: "இறையன்பு கருவூலம்" நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலை கழகம், கோவை



இறையன்பு கருவூலம் !

நூலாசிரியர் : கவிஞர்  இரா.இரவி !

நூல் மதிப்புரை : ப.மகேஸ்வரி, 
பாரதியார் பல்கலை கழகம், கோவை  !

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  
பக்கங்கள் : 152, விலை : ரூ.110.  

நூல் மதிப்புரைகளே புத்தகமாக உருவெடுக்கும் அளவு சக்திவாய்ந்தது என்றால் நூலாசிரியர் வெ.இறையன்பு அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார் தன் படைப்புகள் மூலம் என்பதை உற்று நோக்கி உள் வாங்கி உள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள்.
இந்த "இறையன்பு கருவூலம்" நூலுக்கு மதிப்புரை வழங்க வேண்டுமென்றால் அது மற்றொரு நூல் ஆகும் அளவில் விரிந்து பரந்து இருக்கும் ஏனெனில் கவிஞர் இரவி எடுத்து இருக்கும் 16 புத்தகங்களையும் வாசித்ததால் அல்ல உள்வாங்கியதால்.
ஒரு நேர்மையான சமுதாயத்தை உருவாக்கும் துடிப்போடு செயல்படும் திறமையான அரசு அதிகாரி வெ.இறையன்பு அவர்களின் படைப்புகளை வாசகர்களுக்கு எடுத்துச் செல்வதில் தீவிரம் காட்டியிருப்பதில் கவிஞர் இரவி அவர்களின் சமூக அக்கறையை காணமுடிகிறது  இந்நூலில்.

இன்றைய இளைஞர்களை ஆட்டிப் படைப்பதாக விரல் நுனியில் கைபேசியும், கண் திறந்தால் தொலைக்காட்சியும், தடுக்கி விழுந்தால் திரையரங்குகளும் அமைந்து இருக்கும் வேளையில், இளைஞனே கொஞ்சம் திரும்பிப் பார்.. நம் ஐயா இறையன்பு இனிய தமிழில் உன் வாழ்க்கையை புரிந்து வாழ்ந்து வெற்றி கொள்ள ஓர் ஆயிரம் பக்கங்களை உற்சாகத்துடன் எழுதி ஊக்கம் கொடுத்துள்ளார் என தட்டி எழுப்பி, அழகிய மதிப்புரையின் மூலம் புத்தகங்களை அறிமுகப்படுத்தி, இறையன்பு அவர்களின் பாதையில் தானும் இணைந்துள்ளார் இரவி அவர்கள் என்று தோன்றுகிறது நூலாசிரியரின் உள்ளத்தை உணர்ந்துள்ளதை மதிப்புரைகளில் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் இரவி. 

மதிப்பிற்குரிய பேராசிரியர் இரா. மோகன் அவர்கள் தன் அணிந்துரையில் கவிஞர் இரவி அவர்களின் மனதில் நின்று இயக்கும் முப்பெரும் ஆளுமைகளை குறிப்பிட்டு முத்தாய்ப்பாய் தன் மதிப்புரையை இறையன்பு ஆற்றுப்படையாக வழங்கியுள்ளார்கள்.  கவிஞர் இரவி அவர்கள் முனைவர் இறையன்புவின் படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுத்து தொடுத்துள்ள கருத்துக்களுக்கு மேல் விளக்கம் அளித்து அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளது அருமை.

கவிஞர் இரவி அவர்கள் தாம் படித்து உணர்ந்தவற்றை, சுவைத்தவற்றை மற்றவர்களும் அனுபவிக்க பழத்தின் சாறு பிழிந்து தருவது போல நாடு அறிந்த நல்ல பேச்சாளர், நல்ல எழுத்தாளர், நல்ல சிந்தனையாளர், நல்ல செயலாளர் என இறையன்புவின் பன்முக ஆளுமை திறன் குறித்து எழுதியுள்ளார் எனக் குறிப்பிட்டு தமது மதிப்புரையையும் தேனாக கொடுத்துள்ளது மிகச் சிறப்பு.

"கல்லூரியில் கற்காவிட்டாலும் பல்கலையில் பட்டம் பெறாவிட்டாலும் கவிஞர் இரவி படைத்த கவிதை நூல்கள் பல்கலைக்கழகங்களில் கல்லூரிகளில் ரவியின் உழைப்புக்கு கிடைத்த பெருமை" என புகழ் மாலை சூட்டி, திரு இறையன்பு அவர்களின் எண்ணப் பூக்களாம் நூல்களில் சிந்தனைத் தேனை, தேன் அடையாக வழங்கியுள்ளார் இலக்கிய தேனி இரவி என ஆராதித்து நூலிலுள்ள முக்கிய கருத்துக்களை எடுத்துரைத்து பேராசிரியர் இரா மோகன் அவர்கள் தொடுத்த "இறையன்பு களஞ்சியம்" என்ற நூலை "இரசாயனம் கலக்காத தூய கனிச்சாறு இது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் பயக்கும் நன்னூல்" எனும் இரவியின் சொல் விளையாட்டுக்கு ஒரு சபாஷ் எனப் பாராட்டி 

"பழம் ஒன்று ; சுளை நூறு" என சுவையான தலைப்பிட்டு தனது ஆழமான மதிப்புரையை தந்துள்ளார் முனைவர்.கு.ஞானசம்பந்தன் அவர்கள்.இந்த நூலுக்கு "இறையன்பு கருவூலம்" என பெயர் தேர்ந்தெடுத்ததற்காகவே ஒரு தனி பாராட்டு பத்திரம் கொடுக்க வேண்டும் கவிஞர் இரவி அவர்களுக்கு.  கருவூலம் என்னும் சொல்லுக்கு மிகப் பொருத்தமான பொக்கிஷங்கள் திருமிகு இறையன்பு அவர்களது நூல்களும் உரைகளும். இந்த பொக்கிஷங்களை உன் வாங்குபவர்களே பொக்கிஷம் ஆகிவிடுவார்கள் இவ்வுலகிற்கு, அத்தகைய உயர்ந்த, பரந்த, ஆழமான, உலகளாவிய விஷயங்களும் வாழ்க்கையை வழி நடத்தும், மேம்படுத்தும், பண்படுத்தும் சக்தியும் கொண்ட அறிவார்ந்த சொற்களையும் நாகரீக நடையையும் நற்பாதையை நோக்கிய, மனமாற்றத்தைக் கொடுக்கும் வல்லமையையும், நம் மனதிலும் நம்மைச் சுற்றிலும் சலன வட்டத்தை ஏற்படுத்தும் ஆற்றலையும் கொண்டது முனைவர் இறையன்பு அவர்களின் படைப்புக்கள்.

கவிஞர் இரவி அவர்கள், மூளைக்குள் சுற்றுலா நூலின் மதிப்புரையில் "மூளைக்குள் கடின சுற்றுலா நடத்தி மூளைக்குள் சுற்றுலா நூல் வடித்துள்ளார் முனைவர் இறையன்பு" என குறிப்பிட்டுள்ளது நூலின் உள்ளடக்கத்தை கண்டு வியந்து நூலாசிரியரின் உழைப்பை பாராட்டியுள்ளது, உழைப்பால் விளைந்த அற்புதத்தை அனைவரும் அனுபவிக்க விடுக்கும் சமூக அக்கறையுள்ள அழைப்பாகவே எடுத்துக்கொள்ளலாம்.  மனித மூளையின் மகத்துவம் உணர்த்தி மனிதனாக பிறந்ததற்கு ஒவ்வொரு மனிதனும் கர்வம் கொள்ளும் விதமாக நூலை வடித்துள்ளார் என்றும், படித்து விட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது, என்சைக்ளோபீடியா போல, கூகுள் போல, தகவல் களஞ்சியம் என்றும் கவிஞர் இரவி பாராட்டியதில் இருந்தே புத்தகத்தின் சாராம்சத்தை படித்து புரிந்து கொள்ளச் செய்கிறார்.


"இந்நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்க வேண்டும் என்பது என் ஆசை".  ஆசை நிறைவேறும் நம்பிக்கை உண்டு என்று திண்ணமாக உரைத்து முனைவர் இறையன்பு அவர்களின் எழுத்துக்களை நேசித்து வாசிக்கும் உள்ளங்களை உவகை கொள்ள செய்துள்ளார்.  எனது ஆசையும் அதுவே என இறையன்பு அவர்களின் படைப்புகளின் வாசகியாக பதிவு செய்வதில் உவகை கொள்கிறேன்.

"முடிவு எடுத்தல்" நூல் பற்றி குறிப்பிடும் போது தனது சொந்த நிகழ்வை குறிப்பிட்டு தானும் பெருமைப்பட்டு,  அனைத்து பெண்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் விளக்கம் கொடுத்திருப்பது சிறப்பு. 

கவிஞர் இரவி அவர்கள் "சுயமரியாதை" நூலின் பதச்சோற்றை  பரிமாறி இருப்பது சுவையோ சுவை.  "உண்மையான சுயமரியாதை உள்ளவன் எந்த இடத்திலும் யார் முன்பும் எதற்காகவும் அசிங்கப்பட தயாராக இருக்க மாட்டான் அவனே குனிய நினைத்தாலும் அது அவனால் முடியாது. அவனுடைய பண்புகள் அவனை தூக்கிப்பிடிக்கும்". 

"முதன்மை செயலர் முதுமுனைவர் வெ இறையன்பு இ.ஆ.ப. அவர்களுக்கு சுயமரியாதை பற்றி நூல் எழுதிட முழு தகுதியும் உண்டு. காரணம் அவர் சுயமரியாதை மிக்க மனிதர்.  எதற்காகவும் நேர்மையை, ஒழுக்கத்தை, பண்பை விட்டுக்கொடுக்காமல் மதிப்பாக வாழ்ந்துவரும் உயர்ந்த மனிதர்.  இன்றைய இளைஞர்கள் பலரால் நேசிக்கப்பட கூடியவர். நிலவொளிப் பள்ளிகள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்.  மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் மாமனிதர். பேசியபடியும் எழுதிய படியும் வாழ்ந்துவரும் நல்லவர். பேச்சுக்கும், எழுத்துக்கும், செயலுக்கும் வேற்றுமை இல்லாத சிறந்த மனிதர்" என்கிற சிறு குறிப்பு மூலம் மிகவும் உண்மையான, உன்னதமான, உயர்வான, மேன்மையான விஷயத்தை கவிஞர் இரவி அவர்கள் பகிர்ந்துள்ளார் தம் மதிப்புரையில்.  மிக மிகச் சிறப்பு. 

"சிந்தனைகளை விதைத்து நூலினைப் படிக்கும் வாசகர்கள் உள்ளத்தில் நல்ல எண்ணத்தை நடவு செய்து உள்ளார் நூல் ஆசிரியர்" என்ற மதிப்புரையின் மூலம் கவிஞர் இரவி நம் மனதில் நடவு செய்கிறார் முனைவர் இறையன்பு அவர்களின் கருத்துக்களை. முனைவர் இறையன்பு அவர்களின் "உலகை உலுக்கிய வாசகங்கள்" நூலிலுள்ள 102 கட்டுரைகளின் அம்சங்களை கவிஞர் திரு ரவி அவர்களின் உற்சாகமூட்டும் மதிப்புரையிலேயே அறிந்து கொள்ளலாம், 
 
 மேலும் அந்த நூலை உடனே வாங்கிப் படிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறார் ஒவ்வொரு கட்டுரைக்குமான தலைப்புகளைப் பற்றியும், செய்திகளைப் பற்றியும் குறிப்பிட்டு.
கவிஞர் இரவி அவர்களின் "இலக்கியத்தில் மேலாண்மை மதிப்புரையை" படித்தால் முனைவர் இறையன்பு அவர்களிடம் அமைந்துள்ள ஒட்டுமொத்த இலக்கியச் சிறப்பை தரிசித்து விடலாம்.  

தன்னுடைய மதிப்புரையில் அறிவார்ந்த அறிஞர் பெருமக்களின் மதிப்புரையையும் சேர்த்து தொடுத்து தேன்தமிழ் மாலையாகச் சூட்டியுள்ளார் திருமிகு இறையன்பு அவர்களுக்கு.  "மாஸ்டர் பீஸ்" என்று புகழாரம் சூட்டி, நூலகங்கள் அனைத்திலும் இடம்பெற வேண்டிய நூல் என வலியுறுத்தி "இந்த ஒரு நூல் படித்தால் நூறு நூல் படித்த மாதிரி" என்று மனதில் நிற்கும் வசனம் பேசி,  இப்படி ஒரு நூலை திரு. இறையன்பு அவர்கள் நினைத்தாலும் இன்னொரு முறை எழுத முடியாது என்று முடித்திருக்கிறார் தன் மதிப்புரையை.  மிகச் சிறப்பு.

"சிற்பி சிலை வடிக்கும் நுட்பத்துடன் கவிதை வடித்துள்ளார் கவிஞர்" என்று குறிப்பிட்டு முனைவர் இறையன்பு அவர்களின் கவித்துவத்தை பாராட்டியுள்ளார் "வைகை மீன்கள்" கவிதை நூலுக்கான மதிப்புரையில். இறையன்பு அவர்களின் பன்முக ஆற்றலை இந்த நூலில் காணலாம். கவித்துவமும், இலக்கியமும், இயற்கையும், மேலாண்மையும், குணநலனும், அன்பும், காதலும், மனிதமும், மாண்பும், மகிழ்வும் என முனைவர் இறையன்பு அவர்கள் எடுத்துரைத்த அழகு மகத்துவமானது.

முனைவர் இறையன்பு அவர்களின் அவ்வுலகம் நூலின் மதிப்புரையில், நூலின் சாராம்சம் மற்றும் எழுத்தாளரின் ஆளுமைத்திறன் மட்டுமல்லாமல் நூலின்/எழுத்தாளரின் வெற்றியையும் சேர்த்து தொடுத்துள்ளார் கவிஞர் இரவி.  மேலும் இந்த புத்தகத்தின் தொகையை காஞ்சிபுரம் நிலவொளி பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கிய திரு.இறையன்பு அவர்களின் உத்தமமான, உயர்வான செயல் பிரமிக்க வைத்தது. அதுவும் மேடையிலேயே அறிவித்து கொடுத்தது பற்றிய செய்தியை கவிஞர் ரவி அவர்கள் மிக மேன்மையாக பகிர்ந்து இருந்தது சிறப்பும் போற்றுதலுக்குரியது.  "எழுதுகிற படியும், பேசுகிறபடியும் முனைவர் இறையன்பு வாழ்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நிகழ்வு" என்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் குறிப்பிட்டிருப்பது உண்மை. மிகச் சிறப்பு.

உண்மையிலேயே அவ்வுலகம் புத்தகத்தைப் படித்து, உள்வாங்கி, இதில் எனது மனநிலையிலும் எனது செயல்பாடுகளிலும் என்னை அறியாமலே மாற்றம் வந்தது என்பதை நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன். இறையன்பு அவர்களின் எழுத்துகளுக்கு சக்தி அதிகம் என்பதை அறிந்து கொண்டேன்.

கவிஞர் ரவி அவர்கள், நினைவுகள் புத்தக மதிப்புரையில் தனது சொந்த நிகழ்வுகளில் மகாகவி பாரதி பணிபுரிந்த பள்ளியில் பயின்றதாக தெரிவித்ததும் அதே பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதும் மிக சிறப்பு. கவிஞர் ரவி குறிப்பிட்டதுபோல இறையன்பு அவர்களின் "நினைவுகள்" நூல் வாசிப்பவர்களின் நினைவலைகளை தூண்டி நெகிழ்ச்சியுறச் செய்கிறது.

"கேள்வியும் நானே.. பதிலும் நானே.." நூலில் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் அறிவார்ந்து சிந்தித்து அவரே கேள்விகள் கேட்டு பதில்கள் கூறி உள்ளார், பதில்களில் எள்ளல் சுவை உள்ளது அதே நேரத்தில் பல புதிய தகவல்களும் உள்ளன, அறக் கருத்துக்கள் உள்ளன என்று கணித்து குறிப்பிட்டுள்ளார் இரவி அவர்கள்.  நூலாசிரியர் இறையன்பு தனக்குள்ளேயே ஏன் எதற்கு எப்படி எதனால் என கேள்விகள் கேட்டு பதில்கள் தந்துள்ள அறிவுப்பெட்டகம் இந்த நூல் என தனது பாராட்டுக்களை அனைவர் சார்பிலும் தெரிவித்துள்ளார் கவிஞர் இரவி.

"இல்லறம் இனிக்க" நூலில் உள்ள முக்கியமான சாரத்தை இரவி அவர்கள் தனது மதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.  கசக்கினாலும் மணப்பேன் என்று சொல்வதற்கு மலரும், கடித்தாலும் இனிப்பேன் என்பதற்கு கற்கண்டும், கரைந்தாலும் நறுமணம் தருவேன் என்பதற்கு சந்தனமும் திருமணத்திற்கு சாட்சியாக்கப்படுவது இருவருடைய சங்கல்பத்தை உணர்த்தவே என்று.. அருமை.
காகிதத்தைக் கண்டுபிடித்தது ஒரு அரவாணி என்பதை இறையன்பு அவர்களின் "காகிதம்" நூல் மூலமாக அறியாத பல தகவல்களை அறிந்து கொண்டதாக கவிஞர் இரவி மெச்சி பாராட்டி உள்ளது மிகவும் சரி. கையடக்க புத்தகத்தில் கடல் அளவு தகவல்கள்.
வன நாயகம், சின்னச் சின்ன வெளிச்சங்கள், சாகாவரம், பணிப்பண்பாடு, உள்ளொளிப் பயணம் என இறையன்பு அவர்களின் அற்புதப் படைப்புகளை ஆழமாக உள்வாங்கி, நேசித்து செதுக்கியுள்ளார் இந்த இறையன்பு கருவூலம் நூலை.  மேலும் கவிஞர் இரவி அவர்கள் "என்னை செதுக்கிய நூலாக உள்ளொளிப் பயணம் நூலை பார்க்கிறேன், நானே பெரியவன் என்ற அகந்தையை அகற்றுகின்றது, பிறருக்குப் பயன்படும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வசப்படுத்துகின்றது, படித்துவிட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது" என தெளிவுபடுத்தியுள்ளார்.

முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் உரைகளுக்கும் அற்புதமான மதிப்புரையை வழங்கி வாசிப்பவர்களையும் இறையன்பு அவர்களின் உரையைக் கேட்க உற்சாகமூட்டுகிறார் கவிஞர் இரவி அவர்கள்.  மேலும் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்கள் தொடுத்த இறையன்பு களஞ்சியம் என்னும் நூலுக்கும், திருநெல்வேலி வானொலி நிலைய இயக்குனர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் தொடுத்த "இறையன்பு சிந்தனை வானம்" ஆகிய நூலுக்கும் மிக ஆழமான ஒரு மதிப்புரை வழங்கி திருமிகு. இறையன்பு அவர்களின் படைப்புகளை இன்றைய இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி செம்மைப்படுத்துகிறார் கவிஞர் இரவி அவர்கள்.
'
"முதுமுனைவர் இறையன்புவின் ஆளுமைத்திறன்" எனும் தலைப்பில் இறையன்பு அவர்களின் பன்முக திறன்களை குறிப்பிட்டு அவர் பணிபுரிந்த துறைகளில் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டார், அதனால் அத்துறைகளின் சீரிய வளர்ச்சி எவ்வாறு மேலோங்கியது என்ற விவரங்களை விளக்கி, வாசிப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறார் கவிஞர் இரவி அவர்கள்.  இந்நூலில் திருமிகு இறையன்பு அவர்களுடன் கவிஞர் ரவி அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்க்கும் போதும், இரவி அவர்களின் எழுத்துக்களை சுவாசிக்கும் போதும் இறையன்பு அவர்களின் மேல் கவிஞர் இரவி கொண்டுள்ள பற்றும் அன்பும் அவரது கருத்துக்களின்பால், படைப்புகளின்பால், கொண்டுள்ள ஈரப்பும், இறையன்பு அவர்களின் கருத்துக்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் பாங்கும் வெளிப்படுகிறது.  மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு.

கருத்துகள்