இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரிமர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை; கே ஜி. ராஜேந்திரபாபு !


இறையன்பு கருவூலம் !

நூல் ஆசிரிமர் கவிஞர் இரா.இரவி !

நூல் மதிப்புரை; கே ஜி. ராஜேந்திரபாபு !

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கங்கள் : 152, விலை : ரூ.110.
தொலைபேசி : 044 24342810,
 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com.

சிறியன சிந்தியாதார்; பெரிதினும் பெரிது சொல்பவர் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம்-முதுமுனைவர் இறையன்பு அவர்கள்.
இறையன்பு இ ஆ பெ.அவர்கள் மூன்று முனைவர் பட்டங்கள் பெற்றவர். தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், முதுமுனைவர்.
.அவர் எழுதிய நூற்றுக்கு அதிகமான நூல்களில் பதினாறு நூலகளுக்கு ஹைகூ திலகம் இரா.இரவி.எழுதிய மதிப்புரைகளின் தொகுப்பு “இறையன்பு கருவூலம்.”

இறையன்பு அவர்கள் வரைந்த எழுத்தோவியங்கள் குறித்து இரா.இரவி வழங்கியுள்ள கருத்துக்களும்-இறையன்பு அவர்கள் நூலிலிருந்து எடுத்துரைத்துள்ள சிந்தனைகளும் நிறைந்த நூல் “இறையன்பு கருவூலம்”.

மூளைக்குத் தேவையான உணவுகள் எவை? எப்படி செயல்படுகின்றன? நரம்புகளின் செயல்பாடு. படிக்கப் படிக்க பிரமிப்பு வந்தது. படித்துவிட்டு வைத்துவிடும் சராசரி நூலல்ல இது. என்சைக்ளோபீடியா போல,கூகுள் போல தகவல் களஞ்சியம் இந்நூல் என்று “மூளைக்குள் சுற்றுலா” என்ற நூல் குறித்து மதிப்பீடு செய்துள்ளார் இரா.இரவி.

“கரையான் புற்றில் 10 டிகிரி வெப்பம் குறைவாக இருந்துள்ளது. அதனை ஆராய்ந்து அதே நுட்பத்தில் ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேவில் ஒரு பெரும் கட்டிடத்தைக் கட்டியுள்ளார்கள்” இறையன்பு அவர்கள் தந்துள்ள அரிய தகவலைக் குறிப்பிட்டுள்ளார் இரா.இரவி.

“முடிவு எடுத்தல்” நூல் குறித்து இரா.இரவி; “அலுவலகத்தில் பணிபுரிபவர்கள்,
மேலாண்மை போன்ற உயர்பதவிகளில் இருப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். கையடக்க நூலாக இருந்தாலும் கருத்தடக்க நூலாக உள்ளது.”

“ யாரோ எப்படியோ போகட்டும். நான் சாமான்யன். எனக்கு முடிவெடுப்பது எப்படி முக்கியம்?.என்று பலர் கேட்கலாம். நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ஏதேனும் ஒருவகையில் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பவர்கள் மட்டுமே உன்னதங்களை அடைய சம்மதங்களைத் தருகிறார்கள். ஒரே ஒரு முடிவால் சரிந்து விழுந்தவர்களும் உண்டு” என்ற இறையன்பு அவர்களின் கருத்து ஒவ்வொரு மனிதரும் கவனத்தில் வைக்கவேண்டிய கருத்து.

சுயமரியாதை என்ற நூலுக்கான மதிப்புரையில்-முதன்மைச் செயலாளர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களுக்கு
சுயமரியாதை பற்றி நூல் எழுதிட முழுத்தகுதியும் உண்டு. காரணம் அவர் சுயமரியாதை மிக்க மனிதர். எதற்காகவும் நேர்மையை, ஒழுக்கத்தை, பண்பை விட்டுக் கொடுக்காமல் மதிப்பாக வாழ்ந்து வரும் உயர்ந்த மனிதர்.என்று புகழ்கின்றார் இரா.இரவி புகழவில்லை இறையன்பு அவர்களின் இயல்பான தன்மான உணர்வை எடுத்து இயம்பியுள்ளார்.

“ஒருவரிடம் மட்டும் எவ்வளவு வேண்டுமானால் தனி அறையில் அவமானப்பட்டுக் கொள்ளலாம். மற்றவர்கள் முன்பு தலைநிமிர்ந்து நடக்கலாம் என்று சுயமரியாதையை கழற்றிவிடும் செருப்புபோல கையாளுபவர்கள் இருக்கிறார்கள். உண்மையான சுயமரியாதை உள்ளவன் எந்த இடத்திலும் யார் முன்பும் எதற்காகவும் அசிங்கப்படத் தயாராக இருக்கமாட்டான். அவனே குனிய நினைத்தாலும் அது அவனால் முடியாது. அவனுடைய பண்புகள் அவனைத் தூக்கிப் பிடிக்கும்” என்று சுயமரியாதைக்கு இலக்கணம் வகுத்தாற்போல் எழுதியுள்ளார் இறையன்பு அவர்கள்.

‘அவனே நினைத்தாலும் அது அவனால் முடியாது”. சுயமரியாதைக்காரரின் இயல்பை சுருக்கமாகவும் --சூத்திரம் போலவும் சொல்லியுள்ளார் இறையன்பு அவர்கள்.

படிக்கும் முன் இருந்த மனநிலைக்கும் படித்து முடித்தபின் ஏற்படும் மனநிலைக்கும் உள்ள முன்னேற்றமே நூலாசிரியர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் வெற்றி என்றுரைக்கிறார் இரா.இரவி “உலகை உலுக்கிய வாசகங்கள்” என்ற நூலுக்கான மதிப்புரையில்.

இலக்கியத்தில் மேலாண்மை என்ற ஒரு நூல் MASTER PIECE என்கிறார்.இரவி. நீதிபதி விமலா அவர்கள் இந்நூலைப் படித்துவிட்டு “படிக்கிறேன்,படித்துக் கொண்டே இருக்கிறேன். திரும்பத் திரும்ப படிக்கிறேன்” என்று பாராட்டினார் என்று குறிப்பிடுகின்றார் இரவி.
“ போட்டியாளர்கள் நமக்குள் உந்து சக்தியை உற்பத்தி செய்கிறார்கள் என்பது மேலாண்மை விதி” இறையன்பு அவர்களின் இக்கருத்தை பதிவு செய்துள்ளார்.

பிறரின் பொறாமைதான் சிறந்த பாராட்டு என்பது போல் போட்டியாளர்கள் ,உந்து சக்தி தருபவர்கள் என்ற கருத்தை நெஞ்சில் நிறுத்தினால் போட்டியாளர்களைப் பகைவர்களாக கருத நேராது.
கவிதை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக நூல் உள்ளது. “ வைகை மீன்கள்” வாசகர்களின் உள்ளக் குளத்தில் நீந்தும் கவிதைமீன்கள்…இது இரவியின் கருத்து.
தினசரி பார்த்தாலும் சிலருடைய முகம்

நம் மனத்தில் பாதரசமாய் படியாமல் இருக்கிறது
சிலருடைய முகமோ ஒருமுறை பார்த்தாலும்
சுவரோவியமாய் நிலைத்து நிற்கிறது இது இறையன்பு அவர்களின் கவிதை வரிகள்

கவலையை விட்டு இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையாக வாழுங்கள் என்று கற்பிக்கின்றது “அவ்வுலகம்” என்ற நாவல் என்கிறார் இரவி
நம் நினைவுகள் நம் கடந்த காலத்துடன் நம்மைப் பிணைக்கும் பாலமாக இருக்கின்றன என்ற கருத்தை “நினைவுகள்” என்ற நூலில் குறிப்பிடுகிறார் இறையன்பு அவர்கள்

ராணி வாரஇதழில் இறையன்பு அவர்கள் எழுதிய” கேள்வியும் நானே பதிலும் நானே” என்ற நூல் எள்ளல் சுவைமிக்கதாகவும்-புதியத் தகவல்களுடன் வாழ்வியல் சிந்தனைகள் நிறைந்ததாகவும் உள்ளன என்று போற்றும் இரவி ஒரு கேள்வி பதிலை எடுத்துத் தந்துள்ளார்.
கேள்வி; பழமொழிகள் என்பவை?

பதில்; பழமொழிகள் நடைமுறை இலக்கியங்கள், ஞானப் பிழிவுகள், சாமானியர்களின் உதடுகளில் இருந்து உச்சரிக்கப்படும் உன்னதக் கவிதைகள்.

“ஒருவர் கொதிக்கும் போது—மற்றவர் பனிக்கட்டியாக வேண்டும்
ஒருவர் பாலாய்ப் பொங்கினால்—மற்றவர் நீராய் இறங்க வேண்டும்” என்பது போன்ற பயனுள்ள சிந்தனைகளைக் கொண்டநூல் “இல்லறம் இனிக்க”

“மணச்செய்தியையும், மரணச்செய்தியையும் காகித்தின் மூலமே நாம் பரிமாறிக் கொள்கிறோம்….சிலருக்கு மட்டுமே உரிமையாக இருந்த கல்வி, பலருக்கும் சென்றடைய காகிதங்களே அறிவு அம்புகளாகச் செயல்பட்டன”என்று காகிதம் என்ற நூலில் இறையன்பு அவர்கள் நுவன்றிருப்பது நுட்பமான செய்தி.

கவிக்கோ அப்துல் ரகுமான் நாட்டுமிராண்டிகள் என்ற சொல்லை உருவாக்கியது போல் வனநாயகம் என்ற சொல்லை உருவாக்கி அதே தலைப்பில் ஒரு நூல், வனங்களைப் பற்றி எழுதியுள்ளார். இந்நூலில் இறையன்பு அவர்களின் எழிலார்ந்த நடை படிப்பவர்க்கு இனிப்பூட்டும்
“ மரங்கள் இயற்கையின் சாசனம், காற்றின் வாகனம்,மலரின் ஆசனம்,இனிமையின் பாசனம், பாதசாரிகளுக்கு நிழற்குடை, பயணிகளுக்குப் பஞ்சு மெத்தை, பறவைகளுக்கு சரணாலயம், வியாபாரிகளுக்கு கூடாரம், கால்நடைகளுக்குப் பயணியர் விடுதி”
இப்படி செழுமையான நடையில் வனநாயகம் என்ற நூல் எழுதியுள்ளார். சனநாயகம் போல் வனநாயகம்.. சுவையான சொல்லாட்சி.
கட்டுரையில் கவிதையில் வெற்றிப் பெற்ற இறையன்பு அவர்கள் சின்ன சின்ன கதைகளை எழுதியுள்ளார் தலைப்பு. “சின்னச் சின்ன வெளிச்சங்கள்”

அன்று விந்தன் சின்னச்சின்ன கதைகளை எழுதினார் என்பது நினைவுகூரத்தக்கது.
sமனதுக்குள் மரணப் போராட்டம் நடத்துபவர்கள் அவசியம் வாங்கிப் படித்துத் தெளிய வேண்டிய நாவல்” சாகாவரம்” என்ற நாவல் என்கிறார் இரவி.

இறையன்பு அவர்கள் வானொலியில் உரையாற்றிய பலகருத்துக்களில் தொகுப்பு “பணிப்பண்பாடு”

“விடலைப் பருவத்தில் வியர்வை வாய்க்காலாக் வழியாவிட்டால்
கடைசி காலத்தில் கண்ணீர் கால்வாயாகப் பெருக்கெடுக்கும்”
உள்ளத்தில் விதைக்கப்பட வேண்டி கருத்துக்கள்
மனத்தில் சோர்வு வரும்போது மறுவாசிப்பு செய்து மனச்சோர்வை அகற்றி புத்துணர்வு பெற உதவும் நூல்” உள்ளொளிப் பயணம்” என்பது இரவியின் கருத்து.

பதினாறு நூற்களை மதிப்பிட்டுள்ளார் இரவி.
இறையன்பு அவர்கள் ஆற்றிய உரைகளில் சிலவற்றையும் -இரா.இரவியின் நூலுக்கு வரைந்த முன்னுரைகளையும் பதினாறு நூற்களுக்கு எழுதிய நூல்நயங்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளார் இரா.இரவி.

நூலின் தலைப்பு இறையன்பு கருவூலம்
இந்நூலை இறையன்பு ஆற்றுப்படை எனப் புகழ்ந்துள்ளார் முனைவர் மோகன்.
“கவிஞர் புலிப்பால் இரவி இலக்கியத்தின் இதயத்துடிப்பை நுகர்ந்து வாழ்பவர்” என்று இறையன்பு அவர்களால் பாராட்டப்பெற்ற இரா.இரவி இறையன்பு கருவூலம் என்ற நூலை எழுதியது சிறப்பானது.
இரவி கவிஞர் என்பதால் தமிழ்நடை நதியோட்டம் போல் உள்ளது
பெருமைமிகு பதிப்பகமான வானதி பதிப்பகம் வெளிட்டுள்ளது சிறப்புக்குரியது

இரவியின் “இறையன்பு கருவூலம்” என்ற நூலை வாங்கிப்படிப்பதோடு,அதில் குறிப்பிட்டுள்ள இறையன்பு அவர்களின் நூல்களையும் வாங்கிப்படிப்பது நம் சிந்தனையை வளப்படுத்தும். அவை உயர்வான வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக விளங்கும்.

கே ஜி ராஜேந்திரபாபு.பெங்களூர்

கருத்துகள்