சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.









சத்சங்கம்!
நூல் ஆசிரியர்  :    
முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.

நூல் விமர்சனம் :    கவிஞர் இரா. இரவி.

******


நூல் வெளியீடு  :    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
                    41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,                     அம்பத்தூர், சென்னை-98.
பக்கங்கள்  :         , விலை : ரூ. 150

     ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு நண்பர் முனைவர் ஞா. சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் கிருஷ்ண  மூர்த்தி ஆகியோருடன் நானும்  சென்று இருந்தேன். காலையில் நூல்கள் வெளியீட்டு விழா, மாலையில் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் ‘எது ஆன்மீகம்?’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.  மாநாடு போல கூட்டம் கூடி இருந்தது. மிக நீண்ட உரை ஒருவர் கூட எழுந்து செல்லவில்லை. அற்புதமா உரையாற்றினார். கடவுள் நம்பிக்கை இல்லாத நானும் மிகவும் ரசித்துக் கேட்டு மகிழ்ந்தேன். கேட்டபோது இந்த உரை நூலாக வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நூலாக வந்து விட்டது.

     ஆன்மிகம் என்றால் என்ன? என்பதற்கு விளக்கம் கூறும் விதமாக வந்துள்ளது. ஆன்மிகம் என்ற பெயரில் வேடமிடும் வேடத்தை களையும் விதமாக நூல் எழுதி உள்ளார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மிக நேர்த்தியாக அச்சிட்டு வெளியிட்டு உள்ளனர். 25 கட்டுரைகள் உள்ளன.

    பேசிய உரையை அப்படியே நூலாக்காமல் கேள்வி-பதில் போல வித்தியாசமான வடிவத்தில் பதிவு செய்துள்ளார்கள். படிப்பதற்கு எளிதாகவும் சுவையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. இந்த நூலை ஆத்திகர்கள் நாத்திகர்கள் இருவருமே படிக்கலாம். உண்மையான ஆன்மிகம் என்பது மனிதநேயம் என்பதை வலியுறுத்தும் விதமாக வடிவமைத்து உள்ளார்கள்.

     மாணவர்களால் இளைஞர்களால் பெரிதும் நேசிக்கப்படும் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் மாமனிதர் அப்துல்கலாம் அவர்களைப் போலவே கடவுள் நம்பிக்கை உள்ளவர். ஆனால் மூட நம்பிக்கைகளை முற்றாக விரும்பாதவர்.

     கே.எஸ். சுப்பிரமணியன் அவர்களின் அணிந்துரையில் சிறு துளி." குறிப்பாகக் கட்டமைக்கப்பட்ட குறிக்கோள்கள் எதுவுமின்றி நம்மை மேம்படுத்தும் முயற்சியில் இந்நூல் வெற்றி காண்கிறது. ஆம் வாசகரை மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்டெடுத்து பகுத்தறிவு சிந்தனை விதைத்து மனிதநேயம் பற்றிய பக்குவத்தை விதைத்து மேம்படுத்தும் விதமாக எழுதப்பட்ட நூல்."

     உலகத்தின் நியதிகள் நாத்திகத்தில் பாதிக்கப்படுமே?

     “நியதிகளை காற்றில் பறக்க விடுவதற்காக கடவுளைக் கைக்குள் போட்டுக் கொள்ள முயற்சி செய்யும் ஆத்திகர்களை நானறிவேன். தூய்மையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத நாத்திகர்களை நானறிவேன். கோபத்தில் கொந்தளிக்கும் சந்நியாசிகளைப் பார்த்திருக்கிறேன். அனைவரிடமும் அன்பு செலுத்தும் கடவுள் மறுப்பாளர்களைக் கண்டிருக்கிறேன்.  மனநிலையை எல்லா நிகழ்வுகளிலும் செம்மைப்படுத்துவதற்கு மக்கள் முயற்சி செய்வதில்லை. இவர்களுக்கு ஆன்மிகம் தப்பித்தலே தவிர விடுதலை அல்ல

     இந்த கேள்வி பதில் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் இந்த நூலை ஆத்திகர் நாத்திகர் இருவருமே படிக்க வேண்டும் என்கிறேன். நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ள உதவிடும் நூல். உணமையான ஆன்மிகம் பற்றி மிக விளக்கமாக எழுதி உள்ளார். இதனை ஆத்திகர்கள் கடைப்பிடித்து நடந்தால் நாட்டில் மதக்கலவரம், சாதிக்கலவரம் இருக்காது, வன்முறை ஒழியும், அமைதி நிலவும்.

     நல்ல நாத்திகர் யார்?

     மற்றவர்களைப் புண்படுத்தாமல் தன் தரப்பு நியாயங்களை யாரும் வருந்தாதவாறு உரைப்பவர் நல்ல நாத்திகர். அவர் வாழும் சமூகத்தின் மரபுகளை மண்ணுக்கடியில் போட்டு மிதிக்கவும் அவர் விரும்ப மாட்டார். சமூகத்தில் இருந்து கொண்டே சமூக மாற்றத்தை முன்மொழிவதே நல்ல வழி. ஆனால் அதற்கு நிறைய தெளிவு வேண்டும்.

     நல்ல ஆத்திகர் யார்?

     கடவுள் மறுப்பாளர்களுக்கும் அவர்கள் கருத்தைச் கொல்ல உரிமையுண்டு என்று நினைப்பவர்கள் மனிதர்கள். அனைவரும் சமம் என்று கருதுபவர்கள். இன்னும் சொல்லப் போனால் எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல நினைப்பவர்கள்.

     நூலிலிருந்து பதச்சோறாக சில எழுதி உள்ளேன். நாத்திகர் ஆத்திகர் பற்றி விளக்கம் மிக நன்று. இந்த பக்குவம் எல்லோருக்கும் வருவதில்லை.ஆத்திகர்கள் நாத்திகர்களை எதிரிகளாகவும், நாத்திகர்கள், ஆத்திகர்களை எதிரிகளாகவும் கருத வேண்டிய அவசியமில்லை. அவரவர் உரிமை பற்றிய புரிதல் வேண்டும்ம். யார் மீதும் எதிரி மீதும் வெறுப்பை வெளிப்படுத்தாமல் சக மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்ற மனப்பக்குவத்தை விதைத்திடும் நூல்.

     “உணமையான ஆன்மிகம் தன்முனைப்பைத் தகர்த்தெறிவதில் தொடங்குகிறது.

     இப்படி பல பொன்மொழிகள் நூலில் உள்ளன். அன்பும் கருணையும் தவழும் இடமாக இல்லம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

     அத்திவரதர் பற்றி முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் கருத்து எதுவும் கூறவில்லை. அதற்கு முன்பே வெளியான நூல் இது.

     கடவுளின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கைகளைச் சாடி உள்ளார்.  கோவில் அருகே நடக்கும் வணிகத்தையும் குறிப்பிட்டுள்ளார். "மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்." என்ற சித்தர்களின் கருத்தை வழிமொழிந்து எழுதியுள்ள நூல் இது.

     குரு சீடன் விவாதம் போலவே கேள்வி-பதில் முறையில் எழுதி, அறிவு விளக்கை ஏற்றி வைத்து ‘ஆன்மிகம் என்றால் என்ன? ஆன்மிகம் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை நம்பாதீர். எல்லா உயிருக்கும் கருணை காட்டுவது மனித நேயம் பேணுவது, நல்லது நினைத்தல், நல்லது செய்தல், நல்லவராக வாழ்தல் – இப்படி நம்மை நாமே காதலித்து விரும்பி மனசாட்சிக்கு உண்மையாக, நேர்மையாக வாழும் வாழ்க்கையே ஆன்மிகம் என்கிறார். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள் இருவரும் படித்துத் தெளிவு பெற உதவிடும் நல்ல நூல். ‘சத்சங்கம் ஆத்திகர், நாத்திகர் சங்கமிக்க உதவும். 
.  

.

கருத்துகள்