வியர்வைக்கு வெகுமதி! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி










வியர்வைக்கு வெகுமதி!


நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.



  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி 




வெளியீடு : விசயா பதிப்பகம், 20, ராச வீதி, கோயம்புத்தூர்-641 001.  பக்கங்கள் : 200, விலை : ரூ.140.


*******

     ‘வியர்வைக்கு வெகுமதி’ என்ற நூலின் தலைப்பே உழைப்பின் உயர்வை உணர்த்துவதாக உள்ளது. நூலாசிரியர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சமுதாயத்தைச் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஓய்வின்றி தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். எழுதியவைகளை நூலாக்கி விடுகின்றார். படிக்கும் வாசகர்கள் மனதை செம்மைப்படுத்தி நெறிப்படுத்தி விடுகிறார். பாராட்டுக்கள்.

     நூலில் 30 முத்தான தலைப்புகள், 30 கட்டுரைகள் உள்ளன. தலைப்புகளே சிந்திக்க வைக்கின்றன. ‘வியர்வைக்கு விழா’ என்று தொடங்கி ‘உழைப்பு வீணாகாது’ என்று முடித்துள்ளார். நூல் முழுவதும் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. உழைப்பின் உயர்வை உணர்த்தி உள்ளார். கடின உழைப்பிற்கு ஈடு, இணை இல்லை என்பார்கள். சொல்லை விட செயல் முக்கியம் என்பார்கள். நூலிலிருந்து சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு :

     “ஒருவருடைய பண்பாட்டை அவர்கள் பணியிலிருந்தே அறிந்து கொள்ளலாம். தூய்மையுடையவரா; வாய்மையுடையவரா என்பதை அவர் செய்யும் விதத்திலேயே தெரிந்து கொள்ளலாம். பணியை கடனுக்காக செய்பவர்களும் உண்டு. கடமைக்காக செய்பவர்களும் உண்டு. கடவுளுக்கு செய்வதாக நினைத்துச் செய்பவர்களும் உண்டு”, செய்யும் செயல், நடத்தை நமது பண்பாட்டை பறைசாற்றுவதாக உள்ளது. எனவே எந்த ஒரு செயலையும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.

     “மனித இனத்தின் பேராற்றலுக்கு அவனது உழைப்பே முக்கியக் காரணம். உழைப்பை எப்போது கைவிட்டாலும் அவன் வீழ்ச்சி அடைவதற்கு சாத்திய கூறுகள் இருக்கின்றன”

     உண்மை தான். மனிதனுக்கு அழகு உழைப்பு தான். ‘எப்போதும் இயயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்’ என்ற நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் பொன்மொழியைத் தான் தாரக மந்திரமாகக் கொண்டு நானும் இயங்கிக் கொண்டே இருக்கிறேன்.

     தந்தை பெரியார் அவர்கள் சொன்ன சொல்லும் நினைவிற்கு வந்தது. “ஓய்வும் சோர்வும் தற்கொலைக்குச் சமம்”. ஒன்று படிக்கையில் அது தொடர்பான மற்றொன்று நினைவிற்கு வருவதே படைப்பாளியின் வெற்றி ஆகும்.

     சிறிய கதைகள், சந்தித்த நிகழ்வுகள், அனுபவங்கள், படித்த தகவல்கள் என பல்சுவை விருந்தாகவும், படிக்கும் வாசகர்களுக்குப் பயந்தரும் விதமாகவுன் உள்ளது. தெளிந்த நீரோடை போன்ற சிறந்த எழுத்து நடை. படிப்பதற்கு சுவை கூட்டும் விதமாக உள்ளது”. பாராட்டுக்கள்.

     “செருப்பை விடுவதிலும் செம்மை வேண்டும், துண்டை உலர்த்துவதிலும் அழகு வேண்டும், நேரத்தைக் கடைபிடிப்பதிலும் நேர்த்தி வேண்டும என்ற பண்புடன் நடந்து கொள்பவர்கள் எல்லாவற்றிலும் சரியாக இருப்பார்கள்”

     செருப்பை விடும்போது கண்டபடி வீசிவிடுவதையும் பார்த்து இருக்கிறோம். குறித்த நேரத்தில் செல்வதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் எல்லா நேரமும், நேரத்தைக் கடைப்பிடிக்காமல் தாமதமாகச் சொல்வதையே பழக்கப்படுத்திக் கொண்ட பலரையும் இன்றைக்கு பார்க்கின்றோம். செருப்பு விடுவதில் தொடங்கும் ஒழுங்கு உள்ளே சென்று உரையாடி உற்று நோக்கி விடைபெறும் வரை ஒழுங்கு தொடர வேண்டும். எப்படியும் வாழலாம் என்பதை விடுத்து, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நெறிமுறையை வகுத்துக் கொள்ள உதவிடும் நூல் இது.

     ‘காதலியாக இருக்கும்போது கொடுத்த தண்ணீரைக் கூடப் பாராட்டுகிற ஆண்கள், மனைவியான பிறகு செய்து தருகிற பால் பாயசத்தைக் கூட பாராட்டுவதில்லை’.

     காதலித்துக் கரம்பிடித்த ஆண்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள். இவை காதலிக்கும் போது காட்டிய அன்பை கரம்பிடித்த பின்னும் காட்ட வேண்டும். மணமானபின் மாறிவிடுவதால் தாலன் காதல் திருமணங்கள் தோற்கின்றன.

     உலகத்தின் அத்தனை பேச்சாளர்களும் உழைப்பால் தான் உயர்ந்தவர்கள். கருத்தில் ‘திரு’ இருக்கிறவர்களெல்லாம், கருவில் ‘திரு’ இருந்தவர்கள் அல்லர். பேசுவதற்கும் தயாரிப்பு செய்திடல் வேண்டும். அப்போது தான் அந்தப்பேச்சுக்கு வெற்றி  கிட்டும் பலரும் பாராட்டுவார்கள். தயாரிப்பு இன்றி வந்து வாயுக்கு வந்தபடி பேசுபவர்களை யாரும் இன்று பாராட்டுவதில்லை.

     “அவமானப்படுத்தியவர்களும் பொன்னாடை போர்த்துமாறு உயர்வதற்கு உழைப்பை மூலதனம்”. உண்மை தான். இந்த வரிகளை என் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்தேன். நான் பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று பின் வெற்றி பெற்ற பின், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். தோல்வியுற்று, வெற்றி பெற்று 11ஆம் வகுப்பு இடம் கேட்ட போது மறுத்து விட்டனர். பின்னர் இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நன்கு படித்து 857 மதிப்பெண் பெற்றேன். கவிஞராக வளர்ந்த பின்னே அதே சேதுபதி பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக கவிதைப் போட்டியின் நடுவராகச் சென்ற பொழுதுகளில் பொன்னடைப் போர்த்திப் பாராட்டினார்கள்.

     தற்பெருமைக்காக .எழுதவில்லை நம்மை வளர்த்துக் கொண்டால் மதிக்காதவர்களும் மதிப்பார்கள் என்பது உண்மை.

     வியர்வைக்கு வெகுமதி நூல் உழைப்பாளிகளுக்கு வெகுமதி நூல் ஆசிரியர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களுக்கு பாராட்டுக்கள்.

கருத்துகள்