நூல்களின் பெயர் : ‘தேசாந்திரி’, ‘எழுத்தே வாழ்க்கை’ நூல் ஆசிரியர் : S. ராமகிருஷ்ணன் கருத்துரை : B. சண்முகவேலு, அமைப்பாளர், மதுரை வாசகர் வட்டம்








நூல்களின் பெயர் : ‘தேசாந்திரி
‘எழுத்தே வாழ்க்கை

நூல் ஆசிரியர் : S. ராமகிருஷ்ணன்கருத்துரை :
B. சண்முகவேலு, அமைப்பாளர், மதுரை வாசகர் வட்டம்
கைபேசி : 
99523 15757, மின்னஞ்சல் : basavelu47@gmail.com******
29-09-2019 ஞாயிற்றுக்கிழமை காலை, சமம் குடிமக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற மதுரை வாசகர் வட்டத்தின் முதல் கூட்டத்தில், அதன் அமைப்பாளர் திரு. B. சண்முகவேலு அவர்கள், எழுத்தாளர் S. ராமகிருஷ்ணனின் இரு புத்தகங்களான ‘எழுத்தே வாழ்க்கை, ‘தேசாந்திரி ஆகியவை பற்றிய மதிப்புரையில் கூறிய நறுக்குத் தெரிந்த கருத்துக்கள் :
S. ராமகிருஷ்ணன் மகத்தான ஆற்றல்மிகு பண்பாட்டு ஜனரஞ்சக தோழர். அவரது எழுத்துக்களின் படைப்புகள் பிரமிக்க வைக்கிறது. அனைத்துவகை பரிணாமங்களில் அவரது எழுத்துக்கள் உள்ளன.
‘தேசாந்திரி, ‘எழுத்தே வாழ்க்கை இரண்டுமே பல்வேறு இதழ்களில் வெளிவந்த கட்டுரை தொகுதிகள். இரண்டுக்குமே உள்ள இணைப்பு பயணங்களில் அவர் சேகரித்த பண்பாட்டு நிகழ்வுகள், உணர்வு வரலாறு!
‘எழுத்தே வாழ்க்கையில் அவர் எழுத்துலகில் பிரவேசித்த அவரது வாழ்வின் சுவடுகள், ஆரம்ப பள்ளியிலிருந்து துவங்கி, திருமணம், சென்னையில் நுழைவு, எழுத்துலகில் அவர் கால் பதிக்க அவர் பட்ட  நெருக்கடிகள் அனைத்தையும் சுவைபட கூறியுள்ளார். அவரது எழுத்துக்கள் சாதாரண நடையில், சிறு சிறு சொற்களில் சுவைபட, படித்தால் சலிப்பு தோன்றாத வழியில், வாசகனின் தோள்மீது கை போட்டு நடப்பது போல் உள்ளது. நினைவாற்றல் அதிகம் இருப்பதாக உணர்கின்றேன். ஆரம்ப பள்ளி மாணவர்களிலிருந்து ஆசிரியர்கள் பெயர்களையும் நினைவு கூறுகிறார்.
‘கௌரவர்களின் நூறு பேரின் பெயர்களையும், மேல்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளில் எதனைக் கேட்டாலும் சொல்ல முடியும் என்ற அவரது ஆளுமை நம்மை பிரமிக்க வைக்கிறது. தன் இனிய குடும்பம், மனைவி, மகள்கள் ஒத்துழைப்பு – இவரது வாழ்வின் முன்னேற்றத்திற்கு பேருதவியாக இருந்துள்ளது. குடும்ப சிறப்புகளை அழகாக படம்பிடித்துக் கூறுகிறார்.
‘தேசாந்திரியாக அலைந்த காலத்தின் கட்டுரை அற்புதமானது. அதில் ஒவ்வொரு வரியும் போற்றத்தக்கது. பயணம் நமக்கு ஞானத்தை தரட்டும் உப பாண்டவம் நாவல் பிரசவித்த கதை சாதாரண எழுத்தாளனுக்கு நம்பிக்கை தருகிறது.
திரைப்படத் துறையில் பல்வேறு வடிவங்களில் அவர் கால் பதித்ததை கூறுகிறார். அவர் ஒரு நடிகராக பரிணமித்து இருந்தால், இந்த எழுத்துக்கள் நமக்கு கிடைக்காது போயிருக்கலாம். வெயிலில் வாடிய, அல்லது நேசித்த அந்த மனிதர் மழையை தேடி லோனாவாலா வரை சென்றவர், சென்னை மழையை கண்டு பயந்து தவித்த கதை நன்றாக உள்ளது.
‘தேசாந்திரியும் ‘எழுத்தே வாழ்க்கையும் இரண்டும் ஒருசேர இணைந்து செல்வதால் மதிப்புரை தருவதில் சிரமமில்லை. பல இடங்களில் இரு புத்தங்களும் இணைகின்றது.
ஒவ்வொரு பயணத்திலும் அவர் அனுபவித்த உணர்வு, அவர் கண்ட நிகழ்வுகள், புதுமையாக நமக்களிக்கின்றார்.
டெல்லி, அமெரிக்கா, ஜப்பான் பயணங்களோடு தமிழக கிராமங்களின் கதைகளையும் தொகுப்பளிப்பது பல்வேறு சுவைகளை நமக்கு தருகின்றது.
ஜப்பான் பயணத்திற்கு அதிக பக்கங்கள், அதிக விஷயங்கள், புதுமையான விபரங்கள் தந்துள்ளார்.
நயாகரா நீர்வீழ்ச்சி, குற்றால அருவி இரண்டையும் சுகமாக அனுபவித்து எழுதியுள்ளார். குற்றால அருவியின் இரண்டு உடல்களையும் நறுக்காக கூறியுள்ளார். நயாகராவின் பிரமாண்டத்தை, அழகை அனுபவித்து எழுதியுள்ளார். நம்மை நயாகராவிற்கு அழைத்துச் சென்று காட்டியது போல் இருந்தது அவரது எழுத்துக்கள்.
பயணங்களின் போது அவர் தனியே செல்கிறாரா? துணைகளோடு செல்கிறாரா? திட்டமிட்டு போகிறாரா? இல்லை, இலக்கற்ற ஏகாந்த பயணமா? தெரியவில்லை.
கூட்ஸ் ரயிலில் பயணம், சத்னாவில் ஒரு இரவு, பனாரஸில் ஒரு பகல் கட்டுரைகள் அனைத்தும் தான்தோன்றித்தனமாக, தேசாந்திரியாக சுற்றியதாகத் தான் தோன்றுகிறது. அதற்கு ஒரு துணிவு வேண்டும்.
சில ஊர்களை பற்றி அவர் விவரிக்கும் போது அந்த ஊரே நம் கண்முன் விரிகிறது. அவரது காட்சிகளை மட்டும் விவரித்து அது என்ன ஊர் என்றால் நாம் அந்த ஊரின் பெயரை கூறிவிடலாம். டெல்லியை பற்றி கூறுவது, காசியை பற்றி கூறுவது, சென்னையின் பல்வேறு கூறுகளை கூறுவது நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
சென்னையின் பரங்கிமலை, அடையாறு ஆலமரம், சோழ மண்டலம், நூலகங்கள், மூர் மார்க்கெட் எரிந்த கதை, நடைபாதை புத்தக கடைகள் எல்லாம் அவரது சிந்தனைகளை, வாசிப்பு வெளியை நமக்கு தெரிவிக்கிறது.
இரண்டு புத்தகமுமே சலசலவென ஓடும் நதியில், இளம் வெயிலில் குளித்தது போல் உள்ளது. குளித்து முடித்தால் நமக்குள்ள புத்துணர்வு, இரு புத்தகங்களையும் படித்தால் தருகின்றது.
அருமை, பல புது விஷயங்களை அறிந்து கொள்ள உதவிய  S. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.

கருத்துகள்