நிழல் தேடும் வெயில்! நூல் ஆசிரியர் : கவிஞர் வலம்புரி லேனா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.






நிழல் தேடும் வெயில்!



நூல் ஆசிரியர் : கவிஞர் வலம்புரி லேனா !



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. 


நூல் வெளியீடு : எழில்மீனா பதிப்பகம்,
200, காளியம்மன் கோவில் தெரு, திருவாலம்பொழில் – 613 103.  திருப்பூந்துருத்தி (வழி) தஞ்சாவூர் மாவட்டம்.


******

      ‘நிழல் தேடும் வெயில்’ நூலின் தலைப்பே சிந்திக்க வைத்தது. வெயிலடித்தால் எல்லோரும் நிழல் தேடுவது இயல்பு. ஆனால் வெயிலே நிழல் தேடுவது வித்தியாசமான செய்தி. நூலாசிரியர் வலம்புரி லேனா அவர்கள் ஹைக்கூவில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி. இவர் பெயரில் உள்ள லேனா என்பது புகழ்பெற்ற எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் அவர்களை நினைவூட்டும் விதமாக உள்ளது.



      பேராசிரியர் மித்ரா அவர்கள் நடத்திய ஹைக்கூ விருது வழங்கும் விழாவில் திருச்சியில் மதிப்புரைக்காக இந்நூலை வழங்கினார். நூலாசிரியர் வலம்புரி லேனா. வலம்புரி சங்கையும் நினைவூட்டும் விதமான நல்ல பெயர் மட்டுமல்ல நல்ல மனதிற்கும் சொந்தக்காரர்.



      “சமர்ப்பணம் இலக்கியத்தின் மீது மோகமூட்டிய என் அப்பா எழிலன் திருப்பதி”க்கு இலக்கிய ஆர்வம் வளர்த்த அப்பாவிற்கு காணிக்கையாக்கியது சிறப்பு. இது முந்தைய தலைமுறையின் செயல் இன்றைய தலைமுறையினருக்கு இலக்கிய ஆர்வம் தந்தை சொன்னாலும் வருவதில்லை என்பதே கசப்பான உண்மை.



      ஹைக்கூவில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும் இனிய கவிஞர் மு. முருகேஷ் அணிந்துரை நல்கி உள்ளார். நூலிற்கு மகுடம் சூட்டியது போல உள்ளது. பாராட்டுக்கள். நீண்ட நாட்களுக்குப் பின் வந்துள்ளதாக ஆசிரியர் என்னுரையில் குறிப்பிட்டுள்ளார். நிறைவாக வந்துள்ளது பாராட்டுக்கள்.



 பரந்த கடல்

 விரிக்கப்பட்டது வலை

 அகப்பட்டது மீனவன்!



      இந்த ஹைக்கூவைப் படித்ததும் இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களை அடிக்கடி கைது செய்வதும், வலைகளை அறுப்பதும், படகை பறிமுதல் செய்வதும் நினைவிற்கு வந்து விடுகின்றன. இது தான் ஹைக்கூ கவிதையின் வெற்றி. சில வரிகளில் சிந்திக்க வைக்கும் ஆற்றல் ஹைக்கூவிற்கு உண்டு.



      நீண்டு கிடந்தது தார்ச்சாலை
      நிழல் தேடி அலைந்தது
      வெயில்!



நூலின் தலைப்பிற்கான ஹைக்கூ இது தான். மரங்கள் எதுவுமில்லாத தார்ச்சாலையில், நெடுஞ்சாலையில் எங்கு தேடினாலும் நிழல் இருப்பதில்லை. ஆனால் வெயில் நிழல் தேடி அலைவதாக கற்பனை செய்வது சிறப்பு. சாலையின் இருபுறமும் மரங்களை நடுங்கள். நிழல் கிடைக்கும், மழையும் வரும் என அறிவுறுத்தும் விதமாக வடித்துள்ளார்.



வறண்டு போனாலும்
      அட்சய பாத்திரமாய்
      ஆறு!



அட்சயப்பாத்திரத்தை அள்ள அள்ள அன்னம் வரும் என்பார்கள். அதுபோல மணல் கொள்ளையர்களுக்கு ஆறு வறண்டு இருந்தால் கொண்டாட்டம். மக்களுக்கு திண்டாட்டம். மணலை அள்ளி அள்ளி பணமாக்கி விடுகின்றனர். வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகின்றனர். மணல் கொள்ளையர்கள் மனம் மாற வேண்டும், திருந்த வேண்டும்.



மாட்டுப் பொங்கள்
      கொண்டாடினர்
      மாடுகளை விற்ற வீட்டில்!



முன்பெல்லாம் கிராமங்களில் வீடுகள் தோறும் மாடுகள் இருந்தன. ஆனால் இன்று உலகமயம், தாராளமயம், பொருளாதாரமயம் என்ற பெயரில் நாட்டு மாடுகளை எல்லாம் அழிவுக்கு வழிவகுத்து விட்டனர். கிராமங்களில் ஒரு சில வீடுகளில் மட்டுமே மாடுகள் உள்ளன. பலர் விற்று விட்டனர். அவர்கள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதை மறக்கவில்லை என்பதை ஹைக்கூவில் உணர்த்தி உள்ளார்.



தட்டுப்பாடில்லாமல்
      எங்கும் கிடைக்கிறது
      பாட்டிலில் தண்ணீர்!



தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிய போதும் பாட்டில் தண்ணீருக்கு மட்டும் பஞ்சமே வரவில்லை. எங்கும் தாராளமாக கிடைக்கின்றது. பன்னாட்டு நிறுவனங்களின் பகல் கொள்ளை தான் இந்த பாட்டில் தண்ணீர். இதனால் தான் நமக்கு வந்தது தண்ணீர் பஞ்சம் என்பதை மக்கள் உணர வேண்டும்.



கணினியுகம்
      கண்டு ரசிக்க ஆளில்லாமல்
      ஆகாயத்தில் நிலா!



உண்மை தான். இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர். இயல்பாகவே இருப்பதில்லை ஒருவித பதட்டத்தில் எப்போதும் பரபரப்பாக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பணம் பணம் என்று சிலர் அலைந்து கொண்டே இருக்கின்றனர். கணினியுகத்தில் நிலவை ரசிக்க ஆள் இல்லை, ஆர்வம் இல்லை, நமக்கு நிலவைக்காட்டி அன்று சோறு ஊட்டினார் அம்மா. ஆனால் இன்று அடுக்கக வாழ்க்கையில் நிலவும் தெரிவதில்லை. காட்டவும் பொறுமை இல்லை.



கைபேசி உரையாடல்
      கைமேல் மரணம்
      மரணம்!



கைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டாதீர்கள் என்று எச்சரித்த போதும் இளையதலைமுறையினர் கேட்பதே இல்லை. காதில் கருவியைப் பொருத்திக் கொண்டு பேசிக்கொண்டே வண்டி ஓட்டி பலர் மரணம் அடைந்து வருகின்றனர்.



அப்பாவுக்குத் தெரியாததையும்
      பார்த்து மகிழ்ந்தது
      தோளில் அமர்ந்த குழந்தை!



தோளில் அமர்ந்த குழந்தை உயரமாக இருந்து அப்பா காணாததையும் திருவிழாவில் காணும். அதுமட்டுமல்ல, அப்பா, தான் பெறாத வசதியை எல்லாம் தன் குழந்தைக்கு செய்து கொடுத்து மகிழ்வார்.



குப்பையிலிருந்து
      கண்டெடுக்கப்பட்டதோ?
      குப்பை அள்ளும் லாரி!



குப்பை அள்ளும் லாரியை உற்றுநோக்கி அதன் நிலை கண்டு எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று.



அதிர அதிர பறை
      கொஞ்சமும் அதிராமல்
      பிணம்!



காட்சிப்படுத்துதல் இந்த ஹைக்கூ படித்தவுடன், வாசகர்களுக்கு பறையின் அதரலும் பிணமும் மனக்கண்முன் வந்துவிடும்.



சமுதாயத்தை உற்று நோக்கி வடித்துள்ள ஹைக்கூ கவிதைகள் சிறப்பு. நிழலில் அமர்ந்த மகிழ்வு!


கருத்துகள்