ஏர்வாடியாரின் மனத்தில் பதிந்தவர்கள்! 7வது தொகுதி நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடியார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.




http://www.tamilauthors.com/04/516.html  
ஏர்வாடியாரின் மனத்தில் பதிந்தவர்கள்!
7வது தொகுதி

நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடியார் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  
சுதா பதிப்பகம், 42 இ, மலர் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை – 600 040. பக்கங்கள் : 152  விலை : ரூ.100
ஏர்வாடியாரின் நட்பு வட்டம் மிகப்பெரியது. வங்கி அதிகாரிகள், அனைத்து கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர் இப்படி பரந்து விரிந்த உலகில்,
தனது மனத்தில் பதிந்தவர்கள் பற்றி, ‘கவிதை உறவு’’ மாத இதழில் மாதா மாதம் ஒருவர் பற்றி எழுதி வருவது வழக்கம். இந்தப் பட்டியலில் நம் பெயர் இடம்பெற்று விடாதா? என்ற ஏக்கம் இன்னும் பலருக்கு உண்டு.
‘கவிதை உறவு’’ இதழ் வந்தவுடன் ‘மனத்தில் பதிந்தவர்கள்’‘ பகுதியை முதலில் படிக்கும் வாசகர்களும் உண்டு. பிரபலமானவர்கள் மட்டுமல்ல, என் போன்ற சாதாரணமானவர்கள் பற்றியும் எழுதி உள்ளார். இந்த நூலில் நான் உள்பட மொத்தம் 19 ஆளுமைகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
கவிதை உறவில் பிரசுரமானவற்றைத் தொகுத்து நூலாக்கி விடுவது ஏர்வாடியாரின் வழக்கம். இது 7ஆவது தொகுதி. இன்னும் பல தொகுதிகள் வந்துகொண்டே இருக்கும். மனத்தில் பதிந்தவர்கள்’ பகுதியில் ஏரவாடியார், யார்?’ பற்றி எழுதினாலும், வாழ்பவர்களாக இருந்தால் அவர்களது வாழ்நாள் பத்து ஆண்டுகள் கூடி விடும் என்று அறுதியிட்டுக் கூறலாம். இது கண்டு உணர்ந்த மகிழ்ச்சி வெள்ளம்.
இந்த நூலில் ஸ்ரீ அரவிந்தர் அன்னை, முன்னாள் முதல்வர் புரட்சிச் தலைவி அம்மா, முனைவர் ம. திருமலை, டாக்டர் வி. சொக்கலிங்கம், திரு. நெல்லை கவிநேசன், சமீபத்தில் காலம்சென்ற கவிஞர் முனைவர் ஆலந்தூர் மோகனரங்கன், பத்மஸ்ரீ எம். முத்தையா ஸ்தபதி, திரு. யு.எஸ்.எஸ்.ஆர். நடராசன், கவிஞர் தியாரூ, திரு.பெ. இராசேந்திரன்-மலேசியா, கவிஞர் வேலூர் ம. நாராயணன், டாக்டர் ஜே. சதக்கத்துல்லா, திரு. ஆர்.என். லோகேந்திரலிங்கம்-கனடா, கவிஞர் இரா.இரவி, திரு. எஸ். இராமகிருஷ்ணன, நீதியரசர் பி.ஆர். கோகுலகிருஷ்ணன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், திரு. தி.க. சிவசங்கரன் (தி.க.சி.) காலமாகி விட்டார். திரு. வேந்தர் முனைவர் கோ. விசுவநாதன் – இப்படி 19 நபர்களின் வரலாறு, சாதனை, திறமை, எழுத்தாற்றல் ஆகியவைகளை பறைசாற்றும் நூலாக அமைந்துள்ளது.
பணக்காரர் என்பதற்காகவோ, யாரும் பரிந்துரை செய்தார்கள் என்பதற்காகவோ எப்போதும் ஏர்வாடியார் எழுதுவதே இல்லை. அவரது எழுத்தில் அறம் உண்டு. நேர்மை உண்டு. உண்மையிலேயே எழுதும் அளவிற்கு ஏதாவது செய்து இருந்தால் மட்டுமே அவரது மனத்தில் உண்மையிலேயே பதிந்தால் மட்டுமே எழுதுவார். குடத்து விளக்காக இருப்பவர்களை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட செய்திடும் ஆற்றல் ஏர்வாடியாரின் எழுத்துக்கு உண்டு.
மனத்தில் பதிந்தவர்கள் பகுதியில் மிகச்சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., எழுத்துவேந்தர் இந்திரா சௌந்தரராஜன், நீதியரசர் கற்பக விநாயகம் – இந்த மூன்று பேருமே கவிதை உறவில் மனத்தில் பதிந்தவர்கள் பகுதியில் ஏர்வாடியார் எழுதியவுடன் மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
கவிதை உறவு சாதாரண் இதழ் அல்ல. சென்னையில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தமிழகம் முழுவதுமுள்ள நூலகங்கள் என பரவலாக சென்று சேரும் இதழ், மனத்தில் பதிந்தவர்கள் பிரசுரம் ஆகிவிட்டால் சம்பந்தப்-பட்டவரை பலரும் அழைத்துப் பாராட்டுவார்கள். வாழ்த்துவார்கள். நான் கண்டு உணர்ந்த உண்மை இது.
ஏர்வாடியாரின் எழுத்தில் எப்போதும் உடன்பாட்டுச் சிந்தனையே இருக்கும். எதிர்மறை சிந்தனைக்கு எப்போதும் இடமளிக்க மாட்டார். அன்னப் பறவையைப் போல தண்ணீர் விலக்கி, பால் அருந்துவதைப் போல, அல்லவை நீக்கி நல்லவை மட்டுமே அவர் கண்ணில் படும்.
இந்நூலிற்கு ஆதித்தனார் இலக்கிய விருது பெற்ற கௌதம நீலாம்பரன் அணிந்துரை வழங்கி உள்ளார். நூலிலிருந்து சில துளிகள் உங்கள் பார்வைக்கு :
சமீபத்தில் காலம்சென்ற கவிஞர் முனைவர் ஆலந்தூர் மோகனரங்கன் பற்ரி எழுதியது.
“எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இப்படி இருக்க வேண்டும் என்று கவிஞர்களுக்கு இலக்கணமாக வாழ்கிற கண்ணியமான மனிதர்”’''.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் பற்றி
“தமிழ்மொழியின் மேன்மைக்கும், தமிழ்ச் சமூகத்தின் மாண்புக்கும் காரணமாக விளங்குகிறார்கள் என்பதால் அன்னைத் தமிழ் மகிழ்வது போல ஆர்வமுள்ள தமிழர்களும், அவர்மீது அளவுகடந்த அன்பும், மதிப்பும் வைத்திருக்கிறார்கள் என்னைப் போலவே, இது தொடர இதயம் நிறைந்து வாழ்த்துக்கள்”''.
கனடா உதயன் இதழாசிரியர் திரு. ஆர்.எஸ்.லோகேந்திரலிங்கம் பற்றி அன்பைத் தருகிற அந்தத் தமிழ்த்தரு வேர்விட்டு வளர்ந்து, கிளை விட்டு பரவி, நாளும் நிழல் தரவேண்டும், ஆலைப் போல் ஆயிரம் விழுது விட்டு ஆண்டுகள் பல்லாண்டாய் ஆயுள் வளர்ந்து வாழ்க என்று”''.
தமிழகம் மட்டுமல்ல, மலேசியா, கனடா போன்ற நாடுகளில் வாழும் நல்ல தமிழர்களைக் கண்டு, அறிந்து, எழுத்தால் மகுடம் சூட்டியுள்ள ஏர்வாடியாருக்கு பாராட்டுக்கள்.

கருத்துகள்