இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் ஆய்வுரை : முனைவர் ந.செ.கி. சங்கீத் ராதா ! உதவிப் பேராசிரியர் தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி மதுரை
இறையன்பு கருவூலம் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் ஆய்வுரை : முனைவர் ந.செ.கி. சங்கீத் ராதா !
உதவிப் பேராசிரியர் தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி மதுரை
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கங்கள் : 152, விலை : ரூ.110.
நூல் மதிப்புரை : முனைவர் ந.செ.கி. சங்கீத் ராதா !
*******
மதுரை மாநகருக்கு எத்தனையோ அடையாளங்கள் உண்டு என்றாலும், ‘ஹைக்கூ திலகம்’ என்றால் மதுரையில் அடையாளம் காட்டப்படும் ஆளுமையாளர் இரா. இரவி அவர்கள்!. நம் வாழ்க்கையின் வழிகாட்டியாக, நம் மனதில் தோன்றும் மானசீக குருவாக, இளைஞர்களின் எழுச்சி நாயகனாகத் திகழும் முதுமுனைவர், முதன்மைச் செயலர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் படைப்புகளைக் கொண்டு ‘இறையன்பு கருவூலம்’ என்ற அற்புதமான நூலினைப் படைத்துள்ளார். கவிஞரின் ஆக்க வரிசையில் இந்நூல் இரண்டாம் பத்தின் இடத்தை (20) நிறைவு செய்கின்றது. இனி கவிஞரின் மதிப்புரையில் மனம் கொள்ளலாம்.
- மூளைக்குள் சுற்றுலா
‘மூளைக்குள் சுற்றுலா’ செல்வதற்கு முன் கவிஞர் சில தகவல்களை நம்மிடம் பகிர்கிறார். ‘மூளைக்குள் சுற்றுலா’ என்ற தமிழறிவியல் நூல் முதுமுனைவரின் படைப்பு வரிசையில் சதம் அடித்துள்ள நூல். செய்திகளுக்கேற்ற வண்ணப்படங்களுடன் வெளியிட்டுள்ளது நியூ செஞ்சுரி பதிப்பகம். நூலின் நோக்கத்தை டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதை பதிவு செய்துள்ளார்.
‘மூளைக்குள் சுற்றுலா’ செல்லும் கவிஞர் சில இடங்களில் தங்கி இளைப்பாறுகிறார்! சில இடங்களில் நின்று அசைபோடுகிறார்! சில இடங்களில் மெய்சிலிர்க்கிறார்! இதோ பதச்சோறாக,
நாமக்கல் கவிஞரின் வைர வரிகளை உவமை கூர்ந்து நோக்கும் கவிஞரின் வாசக வரிகள் நனி சிறந்தது.
“தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
மனிதன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”
மனிதன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”
மேலும் வேளாண்மைக்கு ஒப்பிட்டு,
“நூலாசிரியரின் அய்ந்து வருட உழைப்பு இந்நூலின் மூலம் அறுவடை ஆகியுள்ளது. நல்ல விளைச்சல்” என நூலாசிரியரின் கடின உழைப்பினை உளமாரப் பாராட்டியுள்ளார்.
நூலாசிரியரின் கருத்தினை மேற்கோளிட்டு அதற்கு கீழ் தமது கருத்தினைப் பதிவு செய்கின்ற பாங்கு கவிஞரின் தனித்துவத்தை பறைசாற்றுகின்றது. சான்றாக, “அடுத்தவர்கள் நமக்கு எதைச் செய்யக்கூடாது என எண்ணுகிறோமோ, அதை மற்றவர்களுக்கு நாம் செய்யக்கூடாது” உண்மையில் தங்கமான விதி தான். இந்த விதியை உலகில் உள்ள மனிதர்கள் யாவரும் கடைபிடித்தால், உலகில் அமைதி நிலவும், சண்டை சச்சரவுகள் வாரா. சமுதாயம் சீர்படும்.
மற்றவர் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்வதே தன்னை முன்னிலைப்படுத்தும் என்ற மு(பி)ற்போக்குச் சிந்தனை கொண்டவர்-களுக்கு மத்தியில், முதுமுனைவரைப் போற்றும் பிற அறிஞர்களின் புகழாரங்களை வழிமொழிந்து, தாமும் அதையே பதிவு செய்துள்ளது கவிஞரின் தாயுள்ளத்தை தரணிக்கு உணர்த்துகின்றது. குறிப்பாக, ‘இலக்கியத்தில் மேலாண்மை’ நூலினைப் படித்துவிட்டு, “இறையன்பு அவர்களே நினைத்தாலும் இதுபோன்ற நூலை இனி எழுத முடியாது, அவ்வளவு சிறப்பாக இந்நூல் அமைந்துள்ளது” என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை ஐயா புகழாரம் சூட்டியதைக் குறிப்பிட்டு தாமும் அதனையே, “மூளைக்குள் சுற்றுலா” நூலிற்கு பதிவு செய்திருப்பது புகழாரம் சூட்டியவருக்கும் பெருமை! புகழாரம் சூட்டப்பட்டவருக்கும் பெருமை! அப்புகழாரத்தை நினைவுகூர்ந்த கவிஞருக்கும் பெருமை!
மதிப்புரையில் கவிஞரின் பகுத்தறிவுச் சிந்தனைகள் ஆங்காங்கே துளிர்விடுகின்றன. ‘தலாய்லாமா’ கருத்தினை நூலிலிருந்து எடுத்துக்கூறி, தனது பங்கிற்கு, மனித மூளையில் மனித நேயம் இருந்தும் சாதிச் சண்டைகளுக்கும், மதச் சண்டைகளுக்கும் வேலை இருக்கிறது என்கிறார் கவிஞர்! ‘மனதில் மனிதநேயம்’ என்பது போய் ‘மூளையில் மனித நேயம்’ என்பது முரண் அழகு!
கவிஞரின் மதிப்புரையில் நயக்கத்தக்கது என்னவெனில், “தமிழ்த்தேனீ இரா. மோகன் ஐயா அவர்களின் அருகே அவர் எழுதிய நூல்களை அடுக்கினால் அவரை விட உயரமாக இருக்கும்” என்று முதுமுனைவர் எழுதிய அணிந்துரையை இங்கு குறிப்பிட்டு, அதுவே முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களுக்கும் பொருந்தும் எனப் பாராட்டியது சாலச் சிறந்தது
.
நிறைவாக இந்நூலுக்கு ‘சாகித்திய அகதெமி’ விருது வழங்க வேண்டும் என்ற கவிஞரின் அவாவினை வாசகர்களின் நெஞ்சங்களும் அள்ளிச் செல்கின்றன.
2. முடிவு எடுத்தல் !
ஈரோடு புத்தகத் திருவிழாவில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்ட 60 நூல்களில் ஒன்று ‘முடிவு எடுத்தல்’.
சில துளிகள் :
“ஒவ்வொரு மனிதனும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கச் செல்லும் வரை முடிவெடுத்துக் கொண்டே இருக்கிறான். பிச்சைக்காரன் கூட யாரிடம் பிச்சை எடுக்கலாம் என்று முடிவெடுத்து தான் பிச்சை எடுக்கிறான். யார் பிச்சை போடுவார்கள் என்று அவனுக்குள் தீர்மானிக்கிறான்” என்று முதுமுனைவரின் கருத்தினை எடுத்துரைப்பது மனம்கொள்ளத்தக்கது.
மேலும், நூலாசிரியர் கருத்துக்கு கட்டியம் கூறும் வகையில், ‘மனைவியிடம் கலந்து பேசி முடிவெடுத்தால், மனைவிக்கு மகிழ்ச்சி!’ குடும்பத்தில் சண்டை இருக்காது, அமைதி நிலவும்! என்று பெண்ணை மதிக்கின்ற பெருந்தக்க உரைகளை பெரிதுவந்து கூறுவது, இயல்பிலேயே பெண்ணை மதிக்கின்ற உயர்ந்த பண்பினைக் கொண்டவர் கவிஞர் என்பது நன்கு புலனாகின்றது.
‘முடிவு எடுத்தல்’ என்பது ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்களுக்கு மட்டுமன்றி ஒரு சாமானியனுக்கும் பொருந்தும் என்பதை தமது பணி மாற்றத்தால் ஏற்பட்ட சிரமத்தையும், தான் மேற்கொண்ட முடிவினையும், மனைவியின் நல்லுரை கேட்டு அம்முடிவினை கைவிட்டதையும் பதிவு செய்திருப்பது சாலச்சிறந்தது. திருவள்ளுவர் காட்டும் ‘மனைத்தக்க மாண்புடையாளை’ நினைவு கூர்கிறார் திருமதி இரவி!
துணி எடுப்பதிலிருந்து தூய்மையான நிரவாகம் பண்ணுவது வரை, எப்படி? எப்படி? என்று பல எப்படிகளுக்கு பதில் சொல்லும் நூலினை படிப்படியாக ஆய்ந்து, ‘இப்படி’ என மதிப்புரை வழங்கியதோடு மட்டுமல்லாமல் ‘உடன் முடிவெடுத்து, நூலினை வாங்கிப்படி’ என்று அன்புக்கட்டளையிடுகிறார் இந்த ஹைக்கூ கவிஞர்!
3. சுய மரியாதை !
‘சுய மரியாதை’ நூல் பற்றிய மதிப்புரையில் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் உயர்ந்த நற்பண்புகளை தலைப்போடு பொருந்திய அவரது வாழ்க்கைமுறையினை பல்லாற்றானும் பாராட்டி மெச்சுகிறார் கவிஞர்!
இதோ பதச்சோறு!
“முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களுக்கு சுயமரியாதை பற்றி நூல் எழுதிட முழுத் தகுதியும் உண்டு. காரணம் அவர் சுயமரியாதை மிக்க மனிதர். எதற்காகவும் நேர்மையை, ஒழுக்கத்தை, பண்பை விட்டுக் கொடுக்காமல் மதிப்பாக வாழ்ந்து வரும் உயர்ந்த மனிதர். நிலவொளி பள்ளியின் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர். மாமனிதர் அப்துல்கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் மாமனிதர்! பேசியபடியும், எழுதியபடியும் வாழ்ந்து வரும் நல்லவர். பேச்சுக்கும், எழுத்துக்கும் வேற்றுமை இல்லா சிறந்த மனிதர்!” (பக். 29)
“தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர், இளை ஞர்களைக் கூட ‘அய்யா’ (பக். 30) என்று அழைக்கின்ற பரந்த மனம் கொண்டவர்” என்று பெயர் குறிப்பிடாத நூலாசிரியரின் கருத்திற்கு மோனை போல் முன்வந்தெழுந்து தந்தை பெரியார் தான் அத்தகைய பண்பாளர் என்று முன்மொழியும் கவிஞரின் முத்துரைகள் மனம் கொள்ளத்தக்கது. மேலும் பெரியாரின், ‘வைக்கம்’ போராட்டம், இட ஒதுக்கீட்டிற்காக இந்திய அரசியல் சட்டத்தை முதன்முதலில் திருத்தி அமைத்து வெற்றி பெற்றமை, சுயமரியாதை என்ற சொல்லுக்கு இலக்கணம் பெரியார் எனக் குறிப்பிடுவது போன்றவை பகுத்தறிவுப் பகலவன் மேல் கவிஞர் கொண்டிருக்கும் ஈடுபாட்டினை முரசு கொட்டி அறிவிக்கின்றது.
“நாம் இன்றைய அறிவு உலகத்தில் யாரும் புறக்கணிக்க முடியாதபடி திகழ்வதற்கு அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்வது அவசியம்” (பக்.31) என்ற நூலாசிரியரின் கருத்திற்கு அரண் சேர்க்கும் வகையில், தாம் இணையம் தொடங்கி வளர்ந்து காட்டியபோது தான், முதலில் தன்னைப் புறக்கணித்த புகழ்பெற்ற இதழ்கள், பின்னர் தனது நேர்முகத்தினை வெளியிட்டன எனக் கவிஞர் பதிவு செய்திருப்பது, வளரும் திறமையாளர்கள், படைப்பாளர்கள் மண்வெட்டி கொண்டு மனதில் பதப்படுத்த வேண்டியவை!
4. உலகை உலுக்கிய வாசகங்கள் !
முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் தினத்தந்தியில் ஞாயிறுதோறும் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு தான் ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’ தந்தி பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.
‘உலகை உலுக்கிய வாசகங்கள்’ படித்தால் வாசகர்களின் மனதையும் உலுக்கி விடுகின்றது என்ற கவிஞரின் மதிப்புரையே மதிப்புறு உரையாக மாறுகின்றது.
முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களைக் கொண்டாடும் கவிஞர், ‘தக்க நேரத்தில், தகைசிறந்த தலைமகன்’ மேதகு அப்துல்கலாம் ஐயா அவர்களின் தலையாய பாராட்டுரையை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
முதுமுனைவரின் ‘போர்த்தொழில் பழகு’ நூலைப் படித்து விட்டு, “இறையன்பு அவர்களின் நூலைப் படித்தால் ஞானியாகலாம்” என்று மனதாரப் பாராட்டினார். ஆனால் இன்று இந்த நூல் படிக்க கலாம் ஐயா இல்லையே என்ற ஆழ்ந்த ஏக்கத்தையும் தொடரில் வந்தபோது அவசியம் படித்திருப்பார் என்ற ஆதங்கத்தையும் சுட்டிச் செல்வது, முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் மேல் கவிஞர் கொண்ட அளவிடற்கரிய அன்பையும், சொல்லில் அடங்கா மதிப்பினையும் பன்மடங்கு பறைசாற்றுகின்றது.
நூலில் சொல்லப்பட்ட கருத்துக்களை மிக நுட்பமாக ஆய்ந்து அறிந்து அதனைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார் கவிஞர். சாக்ரடீஸைப் பற்றி படிக்கும் போதே, கவிஞர் கண்முன் வந்து நிற்கிறார்.
“நல்லது என எண்ணி உண்டால் நஞ்சும் உரமாகும்
நல்லவர் என எண்ணி அணுகினால் நட்பும் வரமாகும்!”
நல்லவர் என எண்ணி அணுகினால் நட்பும் வரமாகும்!”
போன்ற கவித்துவ வரிகளை காட்டிச் செல்வது நூலின் மதிப்புரையை உயர்த்துவதோடு, நூலின் விற்பனையையும் (முந்தைய நூல் விற்பனையை முறியடிக்கும்) இங்குக் கட்டியம் கூறிச் செல்வது நயக்கத்தக்கது.
5. இலக்கியத்தில் மேலாண்மை !
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் ஆகச்சிறந்த நூலாக இந்நூல் திகழ்கின்றது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை ஐயா, நீதிபதி விமலா அவர்களின் பாராட்டுரையோடு தனது மதிப்புரையைத் தொடங்குகிறார் கவிஞர்!
இந்நூல் படித்தபின் கவிஞர் தரும் நற்சாண்றுக்கான உவமை ஆகச்சிறந்த உவமையாக உள்ளது.
‘இந்நூலைப் படிப்பதற்கு முன் வெள்ளைக் காகிதமாக இருந்த நம் மனம், படித்தபின், அச்சடிக்கப்பட்ட நூல் போல் ஆகி விடுகின்றது!’சதா நூலினை எழுதுவதும், வாசிப்பதும், வெளியிடுவதுமாக உள்ள கவிஞருக்கு உவமைக்கும் நூலே மோனை போல் நிற்கிறது. மேலும், “இந்த ஒரு நூல் படித்தால் நூறு நூல்கள் படித்தது மாதிரி” என்று நடிகர் ரஜினிகாந்த் பேசிப் புகழ்பெற்ற திரைப்பட வசனத்தை நினைவு கூர்வது மனம் கொள்ளத்தக்கது.
மேலாண்மை எங்கும் எதிலும் நிறைந்துள்ளது என்பதற்கு கவிஞர் கூறும் பல்லாற்றானும் சான்றுகள் சாலச்சிறந்தது. திருக்குறளில் மேலாண்மை பற்றிய செய்திகள் கொட்டிக் கிடப்பதை தமிழர்கள் இன்னும் முழுமையாக அறியவில்லை என்பதை, மதுரையிலிருந்து கொண்டு மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை பார்க்காதவர்கள் போல என்றுரைப்பதில் எள்ளல் தன்மை இழையோடுகிறது.
கவிஞரும் ஒரு சுற்றுலா அலுவலர் என்பதை இங்கு நினைவுபடுத்தியதோடு, முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள், சுற்றுலாத் துறையில் ஆணையராக இருந்த காலம் சுற்றுலாத் துறையின் ‘பொற்காலம்’ என்று குறிப்பிடுகிறார். வரலாற்றில் குப்தர்களின் காலம் பொற்காலம் என்பது நமக்கு நினைவு வருகின்றது. நிறைவாக, நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களின் மேலாண்மைக்கு இந்நூல் உரமாகத் திகழ்கிறது என்ற கவிஞரின் கருத்து மிகையன்று.
6. வைகை மீன்கள் !
“கவிதை எழுதிய கவிஞரே வந்து விளக்கவுரை தந்தாலொழிய புரிய இயலாத கவிதைகள் மலர்ந்துவிட்ட காலத்தில்” என்ற கவிஞரின் தொடக்கவுரையே சமகால இலக்கியத் தரவுகளை பிரதிபலிக்கின்றன. தன்னைக் கவர்ந்த வரிகளைக் குறிப்பதற்கு பக்கம்தோறும் தாள் வைத்து இறுதியில் நூல் முழுவதும் அத்தனை பக்கங்களிலும் தாள் வைத்திருந்தேன்” என்ற கவிஞரின் கூற்று மனம்கொள்ளத்தக்கது
.
‘தினசரி பார்த்தாலும் சிலருடைய முகம்’, ‘உரை’ என்பதற்கான இலக்கணம், ‘அதிகபணி’ என்பதற்கான வரையறை போன்றவை பதற்சோறுகள். ஓர் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வாழ்விலக்கணம் நூலாசிரியர் என்பது கவிஞரின் நற்சான்று: கவிதை பற்றிய வர்ணிப்பு அள்ள, அள்ள குறையாத அட்சயப் பாத்திரமாக கவிஞரிடம் மிளிர்வதை இக்கட்டுரையின் நிறைவால் காணமுடிகின்றது.
7. அவ்வுலகம் !
உயிர்மை பதிப்பகம் சார்பாக வெளிவரும் முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களின் முதல் நூல் இது. நூல் வெளியீட்டு விழாவே ஒரு கட்டுரையாகத் தொகுக்கலாம் என்கிறார் கவிஞர்! நூல் வெளியீட்டுத் தொகை நிலவொளி பள்ளிக்கும், எய்ட்ஸ் தொண்டு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டதைக் குறிப்பிட்டு மனங்கொள்கிறார் கவிஞர். அதோடு மட்டுமல்லாது, இந்நிகழ்வைப்பற்றி உயிர்மை பதிப்பகத்தின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள முத்தாய்ப்புச் செய்தியையும் பதிவு செய்கிறார். “எழுதுகிறபடியும் பேசுகிறபடியும் முதுமுனைவர் வெ. இறையன்பு வாழ்கிறார் என்பதற்கு வாழ்ந்து வருகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நிகழ்வு!”
‘அலுவலகம்’ நாவலின் முதல்வரியே மூட நம்பிக்கையை உடைக்கும் விதமாகத் தொடங்குகிறது எனக் கொண்டாடுகிறார் கவிஞர். கதை வைக்க கட்டுரைத்துச் சொல்லாமல், கதையின் துவம்சத்தைக் குறிப்பிடுவது மதிப்புரையின் சத்தான மூன்றாகும். அதாவது மரணம் வருவதற்கு முதல் நிமிடம் வரை வாழ்க்கையை மகிழ்வாகக் களியுங்கள் என்று போதிக்கும் நாவல்” என்று நாவல் கவிஞர் நமக்குப் போதிக்கிறார்.
8. நினைவுகள் !
“மனிதன் நினைவுகளின் தொகுப்பாக நிற்கிறான்” என்ற நூலாசிரியரின் கருத்தை முன்னிறுத்திச் செல்கிறார் கவிஞர். ‘நினைவுகள்’நூலைப் படிக்கும்போது கவிஞரின் மனம் முழுவதும் மலரும் நினைவுகள் மணம் பரப்பிச் செல்கின்றன. அதில் ஒரு மலர்த்துளி தான், ‘பாரதியார் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கவிஞர் பயின்ற காலம், பின்னர் அவரே அங்கு நடைபெற்ற கவிதைப் போட்டிக்கு நடுவராகச் சென்ற மகிழ்ச்சியான தருணம்’ போன்றவை ஆகும்.
பேய் என்பது கட்டுக்கதை என்ற நூலாசிரியரின் கூற்றை வலியுறுத்தி பேய்ப்பட இயக்குநர்களை சற்றே எச்சரித்துச் செல்கிறார் பகுத்தறிவு பண்பாளரான கவிஞர்!
‘நல்ல நினைவுகளை மீட்டெடுப்போம்’ என்ற கவிஞரின் கூற்று, ‘நினைவு நல்லது வேண்டும்’ என்ற மகாகவியின் கூற்றினை நமக்கு நினைவுபடுத்துகிறது.
9. கேள்வியும் நானே ; பதிலும் நானே!
முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களின், ‘கேள்வியும் நானே ; பதிலும் நானே!’ என்ற நூலினைப் பார்த்தவுடன், கலைஞரின் கேள்வி பதில் முதலில் கவிஞருக்கு நினைவு வருகின்றது. ஒன்றைப் பார்த்தவுடன் அது தொடர்பான மற்றொன்று நினைவுக்கு வருதலே அதிகம் வாசிப்பவர் மட்டுமல்ல, ஆழ்ந்து வாசிப்பவனின் அடையாளம் ஆகும். அது தாராளமாக கவிஞரிடம் தாண்டவமாடுகின்றது.
எது சிறந்த உதவி? என்பதற்கு மற்றவர்களுக்குச் செய்த உதவியை உடனே மறந்து விடுவது மிக நல்ல உதவி என்ற நூலாசிரியரின் கருத்தினைக் குறிப்பிட்டு, ஆனால், உதவி பெற்றவர் மறக்காமல் இருக்க வேண்டும் என்ற கவிஞரின் கூடுதல் பதில் நயக்கத்தக்கது.
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நூல்கள் அனைத்தையும் கவிஞர் எழுத்தெண்ணி பார்த்து விடுவார் என தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ஐயா குறிப்பிடுவது போல, ‘கேள்வியும் நானே; பதிலும் நானே!‘ படிக்கும்போதே ‘புதிய தலைமுறை கல்வி’ வார இதழில் அன்புள்ள மாணவர்களே! என மாணவர்களுக்கு முதுமுனைவர் எழுதி வரும் பயனுள்ள தகவல்கள் கவிஞர் மனக்கண்முன் வருகின்றது. ஒரு நூலை மதிப்புரை செய்து கொண்டிருக்கும் போதே நூலாசிரியரின் மற்றொரு நூலினை தொடர்புபடுத்தி பாராட்டுவது கவிஞரின் பல்நோக்குத் திறனை நமக்குப் பறைசாற்றுகின்றது. மொத்தத்தில் இந்நூல் ஓர் அறிவுப் பெட்டகம் என புகழாரம் சூட்டியுள்ளார் கவிஞர்!
10. இல்லறம் இனிக்க!
‘குடும்பம்’ பற்றிய கவிதை இல்லறத்தின் முழுமையை நமக்கு உணர்த்துவதைக் கவிஞரி இங்கு குறிப்பிடுகின்றார்.
சந்தனம், மலர், கற்கண்டுக்கான விளக்கத்தை நூலிலிருந்து எடுத்துரைப்பது அருமை. “பணியாள் இருந்தாலும் பாசத்தோடு ஆற்றவேண்டிய பணிகள் உண்டு” என்பதைக் குறிப்பிட்டு (நூலாசிரியர் கருத்து) அதற்கு ‘என்ன தான் பெரிய அதிகாரியாக இருந்தாலும் நடைப்பயிற்சி செய்ய நேர்முக உதவியாளரை நியமிக்க முடியாது’ என்று எடுத்துரைப்பது படிப்போரை முறுவல் கொள்ளச் செய்கின்றது.
நிறைவாக நல் உரைகளின் தொகுப்பு என முடித்திருப்பது நல்லோர்களின் உரைகள் நல்லுரைகள் தானே என எண்ணத் தோன்றுகிறது.
11. காகிதம் !
இந்நூலைப் பற்றிக் கூறும்போது இது முதுமுனைவரின் முனைவர் பட்ட ஆய்வு நூல் போல் உள்ளது என்கிறார் கவிஞர்.
நூலாசிரியர் கவிஞர் என்பதை ‘மனச் செய்தியையும் மரணச் செய்தியையும் காகிதத்தின் மூலம் நாம் பரிமாறிக் கொள்கிறோம்’ என்ற கவித்துவ வரிகள் வாயிலாக நம்மை உணர்ச் செய்கிறார் குறும்பா கவிஞர்.
முதியவர்களுக்கு மொழி கற்பித்த ஆசான் காகிதம் என்றும், இந்த நூலைப் படித்தால் யாருக்கும் காகித்தைக் கசக்கி எறிய மனம் வராது என்பது கவிஞரின் மதிப்புரையில் முத்தாய்ப்பாகும்.
12. வனநாயகம் !
‘வனநாயகம்’ என்ற நூலின் பெயரைப் பார்த்த மாத்திரத்தில் ‘காடு அதை நாடு’ என்ற தனது கவிதை நினைவுக்கு வந்ததை நிறுத்திச் செல்கிறார் கவிஞர். வனத்தைப் பற்றிய சிறந்த ஆய்வு நூலாக இந்நூல் உள்ளது என்கிறார் கவிஞர். இந்நூலைப் படிக்கும்போதே கவி ஞரும் நூலாசிரியரும் சேர்ந்து வனத்தில் உற்சாகத்தோடு உலவி வருகின்ற உணர்வினை தமது மதிப்புரையில் பதிவு செய்துள்ளது மனங்கொள்ளத்-தக்கது.
நூலாசிரியர் ஒரு கவிஞர் என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வரிந்து கட்டிச் சொல்கிறார் கவிஞர் வனநாயகத்தின் கனிச்சாற்றினை நமக்குப் பிழிந்து தந்துள்ளார் இந்தக் குறும்பா கவிஞர்! இந்நூலை நுகர்வோருக்கு வனத்தின் வாசம் பரவிச் செல்லும் என்ற உணர்வினை கவிஞர் தமது மதிப்புரையில் உணர்த்துகிறார்.
13. சின்ன சின்ன வெளிச்சங்கள் !
52 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்! இரவல், யார் காரணம்?, அப்பாவிகள், இலக்கு, ஆதாயம், பின்பற்றல் போன்ற சிறுகதைகளைப் பதச்சான்றாக எடுத்துக்காட்டி விளம்பிச் செல்கிறார் கவிஞர். குறிப்பாக, ‘இலக்கு’ என்ற சிறுகதையில் ‘எதுவுமே பயன்படுத்துவர்களைப் பொருத்துத்தான் பயனளிக்கும்’ என்ற பதிவு இன்றைய இளைய தலைமுறை பயங்கொள்ளத்தக்கது.
14. சாகாவரம் !
சாகாவரம் நாவலைப் படிக்கும்போது கதையின் நாயகன் நசிதேசிகனாகவே கவிஞர் மாறிவிட்ட உணர்வினைப் பதிவு செய்திருப்பது உன்னதம். வாசகர்களின் உணர்வுநிலை வேறுபாடே நூலாசிரியரின் வெற்றி என்பதற்கு நற்சான்று இது. ‘சாகாவரம்’ வாசகரின் உள்ளத்தில் சாகாவரம் பெற்று வருகிறது என்றும், ‘மரண பயத்தை விரட்டும் நாவலில்’ என் நூலிற்கு கட்டியம் கூறி நிற்கும் கவிஞரின் வரிகள் கவித்துவத்தில் மிளிர்கின்றன.
15. பணிப்பண்பாடு !
வாசகர்களை செம்மைப்படுத்தும் நூல் என்றே தமது மதிப்புரையைத் தொடங்குகிறார் கவிஞர்! நூலாசிரியரின் கல்வெட்டு வார்த்தைகளைப் பார்த்தவுடனே கவிஞரின் கண்முன்னே புரோட்டா கடையில் வேலை பார்த்துக் கொண்டே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற வீரபாண்டியின் நினைவு தோன்றியது, கவிஞருக்கான சமூக நல்லிணக்கத் தொடர்பினை நமக்கு தெளிவுபடுத்துகின்றது.
‘உழைப்பு’ பற்றிய கவிதையை படிக்கும் போது, பாட்டுக்கோட்டையாம் பட்டுக்கோட்டையின் பாடலினை பதிவு செய்திருப்பது கவிஞரின் பன்முகத்திறனை நமக்கு பறைசாற்றுகின்றது.
16. உள்ளொளிப் பயணம் !
70 கட்டுரைகள் அடங்கிய இந்நூலைப் பற்றிய தமது மதிப்புரையில், “மகாகவி பாரதி”யைப் போல் எழுத்துக்கும் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இன்றி வாழ்ந்து வருபவர் முதுமுனைவர் வெ. இறையன்பு” என்ற ஒரு மேற்கோளே இந்நூலின் மதிப்புரைக்கு மகுடம் சூட்டியது போல் உள்ளது.
திறமையை அடையாளம் காணுங்கள்
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் தேடல் அமைப்பு மதுரையில் நடத்திய கருத்தரங்கத்தில் ஆற்றிய உரையின் சாராம்சமே இக்கட்டுரை. ஒருவரின் அடையாளம் எது? என்பதற்கு புற அடையாளங்கள் உண்மையான அடையாளங்கள் அல்ல என்றும், இப்பூமியில் எதை ஒருவர் விட்டுச் செல்கிறாரோ அதுவே அடையாளம்” போன்ற சிறந்தனவற்றைப் பதிவு செய்துள்ளார் கவிஞர். முத்தாய்ப்பாக ஒவ்வொருவருக்கும் ஓர் ஆற்றல் உண்டு, நீங்கள் தான் அதைத் தேடிக் கண்டறிய வேண்டும் என்ற முதுமுனைவரின் பேச்சிற்கு எழுத்து வடிவம் அளித்திருக்கிறார் கவிஞர்.
உள்ளத்தில் இருந்து வருவது தாய்மொழி!
ஆசிரியர் என்பவர் படிதத்தைச் சொல்பவர்
ஆசான் என்பவர் நல்லதைச் சொல்பவர்
குரு என்பவர் வாழ்க்கையின் தாக்கத்தைச் சொல்பவர்
ஆசான் என்பவர் நல்லதைச் சொல்பவர்
குரு என்பவர் வாழ்க்கையின் தாக்கத்தைச் சொல்பவர்
போன்ற நூலாசிரியரின் நற்கருத்துக்களை எடுத்து தமது மதிப்புரை நூலில் நடவு செய்துள்ளார்.
படிப்பா? வாசிப்பா?
‘படிப்பு’ என்பது பூங்காவைப் போன்றது. ‘வாசிப்பு’ என்பது பணத்தைப் போன்றது. எல்லோரும் அறிவாளிகள் தான். அறிவைப் பயன்படுத்துபவர்கள் சிறப்படைகிறார்கள், பத்திரப்படுத்துபவர்கள் சிரமப்படுகிறார்கள்” போன்ற முத்துக்களைக் கோர்த்து மாலையாக்கி நூலாசிரியருக்கு அணிவித்து மகிழ்கிறார் கவிஞர்.
வையத் தலைமை கொள்!
“நம்மிடம் உள்ளவற்றின் மதிப்பை நாம் அறியாமல் இருந்து வருகிறோம்! விமர்சிக்கிறார்கள் என்பதற்காக நற்செயல் நிறுத்தி விடாதீர்கள்! பலர் கவலையை தூக்கிப் போடாமல் சுமந்து கொண்டே வாழ்கிறோம்!” என்ற முதுமுனைவரின் சிறந்த உரைவீச்சினை நன்கு பதப்படுத்தி நம்க்குப் பகிர்ந்துள்ளார் ஹைக்கூ கவிஞர்!
நிறைவாக,
ஹைக்கூ திலகம் கவிஞர் இரா. இரவி எழுதிய ‘இறையன்பு கருவூலம்’ என்ற தலைப்பினைக் கொண்ட இந்நூலுக்கு தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ஐயா, பட்டிமன்றத்தேனீ முனைவர் கு. ஞானசம்பந்தன் ஐயா ஆகியோரது அணித்துரையே அலங்காரத் தோரண் வாயிலாக உள்ளது. பதினாறு நூல்களின் மதிப்புரையை பதினாறு செல்வங்களாக நமக்கு வழங்கி சிறப்பித்துள்ளார் கவிஞர். சிறந்த சொல்லாட்சி, மொழி ஆளுமை, கவித்துவச் சான்றுகள், எடுத்தியம்பும் நலம், ஒப்பிட்டு நோக்கும் போக்கு, மதிப்புரையின் கட்டமைப்பு, தமது கருத்திற்கு அரண் சேர்க்கும் அறிஞர்களின் ஆய்வுரைகள், பாராட்டுரைகள் போன்றவற்றை இலகுவாக பயன்படுத்தும் எளிவந்ததன்மை, வாசகரின் மனநிலையை உணர்ந்து மதிப்புரையை கட்டமைக்கும் தன்மை, இடையிடையே எள்ளல், நகைச்சுவை என கவிஞரின் இம்மதிப்புரை நூல் ஆகச்சிறந்த மதிப்புரையாக நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களுக்கு மென்மேலும் ஏற்றம் தரும் நூலாகத் திகழ்கின்றது என்றால் அது மிகையல்ல!
நூலினை வெளியிட்ட பதிப்பகம் தொடங்கி, வெளியிட்ட இடம், காலம், சூழல், நூலில் காணப்படும் வண்ணப்படங்கள், பக்கங்களின் எண்ணிக்கை, நூலின் விலை, நூல் தொடர்பான புறச் செய்திகள், கூடுதலாக இந்த நூலினை வாங்கிப் படியுங்கள் என்று (மதிப்புரையாளர்களின் கவனத்திற்கு) நூல் விற்பனையில் தனது பங்களிப்பினைச் செய்து ................ இவ்வாறு ‘கேசாதி – பாதம்’ வரை என்று சொல்வார்களே அதுபோல முன் அட்டையிலிருந்து பின் அட்டை வரை ஒவ்வொன்றையும் மனதில் நிறுத்தி மதிப்புரை செய்துள்ளார் இந்த மதிப்புறு கவிஞர் ஹைக்கூ திலகம் கவிஞர் இரா. இரவி என்பது சாலச் சிறப்பாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக