இறையன்பு கருவூலம் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் மதிப்புரை : கவிதாயினி .G மஞ்சுளா
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை-600 017. பக்கங்கள் : 152, விலை : ரூ.110.
*******
தமிழ் கூறும் நல்லுலகில்,
சிறந்த சிந்தனையாளராகவும், பேச்சாளராகவும், எழுத்தாள-ராகவும் அறியப்படுகின்ற முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களின் மீது தான் கொண்ட நன்மதிப்பினாலும், அவர் எழுத்துக்களின் மீதும், பேச்சுக்களின் மீதும் தான் கொண்ட தனியாத பற்றினாலும், அன்பினாலும் கவிஞர் இரா. இரவி அவர்கள் முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் எழுதிய அனைத்து நூல்களையும் வாசித்து, நேசித்து, பின் யோசித்து அந்த நூல்களை வாசகர்களும் வாசித்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், அந்த நூல்களின் சாரத்தை தனது எழுத்து பாணியில் நயம்பட விளக்கிய கட்டுரைத் தொகுப்புகளே ‘இறையன்பு கரூவூலம்’ என்ற நூலாக நம் கையில் தவழக் காத்திருக்கும் ஓர் இலக்கியப் பதாகை.
இதை நூலாக்கம் செய்த வானதி பதப்பகத்தர் இறையன்புவின் நூல்களையே பொக்கிஷம் போல் காட்டும் அழகிய அட்டைப்படத்தை பார்ப்பவர் ஈர்க்கும் வண்ணம் அழகாக வடிவமைத்துள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னைத் தகைசால் பேராசிரியர் இரா.மோகன் அவர்களின் அணிந்துரையும், தியாகராசர் கல்லூரி தகைசால் பேராசிரியர் கலைமாமணி முனைவர் ஞா. ஞானசம்பந்தன் அவர்களும் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியிருப்பது மிகவும் சிறப்பையும், தகுதியையும் இந்த நூலுக்கு பெற்றுத் தந்திருக்கிறது.
சுற்றுலாத் துறையில் உதவி அலுவலராகவும் இருந்து கொண்டு தனது எழுத்துப் பணியிலும் இலக்கியக் கூட்டங்களிலும் ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாமல், விடாத ஊக்கத்தையும், புதிய புதிய முயற்சிகளில் தனது ஈடுபாட்டை தொடர்ந்தும் வருகிறார் கவிஞர் இரா. இரவி அவர்கள். இவரது அயராத வாசிப்புக்கும், உழைப்புக்கும் சான்றாக விளங்குகிறது இவரது 20வது நூலான ‘இறையன்பு கருவூலம்’ என்ற இந்த அழகிய நூல்.
இந்த நூலுக்காக இவர் எடுத்துக்கொண்ட நேரங்களும், வாசிப்பு முறைகளும் எத்தகையது என்பதை நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரை-யையும் வாசித்து முடிக்கும் போது நமக்கு தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
இந்த நூலில் முதுமுனைவர் வெ. இறையன்புவின் நூல்களான ‘மூளைக்குள் சுற்றுலா’ தொடங்கி ‘உள்ளொளிப் பயணம்’ வரை அவரது 16 நூல்களை எடுத்துக் கொண்டு, அந்த நூல்களைப் பற்றிய தனது மதிப்புமிக்க உரைகளை, வாசிப்பவர்களின் உள்ளத்தில் பதியத்தக்க வகையிலும், இறையன்புவின் நூல்களை இதுவரை வாசிக்காதவர்கள் கூட, அவரது நூல்களை எப்படியாவது வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதாகும்.
ஒவ்வொரு கட்டுரையிலும் அந்த நூல் பற்றிய விளக்கங்களை அந்த மதிப்புமிக்க வெ. இறையன்பு அவர்களின் வரிகளையே மேற்கோளாகக் காட்டியிருப்பது சிறப்பு. இறையன்புவின் நுட்பமான எழுத்துக்களை தனது எளிய விவரணைகள் மூலம் எடுத்துச் சொல்லி, வாசகர்களுக்கு ஒரு புத்துணர்வை ஊட்டுவதன் மூலம் இறையன்புவின் மீதான தனக்கான நன்மதிப்பையும் மரியாதையையும் போற்றுவதோடு மட்டுமல்லாமல் அவருடைய இலக்கியங்களை தொடர்ந்து வாசித்ததன் வழியே தன் பண்பட்ட மனதையும் வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுகிறார்.
முதுமுனைவர் வெ.இறையன்புவின் ‘உள்ளொளிப் பயணம்’ என்ற நூல் தன்னை செதுக்கிய நூல் என்று குறிப்பிடுவதன் மூலம் அந்த நூலின் முக்கியத்துவத்தை வாசகர்களுக்கு உணர வைக்கின்றார் இரா. இரவி அவர்கள்.
உள்ளம் களைத்துப் போகும் போதும், உள்ளொளிப் பயணத்தைப் படித்து புத்துணர்வு பெற்ற தன் அனுபவங்களை பகிரும் போதும், வாசகர்களும் அத்தகைய அனுபவங்களைப் பெற, புதுப்புதுச் சிந்தனைகள் உருவாக, படி, படி, படித்துக் கொண்டே இரு என்பது போன்ற ஊக்க உணர்வுகளை வாசகர்களுக்கும் ஊட்டுவதே இந்த நூலின் வழியாக அவர் (கவிஞர் இரா. இரவி) கூறும் அறிவுரையாகும்.
இது தவிர, இறையன்பு அவர்கள் ஆற்றிய உரைகளை இவரது நூலில் வாசிக்கும் போது, தெளிந்த நீரோடை போலவே உள்ளது. ‘திறமையை அடையாளம் காணுங்கள்’, ‘உள்ளத்தில் இருந்து வருவது தாய்மொழி’. ‘படிப்பா? வாசிப்பா?’, ‘வையத் தலைமை கொள்!’ போன்ற நான்கு தலைப்புக்களில் பல்வேறு இடங்களில் ஆற்றிய உரைகளை தனது அழகிய எளிய தமிழில் அவரது உரை வீசசைப் போலவே, தனது செயல் வீச்சிலும் எழுத்தாக்கித் தந்துள்ளார் இரா. இரவி அவர்கள்.
உரையைக் கேட்க வாய்ப்பில்லாமல் போனவர்கள், இரா. இரவி அவர்கள் எழுதிய இந்தப் பகுதிக்கு வந்து வாசித்தால் போதும் இறையன்புவின் குரலை அப்படியே எழுத்தில் கொண்டு வந்து நம் செவிக்கு விருந்தாக்கிய பெருமை இரா. இரவி அவர்களுக்கு உண்டு. மிகுந்த பாராட்டுக்கள்.
ஹைக்கூத் திலகம் என்று பாராட்டுப் பெற்ற கவிஞர் இரா. இரவியின் நூல்களுக்கு முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் தந்த அணிந்துரைகளும் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவரது கவிதைக்ளை வாசித்து விட்டு, ஒரு தாயின் வாஞ்சையோடு எடுத்துக்காட்டும் முதுமுனைவர் இறையன்பு அவர்களின் உள்ளம் வானம் போல் விரிந்தது என்று சொன்னால் மிகையாகாது.
இறையன்பு அவர்கள் தந்த ஊக்க மொழிகளாலேயே கவிஞர் இரா. இரவி அவர்களின் பேனா மை தனது எளிய அழகிய கவிதைக் கோலங்களை வரைந்து தள்ளுகிறதோ என்று எண்ணும்படி இருக்கிறது. மிகப்பெரும் சிந்தனையாளர்களின் சின்ன பாராட்டுக் கூட மலையளவு ஊக்கத்தைத் தந்துவிடும் என்பதற்கு உதாரணமாக இருக்கின்றன இறையன்பு அவர்களின் அழகான அணிந்துரைகள்.
இறையன்புக் களஞ்சியம், இறையன்பு சிந்தனை வானம் போன்ற பகுதிகள் வாசிக்க, வாசிக்க வாசிப்பவர்களின் உள்ளத்தில் உரம் எனும் நல்ல கருத்துக்கள் உள்ளன. பின்னிணைப்பில் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் பெற்றோரின் சதாபிசேக தாம்பூலம் அழகாக அச்சிடப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் குறிப்பிட்டு எழுதியுள்ளார். விழாவின் இனிமையை நம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு பாராட்டுக்கள்.
மலரும் நினைவுகளாக கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதில் இறையன்பு அவர்களோடு கலந்து கொண்ட அரிய நிகழ்ச்சிகளும் பதிவாகியுள்ளன. எண்ணங்களோடு வண்ணங்களையும் பதிவு செய்யும் குணம் இரா. இரவி அவர்களுக்கு இயல்பிலேயே உள்ளது.
தன் வாழ்வின் வழிகாட்டியாக உள்ள முதுமுனைவர் வெ. இறையன்புவின் மணியான கருத்துக்களைத் தொகுத்து ‘இறையன்பு கருவூலம்’ என்ற நூலினை உருவாக்கி தன் வாழ்வின் மிகப்பெரும் சாதனையாக்கிய ஹைக்கூ திலகம் இரா. இரவி அவர்கள் மேலும் பல நல்ல நூல்களை உருவாக்கிட, அவர் வணங்கும் தமிழ்த்தாய் அவருக்கு எல்லா நலங்களையும் வளங்களையும் அருள வேண்டும் என்று கூறிக்கொண்டும், எனக்கு நூலை அனுப்பி, இதற்கான மதிப்புரையை எழுதித் தருமாறு கூறிய அவரது நல் இதயத்திற்கு என் மனப்பூர்வமான நன்றிகளும் வாழ்த்துகளும்
கருத்துகள்
கருத்துரையிடுக