கவிஞர் இரா.இரவியின் கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (முனைவர் அ.கோவிந்தராஜூ)







கவிஞர் இரா.இரவியின் கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள்
(முனைவர் அ.கோவிந்தராஜூ)

கவிஞர் இரா.இரவி அவர்கள் இன்றைய மரபுசாராக் கவிதை உலகில், குறிப்பாக ஹைக்கூ கவிதை உலகில் இன்றியமையாத ஒருவர் ஆவார். “உணர்வு இலக்கியம் படைக்கும் உயரிய மனிதர்” என இவரைப் பாராட்டுவார் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள்.
இவரது கவிதைகள் உணர்வு இலக்கியம் என உணரப்படுவதற்கு இவர்தம் கவிதைகளில் காணப்படும் வெளியீட்டு உத்தியும் ஒரு காரணம் என நான் கருதுகிறேன். அது குறித்து ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

பாடுபொருளை வெளியிடும் உத்திகள் பலவாக உள்ளன. உவமை,
உருவகம்,படிமம், தொன்மம், குறியீடு, முரண், இருண்மை என பட்டியல் நீளும்.இவை குறித்து ஆங்கில இலக்கிய ஆர்வலர்கள் அண்மைக் காலத்தில்தான் பேசத்தொடங்கியிருக்கிறார்கள் ஆனால் தமிழில் இவை குறித்துத் தொல்காப்பியர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியுள்ளார். அவர் குறிப்பிடும் இறைச்சி, பிசி, உள்ளுறை உவமம்
என்பன சங்கப் பாக்களில் விரவிக் கிடப்பதை ஆழ்ந்து படிப்போர் அறிவர்.
இத்தகு வெளியீட்டு உத்திகள் இரவியின் பாக்களில் பயின்று வரும் அழகை இனிக் காண்போம்.
படிமம் என்னும் சொல்லுக்குக் காட்சி அல்லது ஓவியம் என்று பொருள். வண்ணத் தூரிகையால்வரைவது ஓவியம். சொல் தூரிகையால் வரைவது சொல்லோவியம்..ஒரு சில சொற்களில் ஒரு காட்சியை படிப்போரின் மனக்கண்ணில் தோன்றச் செய்து, அதன் மூலம் ஒரு கருத்தையும் புலப்படச் செய்தால் அது படிமம் எனப்படும்.

பெண்பார்க்க வந்தார்கள்
அந்த வீட்டு நாய் குறைத்தது
திருடர்கள் என்று நினைத்து.

இது கவிஞர் இரவியின் ஒரு ஹைக்கூ கவிதை. ஓர் அழகிய காட்சி நம் கண்முன்னே தோன்றுகிறது. மாப்பிள்ளையாகப் போகும் ஓர் இளைஞர் முன்னே வர, பின்னால் உறவினர் குழுவாய் வருகிறார்கள். அவ் வீட்டு நாய் குரைத்தபடி அவர்களை வழிமறிக்கிறது. பெண்வீட்டார் நாயை அமைதிப்படுத்த, பெண்பார்க்கும் படலம் தொடங்குகிறது. இச் சொல்லோவியத்தில் பொதிந்துள்ள கருத்து என்ன? இப்போது கவிதையின் இறுதி வரியைப் பாருங்கள்.

 வரதட்சணை கேட்பவனும் ஒருவகையில் திருடன்தான் என்னும் கருத்துப் புலப்படுகிறது அல்லவா? இதுதான் படிமம் என்பது.

நிலம் விற்றுப்
பெற்றப் பணத்தில்
அப்பாவின் முகம்.!

இக் கவிதையும் படிம உத்திக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஏழைத் தந்தை தன்னிடம் இருந்த சிறு நிலத்தை விற்றுக் கல்லூரியில் படிக்கும்.மகனுக்குப் பணத்தாளில் இருக்கும் காந்தியின் முகம் தெரியவில்லை; மாறாக அப்பாவின் அன்பு முகம், தியாக முகம் தெரிகிறது!

குறியீடு உத்தி என்பது வேறொன்றுமில்லை; நாம் படித்த பிறிது மொழிதல் அணிதான். சொல்ல வந்ததை அப்படியே சொல்லாமல், வேறு ஒன்றின் மூலம் சொல்வது குறியீடு உத்தி எனப்படும்.

அருகே முட்கள்
ஆனாலும் மகிழ்வாக
ரோசா !

இது ரோசா செடி குறித்த வருணனை என்று கடந்து போக முடியுமா? இங்கே ரோசா என்பது மனித வாழ்வின் குறியீடு. முட்கள் என்பன வாழ்வில் வரும் துன்பங்கள். துன்பத்திலும் துவளாமல் மகிழ்ச்சியாக இருக்க முயல வேண்டும் என்பது கவிஞர் தரும் செய்தியாகும்.

அடுத்துத் தொன்மம் என்னும் வெளிப்பாட்டு உத்தியை அறிந்து கொள்வோம். தொன்மம் என்றால் பழமை என்று பொருள். பழைய புராணச் செய்திகளைக் கவிஞர்கள் தம் கவிதைகளில் மணியிடை இழையாக வைப்பார்கள்.

திருவள்ளுவர் கூட வாமனன் மூன்றடி மண்கேட்ட கதையை
தாம் இயற்றிய குறளில் சுட்டுவார்.(குறள் 610)

இறைவனே வந்து பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடற் புராணச் செய்தியைத் தன் கவிதையில் பொருத்தமாகக் கையாள்கிறார் கவிஞர் இரவி.

பிட்டுக்கு மண்
சுமக்கும் சொக்கன் ஆகிய
குடும்பத்தைச் சுமக்கும் சுப்பன் !

சொக்கனுக்குச் சுமப்பது என்பது இன்பம். ஆனால் சுப்பனுக்குச் சுமப்பது என்பது துன்பம். குடும்பச் சுமையைச் சுமக்கும் தந்தையர் மேற்காண் வரிகளை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.உருவகம் என்னும் வெளிப்பாட்டு உத்தி இரவியின் பாக்களில் மிகுதியாகக் காணப்படுகிறது.

பதச் சோறாக ஒன்று:

குப்புற விழுந்தும்
மீசையில் மண் ஒட்டவில்லை
மீசை இருந்தால்தானே?

இது அரசியல்வாதியைப் பற்றிய ஒரு நையாண்டி ஹைக்கூ.. சுயமரியாதையை மீசையாக உருவகப்படுத்துகிறார். மானங்கெட்ட அரசியல்வாதி என மறைமுகமாகச் சாடுகிறார்.முரண்படச் சொல்வது கவிஞர்களுக்கு வழக்கம்தான்.
“ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ?” என்று ஒரு திரைக்கவிஞன் பாடுவானே. இரவில் தாமரை பூக்குமா? என்வேதான்
இது முரண் சுவையைத் தருகிறது.

இரவியின் கவிக்காட்டுக்குள் நுழைவோம்.

பரவியது
பட்டிக்காட்டிலும்
பட்டணம் பொடி!

பட்டிக்காடும் பட்டணமும் முரண்பட்டவைதானே?

தம்பி உடையான்
படைக்கு அஞ்சினான்
எதிரணியில் தம்பி!

இது நாம் நடைமுறை அரசியலில் பார்க்கும் முரண் அல்லவா?

நீண்ட ஆயுளைத் தா
என வழிபட்டவன்
மாண்டான் சாலை விபத்தில்.!

விளக்கமே தேவையில்லை. இதுவும் அவ்வகையின் பாற்பட்டதே.
நிறைவாக, இருண்மை என்னும் உத்தியைப் பார்ப்போம். சில கவிதை வரிகளைப் படித்தால் நமக்குத் தலை சுற்றும். எழுதியவர் என்ன சொல்கிறார் என்பதே புரியாது. இரவியின் கவிதை

நூல்களில் இது அத்தி பூத்தாற்போல் அரிதாகக் காணப்படுகிறது.
எடுத்துக்காட்டாக ஒரு ஹைக்கூ கவிதை:

சிறிய ரொட்டியையும்
உயிர்காக்கும் அமுதாக்கியது
மழை !

இது குறித்து இரவியிடமே கேட்டேன். சென்னைப் பெருவெள்ளத்தில்
தவித்தவர்களைக் கேட்டுப் பாருங்கள் என்றார். பிறகுதான் புரிந்தது பொருள்.

பிறந்தது ஆணா பெண்ணா என்று தாய்க்குத் தெரியாது. ஆனால் மகப்பேறு பார்த்த மருத்துவருக்குத் தெரியும். அதுபோல் படைத்தவனுக்குத் தன் கவிதைகளில் காணப்படும் உத்திகள், நயங்கள் ஆகியன தெரியா. ஆழ்ந்து படிப்பவனுக்கே தெரியும்.சரிதானே ?

கருத்துகள்