தமுக்கடி! நூல் ஆசிரியர் : மகுவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !








தமுக்கடி!

நூல் ஆசிரியர் : மகுவி !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !



வெளியீடு : பாவைமதி வெளியீடு,
எண் : 55, வ.உ.சி. நகர், மார்கெட் தெரு, தண்டையார்பேட்டை,
சென்னை – 600 081. பக்கம் : 112


******

‘தமுக்கடி’ என்ற பெயர் வித்தியாசமாக உள்ளது. தமுக்கு போலவே கவனம் ஈர்க்கிறது. கிராமங்களில் சொல்ல வரும் செய்தியை அனைவரும் கவனிக்க வேண்டும் என்பதற்காக தமுக்கை அடித்து கவனத்தை ஈர்த்து பின் செய்தியை, தகவலைச் சொல்வார்கள். அதுபோல இந்த நூலில் நூலாசிரியர் கவிஞர் மகுவி, மனதில் பட்ட கருத்துக்களை கவிதைகளாக வடித்துள்ளார், பாராட்டுக்கள்.

கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன், கவிஞர் பழநிபாரதி, கவிஞர் அருண்பாரதி, டாக்டர் ம. வளர்மதி ஆகியோர் அணிந்துரை நல்கி உள்ளனர். பாவைமதி வெளியீடாக வெளிவந்துள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு, உள்அச்சு யாவும் அருமை. சில இடங்களில் எழுத்து பிழைகள் உள்ளன. அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடுங்கள்.

கிராமத்தின் அன்னை
விவசாயம்!
இப்பொழுது கிராமம் யாவும்
அன்னை இல்லாத
அனாதைப் பிள்ளையாகவே
வாழ்கின்றன!

இந்தியாவின் முதுகெலும்பு கிராமம் என்றார் காந்தியடிகள். நம் நாடு விவசாய நாடு. ஆனால் விவசாயி நிம்மதியாக இல்லை. மகிழ்ச்சியாக இல்லை, மனம் நொந்து தற்கொலை செய்து கொள்கிறான். இன்றைய கிராமத்தின் நிலையை கவிதை வரிகளின் மூலம் படம்பிடித்துக் காட்டி உள்ளார், பாராட்டுக்கள்.

முள்ளிவாய்க்கால்!

      வீரநடை போட்ட
 ஈழமண் வெறிச் என்றானது
       பூக்காட்டுக்குள் எத்தனை சாக்காடு
 நாடு நிரம்ப சுடுகாடு!

எட்டு நாடுகள் சேர்ந்து தமிழர்கள் கூட்டத்தை தமிழினத்தை ஈழத்தில் அழித்து மகிழ்ந்தன. மனித சமுதாயம் வெட்கப்பட வேண்டிய தமிழினப் படுகொலையை ஈழத்தில் நிகழ்த்தினர்.  புத்த பிட்சுக்களும் வேடிக்கை மட்டும் பார்த்தனர். தட்டிக்கேட்காதது வெட்கக்கேடு. ஈழப்படுகொலை பற்றிய கண்டனத்தை உரத்த சிந்தனையுடன் பதிவு செய்துள்ளார், பாராட்டுக்கள்.

நேயம்!

வெள்ளைக்காகிதத்தைக்
கவிதை உண்ணும்
போதிலும்
காகிதம் கவிதையை யே
விரும்புகிறது.

கவிஞன் கவிதை எழுதவே விரும்புவான். இவனது விருப்பமே காகிதத்தின் விருப்பம் என்று பொருள் கொண்டு காகிதத்தின் மீது கவிதைகளை எழுதித் தள்ளுகிறான். கவிஞனின் மன உணர்வை மிக இயல்பாக இயம்பி உள்ளார்.

      நிறைமதியம்!

      சாக்கடை போல – இங்கு
பல சாதிகள் உள்ளதடா தம்பி!
      அதில் கற்களைத் தூக்கி எறிந்திடாதே
கால்களை வைத்து
      நடந்திடாதே!

சாதி என்பது இடையில் வந்த சதி என்பதை உணருங்கள். சாதியை மறந்து, மதத்தை மறந்து, மனிதநேயம் பேணுங்கள். சாதி என்பது சாக்கடை என்பது முற்றிலும் உண்மை. அதில் கல் எறியாதே, கால் வைக்காதே என்று எச்சரிக்கை செய்துள்ளார், சிறப்பு.

நல்லகண்ணு!

அரசியல் நெருப்புக் காய்ச்சலை
தன் நெஞ்சுரத்தால் விரட்டிய
நெருப்பன்
தமிழ்க் கருப்பன்!

ஊழல்வாதிகள் மலிந்துவிட்ட இக்காலத்தில், எளிமையாகவும், நேர்மையாகவும், கொள்கையாகவும் வாழ்ந்து வரும் இனியவர், நல்லவர் நல்லக்கண்ணு அய்யா பற்றியும் கவிதை வடித்துள்ளார், பாராட்டுக்கள்.

செம்ம கெத்து!

ஏதும் சேர்த்து வைக்கவில்லை
என் அப்பன்
மிகுந்த மகிழ்ச்சி
எனக்கானதை
நான்
உருவாக்கிக் கொள்வேன்
நம்பிக்கை வைத்ததால்!

இன்றைய இளையதலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள்! என் அப்பா சொத்து சேர்த்து வைக்கவில்லை என்று வருந்தாதே, கவலை கொள்ளாதே! தன்னம்பிக்கையோடு உழைத்து உண்! சொந்தக்காலில் நீ நிற்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.

வெள்ளைத் தாள்கள்
விற்றுப்போய் விடுகிறது
கவிதைத் தாள்கள் தான்
விலை போகவில்லை!

படைப்பாளிகள் கவலை கொள்ள வேண்டிய யதார்த்தமான உண்மை.  புத்தகக் கடைகளில் கவிதை நூல்கள் விற்காது என்றாது என்று அறிவிப்பு செய்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். தொலைக்காட்சி, அலைபேசி வருகையின் காரணமாக நூல் வாசிக்கும் வழக்கம் வழக்கொழிந்து வருகின்றது. பொதுமக்கள் கவிதை நூல்களை விலை கொடுத்து வாங்கி வாசித்து, எழுதியவரை அழைத்துப் பாராட்ட முன்வர வேண்டும். வாசிப்பு என்பது சுகம் என்பதை உணர வேண்டும்.

ஈழத்துக் கொடுமை பற்றி ‘புடுங்கி’ என்ற கவிதையிலும் உள்ளக்குமுறலை துணிவுடன் கொட்டி உள்ளார். பாராட்டுக்கள். ‘நீட்‘ என்ற கொடிய அரக்கனுக்குப் பலியான அனிதா பற்றிய கவிதையும் சிந்திக்க வைத்தது.

தனிமைப்பெண்!

அவள்
பிரியாணி எதிர்பார்க்கவில்லை
பழைய சோறாக இருந்தாலும்
பக்கத்தில் உட்கார்ந்து ஊட்டி விடு!

மனைவியின் மீது அன்பைப் பொழியுங்கள். அருகில் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்துங்கள். பணம், வசதி முக்கியமில்லை. பண்பு, பாசம் முக்கியம் என்று கவிதை வரிகளின் மூலம் வலியுறுத்தி உள்ளார். மனைவியைக் கண்டுகொள்ளாத ஆணாதிக்க சிந்தனை மிகுந்த ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள் நன்று.

பால் வியாபாரிக்கு
      ஒரே வருத்தம்
      தண்ணீர் பஞ்வம் வந்தது!

உண்மை தான். தண்ணீர்ப்பஞ்சம் வந்த காரணத்தால் பாலில் தண்ணீர் கலக்க முடியவில்லை என்ற யதார்த்த உண்மையை நாட்டு நடப்பை எள்ளல்சுவையுடன் கவிதை வடித்துள்ளார்.

கஜா!

நில்லாத காற்று
இல்லாத சுமைகளை வீசிவிட்டது
பசியான வயிறு
ருசியான உணவை மறந்திட்டது!

உண்மை தான்! கஜா புயல் கோரத் தாண்டவம் ஆடி மக்களை நிலைகுலைய வைத்தது. இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் உற்றுநோக்கி கவிதைகள் வடித்துள்ள நூலாசிரியர் கவிஞர் மகுவிக்கு பாராட்டுக்கள்.

கருத்துகள்