உன்னோடு ஒரு நிமிஷம் ! நூல் ஆசிரியர் முது முனைவர் வெ ..இறையன்பு இ .ஆ .ப . நூல் மதிப்புரை ப .மகேஸ்வரி பாரதியார் பல்கலைக் கழகம் கோவை
உன்னோடு ஒரு நிமிஷம் !
நூல் ஆசிரியர் முது முனைவர் வெ ..இறையன்பு இ .ஆ .ப .
நூல் மதிப்புரை ப .மகேஸ்வரி பாரதியார் பல்கலைக் கழகம் கோவை .
புத்தக விளக்கச்சுருக்கம் : ப.மகேஸ்வரி, வாசகி, கோவை.
உன்னோடு ஒரு நிமிஷம் நூலின் மூலம் முனைவர் இறையன்பு அவர்கள் இளையோரின் மனதைச்
செம்மைப்படுத்தி ஊக்கப்படுத்தியுள்ளதை ஒரு விளக்க உரை மூலம் தெளிவுபடுத்த விரும்பி
பகிர்ந்து கொள்வதில் மகிழ்வு கொள்கிறேன்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்னும் பழமொழியை அனைவரும் அறிவோம் எந்த
ஒரு செயலும் பயிற்சியின் மூலமே சிறப்படைகிறது. அதுவும் அந்தப் பயிற்சிகளை இளம் வயது
முதலே நடைமுறைப்படுத்தி செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தால் குழந்தைகளுக்கு அதுவே
பழக்கமாகி அவர்கள் தன் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து செய்யும் ஆற்றல்
உருவாகும். பெற்றோர்களுக்கு தாம் பணிபுரியும் சூழ்நிலை இல்லத்துக்கு உள்ளேயும்
வெளியேயும் உள்ள சூழ்நிலைகள் என மனம் பல்வேறு சிந்தனைகளாலும், எண்ணங்களாலும்,
குழப்பங்களும் சூழப்பட்டு இருக்கலாம். ஆனால் குழந்தைகள் மனம் எழுதப்படாத கரும்பலகை
போல் காத்திருக்கும் வெள்ளை உள்ளங்கள். எதையும் மிக விரைவில் கிரகித்துக் கொள்ளும்
ஆற்றல் படைத்தவை. குழந்தைகளை அவர்களுக்கே தெரியாமல் அவர்களை சிரமப் படுத்தாமல்,
கடிந்து கொள்ளாமல், நல்ல பழக்கவழக்கங்களையும், பண்பு நலன்களையும், நல்ல
செயல்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி செயல்பட வைப்பதே சிறந்த பயிற்சி ஆகும்.
இதில் பெற்றோர்கள் பங்கு பெருமளவில் உள்ளது. ஆசிரியர்களும் இந்த பயிற்சி வழங்குவதில்
பங்கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதும் சிறப்பு. சிறப்பான பங்களிப்பு புத்தகங்களுக்கும் உண்டு
இந்த வகையில் முனைவர் வெ இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் உன்னோடு ஒரு நிமிஷம்
என்னும் இந்த நூலை இளையோருக்கான சிறந்த பயிற்சி புத்தகமாக பார்க்கிறேன்.
சிறியவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டி செயல்பட வைப்பதிலும் பெரியவர்கள் படித்து அறிந்து
கொண்டு அதிலுள்ள கருத்துக்களை சிறியவர்களுக்கு எடுத்துச் சொல்ல வைப்பதிலும் நூலாசிரியர்
இறையன்பு அவர்கள் குறியாய் இருந்து குழந்தையாகவே வாழ்ந்து 56 தலைப்புகளில் அற்புத
வழிகாட்டுதலை தந்திருக்கிறார்கள் இந்நூலில்.
இந்த புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் ஒவ்வொன்றும் நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
நான் இந்த புத்தகத்தை வாசிக்கும் போது என் மனதில் காட்சிகளாகவே விரிந்தன குழந்தை
வளர்ப்பும் பயிற்சிகளும் குழந்தைகளின் செயல்பாடுகளும் கூடவே குழந்தைகள் பெரியவர்களாகி
அவர்கள் வெற்றி பெறுவதும் காட்சியாக வந்து போனது எனக்கூறினால் அது மிகையல்ல. தன்
மந்திரச் சொற்கள் மூலம் சுவாரஸ்யமான பல நல்ல விஷயங்களையும் தகவல்களையும் சிறுவர்கள்
படிக்க ஏற்ற வகையில் மிக எளிமையாகவும் அழுத்தமாகவும் ஆழமாகவும் கருத்துக்களை
கொடுத்திருக்கிறார். அனைத்து தலைப்புகளில் அமைந்த கட்டுரைகளும் வெவ்வேறு சிறந்த
கருத்துக்களை மனதில் பதியனிடுகிறது.
மிகச்சுருக்கமாக உன்னோடு ஒரு நிமிஷம் புத்தகத்தின் கருத்துக்களை பகிர்வதில் மனநிறைவு
கொள்கிறேன்.
நமக்கு தாய்மொழி எதுவாயினும் ஆங்கில அறிவையும் வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியம்
என உணர்த்துவதற்கு உலக விஷயங்களை கற்றுக் கொள்ளவும் எதிர்கொள்ளவும் தாக்குப்பிடிக்கவும் ஆங்கில அறிவு அவசியம் என்கிறார். பின்பற்றினால் மொழி பயமின்றி உலக அறிவு
பெறலாம் என்று வழி நடத்துகிறார்.
வாழ்வு மொத்தத்துக்கும் தேவையான அனைத்து அறவுரைகளும் கூறப்பட்டிருக்கும் ஒரே நூல்
திருக்குறள். உலகில் உள்ள பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கடைபிடிக்கப்படும் நூல்
திருக்குறள். அப்படிப்பட்ட திருக்குறளை நாள்தோறும் படித்து பயன்பெற சொல்வதை
கடைபிடித்தால் நன்று.
சோர்வின்றி செயல்படவும் மற்றவர்களோடு நல்ல பண்பு நலன்களோடு பேசவும் உருவாக்கும்
திறனை வளர்த்துக் கொள்ளவும் தேர்வுக்கு முன் கூட்டியே தயார் செய்து கொண்டு கவனம் வேறு
பக்கம் சிதறாமல் நல்ல மனநிலையுடன் தெளிவாக எழுதவும் வழி நடத்துவதை ஏற்பது நலம். வீடு
விட்டால் பள்ளி, பள்ளி விட்டால் வீடு என இல்லாமல் அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று
மக்களின் உழைப்பை கண்களால் கண்டு அவர்களின் இடர்பாடுகளை உணர்ந்தும் வருவது,
தானியங்கள் உற்பத்தி செய்வதற்கு சிந்தும் வியர்வையை பார்த்தும், பாலங்கள் கட்டிடங்கள்
கட்டும் தொழிலாளர்களை சந்தித்து வருவது, ஏட்டில் படித்து தெரிந்து கொள்வதை விட நம்
அறிவுக்கு செறிவூட்டும் அம்சங்களாகும்.
கருணை இல்லாத அறிவும் அன்பில்லாத செறிவும் அனுபவமில்லாத பரிவும் பயனற்றவை
என்பதால் அவற்றை முறைப்படுத்தவும் நம்மை நெறிப்படுத்தவும் வாரம் ஒருமுறை பள்ளியை
தாண்டி பயணிக்கவேண்டும். பல நிகழ்வுகளையும் கவனிக்க வேண்டும் என
தெளிவுபடுத்தியுள்ளார் இறையன்பு அவர்கள். கோடை விடுமுறையில் சுற்றுலா தலங்களுக்குச்
சென்று இடங்களை பார்ப்பதோடு நில்லாமல் மனிதர்களை படிக்கவும் வேண்டும் உள்ளூரில்
இருக்கும் அரிய சில இடங்களை பல பேர் பார்த்திருக்க மாட்டார்கள். முதலில் அதை அறிந்து
செல்லவேண்டும் பார்க்கிற இடத்தைவிட செய்கிற பயணத்தில் நாம் கற்றுக் கொள்கிற செய்திகள்
நிறைய இருக்கின்றன நாம் கண்டவற்றை, கேட்டவற்றை, சந்தித்தவற்றை நினைவுகூர்ந்து பதிந்து
வைத்துக் கொள்வது மேன்மை தரும்.
அடுத்த கல்வியாண்டில் பள்ளி திறந்தவுடன் நேற்றில் இருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்களின்
தொகுப்பு இன்றாக மலர வேண்டும். இந்த கல்வி ஆண்டு மற்ற கல்வி ஆண்டுகளில் இருந்து
எவ்வளவு செறிவு மிகுந்ததாக இருக்கப்போகிறது என்பதுதான் நாம் திட்டமிட வேண்டிய செயல்.
நாம் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறோம் என்று நம் திறமைக்கேற்ப, நம்
விருப்பத்திற்கேற்ப முடிவு செய்ய வேண்டும். "இலட்சங்கள் முக்கியமல்ல இலட்சியமே முக்கியம்,
கோடிகள் முக்கியமல்ல குறிக்கோளே முக்கியம்" என்று உறுதி செய்ய வேண்டிய பருவம் இது.
இந்த உயர்ந்த நோக்கத்தை மட்டும் உறுதி செய்தால், நமது ஒவ்வொரு நொடியும் விழிப்புணர்வு
மிக்கதாக மாறும், நம் செயல்களில் தீட்சண்யம் மேம்படும்.
மழையில் நனையாமல் காலில் படாமல் காற்றில் அலையாமல் வெயிலில் காயாமல் வாழ்வது
சொகுசான வாழ்க்கை என்று அனுபவிப்பதை விடுத்து, இயற்கையுடன் இயைந்து வாழ்ந்தால் நம்
உடல் சக்தி பெறுவதோடு இயக்கங்கள் சீர்பட்டு செறிவான வாழ்க்கை வாழலாம் என உணர்த்தி
இருப்பதை பின்பற்ற வேண்டும்.
நற்செயல்கள் செய்யும் போது பணியும் சிறப்புறும் மனம் மகிழ்வடையும். நாம் காண்கிற
திசைகளில் அழகும் அன்பும் நடனமிடும். வழி கேட்டு வருபவருக்கு அடையாளம் காட்டுவதும்
விபத்தில் விழுந்தவருக்கு உதவுவதும், வகுப்புக்கு வராத நண்பனுக்கு அன்றைய பாடங்களை
விளக்குவதும், வாடிய பயிருக்கு நீர் வார்ப்பது போன்றவையே நற்செயல்கள். மாணவப்பருவத்திலே இது போன்ற நற்பண்புகளை பதியன் போட்டால் தலைமைப் பண்பு அரும்ப
ஆயத்தமாகும். பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் இளைஞர்கள் சமூகத்துக்கு பாரமாக
இல்லாமல் கூடுதல் பொறுப்புகளையும் தாங்குவதற்கு திறன் உடைய இளைஞர்கள் பாலமாக
இருக்கிறார்கள். நாம் செல்லும் இடங்களில் அசுத்தப்படுத்தாமல் காணும் கலை சிற்பங்களை
சிதைக்காமல் பாதுகாத்தும், பூங்காக்களை ரசித்துவிட்டு பூக்களை பறிக்காமலும் பாதுகாப்பது
நன்று.
ஆபத்து நிறைந்த பகுதி என எச்சரிக்கை இருக்கும் இடத்தில் நுழைந்து விபத்துக்குள்ளக்காமல்
கவனமாக இருத்தலின் அவசியத்தை மிக அழுத்தமாக சொல்லி விழிப்புணர்வு
ஏற்படுத்தியுள்ளார்கள் முனைவர் இறையன்பு அவர்கள்.
வரலாறு இலக்கியம் பண்டங்கள் அல்ல பாத்திரங்கள். உணவை உண்ணுகிற பாத்திரம் நிறைவு
செய்வது போல அவை முழுமையான வாழ்க்கை நெறியை வழங்குகின்றன. வரலாறு நூல்களை
தேர்வு செய்து படிக்கும்போது கதை புத்தகத்தை போல கலகலப்பு ஊட்டுகிறது.
பாடப்புத்தகங்களில் மதிப்பெண்களுக்கு படிக்கிறபோது கவிதைகள் கூட கந்தகம்
ஆகிவிடுகின்றன. விருப்பத்துடன் வாசிக்கிற போது கந்தகம் பற்றிய குறிப்பு கூட சந்தனம் ஆகி
விடுகிறது என சுவைபட கூறி வரலாறு இலக்கியம் மற்றும் பெரியோர்களைப் பற்றி படிக்க
ஆர்வத்தை கூட்டுகிறார் நூலாசிரியர் இறையன்பு அவர்கள்.
தலைமை பண்பை உறிஞ்சிக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு சரித்திரம் அகராதி. மேன்மையான
உயர்ந்த குணங்கள் சிலரை உச்சாணிக் கொம்பிலே அமர்த்தியது வரலாறை வாசிப்பதில் இருந்து
கிரகித்துக் கொண்டு நாமும் அவற்றை நோக்கி பயணிப்பதற்கு நம்மை அவை உசுப்பி
விடுகின்றன என்று இளைய தலைமுறையை உற்சாகப்படுத்தி உள்ளார்.
குடிமை பண்புகளை வளர்த்துக் கொள்வதும் நம்மைச் சுற்றி நடக்கும் நல்ல விஷயங்களை
கிரகித்துக் கற்றுக்கொள்வதும் மனிதர்கள் அனைவரையும் சமமாக பாவித்து அலட்சியம்
காட்டாமல் நேசிப்பதும் எவ்வளவு மேன்மை தரும் என்பதை அழகாக எடுத்துரைத்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை பற்றி குறிப்பிடும்போது, நல்ல பொழுதாக்கங்களை கற்றுக்
கொள்வேன், விளையாட்டுக்களில் தேர்ச்சி பெறுவேன், மரக்கன்றுகளை நடுவேன், இந்த வருடம்
50 புத்தகங்களை வாசித்து விடுவேன் என உறுதி எடுத்துக் கொள்வதே சிறந்த புத்தாண்டு
கொண்டாட்டம் என்று கூறுவதை ஏற்பது மிகுந்த பயன்தரும்.
பேசுவது மட்டுமல்ல கேட்பதும் ஒரு கலைதான் கேட்பதற்கு பொறுப்பும் பொறுமையும் வேண்டும்.
செவிகளை செம்மைப்படுத்துபவர்களுடைய வாழ்வு சிற்பமாக செதுக்கப்படுகிறது. தொடர்ந்து
கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் காதுகளை மட்டும் மூடுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
கேட்பது அறிவுக்கு ஆழத்தை மட்டுமல்ல தேடலுக்கு தீவிரத்தை கொடுக்கவும் உதவுகிறது.
அதிகமாக கேட்பவர்கள் உதிர்க்கும் ஒவ்வொரு வாக்கியமும் பொன்மொழிகள் ஆக
பதிந்துவிடுகின்றன.
பிடிவாதத்தை அறவே விடுதல் நலம். விழிப்புணர்வோடு கற்றதை காட்சிப்படுத்தி தேர்வை
அணுகினால் தோல்வியை வெல்லலாம். பெற்றோர் ஆசிரியர் கண்டிப்புக்காகவும் மதிப்பெண்
பெற வேண்டும் எனவும் படிக்காமல் தம்மை சிறப்பாக உருவாக்கிக்கொள்ள படிக்க வேண்டும்.
துணிவை துணையாக கொண்டும் ஒவ்வொரு நாளையும் இனிமையாக கழித்து நம்பிக்கை
மேலோங்க செயல்களை செய்து சிறந்த முடிவுகள் எடுக்க கற்றுக்கொண்டு முன்னேற்றம்
அடையவேண்டும்.நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது சாதனை புரிந்தோர்
வாழ்வில் அறியலாம். தமது பணிகளை அந்தந்த நேரத்தில் செய்தால் பணிகளும் முடிவுற்று
மனநிம்மதியும் காரிய வெற்றியும் கிடைக்கும்.
கையெழுத்து முத்துக்களைப் போல அழகாக எழுதப் பழகிக் கொண்டு முத்திரை பதிக்க வேண்டும்.
வகுப்பறையிலும் வாழ்விலும் பெரியோர்களிடம் நல்ல மரியாதை செலுத்த
பழகிக்கொள்ளவேண்டும். தாழ்வு மனப்பான்மை மூடநம்பிக்கை அகற்றி தன்னம்பிக்கையோடு
வாழ வேண்டும் என்று இறையன்பு அவர்கள் நம்பிக்கை ஊட்டுகிறார்கள்.
யாராவது எழுப்பி விட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு தூக்கத்தில் இருந்து தானாக
கற்றுக்கொள்ள வேண்டும். அது போல எந்நேரமும் தூங்கி வழியாமல் குறித்த நேரத்தில் தூங்கச்
சென்று அதிகாலையில் எழ பழகிக்கொள்ளவேண்டும் படிப்பது கூட அதிகாலையில் படித்தால்
மனதில் நன்றாக பதியும்.
நமக்காக தங்கள் விருப்பங்களை ஒதுக்கிவிட்டு குழந்தைகளின் ஆசைகளே உலகம் ஆக்கிக்
கொண்டிருக்கும் பெற்றோர்களை மதிக்க வேண்டும். பெற்றோர்கள் கண்ணுக்கு தெரிகிற
கடவுள்கள். கோயில் இல்லாத தெய்வங்கள். அவர்கள் மூச்சுக்காற்று குழந்தைகளுக்காகவே
சுவாசிக்க படுகிறது. பெற்றோர்களை மதிக்காமல் எவ்வளவு பெரிய சான்றிதழை பெற்றாலும்
அது குப்பை யாகவே கருதப்படும்.
நகைச்சுவை உணர்வு உடல் நலத்துக்கும் அவசியமான ஒன்று. ஒரு நிமிடம் சிரிப்பது ஒரு
மணிநேர உடற்பயிற்சிக்கு சமம். சிரிப்பது மூளையை இலகுவாக்கும் இதயத்தை வலுவாக்கும்
நரம்புகளை முறுக்கேற்றும். காற்றுப் போல் உடலைக் கனக்கச் செய்யும் நுண்ணறிவை
செம்மையாக்க சிரிப்பது ஓர் உபாயம் என்றும் நகைச்சுவை என்பது பதற்றத்தை குறைக்கும் அது
உற்சாகத்தை அதிகப்படுத்தும் என்றும் விவரங்கள் கொடுத்து தினமும் சிரிக்கத் தகுந்த
செய்திகளை நாம் வாசிக்க வேண்டும், அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று
நகைச்சுவையும் சிரிப்பும் நமக்கு மிகவும் முக்கியம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்
இறையன்பு அவர்கள்.
ருசிக்காக சாப்பிடாமல் உடல் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும். இன்று பல
விளம்பரங்களும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளின் மூக்கைத் துளைக்கும் வாசனையும் நம்மை
ருசிக்காக உண்ணச் சொல்லி இழுக்கும் ஆசைக்காக என்றாவது ஒருநாள் உண்ணலாம். ஆனால்
இவ்வகை உணவுகளை தொடர்ந்து உண்ணுவது உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பதோடு
உடலின் சக்தியை குறைத்து விடும். எனவே நாம் உண்ணும் உணவில் சத்தான காய்கறிகள்
பழங்கள் தானிய வகைகள் என சேர்த்துக்கொண்டு கசப்பு துவர்ப்பு காரம் புளிப்பு இனிப்பு
உவர்ப்பு என அறு சுவைகளும் சமமாக சேர்த்து இருந்தால் தான் உடல் உறுப்புகள் சீராக
இயங்கும் என்பதை புரிந்து கொண்டு உணவு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என
அறிவுறுத்தியுள்ளார்கள்.
சிறுவர் சிறுமிகள் தங்களால் ஆன சிறு சிறு பணிகளை செய்து கொடுக்கும் போது
பெற்றோர்களுக்கு உதவியது போலவும் இருக்கும், இல்லத்தின் வேலைப்பளுவை குறைத்தது
போலவும் இருக்கும், தாம் கொஞ்சம் கொஞ்சமாக பணிகளை கற்றுக் கொள்வதாகவும் இருக்கும்,
எதிர்காலத்தில் தாமே குடும்பத் தலைமை ஆகும்போது பயமின்றி குழப்பமின்றி இல்லத்தை
வழிநடத்த பயிற்சி பெற்ற மாதிரியும் இருக்கும். பெற்றோர்களும் பிள்ளைகளை பொத்திப்பொத்தி
வளர்க்காமல், துணிகளை மடித்து வைப்பது செடிகளுக்கு நீர் வார்ப்பது கடைக்குச் சென்றுபொருள்களை வாங்கி வரச் சொல்வது காய்கறி நறுக்குவது என சிறு பணிகளைக் கொடுத்து
அவர்களை உழைக்கவும் பழக்க வேண்டும். அப்போதுதான் படிப்பறிவு மட்டுமல்லாமல்
பட்டறிவும் குழந்தைகளுக்கு துளிர்த்து அவர்கள் வாழ்வு வளம் பெறும் என்று இந்நூலில்
இறையன்பு அவர்கள் ஒத்தாசை எனும் தலைப்பில் மிக அருமையான கருத்துக்களை
குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி பெற்றோரின் உடல் நலத்தைப் பேணவும் அறிவுறுத்தியுள்ளார்
இளையோர்களை.
இன்றைய இளையோர்கள் கடிதம் எழுதும் பழக்கத்தையே அறிந்திருக்க மாட்டார்கள். வாட்ஸ்-
அப், இ-மெயில், குறுஞ்செய்திகள், செல்போன் என வரிசையாக வந்த நவீன வசதிகளே காரணம்.
முத்துப்போன்ற கையெழுத்துகளில் உள்ளத்தில் உள்ள செய்திகளை பதிவிட்டு அனுப்பி அதை
படித்து பரவசமடையும் மனநிலையின் ஆனந்தமே தனி. எத்தனை வசதி வாய்ப்புகள் வந்தாலும்
சமயம் கிடைக்கும் போது கையெழுத்துக்களாலான கடிதத் தொடர்பு வைத்துக்கொள்வது
நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதாகவும் எழுதியவர் அருகில் இருப்பது போன்ற உணர்வைக்
கொடுப்பதாகவும் தகவல்களின் உண்மை தன்மை அறிய படுத்துவதாகவும் இருக்கும்.
பயனுள்ள பொழுது எனும் தலைப்பில் நாம் அனைவருமே படிப்பு எனும் கடிவாளம் போட்ட
குதிரைகளாக கல்வியை குறுக்கிக் கொள்ளாமல் விண்ணில் பறக்கும் வானம்பாடிகளாக மாற்றிக்
கொள்வதற்கு ஒரு பொழுதாக்கம் (hobby) அவசியம். நல்ல பொழுதாக்கம் நம் படிப்பை
வளப்படுத்தும், பார்வையை அகலப்படுத்தும், அயர்ச்சி ஏற்படாமல் வாழ்வின் சகல
நிகழ்வுகளையும் ஆர்வத்துடன் அணுக அடித்தளம் அமைக்கும் என குறிப்பிட்டு குழந்தைகள்
தங்களுக்கான தங்கள் வசதிக்கு தகுந்த ஒரு பொழுதாக்கத்தை தேர்ந்தெடுத்து திறமைகளை
மேம்படுத்திக் கொள்ள ஊக்கப் படுத்தி உள்ளார்.
புத்தக வாசிப்பு, சிறு சிறு கட்டுரைகள் எழுதுதல், தமக்குப் பிடித்த விளையாட்டுகளில் பயிற்சி
பெற்று விளையாடுதல், வரலாற்றுச் செய்திகளைச் சேகரித்து தொகுத்தல், நாணயங்களை
சேமித்தல், விஞ்ஞான மாதிரிகள் செய்து பார்த்தல், இசைக்கருவிகள் வாசித்தல், இசை கேட்டல்
என குறைந்தது ஒரு மணி நேரமாவது பொழுதாக்கத்தில் ஈடுபடுவது மனநிலையை வளப்படுத்தி
வாழ்வை தெளிவுபடுத்தும்.
பொருட்களையும் தண்ணீரையும் வீணடிக்காமல் சிக்கனமாக உபயோகிக்க கற்றுக் கொடுக்கவும்
வேண்டும், கற்றுக் கொள்ளவும் வேண்டும், வீட்டின் சிக்கனம் மட்டுமல்ல நாட்டில் சிக்கனமும்
அதில் அடங்கியுள்ளது என உணர வேண்டும்.
வாழ்வில் உயர்ந்தவர்களை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். மகாத்மாவிடம் உண்மையின்
மகத்துவத்தையும், நேதாஜியிடம் துணிச்சலையும், பாரதியிடம் நேர்மையையும், வல்லபாய்
பட்டேலிடம் திண்மையையும் கற்றுக் கொண்டதால், அன்றைய இளைஞர்கள் நாட்டுக்காக
உழைக்கவும், தியாகம் செய்யவும் எப்போதும் தயாராக இருந்தனர். நாம் யாரை முன்மாதிரியாக
நினைக்கிறோமோ அவர்களின் குண நலன்களை நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள்
செலுத்த ஆரம்பிக்கின்றோம். அது பல விரும்பத்தக்க மாற்றங்களை நம்மில் ஏற்படுத்துகின்றன
என்று மிக அழகாக ஆழமாக அறிவுறுத்துகிறார் இறையன்பு அவர்கள்.
பெரிய மனிதர்களின் ஒப்பற்ற பண்புகள் அவர்களை உயர்த்தியது போல நம்மிடம் அந்தப்
பண்புகள் அரும்ப ஆரம்பிக்கும். ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பல தலைமைகள்
உள்ளார்கள். சிலர் பல திறமைகள் படைத்த பண்பாளர்களாகவும் இருப்பார்கள். அவர்களைப்
பிரதிபலிக்க தேவையில்லை. அவர்களின் கருத்துக்களை எடுத்துக் கொண்டு தனித்துவமாகபரிமளிக்கலாம். இப்பொழுதெல்லாம் பரபரப்பான வாழ்க்கை முறையும், கூட்டம் கூட்டமான
நகர் புறச்சூழலும், சின்னத்திரையின் தாக்கத்தினாலும், வெளியில் சென்று இயற்கையை
தரிசிக்கவும் இனிமையான பறவைகளின் இசைகளையும், அழகிய நீர்நிலைகளையும், ஓங்கி
உயர்ந்த மலைகளையும் காண தவறிவிடுகிறோம். அவ்வப்போது நேரத்தை ஒதுக்கி
இயற்கையையும் ரசிக்கவும் செய்தால்தான் மனதில் புதிய பல எண்ணங்களும் யோசனைகளும்
உருவாகும்.
நம் குடும்ப வசதிக்கேற்ப திருவிழாக்களை கொண்டாட பழகிக்கொள்ளவேண்டும். குழந்தைகள்
வசதி வாய்ப்பிலோ, கல்வி கற்பதிலோ, மற்ற பழக்கவழக்கங்களிலோ மற்றவர்களுடன் அதிக
ஒப்பீடு செய்யாமல் தம் பெற்றோர் ஆசிரியர் அறிவுறுத்தலின்படி தமக்கே உரிய நல்ல
குணங்களுடன் தம்மை செதுக்கிக்கொள்வது தன்னம்பிக்கை பெற செய்து வாழ்வில் மேன்மை
தரும். "பொருள்களாலோ உடைகளாலோ மதிப்பும் மரியாதையும் வந்து விடுவது இல்லை. நம்
மகிழ்ச்சி நம் கைகளில்தான். பருந்தைப் பார்த்து பெரிய இறகுகளுக்கு ஆசைப்படாமல் தன் சின்ன
சிறகுகளுடன் சிரித்து மகிழ்கிறது சிட்டுக்குருவி" என மிக அழகாக எடுத்துச் சொல்கிறார்
முனைவர் இறையன்பு.
வானத்தை இலக்காக்குவோம் எனும் தலைப்பில் இறையன்பு அவர்கள் தம் மந்திரச் சொற்களால்
உச்சத்தைத் தொட்டிருக்கிறார் எனலாம். கடுமையான வாழ்க்கை முறைக்கு பழகிக்கொள்வது
முன்னேற்றத்திற்கான உயர்ந்த பயிற்சி. கட்டாந்தரையில் படுக்கும்போதும் கட்டில்மீது
படுக்கும்போதும் மண் தரையில் உருளும் போதும் மஞ்சத்தில் புரளும் போதும் ஒரே
மனநிலையுடன் இருப்பதில்தான் உயர்வு அடங்கி இருக்கிறது. மனிதன் தன்னை சூழலுக்கு ஏற்ப
மாற்றி கொள்கின்ற கலையை கற்றதால் இன்று வானத்தில் பறக்கவும் நொடியில் தகவல்களை
பரிமாறிக் கொள்ளவும் கற்றுக் கொண்டான். மனிதர்களிலேயே அதிகமாக தங்களை அனுசரித்து
கொள்பவர்கள்தான் வரலாற்று புத்தகங்களில் வாசிக்கப்படுகிறார்கள். தன்னைப் பாத்திரத்துக்கு
ஏற்ப தண்ணீராக மாற்றிக் கொண்டு, முதிர்ச்சியோடு இருப்பவர்கள் மலையாக நிமிர்ந்து
நிற்கிறார்கள்.
எளிதான வாய்ப்புகளை விட கடினமான வாய்ப்புக்களை தேர்ந்தெடுத்து சிரமங்களைத் தாண்டி
சாதித்துக் காட்ட வேண்டும். எப்போது நாம் இதுவரை சந்தித்திராத ஒரு நிகழ்வை தேர்ந்தெடுத்து
இருக்கிறோமோ அப்போது வாழ்க்கை சுவாரஸ்யமாகி விடுகிறது. நாம் எதிர்கொள்ளும்
மனிதர்களும் பிரச்சனைகளும் பாடப்புத்தகங்கள் ஆகிவிடுகின்றன. நாம் கற்றுக் கொள்கிற
அனுபவங்கள் நம் எதிர்காலத்தை வளப்படுத்துகின்றன. சின்ன சிரமத்தையே பெரிய ஆபத்தாக
பாவிக்காமல் அதைத் தாண்டி மேலே முன்னேறும் பக்குவத்தை நாம் அடைகிறோம். எனவே நாம்
பெரிய இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி அழுத்தமாக நடைபோடும் மனப்பான்மையை
வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வாழ்க்கை பாதையில் நாம் நடுகின்ற மரங்கள்,
பின்னால் வருகிற பலருக்கு நிழலையும் கனியையும் நிம்மதியையும் தரும்.
இந்த புத்தகத்தை வாசித்த பிறகு ஒவ்வொரு மாணவருக்குள்ளும்/ இளைஞருக்குள்ளும் ஒரு புதிய
உத்வேகம் பிறந்து வெற்றியை எட்டுவது உறுதி. மனமார்ந்த நன்றிகள் முனைவர் இறையன்பு
இ.ஆ.ப. அவர்களுக்கும், அவர்களது அக்கறையுள்ள எழுத்துகளுக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக