தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


தவம்!

நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.

  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. 
 
வெளியீடு : ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98.

பக்கங்கள் : 30, விலை : ரூ.50

******
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நூல் படித்தால் நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ள, மேன்மைப்-படுத்திக் கொள்ள உதவும். அந்த வகையில் இந்த நூலும் வாசக மனதில் உள்ள விலங்குகுணம் அழித்து மனிதநேயம், அன்பு, கருணை விதைக்கும் நூலாக உள்ளது.

இந்த நூலை மதுரை புத்தகத் திருவிழாவில் மாமனிதர் எளியவர் நல்லவர் நேர்மையாளர் நல்லக்கண்ணு அவர்களிடம் ‘கையொப்பம் வாங்கி வாங்கிய நூல். பொருத்தமான நூலை பொருத்தமான மனிதரிடமிருந்து பெற்றது பெருமை. அவரும் அரசியல் வாழ்க்கையை தவமாகவே எண்ணி வாழ்ந்து வரும் தூயவர்.

‘‘ஒரே செயலில் சிந்தனை சிதறாமல் ஈடுபடுவதே தவம். எடுத்த காரியம் முடியும் வரை அடுத்த செயல் பற்றிச் சிந்திக்காமல் அதிலேயே அமிழ்ந்து மூழ்கி முத்தெடுத்த பிறகே வெளியே வருவது தான் தவமாகக் கருதப்படுகிறது’’

நூலின் தலைப்பு ‘தவம் என்றவுடன் கண்ணை மூடி தினமும் புலித்தோல் மீது அமர்ந்து தவம் செய்திடச் சொல்வாரோ? என்று அய்யம் கொண்டு நூலைப் படித்தேன். நூலின் தொடக்க வரிகளிலேயே தவம் பற்றிய விளக்கம் தந்து வியப்பில் ஆழ்த்தி விட்டார்.

நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வேடு தயாரிக்க ஒரு மாதம் விடுப்பு எடுத்து மதுரைக்கு வந்திருந்தார். அறையில் தங்கியிருந்த போது அலைபேசியை அணைத்து விட்டார். செய்தித்தாள் எதுவும் வாசிக்கவில்லை. முகச்சவரம் கூட செய்யாமல் தாடி வளர்த்து இருந்தார். ஆய்வேடு தயாரிக்கும் பணியில் தன்னை ஒரு முனிவர் போல முற்றும் துறந்து அதில் ஈடுபட்டு அதாவது தவம் செய்து மூழ்கி முத்தெடுத்து வெற்றி பெற்றார்.

அந்த நிகழ்வு என் நினைவிற்கு வந்தது. ஊருக்குத் தான் உபதேசம் என்று இல்லாமல் எழுதுவதை வாழ்க்கையில் அவரும் கடைப்பிடிக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு இது.

நூலில் இருந்து பதச்சோறாக சில துளிகள் உங்கள் பார்வைக்கு இதோ 

“தவம் வேறு பாசாங்கு வேறு சைவ உணவு உண்பதைப் போல வேசமிடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு முகத்தை வைத்திருப்பார்கள். நல்லவர்களாக ஆகிவிட்டதைப் போல நடிக்கிற போக்கிரிகளும், திருந்தி விட்டதாய் சாதிக்கும் போக்கிரிகளும் சில நாட்கள் உத்தமர்களை விட அதிகமாக புனிதமானவர்களாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் தக்க தருணத்தில் மீனைப் பார்த்ததும் கொத்தும் கொக்கு போல, எலியைப் பார்த்து தாவும் பூனை போல அவர்கள் தவ வேடம் கலைந்து விடும்.

தவம் செய்வது போல நடிக்கும் போலி மனிதர்களின் முகத்திரையைக் கிழித்து அவர்களின் இயல்பைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். உண்மையில் தவம் செய்வது வேறு, தவம் செய்வது போல நடிப்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்த்தி உள்ளார்.

எந்த ஒரு செயலையும் விரும்பி ஈடுபாட்டுடன் செய்வதே தவம் என்கிறார். வேளாண்மையை விரும்பிச் செய்வதும் விளைவிப்பதும் தவம் என்கிறார். பண்டைக்காலத்தில் மாமல்லபுரத்தில் சிலை செதுக்கிய சிற்பி செய்த செயலும் தவம் என்கிறார்.  பழங்காலத்தில் கோவில்களில் ஓவியம் தீட்டிய ஓவியரின் பணி தவம் என்கிறார்.

“மெஞ்ஞான தவம் மட்டுமல்ல, விஞ்ஞான தவங்களும் நிகழ்ந்தால் தான் இத்தனை மக்கட்தொகையையும் சமாளிக்க முடிகிறது.

விஞ்ஞானிகள் மனிதகுல வளர்ச்சிக்கு உதவிடும் வண்ணம் கண்டுபிடிக்கும் கருவிகளும் தவத்தின் பயனே என்கிறார்.

முன்பெல்லாம் தேர்வு முடிவுகளை அறிந்திட  நாளிதழ்களின் வாசலில் காத்திருந்த காலம் போய் விட்டது. இன்று இணையத்தின் பயனாக கைப்பேசியிலேயே தேர்வு முடிவை தேர்தல் முடிவை அறிந்து கொள்கிறோம். இது போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளும் அறிவியல் அறிஞர்கள் செய்த தவத்தின் பயனே என விளக்கி எழுதி உள்ளார்.


“தனக்காக மட்டுமே தவம் மேற்கொள்கிறவர்கள் மத்தியில் தன்னைத் தேய்த்து மற்றவர்களுக்காக அருந்தவம் புரிகின்ற அவதார மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தலைக்குப் பின்னால் ஒளிவட்டங்கள் இல்லை. அவர்களைச் சுற்றி எப்போதும் இளவட்டங்கள் இருக்கின்றன.

இந்த வரிகளைப் படித்தவுடன் மாமனிதர் அப்துல்கலாம் என் நினைவிற்கு வந்தார். அவர் தலையைச் சுற்றி ஒளிவட்டம் இல்லை. ஆனால் இளவட்டங்கள் இருந்தார்கள். மாணவ, மாணவியருக்கு தன்னம்பிக்கை விதைப்பதற்கு தன்னலமின்றி ஓடி ஒடி உழைத்தார். அதனால் தான் இறந்த பின்னும் இன்றும், என்றும் நினைக்கப்படுகிறார். போற்றப்படுகிறார் அப்துல்கலாம். தனக்காகத் தவம் செய்பவர்கள் இறந்ததும் இறந்து விடுகின்றனர். பிறருக்காக தவம் செய்பவர்கள் இறந்த பின்னும் வாழ்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை.

காந்தியடிகள் உள்ளிட்ட பல விடுதலைப் போராட்ட வீரர்களின் தன்னலமற்ற தவத்தால் விளைந்தது தான் இந்த விடுதலை என்பதை நன்கு விளக்கி உள்ளார்.

தன்னலம் மறந்து பொதுநலம் பேணவும் உயர்ந்த நிலைக்கு நம்மை உயர்த்திக் கொள்ள பதிவிடும் நூல். 

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நூல் என்றால் தனிக்கவனம் செலுத்தி அழகிய வண்ணப்படங்களுடன் நல்ல தாள்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டு விடுகின்றனர். பாராட்டுக்கள்

கருத்துகள்