இறையன்பு கருவூலம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்,






இறையன்பு கருவூலம்!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் விமர்சனம் : திருச்சி சந்தர், நிறுவனர், 
முத்தமிழ் அறக்கட்டளை, பதிவு எண் : 969, 10, ராமமூர்த்தி ரோடு, சின்ன சொக்கிகுளம்,
மதுரை-625 002.  தொலைபேசி : 0452 2533 524,
செல்லிட பேசி : 94437 43524

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  பக்கங்கள் : 152, விலை : ரூ.110.
தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com

*******

குரு காணிக்கை

     குறும்பாக் கவிஞர் இரா. இரவி கரும்பாக இனிக்கும் எத்தனையோ நூல்களை படைத்துள்ளார். அவற்றில் சில கல்லூரிகளில் பாட நூலாகவும் இடம் பெற்றுள்ளன. எத்தனையோ விருதுகளும் பெற்றுள்ளார். சுற்றுலாத் துறையில் பணியாற்றுவதால் மனித சமுதாயத்தை சுற்றி வந்து நல்லது கெட்டதை எடுத்துவைக்கும் வாய்ப்பும் பெற்றுள்ளார் இரா. இரவி.

     நிறைய எழுத்தாளர்கள் எண்ணிக்கைக்காகவும், பணம் ஈட்டுவதற்-காகவும், பொழுது போக்கும் நூல்களை படைத்துள்ளனர்.  இவர்களிடையே இரா. இரவி தனித்தன்மை பெற்றுள்ளதற்குக் காரணம், சமுதாய நல்லிணக்கத்திற்காக பகுத்தறிவு சிந்தனையோடு தன் படைப்பாற்றலை பயன்படுத்துவது தான்.

     தன் படைப்புகளில் ஒரு முத்திரை பதித்துள்ளார் என்றால், பெருமதிப்பிற்குரிய இறையன்பு அவர்களின் கருத்துக்களை கருவாகக் கொண்டு ‘இறையன்பு கருவூலம்’ நூலை எழுதியது தான்.

     நிறைகுடமான இறையன்பு அவர்கள் நம்மைப் படைத்த ஏதோ அதீத சக்தியைத் தான் ‘இறைவன்’ என்றழைக்கிறோம். மாறாக நம்மைப் படைத்தவன் இரையாக எந்தவிதப் படையலையும் கேட்கவில்லை. பிரதியாக அன்பை மட்டுமே கேட்கிறான். செயலுக்கேற்ப ‘இறை அன்பு’ எனப் பெயர் கொண்டாரோ! அமைதி, அடக்கம், ஆழ்ந்த சிந்தனைகள் இவற்றின் கருவூலம் மனித குலத்திற்கு பயன்தரக்கூடிய சிந்தனைகளை திரட்டி, ‘இறையன்பு கருவூலம்’ எனும் பொக்கிஷமான நூலை நமக்குத் தந்துள்ளார் இரா. இரவி.

     மகாபாரதத்தில் கண்ணன், கர்ணனிடம் கவசக் குண்டலத்தை யாசித்து பெற்றது போல, நாம் வாசித்துப் பயன்பெற ஒரு நல்ல நூலை இரா. இரவி படைத்துள்ளார் என்றால் அது ‘இறையன்பு’ அவர்களின் ‘இறையன்பு கருவூலம்’ மட்டும் தான். ‘நான்’ எனும் அகந்தை அகற்றி ‘நாம்’ எனும் பொதுநல புதிய காற்றை சுவாசிப்பதாக உணர்கிறேன்.

     தொலைக்காட்சியில் ‘இறையன்பு’ அவர்கள் ஆற்றிய ‘கல்லூரிக் காலங்கள்’ என்ற தொடர் சொற்பொழிவை கேட்டவர்களில் நானும் ஒருவன். இளமைப் பருவத்து குறும்புகள் மறந்து, கல்லூரிப் பருவத்தில் மட்டும் தான் எதிர்காலத்தை எடை போட முடியும் என்ற நல்ல கருத்தை வலியுறுத்தியது பகுத்தறிவுப் பசிக்கு நல்ல விருந்து.

நூலுக்கு பொருளடக்கம் தந்துள்ள இரா. இரவி உலகின் உயிரினங்கள் பற்றியும், மனித மேம்பாட்டுக்கான வழிகள் பற்றியும் பொருள்பட வரிசைப்படுத்தியுள்ளார்.

இறையன்பு அவர்கள் சுற்றுலாத் துறையில் ஆணையராக ,செயலராக இருந்த காரணத்தால் , மனித மூளையின் கட்டுப்பாட்டு அறையின் ஏவலை நரம்பு மண்டலம் மூலம் உள்ளங்கால் நுனி வரை சுற்றி வந்து, மனித உடலின் ஒவ்வொரு பகுதியின் செயல்களையும், அதன் விளைவுகளையும் விளக்கமாக எழுதியுள்ளார்.

இரா. இரவி என்ற ஏகலைவன், தன் குருவுக்கு (இறையன்பு) காணிக்கையாக தன் கட்டைவிரலைக் கொடுக்கவில்லை. மாறாக, கட்டைவிரலுக்கும், மனித நல்வாழ்வைக் காட்டும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே எழுதுகோலைப் பிடித்து, “இறையன்பு கருவூலம்” எனும் நூலை படைத்துள்ளார். இமயத்தின் சிகரத்தை எட்டிப்பிடிக்க முயற்சிக்கும் இரா. இரவிக்கு என் நன்றி.... பாராட்டுக்கள்!

.

கருத்துகள்