.உரிமை விடியல்!
நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
தமிழ்மகள் பதிப்பகம், 16, 15ஆம் குறுக்குத் தெரு, அண்ணா நகர், புதுச்சேரி – 605 005. பக்கங்கள் : 124 விலை : ரூ.100
.******‘உரிமை விடியல்’ நூலின் பெயரே சிந்திக்க வைக்கின்றது. உரிமைகள் விடியல் காண வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது. தமிழ்மாமணி துரை மாலிறையன் அவர்கள் மரபுக்கவிதையால் வாழ்த்துரை வழங்கி உள்ளார். கலைமாமணி அசோகா சுப்பிரமணியன் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார்.தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் அவர்கள் மரபுக்கவி விருந்து வைத்து உள்ளார். மரபின் பெருமையை உணர்த்தும் வண்ணம் எழுதி உள்ளார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பெருமைகள் பெற்ற புதுவை, இன்று பாவலர் இலக்கியன் அவர்களாலும் பெருமை பெற்றுவிட்டது. செயல் செயப் புறப்படு ; செயல் செயப் புறப்படு
அயல்மொழி ஆங்கிலம் அகற்றப் புறப்படு
இயன்மொழி இன்றமிழ் ஆட்சியில் அமர்ந்திடப்
புயலெயனப் புறப்படு ; செயல் செயப் புறப்படு !‘தக்கது தாய்மொழி’ என்ற முதல் கவிதையிலேயே, ‘தமிழா, வாய்மொழி பேசியது போதும், செயல் செய்திட புறப்படு’ என்று போர்ப்பரணி பாடி உள்ளார். உண்மை தான். தமிழ்ப்பேச்சில் கலந்துவிட்ட ஆங்கிலச் சொற்களை அகற்றிட வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிங்கிலத்தை இப்படியே வளர விட்டால் தாய்மொழி தமிழ்மொழி சிதைந்து போகும். சிறார்களுக்கும் நல்ல தமிழை பேசிக் காட்டுவதும் கற்பிப்பதும் உலகத் தமிழர்களின் வாழ்நாள் கடமை ஆகும்.உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் போலவே உணர்ச்சிமிக்க வைர வரிகளின் மூலம் தமிழ்ப்பற்றை நன்கு விதைத்து உள்ளார். மகாகவி பாரதியார் கூற்றுப் போல ‘ரௌத்திரம் பழகு’ என சினத்துடன் செந்தமிழைச் சிதைப்போரைச் சாடி உள்ளார்.விழிக்குரிமை இலையென்றால் பார்வை இல்லை
விடியலுக்குத் தடை போட்டால் இருட்டே ஆளும்
மொழிக்குரிமை இலையென்றால் புலமை இல்லை
முன்னேற்றம் எதுவுமில்லை ; நம்மை வீழ்த்தும்!தமிழா விழித்திடு! ‘தமிழ் உயர்ந்தால், தமிழன் உயர்வான். தமிழ் தாழ்ந்தால் தமிழன் தாழ்வான்’ என்பதை நூல் முழுவதும் செந்தமிழால் சினம் கொண்டு விழிப்புணர்வு மரபுக் கவிதைகளை யாத்து உள்ளார். பாராட்டுக்கள்.நூலாசிரியர் பெயர் இலக்கியன். கவிதைகள் முழுவதிலும் இலக்கணத்துடன் இலக்கிய விருந்து வைத்து, தமிழ்ப்பால் ஊட்டி, தமிழ்ப்பற்று விதைத்து உள்ளார்.கோடி கோடி சேர்த்து விட்டாய்
கொள்கை முரசைக் கிழித்து விட்டாய்!
ஓடி ஓடி உழைத்த தெல்லாம்
உன்றன் வீடு நிரம்புதற்கே!பொதுநலம் மறந்து தன்னலமாக வாழும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு புத்திப் புகட்டும் விதமாக மரபுக் கவிதைகள் வடித்துள்ளார், பாராட்டுக்கள்.நல்ல நாடு!அயலான் மொழியை அகற்றுதற்கோ
ஆள்வோர் எவரும் விரும்பவில்லை
விழைக தமிழ்க்கல்வி!தமிழ் படித்தால் தமிழ் வளர்ச்சி அறிவீர் நன்றே!
தனித்தமிழில் இலக்கணங்கள், இலக்கியங்கள்
அமிழ்தெனவே படைத்தளித்தல் தமிழ் வளர்ச்சி
அருந்தமிழில் கல்வி கற்றல் தமிழ் வளர்ச்சி!அரசுப்பள்ளிகளில் தான் தமிழ்வழிக்கல்வி இருந்தது. அருந்தமிழ் வாழ்ந்தது. அங்கும் ஆங்கிலக் கல்வியை நடைமுறைப்படுத்தி வருவது வேதனையிலும் வேதனை. தமிழ்த்தாயின் இதயத்தில் வேல் பாய்ச்சும் கொடூரம் ஒழிய வேண்டும். தமிழ்வழிக் கல்வி நாட்டில் நடைமுறைக்கு வந்தாக வேண்டும். எது தமிழ்வளர்ச்சி? என்பதை கவிதைகளில் மிக அழகாகச் சுட்டி உள்ளார்.மாந்த நேயம்!பல நிறங்கள் பல மொழிகள் நிலவி னாலும்
பல சாதி பல மதங்கள் உலவி னாலும்
பல இனங்கள் பல குலங்கள் இருந்த போதும்
பண்போடு பழகுகின்ற மாந்த நேயம்!பல்வேறு வேற்றுமைகள் நிலவினாலும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் விதமாக ‘எல்லோரும் பண்போடு மனித நேயத்தோடும் வாழ்வதே மனிதனுக்கு அழகு’ என்பதை அழகாக அழகு தமிழால் உணர்த்தி உள்ளார்.பணத்தைப் பறிக்க ஏமாற்றே
பால மாக அமைந்துளது
பிணத்தைத் தருவதற்கு மிங்குப்
பணமே பிடுங்கப் படுகிறது!இறந்த துக்கத்தில், சோகத்தில் இருப்பவர்களிடம் கூட, ‘பிணம் தர, பணம் தர வேண்டும்’ என்று வசூலிக்கும் அடாவடித்தனத்தையும் கையூட்டுப் பெறும் அவலத்தையும் கவிதையின் மூலம் சுட்டிக்காட்டி சமுதாயத்தி சீர்திருத்தும் விதமாக நல்ல பல கவிதைகளை வடித்துள்ளார்.நெருப்புப் பேச்சு!ஒரு கொள்கை, ஒரு குறிக்கோள், ஒரு நோக்கம் இல்லார்
உணர்வில்லார் ; உயர்வில்லார் ; இவரெதையும் வெல்லார்
அருந்தமிழின் அடிமைதனை விரைந்தெழுந்து கொல்லார்
அன்றாடம் தற்பெருமைப் பறைகொட்டும் பொல்லார்கொள்கை இல்லாமல், குறிக்கோள், நோக்கம் இல்லாமல் தன்னலத்தோடு தான்தோன்றித்தனமான வாழ்க்கை வாழ்வோரைத் திருத்தும் விதமாக இல்லார், வெல்லார், கொல்லார், பொல்லார் என இறுதி எழுத்து ஒன்று வரும் இயைபு நயத்துடன் சொல் விளையாட்டு விளையாடி தமிழ் உணர்வு விதைத்து உள்ளார்.பாவேந்தன்!நமக்குக் கிடைத்த நல் வயிரம்
நாடு புகழும் ஒளிமுத்து
குமுறு என்ற எரிமலைக்குக்
கூடப் பிறந்த உடன்பிறப்பு
சமன்மை தந்த வரலாறு
தாவி வந்த பாட்டாறு
கமழு கின்ற தமிழ்முல்லை
கனக சுப்பு ரத்தினந்தான்!பாட்டால் பகுத்தறிவு விதைத்திட்டப் பாவலர், தந்தை பெரியாரின் போர்முரசு, புதுவையின் புதுமை பாரதிதாசன் பற்றிய கவிதைகள் மிகச்சிறப்பு. பாராட்டுக்கள். ‘உரிமை விடியல்’ என்ற பெயரில் தமிழின் உரிமைக்காகவும், தமிழரின் விடியலுக்காகவும் வடித்த பாக்கள் சிறப்பு!.
கருத்துகள்
கருத்துரையிடுக