ஹைக்கூ 500 ...
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் விமர்சனம் :
பேராசிரியர் மித்ரா
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
பக்கம் : 132, விலை : ரூ. 100
******
அன்பைக் குழைத்து புன்னகையில் பூக்களால் மலரச் செய்த பாசமிகு அன்புச் சகோதரர் ‘தமிழாகரர்’ முனைவர் இரா. மோகனின் வார்த்தெடுப்பில் உருவான இரா. இரவியின் ஹைகூ 500 இவரது 19வது நூலாகும். இரவியைப் பற்றி குறிப்பிடுவதானால் அவர் ஒரு அற்புத மனிதர், அடக்கமானவர், எளிமையானவர், இனியவர், பண்பாளர், முற்போக்கு சிந்தனையாளர்.
என் பாசத்துக்குரிய தம்பி புதுவைத் தமிழ் நெஞ்சனோடு நட்பு மிகக் கொண்டவர். தமிழ்நெஞ்சனும் அவரது ஹைக்கூச் சுடர் தமிழ்மொழியும் ஹைகூவை வளர்ப்பதில் இணைந்து செயலாற்றுபவர்கள்.
இந்நூலில் ஒளித்துளிப்பாவை வகைப்படுத்தி உள்ளதை அவர் தெளிவுபடுத்துகையில்,
“ஒளித்துளிப்பா
ஒளி வகைத் துளிப்பா
ஒளி இயைபுத் துளிப்பா
ஒளி உரைத் துளிப்பா
ஒளி நகை இயைபுத் துளிப்பா”
என்கின்றார்.
ஒளித்துளிப்பா என்றால் என்ன? என்பதை அவர் விளக்குகையில்,
“துளிப்பாவோடு ஒளிப்படமும்
பளீரென மின்னிடில்
ஒளித்துளிப்பா வாகுமே” என்கின்றார்.
இவை ஒளித்துளிப்பா எழுத முனைவோர் அறிய வேண்டிய செய்திகளாகும்.
இந்நூலுக்கு அன்புச் சகோதரர் புதுவைத் தமிழ் நெஞ்சனும் ‘தமிழாகரர்’ முனைவர் இரா. மோகனும் சிறப்பான அணிந்துரைகளை நல்கி பெருமை சேர்த்துள்ளார்.
தமிழ்நெஞ்சன் தனக்குப் பிடித்த புகைப்படங்களை முகநூலில் பதிவு செய்து அவற்றிற்கு பொருத்தமான ஹைக்கூ கவிதைகள் எழுத வேண்டுமென்றும் போட்டி வைத்தார். முகநூலில் உள்ள புகைப்படத்திற்காக இரா. இரவி தான் எழுதிய ஹைக்கூக்களைத் தொகுத்து ஹைக்கூ 500 என்னும் நூலாக்கியுள்ளார். இந்நூலைப் பற்றி இனி ஆராய்வோம். ஆராய்ந்து மதிப்புரைந்து மதிப்புரையாக கீழே தருகிறோம்.
தாய் : தாயைப் பாடாத புலவர்கள் தரணியில் இல்லை. உலகைப் படைக்கும் தாய் சக்தி, தாயன்பில் தன்னலம் ஏதுமில்லாத உறவினள். மனித இனத்தில் மட்டுமல்ல பறவை இனத்திலும் தாய்ப் பறவையை சிறந்தது என்பனவற்றைச் சொல்லும் ஹைக்கூக்கள்.
“தன்னலமில்லாத
ஒரே உறவு
தாய்” (ப.27)
“ஈடு இணையற்ற
மேன்மை
தாய்மை” (ப.11)
“மனித இனத்தில் மட்டுமல்ல
பறவை இனத்திலும்
தாய்க்கு நிகர் தாயே” (ப.94)
என்பனவாகும்.
உழவன், உழவு குறித்தச் செய்திகள்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. குறள் 1031
என்றார் வள்ளுவப் பெருந்தகை.
அத்தகைய உழவனை தேசம் கண்டுகொள்லவில்லை என்பதனை,
“தேசத்திற்குச் சோறு போட்ட
உழவனைக்
கண்டுகொள்ளவில்லை தேசம்"
என்கிறார்.
நாற்று நடுதல் :
“நாற்று நடும் பெண்கள் / எல்லாம் அழுக்கு
அவர்களிடம் / அவர்கள் பாடலைத் தவிர!
(தமிழில் தி. லீலாவதி, ஜப்பானிய ஹைக்கூ.)
இந்த ஹைக்கூ போல, இரா. இரவியும்,
“இருக்கலாம் சேலையில் அழுக்கு
இல்லை மனத்தில் அழுக்கு
நாற்று நடும் பெண்கள்!
(ப.79)
என ஹைக்கூ எழுதியுள்ளார்.
ஜப்பானிய ஹைக்கூவை உள்வாங்கி தமிழில் ஹைக்கூ எழுதியுள்ல திறம் பாராட்டத்தக்கதாகும்.
இயற்கை உரம் :
இன்று இயற்கை உரங்களின் விலை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதிக விளைச்சலைப் பெருகச் செய்யவும், பெருகி வரும் மக்கட் தொகைக்கு ஏற்ப உணவுப் பொருட்களை வழங்கவும் மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். அதனால் உணவுப் பொருட்களை செயற்கை உரங்கள் இட்டு விளைவிக்கின்றனர். அதனால் மக்கள் பல்வேறு நோய்கட்கு உள்ளாகி வருகின்றனர். இதைத் தவிர்க்க இன்று விவசாயிகள் இயற்கை உரங்களை இட்டு உணவுப் பொருட்களை விளைவித்து வருகின்றனர்.
இலை, தழை இவற்றோடு ஆடுகளைக் கொண்டு கிடை போட்ட ஆட்டுக் குட்டி மகசூலைப் பெருகச் செய்கின்றனர் விவசாயிகள். அத்தகைய இயற்கை உரம் தயாரிக்க கிடை போடும் வழக்கம் இல்லாது போனது. இவற்றைச் சொல்லும் ஹைக்கூக்கள்.
“ஆட்டின் உரம்
இயற்கை
பெருகும் விளைச்சல் (ப.32)
“இன்று இல்லை
ஆடுகள் கிடை
போடும் பழக்கம் (ப.28)
என்பனவாகும்.
உடற்பயிற்சிகள் :
கோலமிடுதல் :
பெண்கள் பொங்கல் பண்டிகை காலங்களில் இன்றும் கிராமங்களில் தெருவை வளைந்து பெரிய பெரிய கோலங்கள் இடுவது இயல்பு. இதற்காகவே பச்சரிசி மாவு தயாரித்து கோலமிடுவர். இதனை உண்ன ஈ. எறும்பு போன்ற உயிரினங்கள் பசியாறும். ஆனால் இன்று புதுமைப் பெண்கள் கோலம் போடும் பழக்கம் வழக்கொழிந்து போன அவலத்தை கூறுகிறார். குனிந்து, நிமிர்ந்து, உட்கார்ந்து உடம்பில் உள்ள கெட்ட நீர் வியர்வையாய் வெளியேற்றுவர். இது நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்து விடுவதை,
“வழக்கொழிந்து விட்டது
கோலமிடுவதில்லை /
புதுமைப் பெண்கள்” (ப.66)
“உடற்பயிற்சி தான்
பெண்ணே
கோலமிடு (ப.11)
என்னும் ஹைக்கூக்கள் சொல்கின்றன.
நீர் இறைத்தல் :
கை, கால்கள் ஏன் உடற்பகுதிகள் அனைத்தும் கிணற்றில் நீர் இழைப்பதால் இயங்குகின்றன. உடலில் உள்ள இயற்கை வெளியேற்றுதாலும் தலைவலி, கை, காலகள் வலி நீங்குகிறது. எனவே கிணற்றில் நீர் நிறைத்தல் அருமையான உடற்பயிற்சி என்பதனை,
“நல்ல உடற்பயிற்சி
கிணற்றில் /
நீர் இறைத்தல்” (ப.62)
என்னும் ஹைக்கூவால் அறியலாம்.
வழக்கொழிந்து போனவை :
அன்று இன்று போல் அனைத்தும் நவீனமயமாய் இருக்கவில்லை. அன்று அரைக்க, கிழக்கே, குற்றிட, தானியங்களை உடைக்க, அம்மி, உரல், ஆட்டுக்கல், உலக்கை போன்ற பொருட்கள் அனைத்தும் பயன்பாட்டுப் பொருள்களாயின. ஆனால் இன்று கிரைண்டர், மிக்சி போன்ற நவீனப் பொருட்கள் வந்ததால் அனை இன்று வழக்கொழிது போயின. வழக்கொழிந்து போய் விட்டதை,
“வகைப்படுத்தி உள்ளனர் / வழக்கொழிந்த பொங்கல்” (ப.106)
“அன்று பயனுள்ள பொருட்கள் / இன்றோ /
காட்சிக்கூடப் பொருட்களானது” (மேலது)
என்னும் ஹைக்கூக்களால் அறியலாம்.
பண்பாடு :
அன்று குழந்தைகட்கு எண்ணெய் வைத்து தலைவாரி அழகு பார்க்கும் பண்பாட்டு நிலை இருந்தது. வயது அதிகமாகும் போது தலையில் முடி இருந்தது. இன்று சிறுவர்களும், வாலிபர்களும், பெண்களும் தலையில் எண்ணெய் வைத்து தலை சீவுவது நாகரிகமற்ற செயலாகக் கருதுகின்றனர். இப்பண்பாட்டு சீரழிவை,
“தலைக்கு எண்ணெய் இட்டு
கற்பிக்கிறாள்
பண்பாடு!” (ப.8)
என்னும் ஹைக்கூவால் அறியலாம்.
பம்பரம் சுற்ற ஒரு சாட்டை, இரு பம்பரங்கள் இருந்தால் போதும் சிறுவர்கட்கு மகிழ்ச்சி கரை புரண்டோடும். ஆனால் பள்ளிச் சிறுவர்கள் மீண்டும் பம்பரம் சுற்ற பழக்கப்படுத்தி வருகின்றனர்”.
வழக்கொழிந்த அந்த நினைவு இன்றும் இருப்பதை,
“வழக்கொழிய இல்லை / இன்றும்
உயிர்ப்போடு பம்பரம்” (ப.70)
என்னும் ஹைக்கூ சொல்கிறது.
இந்நூலில் அந்நியர்களின் சுரண்டலால் நிலத்தடி நீர் இல்லாது போனது, தண்ணீரை சேமிக்க வேண்டியது, மனித நேயம், விலங்கு நேயம், பறவை நேயம், காட்டை அழித்து மரத்தை வெட்டி குடும்பத்தைச் சிதைத்ததை, பீட்டாவால் குளிர்பானங்களுக்கு வந்த தீங்கை, உலகமயத்தில் குருவி இனம், காளை இனம் அழிந்ததை, இயற்கை சீற்றம் வாழ்வின் நிலையாமையை உயர்த்தியதை, ஹைகூக்கள் விளக்குகின்றன
.
மொத்தத்தில் இந்நூல் பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளையும் உணர்த்தியுள்ளதை அறிகிறோம். இந்த நல்ல நூலை அனைவரும் படித்துணர வேண்டியது இன்றியமையாதது. என்றென்றும் பாசமுடன் மித்ரா
கருத்துகள்
கருத்துரையிடுக