எங்கள் கனவுகள்! கவிஞர் இரா. இரவி





எங்கள் கனவுகள்!

கவிஞர் இரா. இரவி.

******

தமிழ்வழிக் கல்வியைத் தமிழர்கள் யாவரும்
தமிழ்நாட்டில் மனம்விரும்பி கற்க வேண்டும்!



தமிழின் அருமை பெருமை தொன்மை அனைத்தையும்
தமிழர்கள் உணர்ந்து பெருமை சேர்க்க வேண்டும்!



உலகின் முதல்மொழி தமிழ்மொழி என்பதை
உலகம் அறிந்தது தமிழர்களும் அறிந்திட வேண்டும்!



தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று
தமிழர்கள் நினைக்கும் நிலை மாற வேண்டும்!



தமிழ் படித்தால் எல்லாம் கிடைக்கும் என்பதை
தமிழர்கள் தெரிந்து சிறந்திட வேண்டும்!



கவலையற்ற வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை
கன்னித்தமிழ் படித்தால் கிட்டும் நம்ப வேண்டும்!



தமிழர்களின் பேச்சில் தமிங்கிலம் ஒழிந்து
தமிழ் தமிழாகவே எங்கும் ஒலித்திட வேண்டும்!



தமிழ் இலக்கியத்தின் தன்னம்பிக்கை கருத்துக்களை
தமிழக இளைஞர்கள் படித்து அறிந்திட வேண்டும்!



வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகையில்
வளமான தமிழ் இடம்பெற்றாக வேண்டும்!



எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வெற்றுச் சொல்லாக இன்றி
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றாக வேண்டும்!



தமிழ் இலக்கியங்களை பிறமொழியில் மொழிபெயர்த்து
தரணி முழுவதும் தமிழைப் பரப்பிட வேண்டும்!



பிறமொழி இலக்கியங்களை எல்லாம் நம் 
பைந்தமிழில் மொழிபெயர்த்து வழங்கிட வேண்டும்!



பொறியியல் மருத்துவம் என எல்லாக் கல்வியும்
பைந்தமிழில் பயின்றிட வாய்ப்பு வந்திட வேண்டும்!



ஆங்கில மோகம் விடுத்து தமிழர்கள் இனி
அனைவரும் தமிழ்மொழியைப் போற்றிட வேண்டும்!



தாய்மொழி தமிழ் அறியாது பிறமொழியை
தமிழகத்தில் பயிற்றுவித்தல் தடுத்திடல் வேண்டும்!



தேமதுரத் தமிழோசை தரணியெங்கும் பரவிட
தமிழர்கள் யாவரும் கரம் சேர்க்க வேண்டும்!

கருத்துகள்