தமிழ் விருந்து! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !






தமிழ் விருந்து!

நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா. இரவி !  

வெளியீடு :
 வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017. 
தொலைபேசி : 044 24342810,
24310769 மின்னஞ்சல் : 
vanathipathippakam@gmail.comபக்கம் : 240 விலை : ரூ. 200
******
தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் 150 வது நூல் இது. இந்நூலை இலண்டன் தமிழ்ச்சங்கத்தில் வெளியிடுவதாக திட்டமிட்டு இருந்தார். ஆசிரியர் தன்னுரையிலும் குறிப்பிட்டுள்ளார். அதற்குள் இரக்கமற்ற இயற்கை அய்யாவின் உயிரைப் பறித்துக் கொண்டது. ‘தமிழ் விருந்து பெயருக்கு ஏற்றபடி தமிழ் விருந்தாகவே உள்ளது.

கவிதை உறவு, புதுகைத் தென்றல், மனிதநேயம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் மாதாமாதம் கட்டுரை எழுதி வந்தார்கள். அய்யாவின் கட்டுரைகளை இதழ்களில் படித்திட்ட போதும் மொத்தமாக நூலாகப் படித்ததில் இன்பம். இந்நூலில் 26 கட்டுரைகள் உள்ளன. கவிதை அலைவரிசை கவிதை உறவில் வந்தவை 12 கட்டுரைகள் சங்கச் சித்திரங்கள் புதுகைத் தென்றலில் வந்தவை 7 கட்டுரைகள். மனிதநேயம் உள்ளிட்ட இதழ்களில் வந்தவை 7 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

கவியரசு கண்ணதாசனில் தொடங்கி கவிப்பேரரசு வைரமுத்துவில் முடித்து உள்ளார்கள். இடையில் சங்க இலக்கியத்தையும் இணைத்து உள்ளார்கள். வழக்கம் போல வானதி பதிப்பகம் இந்நூலை சிறப்பாக வடிவமைத்து அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். மரபு புதிது ஹைக்கூ என பல்சுவை விருந்தாக உள்ளது.

 தமிழன்னைக்கு தமிழ்த்தேனீ இரா.மோகன் அய்யா சூட்டியுள்ல 150வது மகுடம் இந்நூல். தேனீ போல வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி உழைத்து இலக்கியத் தேனை இலக்கிய நூல்களில் இருந்து எடுத்து, வாசகர்களுக்கு இலக்கியத் தேன் விருந்து வைத்துள்ளார். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்து, புகழில் எட்டாத உயரம் சென்ற கவியரசரின் பாடல் வரிகளில் உள்ள முத்துக்களைத் தொகுத்து முத்துமாலையாக வழங்கி உள்ளார்.

கலங்காதிரு மனமே!

     வாழ நினைத்தால் வாழலாம்!

     காலமகள் கண் திறப்பாள் சின்னையா!

     வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும்.

     மயக்கமா? கலக்கமா?

     எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இவ்வாறான பாடல் வரிகளின் மூலம் கண்ணதாசன் கீதோபதேசம் செய்கின்றார்.  காவியக்கவிஞர் வாலியின்  வாழ்க்கையில் மாற்றம் விளைவித்த பாடல். மயக்கமா? கலக்கமா? இப்படி புகழ்பெற்ற பாடல் வரிகளைத் திறனாய்வு செய்து வடித்திட்ட கட்டுரை மிகச் சிறப்பு.

     வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்
     விரல்கள் பத்தும் மூலதனம் – 

(இது எங்கள் கிழக்கு ப. 33)

இந்த இரண்டே வரிகளின் மூலம் கணியன் பூங்குன்றன் போல புகழ்பெற்றவர் கவிஞர் தாராபாரதி. அவரது வைர வரிகளை மேற்கோள் காட்டி வடித்துள்ள கட்டுரை மிக நன்று.

     நிமிர்வாய் தமிழா, எழுவாய் – அட
     நீ தான் உலகின் எழுவாய்!

இப்படி பல வரிகளின் மூலம் தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் தாராபாரதி. அவருக்கு இக்கட்டுரையின் மூலம் மணிமகுடம் சூட்டி உள்ளார் நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன். மறைந்த கவிஞர்கள் மட்டுமின்றி வாழும் கவிஞர்கள் கவிக்கோ ஞானச் செல்வன், கவிதைச் சித்தர் இலந்தை சு. இராமசாமி, கடவூர் மணிமாறன், மரபின் மைந்தன் தங்க செந்தில்குமார், சுடர் முருகையா உள்ளிட்ட பலருக்கும் அற்புதமான திறனாய்வு வழங்கி அவர்களீன் கவியாற்றலை உலகிற்கு பறைசாற்றி வடித்துள்ள கட்டுரைகள் சிறப்பு.

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் கவிதை ஒன்று.

படைப்பில் உச்சியில்
     மானுட மகுடம் அதில்
     வியர்வைத் துளிகள்
     கோகினூர் வைரங்கள்!  
  
      (கவிக்கோ கவிதைகள் ப.80)

நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்கள் எந்தஒரு கட்டுரை எழுதுவதென்றாலும் மேம்போக்காக எழுத மாட்டார்கள். கட்டுரை எழுதிட தேவையான நூல்களைத் திரட்டி அலசி ஆராய்ந்து, தோய்ந்து, ஆழ்ந்து, கட்டுரை வடிப்பார்கள். நூலின் பெயர், எழுதியவர் பெயர், பக்க எண் என துல்லியமாக குறிப்பிடுவார்.

அய்யாவை பார்க்க இல்லம் செல்லும் போது பார்த்தால், அய்யாவைச் சுற்றி நூல்களே இருக்கும். நூல்களுக்கிடையே தான் அய்யா இருப்பார். வாசிப்பை சுவாசிப்பைப் போல கொண்டு தினமும் வாசிப்பார். சங்க இலக்கியம் மட்டுமல்ல, இன்றைய ஹைக்கூ கவிதைகளும் வார, மாத இதழ்களில் வரும் கவிதைகளையும் தொடர்ந்து சலிப்பின்றி மனம் விரும்பி வாசிப்பார்.

அய்யா அவர்களின் வாசிப்புத் திறன் தேடல், ஈடுபாடு சுறுசுறுப்பு, படைப்பாளியைப் பாராட்ட வேண்டும். இளையோரை வளர்த்து விட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமே அவரை 150 நூல்கள் வரை எழுதும் வண்ணம் உயர்த்தியது.

வாழ்க்கையில் சாதித்தவர் 150 நூல்கள் எழுதுவது சாதாரண விசயமல்ல மிகப்பெரிய ஆற்றல். அவருடைய மறைவு இலக்கிய உலகில் உண்மையிலேயே பேரிழப்பாகவே ஆகிவிட்டது. அவருடைய இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. மதுரையில் அய்யாவின் இடம் வெற்றிடமாகவே உள்ளது.என்பது முற்றிலும்  உண்மை.

கவியருவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் பாப்லோ நெருதாவன் கவிதைகள் ஆய்வுசெய்து வடித்த கட்டுரை நன்று. அவரது கவிதை ஒன்று.

எனக்குள் இருந்த குழந்தை
     எங்கே? 
இருக்கிறதா? 
போய்விட்டதா?

(பாப்லோ  நெருதா கவிதைகள் ப. 159)

உண்மை தான். பெரியவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் குழந்தைத்தனமும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும்.  அதனைக் கவிதையில் நன்கு வடித்துள்ளார். கவியருவு ஈரோடு தமிழன்பன் அவர்கள்.

தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவச் செய்ய வேண்டும் என்று சொன்ன மகாகவி பாரதியாரின் வைர வரிகளை தாரக மந்திரமாகக் கொண்டு எழுத்து, பேச்சு என இரண்டு வேறுபட்ட துறையில் தமிழோசையைப் பரவச் செய்தவர். உடலால் அவர் உலகை விட்டு மறைந்தாலும்,அவர் படைத்த  நூல்களில் தமிழ்த்தேனீ என்றும் வாழ்வார். அவரது புகழ் உடம்பிற்கு அழிவில்லை. இலண்டன் மாநகரில் கல்வித்துறைத் தலைவராக, துணை முதல்வராக உள்ள இனிய நண்பர் கவிஞர் புதுயகன் அணிந்துரை வழங்கி உள்ளார். இலண்டன் தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துரையும் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள்