நீ தான் ஒசத்தி! நூல் ஆசிரியர் : மகுவி !' நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




நீ தான் ஒசத்தி!

நூல் ஆசிரியர் : மகுவி !'

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : பாவைமதி வெளியீடு,
எண் : 55, வ.உ.சி. நகர், மார்கெட் தெரு, தண்டையார்பேட்டை,
சென்னை – 600 081. பக்கங்கள் : 96, விலை : ரூ.80


******

நூலாசிரியரின் பெயர் மகுவி வித்தியாசமாக உள்ளது. பெயரைப் போலவே கவிதைகளும் வித்தியாசமாக உள்ளன. நூல் முழுவதும் காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதி உள்ளார். காதல், காதல், காதல் தவிர வேறில்லை என்றபடி முழுக்க காதல் கவிதைகள்.

திரைப்படப் பாடல்களை உற்றுநோக்கும் பழக்கம் நூலாசிரியருக்கு இருப்பதால் பாடல்களின் பாதிப்பு கவிதை வரிகளில் தெரிகின்றன. கவிஞர் மனுஷி டாக்டர் மு. வான்மதி இருவரும் அணிந்துரை நல்கி உள்ளனர்.

விழியினால் தொடரும்
 உன் பார்வை ஒரு மனம்
     மனதினால் வளரும்
 மௌனம் கதை எழுதும்
     பூங்காற்றே நெருங்கி வராதே
 பெண்காற்று என் அருகே

‘அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்’ என்ற புகழ்பெற்ற வரிகளை நினைவூட்டும் விதமாக, கவிப்பேரரசு வைரமுத்து, ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே’ என்று எழுதினார். காதலின் முன்னுரை கண்களால் எழுதப்படுவதை நூலாசிரியர் உணர்ந்து வடித்த கவிதை நன்று.

என் மனதில்
 உனக்காக இடஒதுக்கீடு
  நூறு சதவீதம்
 என் விழியில்
   உனக்கான
 தனி மதிப்பீடு
    நூறு சதவீதம்
 என் உயிரில்
     இருக்கும் ஆயுள் கணக்கீடு
 நீ மட்டும்!

பெண்களுக்கு முப்பத்தி மூன்று சதவீத இடஒதுக்கீடு இன்னும் கிடைத்தபாடில்லை. நிறைவேற்றிட ஆள்வோருக்கும் மனமில்லை.

நூலாசிரியர் கவிஞர் மகுவி காதலிக்கு மனதில் நூறு சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது மகிழ்ச்சி. பாராட்டுக்கள். ஆண்கள் அனைவருமே மனதில் உள்ள ஆணாதிக்கச் சிந்தனைகளை விடுத்து பெண்ணிற்கு குறிப்பாக இல்லத்தரசிக்க்கு மனதில் இடஒதுக்கீடு தந்திட முன்வர வேண்டும். இப்படி பல சிந்தனையை விதைத்தது கவிதை.

     மணல் கொள்ளையைப் போலே
     என் நிழல் கொள்ளையடித்தாய்
     பார்வையில் ஊழல் செய்து
     காதல் விசாரணையில் என்னை சிக்க வைத்தாள்.

காதல் கவிதையில் கூட மணல் கொள்ளையை சாடும் விதமாக ஒப்பீடு செய்தது சிறப்பு. அரசியல்வாதிகளின் ஊழல் குற்றச்சாட்டை காதல் கவிதையிலும் உணர்த்த முடியும் என்று மெய்ப்பித்தமைக்கு பாராட்டுக்கள்.

ஆண் யானை
 மா மரத்தை ஒடிக்கும்
     பெண் யானை பசிக்கு
 பேரன்புப் பசிக்கு
     என் ஓர் அன்பை ஒடித்தேன்
 உன் உள்ளங்கையில்
      வைத்து மடித்தேன்.

ஒடித்தேன், மடித்தேன் என்று சொல் விளையாட்டு விளையாடி பெண் யானையின் பசியினைப் போக்கிட ஆண் யானை மாமரத்தையும் ஒடிக்கும் என்ற தகவலையும் கவிதை செய்து ஆண் யானை போல ஆண்மகனும் பெண்ணின் பசி போக்கிட உதவிட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக வடித்த கவிதை நன்று.

உனக்குள் எனக்குள்
 கிரிக்கெட் வேண்டாம்
     ஊழல் ஒட்டிக் கொள்ளும்

மட்டை விளையாட்டில் ஊழல் உள்ளது எனபதை காதலிக்கு உணர்த்தும் விதமாக வடித்த வரிகள் நன்று.

விளையாட்டில் உள்ள ஊழல் அறியாமல் ரசிகர்கள் நேரத்தையும், பணத்தையும் விரையம் செய்து ரசித்து வருகின்றனர். ஊடகங்கள் மட்டை விளையாட்டுக்கு தரும் முக்கியத்துவத்தை மற்ற விளையாட்டுகளுக்கு தருவதில்லை என்பது கசப்பான உண்மை. இப்படி பல சிந்தனை விதைத்தது கவிதை.

கச்சை மூடிய
 இச்சை தேவி
     எச்சில் ஊறிய
 அழகுத் தலைவி
     இம்சை அரசி
 என் பருவப் பசியின்
     பொன்னி அரிசி
 மடியில் வைத்த
 மடிக்கணினி!
     மனதை ஈர்த்த
 கந்தர்வ கன்னி நீ!
     மூடுபனி மூடிய முக்கனி
 நீ மூடி வைக்காதே!
     என்னிடம் தள்ளி ஓடி படுக்காதே!

இந்தக் கவிதை வரிகளை படிக்கும் போது திரைப்பட பல்கலை வித்தகர் நல்ல கவி ஞர் டி. ராஜேந்தர் அவர்களின் வைர வரிகளை நினைவூட்டும் விதமாக சில திரைப்படப் பாடல்களை நினைவூட்டும் விதமாக எழுதி உள்ளார். திரைப்படத்துறையில் முயற்சி செய்வதால் அந்த பாதிப்பு அவரையும் அறியாமல் அவர் எழுத்தில் வந்துள்ளன.

என்னை நீ விலகி இருக்க
     என் மீது பல காரணம் சொன்னாய்
     விளையாட பொம்மை ஏதுமற்ற
     பிள்ளை போல நின்றேன்.

காதல் கவிதையில் வந்து விழுந்துள்ள உவமை நன்று. ‘பொம்மை இழந்த குழந்தை போல தவிக்கிறேன்’ என்ற ஒப்பீடு நன்று.

விண்மீன்களை காவல் வைத்து
 நிலவு உறங்கியது!
     நிலவை காவல் வைத்து
 வானம் உறங்கியது!
     இருளை காவல் வைத்து
 காற்று உறங்கியது!
     காற்றை காவல் வைத்து
 பூமி உறங்கியது!
     பூமியின் என்னை காவல் வைத்து
 என்னவள் உறங்கினாள்!

காதலன் பொறுப்புள்ள காவல்காரனாக காதலியை காவல் காத்திட காதலி நிம்மதியாக உறங்கும் காட்சியை கவிதையின் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். பாராட்டுக்கள்.

ஒட்டென ஒட்டுதே
     ஓடி வந்து உன் வாசம்
     என் நெஞ்சில்
     தட்டென தட்டுதே
     என் மனசை
     உன் பார்வை!

இப்படி நூல் முழுவதும் ‘நீ தான் என் ஒசத்தி’ என்ற பெயருக்கு ஏற்றபடி காதலியை காதலை ஒசத்தி ஒசத்தி கவிதை வடித்துள்ளார்.

அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. சிறப்பாக அச்சிட்டு வெளியிட்டுள்ள பாவையர் மலர் ஆசிரியர் டாக்டர் ம. வான்மதி அவர்களுக்கும், நூல் ஆசிரியர் கவிஞர் மகுவி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

மனதில் தோன்றியதை எல்லாம் எழுதி விடுகிறார். எழுதிய எல்லாவற்றையும் நூலாக்கி விடாமல் எழுதியவற்றில் தேர்ந்தெடுத்து நூலாக்கினால் இன்னும் சிறப்பாக அமையும். தொடர்முயற்சிக்கு பாராட்டுக்கள்.

******

கருத்துகள்