இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை :கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் இறையன்பு கருவூலம் !

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் மதிப்புரை :கலைமாமணி 
ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன்   

“கவிதை உறவு - மனிதநேய இலக்கியத் திங்களிதழ்
420
-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600 040.
------------------------------------------------------------------

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  பக்கங்கள் : 152, விலை : ரூ.110.
*******
      வியத்தகு விந்தை மனிதராக  எழுத்திலும், பேச்சிலும் ஏற்றுக்கொண்ட பணியிலும், இனிய பண்புகளிலும் சிறந்தோங்கி, நம் சிந்தையெலாம் நிரம்பியிருக்கிற முனைவர் இறையன்பு அவர்களின் தேர்ந்த சில நூல்களின் மதிப்புரைகள் ஹைகூ திலகம், உழைப்புச் செல்வர் இரா. இரவி அவர்களின் கைவண்ணத்தில் நூலாகியுள்ளன.

      கவிஞர் ரவி தேர்ந்திருக்கிற நூல்கள் எல்லாம் முனைவர் இறையன்பு அவர்களின் அண்மைய நூல்கள் மட்டுமல்ல. அருமையான நூல்களும் கூட. மறைந்த பேராசிரியர் இரா.மோகன் தம் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல முதுமுனைவர் வெ. இறையன்பு மீது இரவி கொண்டிருக்கும் மதிப்பு, ‘மலையினும் மாணப் பெரிது, ‘மரியாதை கடலினும் ஆழமானது, ‘அன்பு வானிலும் உயர்ந்தது எழுத்து எழுதியவர் மீது இவை மூன்றையும் ஏற்படுத்துவதைப் போலவே, எழுதியவரும் எழுத்தின் மீது தம் பண்புகளால் ஏற்படுத்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பைத் தம் எளிமையாலும், எழுத்தின் வலிமையாலும் ஏற்படுத்துகிறவர் முதுமுனைவர் இறையன்பு அவர்கள். 

நமக்காக அவர் படிக்கிறார், படைக்கிறார், அவரது நூல்களைப் படிக்கிறபோது நூலகமொன்றில் நுழைந்து நல்ல் நூல்கள் பலவற்றைப் படித்த பயன் பெறுவோம். அதையும் தாண்டி அவரது அறிவு, ஆய்வு, அனுபவப் பிழிகளையும் சுவைப்போம். இறையன்பு அவர்களின் நூல்கள் நல்லவற்றைத் தரும். நல்ல வண்ணம் வாழும் நம்பிக்கையையும் தரும் என்பதாலேயே இன்றைய இளைஞர்களுக்கு கலாம் அவர்களுக்கு அடுத்த இடத்தின் இறையன்பு மதிப்பிற்குரியவர் ஆகிறார் என்று இரவி கூறுவது ஏற்கத்தக்கதாகிறது.

      “இறையன்பு அவர்களே நினைத்தாலும் இனி இதுபோன்ற நூலை எழுத முடியாது என்று இரவி குறிப்பிடுவது போல, “மூளைக்குள் சுற்றுலா நூல் இறையன்பு அவர்களின் பிரமாண்டமான படைப்பு. படைப்பு மட்டுமல்ல, பேருழைப்பு. இந்நூலை அவர் எழுத ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்பது அவருடைய ஈடுபாடு, உழைப்பு, திறன் ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.

 “கோவில்கள் தேவையில்லை, சிக்கலான தத்துவமும் தேவையில்லை நம் மூளை, இதயம் ஆகியவையே கோயில்கள். கருணையே தத்துவம். இதுவே என் எளிய மதம் என்கிற தலாய்லாமாவின் கோட்பாட்டின் நிரூபணமாக இந்நூல் நிலைக்கும். இந்நூலுக்கு மட்டுமல்ல ; இன்னும் சில நூல்களையும் குறிப்பிடும் இரவி அவர்கள், இறையன்பு அவர்களுக்க்கு சாகித்ய அகடெமி விருது பெறும் தகுதியுண்டு என்பதோடு, தன்னுடைய விழைவையும் வெளிப்படுத்துவது நூல்களின் மீதும், நூலாசிரியர் மீதும் அவருக்க்குள்ள் ஈடுபாட்டையும், அபரிமிதமான மதிப்பையும் காட்டுகிறது.

      இறையன்பு அவர்களின் சில பக்க நூல்கள் கூட அளவில் சிறியன. ஆனால் சொல்கிற செய்திகள் பெரிது. ‘முடிவு எடுத்தல் எனும் நூல் அத்தகையது. ‘செம்மொழிச் சிறப்புப் பூங்கா என்ற முடிவு இரண்டே மணித்துளிகளில் எடுக்கப்பட்ட முடிவென்று வியப்பூட்டுகிறார் அவர். சுயமரியாதை என்பது நம்மை நாமே முதலில் மதிப்பது. “உண்மையான சுயமரியாதை உள்ளவன் எந்த இடத்திலும் யார் முன்பும் அசிங்கப்படத் தயாராக இருக்க மாட்டான். அவனே குனிய நினைத்தாலும் அவனால் முடியாது. அவனுடைய பண்புகள் அவனை தூக்கிப் பிடிக்கும் என்கிற இறையன்பு அவர்களே, இப்பண்பினுக்கும் இலக்கணம். உலகை உலுக்கிய வாசகங்கள், சாகாவரம், பணிப்பண்பாடு, வன நாயகம், உள்ளொளிப் பயணம், காகிதம், இல்லறம் இனிக்க, கேள்வியும் நானே, பதிலும் நானே, நினைவுகள், அவ்வுலகம் ஆகிய நூல்களின் மதிப்பீடும் நூலில் இடம்பெற்றுள்ளது. 

அவரது கவிதைகள் கூட மதிப்புரைக்கப்பட்டுள்ளன. இறையன்பு நூல்களின் உச்சம் (MASTER PIECE) என்றால், “இலக்கியத்தில் மேலாண்மை எனும் நூல் எனலாம். எத்தனை வகை மேலாண்மைகள் உள்ளனவோ, அத்தனை மேலாண்மைக்குமான பயனுள்ள சிந்தனைகள் செறிந்த நூலிது. இறையன்பௌ அவர்களின் சிறந்த உரைகளையும் இரவி அவர்கள் தொகுத்துத் தந்துள்ளார். இறையன்பு அவர்களின் நூல்களுக்காக இரவி எடுத்துள்ள பாராட்டு விழாவாக இந்நூல் அமைந்துள்ளது. அவசியம் நீங்கள் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும்.


கருத்துகள்