இலக்கிய இணையர் படைப்புலகம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
இலக்கிய இணையர் படைப்புலகம்!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
பக்கம் : 230 விலை : ரூ. 175
கவிஞர் இரா. இரவி அவர்களின் 21-ம் நூலான ‘இலக்கிய இணையர் படைப்புலகம்’ என்ற நூலை வாசித்தவுடன் தோன்றியது இது தான்.
ஒரு கல்லைச் சிற்பமாக வடித்த சிற்பியைப் பாராட்டுவதா? அந்தச் சிற்பத்தை மேலும் சிறப்பாக்க அதற்கொரு கோவிலை நிர்மாணிப்பவரைப் பாராட்டுவதா? இவையிரண்டும் இணையும் நாளில் குடமுழுக்கு நடைபெறும்போது அதனை வர்ணிக்கும் வர்ணனையாளரைப் பாராட்டுவதா? என்பதைப் போல் உள்ளது.
ஒரு நூல் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்று விடுமா? என்ற கேள்வியோடு எழுதும் நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் நல்ல நூல்களை ஆராய்ந்து தொகுத்து அதனை நூலாக வெளியிடும் இரா. மோகன் அய்யா போன்றவர்களும் இருக்கிறார்கள். அடுத்ததாக, அந்த நூல்களுக்கு மதிப்புரை எழுதி அதையே நூலாக்கும் கவிஞர் இரா.இரவி போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி. இதிலிருந்து புலப்படுகின்றது இரா. இரவி, இரா. மோகன் அய்யாவின் செல்லப்பிள்ளை என்று.
கவிஞர் இரா. இரவி அவர்களின் எல்லா நூல்களுக்கும் நான் மதிப்புரை, விமர்சனம் என்று எழுதியிருந்தாலும் ஒரு ‘மதிப்புரை’ நூலுக்கே ‘மதிப்புரை’ எழுதுவது பெருமையாக இருக்கிறது.
இந்நூலுக்கான மதிப்புரையை இரண்டே வரிகளில் எழுதி விடுகிறேன்.
இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இருபத்தியோராம் நூற்றாண்டு வரை போடப்பட்ட இலக்கியப் பாலம் இந்நூல்!
எனக்குப் பிடித்த வரிகள்!
நான் மிகவும் நேசிக்கும் பலரில் ஐயா ஏர்வாடியார் அவர்களும் ஒருவர். அவரது வரிகள்.
கையே இல்லை என்பதை விடவா
கையில் இல்லை என்கிற கவலை?
இது நம்பிக்கையின் உச்ச வரிகள்!
கவிஞர் புதுயுகன்!
‘வாழ்க்கை உன்னை
கசக்கிப் போட்டாலும்
மனதை அழகாக மடித்துவை
நாளைய பட்டுத்துணி நீயாகலாம்!’
இரண்டு மின் அலைகள்
ஒரு மின்னல்
ஹைக்கூ!
மூன்றே வரிகள்
ஒரு கடல்
ஹைக்கூ!
இந்தக் கவிதை வரிகளை வாசிக்கும்போது எத்தகைய துன்பங்களும்
தூர ஓடிவிடும் நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் ஒரே தராசில் ஏற்றியிருக்கிறார் கவிஞர் புதுயுகன்!
ந. முத்து அவர்களின்
பங்களா குழந்தைக்கு
உயிருடன் பொம்மை
வேலைக்கார சிறுமி!
ஏழை, பணக்காரன் நிலையை முள்ளாய்த் தைக்கிறது இக்கவிதை வரிகள்.
பிருந்தா சாரதி-யின்
நீ வரும்வரை தான்
அது பேருந்து
பிறகு விமானம்!
என்ற வரிகள் மகிழ்வான கற்பனைத் திறனுக்கு சாட்சி!
பாராட்டு என்பது ஒரு மனிதனின் மரணத்தைக் கூட விரட்டி விடும் சக்தி வாய்ந்தது. அத்தகைய அரிய செயலைச் செய்து அனைவரையும் பாராட்டி வளர்க்கும் கவிஞர் இரா.இரவி அவர்கள், இன்னும் பல நூல்கள் எழுதி வாசகர்களுக்கு இன்ப விருந்தளித்து இலக்கிய உலகத்தை சிறப்பாக்க வாழ்த்துகின்றேன்.
.
கருத்துகள்
கருத்துரையிடுக