நூல் பெயர்: இறையன்பு கருவூலம். நூலாசிரியர்:அய்க்குக் கவிஞர் இரா. இரவி. ! நூல் மதிப்புரை: நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.
நூல் பெயர்: இறையன்பு கருவூலம்.
நூலாசிரியர்:அய்க்குக் கவிஞர் இரா. இரவி.
____________________________________________
நூல் மதிப்புரை: நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.
தொடர்பு எண்: 98455 26064.
மின்னஞ்சல்: neruppalaipaavalar@gmail.com
---------------------------------------------------------------------------------
பதிப்பகம்:வானதி பதிப்பகம்
#23, தீனதயாளு தெரு,
தி. நகர், சென்னை-6000017.
பக்கங்கள்: 152
விலை : ரூ. 110.
____________________________________________
அய்க்குத் திலகம் மதுரை இரா. இரவியின் இரு விழிகளாக விளங்குபவர்கள் தமிழ்த் தேனீ, முனைவர். மதுரை இரா. மோகன் அவர்களும் ,இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, முதுமுனைவர். வெ. இறையன்பு அவர்களும் ஆவர். இவ்விருவரில் வழிகாட்டியாய், ஊக்க மருந்தாய், தந்தை போன்று கவிஞர் இரா. இரவின் வளர்ச்சியில் வானமாய்த் திகைந்தவர் தமிழ்த் தேனீ இரா. மோகன் அவர்கள். கவிஞர் இரா.இரவின் புதிய நூலா? முனைவர் இரா. மோகன் அவர்களின் அணிந்துரை இல்லாமல் நூல் வெளிவராது என்று பகருமளவில் நூல் தோறும் அணிந்துரை அணிகலனுடன் தான் வெளிவரும். அந்தளவுக்குக் கவிஞர் இரா. இரவி செல்லப் பிள்ளையாக விளங்கினார்.
இந்தச் செல்லப் பிள்ளைக்கு பேரா. இரா.மோகன் அவர்கள் வழங்கிய இறுதியான அணிந்துரை இடம் பெற்றிருப்பது இந்நூலாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். கரணியம் எதிர்ப்பாரா வகையில் கடந்த 12.06.2019 அன்று இயற்கை எய்தியதே ஆகும். இரண்டு விழிகளில் ஒன்றான தமிழாகரர் இரா. மோகன் அவர்களை இழந்திருக்கும் நிலையில் இந்நூல் மதிப்புரையை எழுதுகிறேன். இனி நூலுக்குள் நுழைவோம்.
கவிஞர் இரா. இரவியின் இருபதாம் நூலாக வெளிவந்திருக்கும் " இறையன்பு கருவூலம்" என்ற இந்நூல், கவிஞருக்கு இருவிழிகளில் ஒன்றாக விளங்கும் முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் தீட்டிய நூல்களை வாசித்து மதிப்புரையாக வரைந்து, புதுவையிலிருந்து வெளிவரும் புதிய உறவு இதழில் வெளிவந்தத் திறனாய்வுக் கட்டுரைகளாகும். இந்தத் திறனாய்வுக் கட்டுரைகளுக்கு, நான் எழுதும் திறனாய்வே இம் மதிப்புரையாகும்.
இந் நூலிலுள்ள மதிப்புரைகளை ஐந்து பிரிவுகளாக்கி ஒவ்வொரு பிரிவிலும் சேர்ந்த இருபத்தொன்பது கட்டுரைகளை வரிசைப் படுத்தியுள்ளார். இதில் முதுமுனைவர் வெ. இறையன்புவின் நூல்கள் பற்றி, மேடையில் முழங்கிய கருத்துரைகள் பற்றி,பிற நூல்களுக்கு வழங்கிய அணிந்துரைகள் பற்றி, நிருவாகத் திறன் பற்றி, இவரைப் பற்றி வெளிவந்த நூல்கள் பற்றி என முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களின் எல்லாப் பக்கப் பன்முகத் திறனையும் நூலாசிரியர் அலசி, ஆராய்ந்துள்ளார் ; அருமையானக் கருத்துக் கருவூலத்தை வழங்கியுள்ள நூலாசிரியர்க்கு முதலில் என் இதயங் கனிந்த பாராட்டு.
"மூளைக்குள் சுற்றுலா" என்ற நூலின் முதல் மதிப்புரையில், " தொன்றுதொட்டக் காலமாக' தங்க விதி' என்ற ஒன்று, மானிடச் சமுதாயத்தை இயக்குகிறது. அதுவே நம் சட்டம், ஒழுக்கம், நீதி நூல்கள், நாட்டாண்மை போன்ற அத்துணைக்கும் அடிப்படை, 'மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும்? என்று நீ விரும்புகிறாயோ, அதையே நீ அடுத்தவர்களுக்கும் செய். ' என்பதுதான் அது. அதைப் போலவே, அடுத்தவர்கள் நமக்கு எதைச் செய்யக்கூடாது என எண்ணுகிறாயோ அதை மற்றவர்களுக்கு நாம் செய்யக் கூடாது. " என்றும்,
"இந்த விதியைக் கடைபிடித்து நடந்தால், சமுதாயம் சீர்படும், செம்மைப்படும். சிறந்து விளங்கும்; வன்முறைகள் ஒழியும்; மன அமைதி பிறக்கும். " என்ற தத்துவங்களைக் கோடிட்டுக் காட்டியுள்ளக் கருத்து சமுதாயத்திற்கு தேவையானதாகும்.
இதே திறனாய்வில், மூளைப் பற்றிய அறிவியல் சார்ந்துள்ளவை என்னவெனில்,
"மனித மூளைகள் மட்டுமல்ல.... மனிதக் குரங்குகள், புழு, பூச்சி, எறும்பு என அனைத்து உயிரினங்களின் மூளைப் பற்றிய தகவல்கள் பற்றி குறிப்பிட்டிருப்பதை வாசிக்கும்போது வியப்பு நம்மைத் தொற்றிக் கொள்கிறது.
முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களின்" முடிவு எடுத்தல் " என்ற நூலின் மதிப்புரையில், " முடிவெடுப்பதை நிறுவனங்கள் மாத்திரமே செய்வதில்லை: ஒவ்வொரு மனிதனும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கச் செல்லும் வரை முடிவெடுத்துக் கொண்டே இருக்கிறான்; பிச்சைக்காரன் கூட ' யாரிடம் பிச்சை எடுக்கலாம்' என்று முடிவெடுத்துத் தான் பிச்சை எடுக்கிறான். " என்று தனி மனிதர் முதல் நிறுவனம் வரை முடிவெடுத்தலை அழகாக படம் பிடித்துள்ளவற்றைச் சுட்டிச் சிந்திக்க வைத்துள்ளார்.
சுயமரியாதை இயக்கங்களான திராவிடக் கட்சிகளால் இன்று தமிழுணர்வு பெற்றவர்களே, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று உளரிக் கொண்டிருக்கும் வேளையில், " சுயமரியாதை " என்ற நூல் வழியாக, "சுயமரியாதை இயக்கங்கள் தோன்றிய பின்பு தான் நமது தமிழகத்தில் கல்வியும், பதவியும் எல்லோருக்கும் கிடைக்கும் நிலை வந்தது; மனிதனுக்கு அழகு,
சுயமரியாதையோடு வாழ்வது தான்; இந்தச் சுயமரியாதை ஈ. வெ. ரா. பெரியார் பிறக்காமல் இருந்திருந்தால் தமிழினம் இன்னமும் மூன்று விழுக்காடு மக்கள் தொகை கொண்ட ஒரு இனத்திற்கு அடிமையாக இருந்திருப்போம்". என்று கன்னத்தில் அறைந்தாற் போல நூலில் உள்ளக் கருத்தை நூலாசிரியர் சுட்டி இருப்பது காலத்தின் கட்டாயம் தேவை என்று தோன்றுகிறது.
இந்திய ஆட்சிப் பணி அதிகாரி வெ. இறையன்பு அவர்களின், " இலக்கியத்தில் மேலாண்மை " என்ற நூலை ஆய்ந்த கவிஞர் இரா. இரவி அவர்கள், " இந்நூலை வாசிப்பதற்கு முன்பு வெள்ளைத் தாளாக இருந்த நம் மனம் வாசித்தப் பின் அச்சடிக்கப்பட்ட நூல் போல் ஆகிவிடுகிறது." என்பவர் அதற்கானத் தத்துவங்களை வரிசைப் படுத்தியுள்ளவர்,
" இயந்திரமான உலகில் எல்லா நூல்களையும் வாசிக்க முடியாதவர்கள் இந்த ஒரு நூலை மட்டும் வாசித்தால் போதும் " என்பதற்கு ஏற்ப, எடுத்துக் காட்டாக முத்தாய்ப்பாக ஒரு செய்தி இயம்புவது என்னவெனில், " குப்பையிலும் ஒரு மேலாண்மை உள்ளது. " என்று விவரித்திருப்பதைக் கண்டு நானே திகைத்துப் போனேன். அவசியம் இலக்கியத்தில் மேலாண்மை எனும் நூலை மாணாக்கர் உட்பட வாசிக்க வேண்டும் என்று நானும் உணர்கிறேன்.
மிகச் சிறந்த கட்டுரையாளரும், கருத்துரையாளரும், ஆளுமை நிறைந்த அதிகாரியுமான வெ. இறையன்பு அவர்கள், மிகச்சிறந்த கவிஞருங்கூட என்று அடையாளங் காட்டும் நூல்தான்" வைகை மீன்கள் " என்ற கவிதை நூலாகும்; என்று இந்நூலாசிரியர் கவிஞர் இரா. இரவி அவர்கள், " கவிதை எழுதிய கவிஞரே வந்து விளக்கவுரை தந்தால் ஒழிய, புரிய இயலாத கவிதைகள் மலிந்து விட்ட காலத்தில், தெளிந்த நீரோடை போன்ற நடையில், புரியும் எளிய நடையில் அய்க்கூக் கவிதைகளுக்குரிய இலக்கணத்துடன், சிற்பி சிலை வடிப்பது போல, நுட்பமுடன் கவிதை வடித்துள்ளார். " என்று புகன்ற பின் நான் என்ன புகல? நூலை வாங்கி வாசியுங்கள் என்பதே என் விழைவு.
இவ்வாறு முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களின் நூல்களைப் பற்றியும், அவரின் பேச்சு, அணிந்துரைகள் பற்றியும் பன்முகத் திறனையும், கவிஞர் இரா. இரவி அவர்கள் அடுக்கிக்கொண்டே போவதை நானும் அடுக்கிக்கொண்டே போனால், இம் மதிப்புரை நூலாக விரிந்து விடும் என்பதால் இத்துடன் நிறுத்தி வாசகப் பெருமக்களிடம் வேண்டுகோளாக வைப்பது என்னவெனில், இருவரின் நூல்களையும் தவிர்க்காமல் வாங்கி வாசிக்க வேண்டும் என்று விழைவதே ஆகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக