இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை பேராசிரியர் மித்ரா !



இறையன்பு கருவூலம் !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் மதிப்புரை பேராசிரியர் மித்ரா !

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  பக்கங்கள் : 152, விலை : ரூ.110.


*******

      இந்நூல் பற்றி ‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் குறிப்பிடுகையில் இறையன்பு ஆற்றும் படை என்று குறிப்பிட்டார். இறையன்பு நாடு போற்றும் நல்ல எழுத்தாளர், பேச்சாளர், பன்முக சிந்தனையாளர், ஆளுமைத் திறம் வாய்ந்தவர், அறிவியல் சிந்தனை மிக்கவர், நாட்டின் மீதும், மொழி மீதும், மக்கள் மீதும் பற்று மிகக் கொண்டவர், முதுமுனைவர் பட்டம் பெற்றவர்.

      இந்நூல் இரா. இரவியின் மதிப்புரையில் வாசகர்களுக்கு பயன்தரத்தக்க செய்திகள் இடம்பெற்றுள்ளது.

      இந்நூலுக்கு தமிழ்த்தேனீ இரா. மோகன் ஒரு மதிப்புரை வழங்கியுள்ளார். கு. ஞானசம்பந்தன் நல்லதொரு ஆய்வுரை வழங்கி உள்ளார். வழக்கம்போல் இரா. இரவியின் இந்த 20-வது நூலையும் வானதி பதிப்பகம் வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொண்டது.

      இந்நூலில் முதுமுனைவர் இறையன்புவின் நூல்களுக்கு கவிஞர் இரா. இரவி எழுதிய மதிப்புரைகளும் இடம் பெற்றிருப்பதை அறியலாம்.

1.     ‘மூளைக்குள் சுற்றுலா’ என்னும் நூல்  நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப் பெற்றது.  இந்நூல் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் 100ஆவது நூல் மூளைக்குள் சுற்றுலா நடத்தி, ‘மூளைக்குள் சுற்றுலா’ என்னும் நூலை யாத்துள்ளார். இந்நூலில் மூளையைப் பற்றி மட்டுமே எழுதிவிடாமல் உடலில் உள்ள நரம்பு மண்டலம், எலும்பு, பல் போன்ற மனித உடல் உறுப்புகளையும் எழுதியுள்ளார்.

      ‘மனித மூளைகள்’ மட்டுமல்லாமல் மனிதக் குரங்குகள், புழு, பூச்சி, எலும்பு என அனைத்து உயிர்களின் மூளை பற்றிய தகவல்கள் இந்நூலில் அடங்கி உள்ளது. அவற்றை அறிந்து கொள்ள உதவும் ‘கலைக் களஞ்சியம்’ என்றும் கூறலாம். இந்நூலில் வண்ணப்படங்கள், அனைவரும் விரும்பிக் படிக்கும் வகையில் நகைச்சுவை உணர்வையும் நூலாசிரியர் இடம்பெறச் செய்துள்ளார்.

      இதுபோன்ற அறிவியல் நூல் எழுத, மருத்துவம் பயின்றால் தான் முடியும் என்ற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளி அது தொடர்பான் நூலகளைப் பயின்று குறிப்பெடுத்தாலே போதும், நல்ல நூல் ஒன்றை உருவாக்கலாம் என்பதனை முதுமுனைவர் இறையன்பு நிரூபித்து உள்ளார்.

      இரா. இரவி, இந்நூலை முழுவதும் படித்து உள்வாங்கி கொண்டதோடு விலங்குகள், பூச்சிகள், மூளை பற்றிய செய்திகளைச் சேகரித்த் மதிப்புரை ஒன்று வாசகர்களுக்கு மாலையாக்கிச் தந்துள்ள திறம் காணலாம்.

2. முடிவெடுத்தல் :  நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்ட இந்நூல் முடிவெடுத்தல் பற்றி பேசுகிறது. முடிவெடுப்பது என்பது, ‘நிறுவனங்கள் மட்டுமல்ல ஒவ்வொருவரும் அதைச் செய்கின்றனர். முடிவெடுப்பதின் முதன்மைத் தன்மையை முதுமுனைவர் இறையன்பு சிறப்பாக விளக்கியுள்ளார். குடும்ப வாழ்வில் கணவன்-மனைவி இருவரும் கலந்து முடிவெடுப்பது சிறப்பு. அதனை இரவி, விருப்ப ஓய்வு குறித்து மனைவியோடு கலந்து முடிவெடுத்தது, குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி கிடைத்ததாகக் கூறுவது உண்மையாகும். இச்செயல் அனைவர்க்கும் பொருந்தும்.

      முதலில் சிக்கலை அறிந்து, நன்கு யோசித்து முடிவெடுப்பது நன்மை பயக்கும். இரா. இரவி எந்த மனிதர் பெயரையும் குறிப்பிடாமல் பொதுநிலையில் குறிப்பிட்டுள்ள அவரது நயத்தக்க நாகரிகத்தைப் பாராட்டுகிறேன். சுட்டி ஒருவர் பெயர் கொள்ளார் என்பது காதலில் மட்டுமல்ல, பொது நிலையிலும் கூடத்தான் பண்பான செயல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

      ‘செம்மொழி சிற்பப் பூங்கா’ குறித்து 2 மணித்துளிகளில் முடிவெடுத்த முதுமுனைவரின் திறன் பாராட்டத்தக்கது.

      “நன்றே செய்” அதுவும், “இன்றே செய்”,

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
      எண்ணுவம் என்பது இழுக்கு”

என்ற வள்ளுவரின் குறட்பா வரி நின்று இறையன்பு முடிவெடுத்தது போல் இக்கட்டுரையை வாசிக்க்கும் வாசகர்கள் அனைவரும் நன்கு ஆராய்ந்து சிறந்த முடிவை எடுத்தல் வேண்டும்.

3. சுயமரியாதை :

      இந்நூல் மனிதவள மேம்பாட்டு மையத்தின் ஓர் அங்கம். நேசம் பதிப்பகத்தால் வெளியிடப்பெற்ற நூலாகும். இ ந் நூலை இரா. இரவி வாங்கி 1 மணி நேரத்தில் படித்து முடித்தாராம்.

      இந்நூல் வாழ்வியல் நெறி கற்பிக்கும் நூல் சுயமரியாதையை எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும், பிறரால் சுயமரியாதை தரும் வகையில் எவ்வாறு வாழவேண்டும்.  சுயமரியாதை நமது செயலால் இயல்பாகக் கிடைப்பதாக இருத்தல் வேண்டும்.

      நூலாசிரியர் தமது வாழ்வில் கண்டு உணர்ந்த உணர்வுகளை நூலாகத் தந்துள்ளது சிறப்பு.

இந்நூலில் இடம்பெற்ற 4வது நூல்.

4. உலகை உலுக்கிய வாசகங்கள் :

‘உலகை உலுக்கிய வாசகங்கள்’ என்னும் இந்நூல் தந்தி பதிப்பக வெளியீடாகும். தினத்தந்தி நாளிதழில் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், ஞாயிறு தோறும் எழுதி வந்த தொடராகும். மறைந்த மாமேதை அப்துல் கலாம் பாராட்டிய நூலும் இதுவே.

102 வாரங்கள் வெளிவந்த தொடர். குறிப்பாகச் சொல்வதானால் தொடராக வெளிவந்த போதே மின்னஞ்சல் குழுக்களுக்கும், முகநூலிலும், வலைப்பூவிலும் இரவி பகிர்ந்து வந்தார்.

பகுத்தறிவின் இலக்கணம் சாகர்டீஸ் என்றும், காதல் முக்காலத்திலும் மகிழ்வைத் தருவது என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளதை அறிகிறோம்.

5. இலக்கியத்தில் மேலாண்மை : இந்நூல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. நேர மேலாண்மையில் வெற்றி பெற்றவர், இந்நூலில் வர்த்தக மேலாண்மை, சமரசத்திறன், முடிவெடுக்கும் திறன், இதுபோன்று பல்வேறு தலைப்புகளில் உள்தலைப்புகள் இட்டு நூலாசிரியர் எழுதி உள்ளது சிறப்பாகும்.

மனிதவள மேம்பாடு மேலாண்மை குறித்து திருக்குறளில் உள்ளவை பற்றி நூலாசிரியர் குறிப்பிட்ட பாங்கு குறிப்பிடத்தக்கது.

6. வைகை மீன்கள் :

      இந்நூல் விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பெற்றதாகும். கவிதையைப் பற்றி நூலாசிரியர் சிந்தித்துள்ள பாங்கு அருமை.

7. அவ்வுலகம் : இந்நூல் உயிர்மை பதிப்பகத்தில் வெளியிடப்பெற்றது ஆகும். இந்நூல் கவலை பற்றிய நினைவும் பேச்சும் வீணானது என்கின்றார் நூலாசிரியர். இது நாவல் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பகுத்தறிவாளராகவும், பகுத்தறிவு சிந்தனையை இந்நாவலில் புகுத்தியுள்ள திறம் காணலாம்.

      பணத்தை விட அன்பே சிறந்தது என்னும் கருத்தை இரா. இரவி, இறையன்பு கருவூலத்தில் குறிப்பிட்டுள்ளது மாந்தர்கட்கு ஒரு பாடம் ஆகும்.

8. நினைவுகள் : இந்நூல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வாயிலாக வந்ததாகும். நினைவுகள் வலிமையானவை. நினைவுகள் கடந்த காலத்துடன் நம்மை பிணைக்கும் பாலம். இந்நூலில் இரவி நமது கடந்த கால நினைவுகளை பதிவு செய்துள்ள பாங்கு நேர்த்தி.

      நினைவுகள் சுகமானது. வலிமை வாய்ந்தது. நம்மை துன்புறுத்தும் நினைவுகளை அகற்றிவிட்டு இனிய நினைவுகளை மனதில் நிரப்புவோம். மனதிற்கு இதம் தரும் நினைவுகளைச் சொல்லும் இந்நூல் படிக்க வேண்டிய ஒன்றாகும்.

9. கேள்வியும் நானே பதிலும் நானே : விழிப்புணர்வைத் தரும் நூல் நூலாசிரியர் தானே கேள்வி கேட்டு பதில் சொன்ன பாங்கு சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

10. இல்லறம் இனிக்க : குடும்பம் என்பதற்கு நூலாசிரியர் தந்துள்ள விளக்கம் சிறப்பாக உள்ளது.

11. காகிதம் : இந்நூல் காகிதம் பற்றிய சிறப்புகளைச் சொல்கிறது. மணச் செய்திகளையும், மரணச் செய்திகளையும் காகிதத்தின் வாயிலாகவே அறிகிறோம். 1200 ஆண்டுகட்குப் பின்புதான் காகிதத்தின் உபயோகம் வந்தது. இந்நூலில் காகிதத்தைக் கண்டுபிடித்தது ஓர் “அரவாணி” என்னும் செய்தி திருநங்கைகட்கு பெருமை தரத்தக்கச் செய்தி ஆகும்.

12.  வனநாயகம் என்னும் நூல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியீடாகும். நூலாசிரியர் இயற்கையின் எழிலில் மனம் பறித்தவர் என்பதனை அறிய நேர்கிறது. வனத்தைப் பற்றிய பாடம் கற்பிக்கும் நூல் இது. வனத்தின் முதன்மையை உணர்த்தி, வளங்களை அழித்தல் கூடாது, நாட்டின் பரப்பளவில் 33 சதவீதம் வனங்கள் இருத்தல் வேண்டும். அப்போது தான் மழைவளம் பெருகும், விவசாயம் நன்நிலையில் இருக்கும். நாட்டில் பொருளாதாரம் உயரும் என்னும் கருத்து அனைவரின் சிந்தனைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

‘இறையன்பு கருவூலம்’ என்னும் இரா. இரவியின் நூல் உண்மையில் இன்னொரு கருவூலமே. நூலாசிரியர் இறையன்புவின் 12 நூல்களை நன்கு படித்து சீரியக் கருத்துக்களை, வாசகர்கட்குக் கருவூலமாக்கித் தந்த சாதுர்யத்தை இங்கறியலாம்.

என்றென்றும்,
பாசமுடன்
மித்ரா.

கருத்துகள்