இறையன்பு கருவூலம் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கங்கள் : 152, விலை : ரூ.110.
*******
கவிஞர் இரா. இரவி அய்யா அவர்கள் எனக்கு குரு. அவர் தினமலர் நாளிதழிலில் 2015-ல் எழுதிய கவிதை எழுதுவோம் என்னும் கட்டுரையே என்னை கவிதைகள் எழுத ஊக்கப்படுத்தியது.
அய்யா அவர்களின் கவிதைச்சாரலில் தொடங்கிய கவிபயணம் இன்று இருபதாவது நூலான இறையன்பு கருவூலமாக மலர்ந்துள்ளது. நூலின் அணிந்துரைக்கு அழகுசேர்க்கும் இரு சான்றோர் தமிழகார் முனைவர் இரா.மோகன் அவர்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி தகைசால் பேராசிரியரும் பட்டிமன்ற பேச்சாளருமான கலைமாமணி முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களும் ஆவர்.
என்னுரையாக கவிஞர் தனக்கும் முதுமுனைவர் இறையன்பு அவர்களுக்கும் ஏற்பட்டநட்பு குறித்தும் முதுமுனைவரின் ஆளுமைகள் குறித்தும் விளக்கி உள்ளார். புத்தகத்திற்கு விமர்சனம் எழுதுவது திறனாய்வு எனப்படும். இப்புத்தகத்திற்கு நான் எழுதும் விமர்சனம் முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களின் நூலிற்கு கவிஞர் இரா. இரவி அவர்கள் எழுதிய நூல் மதிப்புரைக்கான மதிப்புரை நூலின் முன் அட்டைப்படத்தில் கவிஞர் மற்றும் முதுமுனைவர் அவர்களின் படமும் பின்அட்டைபடத்தில் கவிஞரின் இலக்கிய ஆசான் தமிழ்த்தேனீ இரா.மோகன் மற்றும் கலைமாமணி கு. ஞானசம்பந்தம் அவர்களுடனான கவிஞரின் புகைப்படம் அமைந்துள்ளது. இனி கருவூலத்திற்குள் செல்வோம்!
முதுமுனைவர் இறையன்பு அவர்களின் நூலிற்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் எழுதிய மதிப்புரைகள் ...
மூளைக்குள் சுற்றுலா : இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் முதன்மை செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் 100-வது நூல் மூளைக்குள் சுற்றுலா. இந்நூலில் மூளை மட்டுமல்லாது நாடி, நரம்பு, எலும்பு, பல் என உடல் உறுப்புகள் அனைத்தையும் பற்றி விரிவாக முதுமுனைவர் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
சுயமரியாதை : மனிதனுக்கு அழுகு சுயமரியாதையோடு வாழ்வது தான் எந்த ஒரு மனிதன் சுயமரியாதையுடன் வாழ்வாங்கு வாழ்கிறானோ அந்த மனிதனுக்கு மற்றவர்கள் மரியாதை தந்து மதித்து நடப்பார்கள். நூலின் சுயமரியாதை குறித்து முதுமுனைவர் அவர்களின் வாழ்வில் நடைபெற்ற சுவையான நிகழ்வு குறிக்கப்பட்டுள்ளது. சமூக சூழலுக்கு ஏற்ப மனிதன் தனக்கு தான் வகுத்துக்கொள்ளும் வரையறையே சுயமரியாதையாகும்.
உலகை உலுக்கிய வாசகங்கள : 102 வாரங்கள் தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த உலகை உலுக்கிய வாசகங்கள் தொடர் கவிஞர் இரா. இரவி அவர்களால் மின்னஞ்சல் குழுக்களிலும் முகநூலிலும் வலைப்பூவிலும் பகிரப்பபட்டுள்ளது. பின் புத்தகமாக வெளிவந்துள்ளது. பல்வேறு உலக அறிஞர்கள் பற்றியும் வாழ்வியல்நெறி கூறும் இனிய நூல்.
நினைவுகள் : மனிதர்கள் அனைவருக்கும் மலரும் நினைவுகள் உண்டு. அதில் சில நல்ல நிகழ்வுகளும், சில மறக்கக்கூடிய நினைவுகளும் உண்டு. கவிஞர் இறையன்பு அவர்களின் நினைவுகள் நூலுக்கு கவிஞர் மதிப்புரை எழுதும்போது தன் சிறுவயதில் நிகழ்ந்த இனிய மற்றும் இன்னாத நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார்.
வனநாயகம் : முதுமுனைவர் அவர்களின் வனநாயகம் நூலுக்கு கவிஞர் அவர்கள் எழுதிய மதிப்புரை படிக்கும் வாசகரையே காட்டிற்குள் அழைத்துச் செல்வதாகவும் விலங்குகள் பற்றிய அறிய தகவலை நம்மோடு பகிர்வதாக மதிப்புரை அமைந்துள்ளது.
பணிப் பயன்பாடு : குறைந்த விலையில், நிறைந்த அறிவுக் களஞ்சியம் பணிப்பயன்பாடு. உழைப்பே வெற்றிக்கு வழி என்பதை நூல் மதிப்புரை செம்மையாக எடுத்துரைக்கினறது.
“விடலைப் பருவத்தில் வியர்வை வாய்க்காலாக வழியாவிட்டால்
கடைசிக் காலத்தில் கண்ணீர் கால்வாயாகப் பெருக்கெடுக்கும்”
இந்த இரண்டு வரிகள் நூலின் முழுமுதல் கருத்துக்களை படித்த நெகிழ்வை தருகின்றன.
உள்ளொளிப் பயணம் : படைப்பு எப்படி இருக்க வேண்டும்? இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? என்பற்கு இலக்கணம் கூறும் நூல். இந்நூலில் 70 கட்டுரைகள் உள்ளன. இந்நூலின் மதிப்புரையில் மனிதமூளை உலகத்திலேயே மிகப்பெரிய சாதனையாளர்களாகவும் அறிவாளிகளாகவும் கருதப்படுபவர்கள் கூட மூளையில் இரண்டு சதவீதத்தைத் தான் பயன்படுத்துகிறார்கள் என்னும் அறிய தகவலை எடுத்துரைக்கின்றது.
கருவூலத்தில் முதுமுனைவர் இறையன்புவின் உரைகளுள் என்னை கவர்ந்த ஒரு நிகழ்வு : படிப்பா? வாசிப்பா? என்ற தலைப்பிலான பட்டிமன்றத்தில் கோடீஸ்வரன் ஆனால் என்ன செய்வாய்?கட்டுரை எழுது என்றார் ஆசிரியர். மற்ற மாணவர்கள் எழுதும் போது ஒரு மாணவன் மட்டும் விடைத்தாளை தூக்கி வீசினான். ஏன்? என்று கேட்ட போது கோடீஸ்வரனாகி விட்ட போது எதற்காகக் கட்டுரை எழுத வேண்டும் என்றான்” என்னும் சிந்திக்க வைக்கும் உரை.
கவிஞர் இரா. இரவி அவர்களின் நூலிற்கு முதுமுனைவர் இறையன்பு அவர்களின் அணிந்துரைகள் : ஹைக்கூ முதற்றே உலகு என்ற நூலிற்கான அணிந்துரையில் கவிஞருக்கும் முதுமுனைவருக்கும் ஏற்பட்ட கெழுதகை நட்பு குறித்து வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் பதிவு செய்துள்ளர். மேலும் கவிஞரை மதுரை திருமலைநாயக்கர் மன்னர் கல்லூரியில் இறையன்பு அவர்கள் “புலிப்பால் இரவி’ என்று சிறப்பு செய்ததை பதிவு செய்துள்ளார்.
முதுமுனைவர் இறையன்பு பற்றிய நூல்களான இறையன்பு களஞ்சியம் நூலினை தமிழ்தேனீ இரா. மோகன் அவர்களாலும் இறையன்பு சிந்தனை வானம் என்னும் நூல் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் என்னும் இரு பெரும் சான்றோரால் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த இரு நூல்களுக்கும் கவிஞர் இரா .இரவி மதிப்புரை எழுதி உள்ளார் .
முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் கலைபண்பாட்டுத் துறை செயலராக இருந்த போது நிகழ்த்திய அரிய சாதனை பற்றியும், முதுமுனைவரின் ஆளுமைத் திறன் குறித்தும் கட்டுரையில் கவிஞர் கட்டி உரைக்கின்றார்.
புத்தகத்தின் பின்னிணைப்பில் முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களின் பெற்றோரின் சதாபிசேக தாம்பூலம் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து கவிஞா;.இரா.இரவி அவா;களின் சுயவிபரமும் அவர் பெற்ற விருதுகளும் குறிக்கப்பட்டுள்ளது. மலரும் நினைவுகளாக முதுமுனைவர்அவர்களுடன் கவிஞர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. நூலின் இறுதியாக தினமலர் நாளிதழில் 2014-ல் வெளிவந்த கவிஞரின் நேர்முகம் இடம்பெற்றுள்ளது. முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நூலினை பற்றிய கவிஞரின் மதிப்புரை அடங்கிய இந்நூல் கடுகைத்துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத்தரித்த நூல் இறையன்பு கருவூலம் என்னும் இனிய நூல்.
அழகான தெளிவான சிறப்பான பொருத்தமான மதிப்புரை. வாழ்த்துக்கள்.💐
பதிலளிநீக்கு