடுகிறார். வைகை தண்ணீர் இல்லாமல் வறட்சியாகவே இருக்கின்றது. எப்போதாவது தண்ணீர் வந்துவிட்டால் ஆட்டோவை (தானியை) கழுவ, ஆடு, மாடு கழுவ என்று அசுத்தமாக்கி வருகின்றனர். மக்கள் திருந்த வேண்டும். விழிப்புணர்வு விதைப்பு நன்று.
அரசியல் தொடர்பான நையாண்டிக் கவிதைகளும் உள்ளன. குறிப்பாக சட்டசபை பற்றிய கவிதைகள் நன்று. நாட்டு நடப்பை, அவலத்தை பதிவு செய்யும் விதமாக கவிதைகள் உள்ளன். பாராட்டுக்கள்.
தமிழன் தன்மானம் தரை தட்டிவிட்டது
பேசின பேச்சாளர் தரையில்
தலைவன் காலடியில்!
இன்றைய அரசியலில் காலில் விழுவது, பின் காலை வாரி விடுவது என அவலங்கள் அரங்கேறி வருவதை மிக அழகாக புதுக்கவிதையால் சுட்டி உள்ளார். நன்று.
கலாம் அஞ்சலி கவிதையில் நீயே எங்கள் கனா! என்ற வரி சிறப்பு.
விலை சத்திய சோதனை
புரிய விலை ஒரு மகாத்மா!
இங்கிலாத்துக்காரன் சொன்னானாம், போராடிய காந்தியடிகளை நாங்கள் சிறையில் தான் அடைத்தோம். கொல்லவில்லை. ஆனால் பாவிகளே விடுதலை தந்ததும் காந்தியடிகளை கொன்று விட்டீர்களே! என்று.
ஆம், எதிரி கூட செய்யாத செயலை இந்தியனே செய்தது மறக்க முடியாத, மறைக்க முடியாத கொடிய செயல், அதனை நினைவூட்டியது சிறப்பு.
விளம்பரம் வராத புத்தகத்திற்கு
தடை வழக்கு எரிப்பு அமோக
விற்பனை!
இக்கவிதை படித்ததும் ஓடாத படத்திற்கு ஒரு கூட்டம் எதிர்ப்பு தெரிவித்து, அந்தப்படத்தை ஓடவைத்த நிகழ்வு நினைவிற்கு வந்தது.
புத்தகத்திற்கு எழுதியது, திரைப்படத்திற்க்கு பொருந்தியது.நாளை யாருக்கு? சிறுகதை மிக நன்று.
நம் நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன. பெற்று எடுத்த பிள்ளைகளின் உள்ளங்கள் சுருங்கி வருகின்றன. பாசம், நேசம் மறந்து வேசம் போடுகின்றனர். நல்ல சிறுகதை, பாராட்டுக்கள். விரைவில் வர இருக்கும் சிறுகதை தொகுப்பையும் வாசிக்க ஆவலோடு உள்ளேன். வாழ்த்துகள்

கருத்துகள்