தமிழாற்றுப்படை !
நூல் ஆசிரியர் : கவிப்பேரரசு வைரமுத்து !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நூல் வெளியீடு : 3, சூர்யா லிட்ரேச்சர் (பி) லில்., சென்னை – 24. பக்கம் : 360, விலை : ரூ. 500.
******
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பல நூல்கள் எழுதி இருந்தாலும் இந்த நூல் அவரது இலக்கியப் பணிக்கு சிகரமாக மகுடமாக அமைந்துள்ளது. இந்த நூலை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் இனிய நண்பர் பொறியாளர் ஜ. சுரேஸ் அவர்கள் மதிப்புரைக்காக வழங்கினார்.
இந்நூலை கவிப்பேரரசு அவர்கள், அவரது மனைவி டாக்டர் பொன்மணி வைரமுத்து அவர்களுக்கு உரிமை வழங்கி உள்ளார். சிறப்பு.
“எனக்கு நண்பராய், மந்திரியாய், நல்லாசிரியராய் விளங்கிய கலைஞர் அவர்களே, நீங்கள் இல்லாமல் வெளிவரும் இந்நூலிலும் நீங்கள் இருக்கிறீர்கள்” என்று மிகவும் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.
தினமணி, தி இந்து நாளிதழ்களில் கட்டுரைகளாக வந்த போதே படித்து இருந்தாலும் மொத்தமாக நூலாகப் படித்த போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற நாமக்கல் கவிஞரின் வைரவரிகளை திரும்பவும் உச்சரித்து மார் தட்டிக் கொண்டேன். உலகின் முதல்மொழியும் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும். நிலையான மொழியான தமிழை தாய்மொழியாகக் கொண்ட உலகத் தமிழர் யாவரும் பெருமை கொள்ளும் விதமாக வந்துள்ள நூல்.
இந்த நூல் பற்றி நீதியரசர் நாகமுத்து, இனமுரசு சத்யராஜ், நடிகர் விவேக், பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், நக்கீரன் கோபால் என்று பலரும் இந்நூலின் பெருமைகளைக் குறிப்பிட்டு வந்த ஒளிக்காட்சிகளை புலனத்தில் வைரமுத்து அவர்களின் நிரந்தர உதவியாளர் ப. பாஸ்கரன் அவர்கள் தொடர்ந்து எனக்கு அனுப்பி வைத்தார். நான் படித்துவிட்டு முகநூலிலும் பதிவு செய்து வந்தேன். பலரும் பாராட்டிய நூல் இது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அனைவருமே சிறப்பாகப் பேசி இருந்தார்கள். குறிப்பாக வை.கோ. அவர்களும், நீதியரசி விமலா அவர்களும் பேசிய பேச்சு காணொலியில் கண்டு மகிழ்ந்தேன்.
தொல்காப்பியர் தொடங்கி கவிக்கோ அப்துல் ரகுமான் வரை 24 ஆளுமைகள், தமிழறிஞர்கள் பற்றி கட்டுரை வடித்துள்ளார். வடித்த கட்டுரையை ஒவ்வொரு ஊரிலும் வாசித்து அரங்கேற்றம் செய்தார். மதுரையில் நடந்த விழாவிற்கு நான் நேரில் சென்று இருந்தேன். கட்சி மாநாடு போல கூட்டம் கூடி இருந்தது.
இந்த நூலிற்காக நூலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கடின உழைப்பை நல்கி உள்ளார். தேடித்தேடி நூல்கள் படித்து ஆய்வுசெய்து ஆய்ந்து அறிந்து தெளிந்து வடித்துள்ளார். என்னுரையில் குறிப்பிட்ட வைர வரிகள் நூலின் நோக்கத்தையும் உழைப்பையும்
“தமிழர்கள் உலகம் ; உலகுக்கும் தமிழ் என்ற இரண்டு பேரியக்கங்கள் நாட்டில் நடைபெற வேண்டும். மொழி – இனம் – நிலம் என்ற பெருமிதங்களைத் தமிழர்களின் மரபணுக்குக்குள் ஊட்ட வேண்டும். அந்தப் பெரும்பணிகளுள் ஒரு சிறு பணி தான் இந்தத் தமிழராற்றுப்படை.
இது என் வாழ்நாள் ஆவணம். 3000 ஆண்டு நீளமுள்ள தமிழ்ப்பெருங்காட்டில் பறந்து பறந்து, திரிந்து திரிந்து, பார்த்துப் பார்த்து, பறித்துப் பறித்துத் தொகுக்கப்பட்ட உயிர்ப்பூக்களின் ஒரு தனிமாலை, என் வாழ்நாளின் நான்காண்டுகளை உறிஞ்சிக் கொண்ட ஒரே நூல் இது தான்”என்று கூறுவதில் அறியலாம்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் நான்கு ஆண்டுகள் உழைப்பில் உருவான நூல் இது. முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் குறிப்பிடுவார், “நூலிற்கு விலையை யாரும் தரமுடியாது ; தாளிற்கும் அச்சிற்குமான விலை தான்” என்பார். அதுபோல் விலைமதிப்பற்ற நூல் இது.
இந்த நூலை மொழிபெயர்ப்பது கடினம் என்ற போதிலும் மொழி அறிஞர்கள் யாராவது முன்வர வேண்டும். ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்த்து வழங்கினால் தமிழின் பெருமையை அருமையை இந்தியாவும் உலகும் அறியும். தமிழர் இல்லங்களில் இருக்க வேண்டிய நூல் இது. தொல்காப்பியர் கட்டுரையிலிருந்து சில துளிகள்.
இந்தப் பேரண்டத்தை அளக்கும் அத்தனை சொற்களையும் இரண்டே இரண்டு செப்புக்குள் அடைக்கிறார் தொல்காப்பியர். ஒன்று உயர்திணை, மற்றொன்று அஃறிணை. மனிதர் உயர்திணை. மனிதக் கூட்டம் அல்லாதவையெல்லாம் அஃறிணை. அந்த உயர்திணையை ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற ஒன்றுக்குள் அடக்கிய தொல்காப்பியர், அஃறிணையை ஒன்றன்பால், பலவின்பால் என்ற இரண்டுக்குள் அடக்குகிறார். இந்தச் சொற்பகுப்பைத் தமிழ்ஞானத்தின் உச்சம் என்றே கொண்டாடலாம்.
எந்த ஒரு மொழியிலும் இப்படி ரத்தினச் சுருக்கமான விளக்கத்தைக் காண முடியாது. மறைந்தும் மறையாத தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும், சென்னையில் நடந்த கட்டுரை அரங்கேற்றத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நூல் பற்றி மதுரை திருவள்ளுவர் மன்றத்திலும் சிறப்புரையாற்றினார்.
கபிலர் பற்றி கட்டுரையில் சில வரிகள்
“கடைசி மனிதனின் திசுக்களில் ஆதி மனிதனின்
மரபணுக்கள் அதிரும் வரை கபிலர் இருப்பார்”
மரபணுக்கள் அதிரும் வரை கபிலர் இருப்பார்”
அவ்வையார் என்றதும் நம் நினைவிற்கு உடன் வருவது ஆத்திசூடி. அவ்வையாருக்கு கட்டுரையின் மூலம் மகுடம் சூட்டி உள்ளார். உலகப்பொதுமறை நல்கிய திருவள்ளுவரை உச்சத்தில் வைத்து விட்டார். இளங்கோவடிகள் தான் சிலப்பதிகாரம் என்ற குடிமக்கள் காப்பியம் வடித்தார். அவருக்கு அணிகலன் பூட்டி உள்ளார். அப்பர் தமிழுக்கு வழங்கிய கொடையை அள்ளி வழங்கி உள்ளார். ஆண்டாள் பாடல்களின் தனிச்சுவையை எடுத்து இயம்பி உள்ளார்.
செயங்கொண்டார், கம்பர், திருமூலர், கால்டுவெல், வள்ளலார், உ.வே. சாமிநாதய்யர், மறைமலையடிகள், பாரதியார், பெரியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், அண்ணா, கலைஞர், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன், அப்துல் ரகுமான் இப்படி இருபத்தி நான்கு பேரின் படைப்பாற்றலை படம்பிடித்துக் காட்டி உள்ளார். கருஞ்சூரியன் என்ற பெயரில் பெரியார் கட்டுரை தனிநூலாகவும் வந்துள்ளது.
24 நூல்கள் படித்த மகிழ்ச்சியை தமிழராற்றுப்படை என்ற ஒரு நூலே தந்து விட்டது. நூலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
.
கருத்துகள்
கருத்துரையிடுக