இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !
இறையன்பு கருவூலம் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் மதிப்புரை : எழுத்து வேந்தர்
இந்திரா சௌந்தர்ராஜன் !
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கங்கள் : 152, விலை : ரூ.110.
*******
கவிஞர் இரா. இரவி அவர்கள் என் நெடுநாள் நண்பர். மறைந்த தமிழாகரர் திரு. இரா. மோகன் அவர்களால எனக்கு அறிமுகப்படுத்தப்-பட்டவர். ஓர் அரசு ஊழியராக இருப்பினும் அரசு ஊழியர் எனும் போதே மனதில் தோன்றிடும் லஞ்ச லாவண்யங்களுக்கு துளியும் இடம் கொடாத ஓர் ஆச்சரியமான மனிதர்.
இப்படி ஒருவர் இலக்கிய ருசி உடையவராயும், கவிஞராகவும் இருப்பது ருசிக்கே ருசியான ஒரு விஷயமாகும். ஏராளமான ஹைக்கூ கவிதைகளை படைத்தவராதலால் ‘ஹைக்கூ ரவி’ என்றே அழைக்கப்-படுபவர்.
ஹைக்கூ கவிதைகள் அணுகுண்டு ரகம்.
வடிவில் சிறிதாயினும் பொருளில் பிரளயத்தையே உருவாக்கு-பவை. ரவியும் பார்க்க எளிதாய் காட்சி தரும் ஒரு ஆழமான மனிதரே!.
மதுரையின் இலக்கிய நிகழ்வுகளை தேடிச் சென்று நுகர்ந்து, அதை கைபேசியில் பதிவிட்டு பரவச் செய்வதிலும் சமர்த்தர். திரு. இரா. மோகன் அவர்களால் பேச்சாளராகவும், சிறந்த நூலாசிரியராகவும் வளர்த்தெடுக்கப்பட்ட திரு. இரா.இரவியின் ஒரு மதிப்புறு நூலே ‘இறையன்பு கருவூலம்’!
திரு. இறையன்பு அவர்களை அறியாதவர் இருக்க முடியாது. தனிச்சிறப்பு மிகுந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான திரு. இறையன்பு, ஒரு தன்னிகரில்லாத படைப்பாளியும் கூட. நாவல்கள், கட்டுரைகள் என்று விரிந்த தளங்களில் முத்திரை பதித்து, திரு, இறையன்பு எழுதிய நூலகளைப் பற்றிய ஒரு முன்னோட்ட கட்டுரைகளின் தொகுப்பே ‘இறையன்புக் கருவூலம்’ நூல்!
ஒரு படைப்பாளியின் பல்வேறு படைப்புகளை ஒன்று திரட்டி, அந்த படைப்புகள் குறித்து, ஒரு படைப்பை அளிப்பது என்பது எனக்கு தெரிந்து எவரும் செய்திராத ஒரு புதுமை என்றே கூறுவேன்.
எந்த அளவு அப்படைப்புகளும் தரத்திலும் திறத்திலும் சிறந்திருந்தால் இப்படி எழுதத் தோன்றும் என்பதையும் இங்கே எண்ணிப் பார்த்திட வேண்டும். இந்நூல் திரு. இறையன்பு அவர்களின் மாறுபட்ட 18 நூல்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. இந்த அறிமுகக் கட்டுரைகளில் திரு. இரவியின் பார்வை எப்படிப்பட்டது? என்பதும் விளங்குகிறது.
மிகுந்த ரகசியங்களோடு ஒரு திரைப்படம் வந்திருக்கும். அதைப் பார்த்துவிட்டு வந்த ஒருவர் அந்த ரகசியங்களை எல்லாம் விமர்சிக்கும் சாக்கில் போட்டு உடைத்தால் நமக்கு அந்த திரைப்படத்தைப் பார்க்கத் தோன்றுமா? ரகசியங்களை ரகசியமாகவே வைத்திருந்து விமர்சிப்பதே சிறந்த விமர்சனம். திரு. இரவியும் தன் கட்டுரைகளில், நாம் வாசித்து நேராக உணர வேண்டியதை மறைமுகமாகவே உணர்த்துகிறார்.
திரு. இறையன்பு நூல்களில் ‘பத்தாயிரம் மைல் பயணமும்’, ‘மூளைக்குள் ஒரு சுற்றுலா’வும் என் வரையில் மிக அரிதான நூலகள் ஆகும். ஏராளமான செய்திகளை அள்ளித்தரும் இந்த நூல்கள் நம் பொதுஅறிவை பெரிதும் மேம்படுத்துபவை ஆகும்.
‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்னும் ஒரு நூல்! எது நல்ல இலக்கியம்? அதில் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும்? யாரெல்லாம் சிறந்து விளங்கியுள்ளனர்? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தரும் ஒரு அரிதான நூல் இந்நூல்.
இதை ஒரு நூறு நூலுக்கு சமமான நூலாக குறிப்பிடுகிறார் திரு. இரவி. சமீபத்தில் நண்பர் ஒருவர் தன் மகளுக்கு திருமணம் நிகழ்த்தினார். திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நல்ல நினைவுப்பரிசினை அளிக்க விரும்பினார். அப்படியானால் நூலை விட ஒரு நல்ல நினைவுப் பரிசில்லை என்றேன் நான். நீங்களே ஒரு நல்ல நூலை சொல்லுங்கள். திருமணத்தில் தரப்போவதால் திருமணம் தொடர்பாய், மணமக்களுக்கானதாய் இருக்கலாம் என்றார். நானும் ஒரு வேட்டையை தொடங்கினேன். திரு. இரவி அவர்களிடம் என் தேடலைச் சொல்லவும், “அட, நம் இறையன்பு ஐயாவின் ‘இல்லறம் இனிக்க’ என்கிற நூல் உள்ளதே” என்றார். உடனே அந்த நூலை ஆயிரம் பிரதிகளுக்கும் மேல் வாங்கி, திருமணப் பரிசாக அளிக்கவும் எல்லோருக்கும் பெரிதும் மகிழ்ச்சி!.
மொத்தத்தில் இதுபோன்ற தருணங்களில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வழிகாட்டுபவர் திரு. இரவி. அதனால் தான் திரு. இறையன்பு அவர்களும், இவருக்கு ‘புலிப்பால் இரவி’ என்கிற பெயரைச் சூட்டியுள்ளார். புலிப்பால் கிடைக்கக் கூடியதா என்ன? ஆனால் ரவியிடம் கேட்டால் காட்டுக்குச் சென்று ஒரு புலியிடம் பழகி எப்பாடுபட்டாவது பாலைக் கறந்து கொண்டு வந்து விடுவார்.
அந்த ஈடுபாடு, வேகம் இதெல்லாம் தான் இது போன்ற நல்ல நூல்களை எழுத காரணம்.
இந்நூல் மூலமாக திரு. இறையன்புவின் ஆளுமைத் திறன், பேச்சாற்றல், நன்றியுணர்ச்சி, கடின உழைப்பு, திட்டமிட்டு செயலாற்றும் தன்மை என்கிற பன்முகங்களை திரு. இரவி மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்த புத்தகங்களை எல்லாமும் வாங்கிப் படிக்கவும் மனம் பெரிதும் விழையும். நூலுக்கே நூல் தந்த திரு. இரவி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும், வாழ்த்துகள்!
.
கருத்துகள்
கருத்துரையிடுக