இறையன்பு கருவூலம் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
மதிப்புரை : குறள் ஒலி, பெங்களூரு
நவம்பர் 2019 இதழ்,
ப. இளவழகன், தலைவர், திருவள்ளுவர் சங்கம், 2, Dr. ராஜ்குமார் ரோடு, பிரகாஷ் நகர், பெங்களூரு-560 021.
ப. இளவழகன், தலைவர், திருவள்ளுவர் சங்கம், 2, Dr. ராஜ்குமார் ரோடு, பிரகாஷ் நகர், பெங்களூரு-560 021.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கங்கள் : 152, விலை : ரூ.110.
*******
திரு. இறையன்பு இ.ஆ.ப. அவர்களே ஒரு கருவூலம். அந்த கருவூலத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள 16 செல்வங்களை, நூலாசிரியர் இரா. இரவி அவர்கள் எவ்வளவு சுருக்கமாகத் தர முடியுமோ, அந்த அளவிற்கு கச்சிதமாக வடித்துள்ளார். கடுகளவே ஆனாலும், கருத்து சிதைவுறாமல் தந்துள்ளார். இவரே ஹைக்கூ திலகம் அல்லவா!
‘ஆசறு நல்ல நல்ல, அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே என்னும் திருஞானசம்பந்தரின் வாக்கினை நினைவுபடுத்தும் அடியாராக நமக்கு இறையன்பு அவர்கள் தெரிகிறார். நல்ல பேச்சாளர், நல்ல எழுத்தாளர், நல்ல சிந்தனையாளர், நல்ல செயலாளர் என தமிழாகரர் முனைவர் இரா.மோகன் அவர்கள் தமது இறையன்பு ஆற்றுப்படையில் கூறியுள்ளது மெத்த சரியே.
இறையன்பு அவர்களின் நூற்றுக்கும் மேலான நூல்களின் ஆழம் அறிந்து இந்நூலை திரு. இரவி படைத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
நூலில் காணப்படும் சின்னச் சின்ன சீரிய செய்திகள் :
‘மூளைக்குள் சுற்றுலா’ : கையளவு உள்ள மூளை மலையளவு செயல்புரிகின்ற விதம் கண்டு வியந்து போனேன்.
‘உலகை உலுக்கிய வாசகங்கள்’ : இந்த நூலைப் படிக்கும் முன் உள்ள நிலையும், படித்தபின்பு ஏற்படும் முன்னேற்ற மனநிலையும் மலைக்கவே செய்யும்.
இப்படி, ‘முடிவு எடுத்தல்’ ; ‘இலக்கியத்தில் மேலாண்மை’ ; ‘சுயமரியாதை’ ; ‘நினைவுகள்’ ; ‘வைகை மீன்கள்’ ; ‘அவ்வுலகம்’ ; ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட நூல்களில் உள்ள நயம், ஆழமான கருத்துக்களை தேடி ஆய்ந்து கருவூலமாக்கியிருக்கிறார், இரவி.
இந்நூலை நீங்கள் வாங்கிப் படித்த பின்னர் பாருங்கள், உங்கள் நூலகமே ஒரு கருவூலமாகவே விளங்கும்.
*
.
கருத்துகள்
கருத்துரையிடுக