நமக்குள் சில கேள்விகள்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.
நமக்குள் சில கேள்விகள்!
நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.
நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.
வெளியீடு : ‘தினத்தந்தி பதிப்பகம்’ 86, ஈ.வெ.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7. பேச : 044 25303336 / 2530 3000
பக்கங்கள் : 224, விலை : ரூ.160
******
நாடறிந்த நல்ல எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், நேர்மையாளர், அரசு கூடுதல் தலைமைச் செயலர், முதுமுனைவர் வெ. இறையன்பு. இ.ஆ.ப. அவர்கள், ராணி வார இதழில் எழுதி வந்த கேள்வி-பதில்கள், கேள்வியும் நானே, பதிலும் நானே நூலின் வெற்றியினைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக ‘நமக்குள் சில கேள்விகள்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
வாராவாரம் ராணி வார இதழில் படித்து இருந்தபோதும் மொத்தமாக நூலாகப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி. தினத்தந்தி பதிப்பகம் மிக நேர்த்தியாக பொருத்தமான வண்ணப்படங்களுடன் அச்சிட்டு உள்ளனர். வாசிக்க வாசிக்க நம்மை நாமே வளர்த்துக் கொள்ள, புதுப்பித்துக் கொள்ள, செதுக்கிக் கொள்ள உதவிடும் நூல்.
அறிவார்ந்த கேள்விகள், ஆளுமை மிக்க பதில்கள், அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவுத் தகவல்கள், வாசகர்கள் மனநிலை மேம்பட செம்மையடைய உதவிடும் நூல்.
நூலில் உள்ள எல்லா கேள்வி பதில்களும் பயனுள்ளவை, சில எள்ளல் சுவையுடனும், சில ஆய்வின் முடிவாகவும், வாழ்வியல் சிந்தனைகள் கூறும் விதமாகவும் உள்ளன. பதச்சோறாக சில கேள்வி பதில்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ.
தமிழைக் கற்றதில் இன்றைய தலைமுறையின் முயற்சி எவ்வாறு உள்ளது? ஆங்கிலத்தைத் தமிழில் மொழிபெயர்த்த தலைமுறை. இப்போது; வாரிசுகளுக்குத் தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கற்றுத் தருகிற நிலையில் நம் தாய்மொழியின் தலைஎழுத்து இருக்கிறது.
இன்றைய இளைய தலைமுறையினரில் பலர் எனக்கு டமில் சரியா வராது என்று பேசும் நிலையிலும், தமிழ் வாசிக்கவே தெரியாத நிலையிலும் இருப்பது வெட்கக்கேடு. இந்த அவல நிலை மாற வேண்டும் என்பதை கேள்வி பதில் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார்.
சிகிச்சை இல்லாத போதைப் பொருள் எது? புகழ்.
உண்மை தான். பலர் புகழ்போதையில் அலைவதை கண்முன் காண்கிறோம். மனதிற்குள் அவர்களை கேலி பேசுகின்றோம்.
நம்பிக்கையின் முக்கியத்துவம் குறித்து? சிறந்த மருந்து கூட நம்பிக்கை இல்லாமல் உண்டால் நஞ்சாக மாறக்கூடும்.
இந்த மருந்து உண்டால், நம் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை வேண்டும். வேண்டா வெறுப்பாக நம்பிக்கையின்றி சந்தேகத்துடன் உண்டால் நல்ல மருந்து கூட வேலை செய்யாது என்பது உண்மை.
நண்பர்களின் சிறப்பு குறித்து?
நல்ல நண்பர்கள் நான்கு பேர் இருந்தால் நரகத்துக்கும் செல்லலாம். அவர்கள் அதை சொர்க்கமாக மாற்றி விடுவார்கள். முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் மதுரைக்கு வரும்போது நண்பர்களுக்கு தகவல் தந்து விடுவார். அவர்களுடன் உரையாடும் போது பசி மறந்து பேசி மகிழ்ந்திடுவார். பின் வந்த நண்பர்களை பசியாற்றி வழியனுப்பி வைப்பார். அவருடன் இருக்கும் நேரத்தை நண்பர்களுக்கு சொர்க்கம் ஆக்கி விடுவார். சாதாரண பேச்சிலேயே பல தகவல்கள் அனுபவங்கள் பகிர்ந்திடுவார்.
மாணவர்களிடம் அதிகம் பேசுவது எதனால்? மாணவர்கள் ஊன்றிக் கேட்கிறார்கள். பெற்றோரைத் தவிர வேறு யாராவது அறிவுரை சொல்லாமல் அக்கறையோடு பேசினால் அவர்கள் அந்த அனுபவப் பகிர்வைக் கடைப்பிடிக்க முன் வருகிறார்கள். யாராவது வழிகாட்ட மாட்டார்களா? என்று தவிக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போது உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சிக்காகவே அவர்களிடம் தொடர்ந்து பேசுகிறேன். மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக இளையோர் மாணவ மாணவியர் பெரிதும் விரும்புவது முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களைத் தான்.
காரணம் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அவர்களை சந்தித்து உரையாடி தன்னம்பிக்கை விதைத்து வருகிறார். இவரால் ஊக்கமும் ஆக்கமும் பெற்றவர்கள் பலர். பெரிய பட்டாளமே இந்திய ஆட்சிப்பணி தேர்வில் வெல்வதற்கு உதவி உள்ளார், உதவி வருகிறார். இன்னும் உதவுவார். கல்லூரிக் காலங்கள் என்ற தலைப்பில் பொதிகையில் ஆற்றிய உரை யூடியூபில் உள்ளது. பல்லாயிரம் மாணவர்கள் பார்த்து ரசித்து கேட்டுப் பயன்பெற்று வருகின்றனர்.
பத்து புத்தகங்களை மட்டுமே ஒரு தீவுக்கு எடுத்துச்சென்று அங்கு ஓராண்டு இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தால் என்ன புத்தகங்களை எடுத்துச் செல்வீர்கள்?
திருக்குறள், லாவேர்ட்சு எழுதிய டாவோ டீச்சிங், சங்கு எழுதிய போர்க்கலை, ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், பிளேட்டோவின் குடியரசு, கலீல் ஜிப்ரானின் தீர்க்கதரிசி, மிக்கேல் நெமி எழுதிய மிர்தாதின் புத்தகம், ஹெர்மன் ஹெசி எழுதிய சித்தார்த்தா, பாரதியார் கவிதைகள், ஹெமிங்வே எழுதிய தலைவனும் கடலும் ஆகியவை அந்தத் தீவில் நம்பிக்கையோடு வாழவும், நான் ஜீவித்திருக்கவும் தேவையான புத்தகங்கள்.
மிகச்சிறந்த பத்து நூல்களை பட்டியலிட்டுள்ளார். முழுவதும் வாசிக்க முயற்சி செய்யாவிடினும் சிலவற்றையாவது ஆழ்ந்து ரசித்து வாசித்திட வேண்டும். புத்தக நேசரால் தான் புத்தகம் வடிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு நூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள்.
பொது வாழ்க்கை என்றால்? அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பதே அதற்குப் பொருள்.
காமராசர், கக்கன் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பகிரங்கப்படுத்தப்பட்டதால் தான் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறார்கள்.
மனிதனை எடை போட முக்கியமானது? நன்றியுணர்வு.
இயந்திரமயமான உலகில் மனிதர்களில் சிலர் இயந்திரமாகவே மாறி நன்றி மறந்து விடுகின்றனர். அவர்கள் திருந்திட உதவிடும் பதில். மொத்தத்தில் அறிவார்ந்த கேள்வி பதில் மூலம் நம்மை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்தி உள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக