மோகனப் புன்னகை!
கவிஞர் இரா. இரவி.
******
மோகன் ஐயாவின் புன்னகை மோகனப் புன்னகை
முகத்தில் புன்னகை எப்போதும் பூத்து இருக்கும்!
கோபம் கொண்டு யாரும் பார்த்தது இல்லை
கோபம் என்றால் என்னவென்றே அறியாதவர்!
படிப்பு எழுத்து பேச்சு இம்மூன்றையும்
பண்பு நலனாகக் கொண்டு இயங்கியவர்!
ஓய்வு என்றால் என்னவென்று அறியாதவர்
ஓய்வுக்கு ஓய்வு தந்து ஓய்வின்றி உழைத்தவர்!
நூற்றி ஐம்பது நூல்கள் எழுதிக் குவித்தவர்
நூல் எழுதுவதை தவமாக செய்து வந்தவர்!
கவிப்பேரரசுவின் கவிதையைப் பாராட்டுவார்
கத்துக்குட்டிக் கவிஞரையும் பாராட்டுவார்!
சங்க இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தவர்
சாமானியருக்கும் விளங்கிட விருந்து வைத்தவர்!
கவிதை உறவில் கவிதை அலைவரிசை வடித்தவர்
கவிஞர்களை குன்றத்து விளக்காக ஒளிர்வித்தவர்!
புதுகைத் தென்றலில் பத்தாண்டுகளுக்கு மேலாக
புதுமையாக இலக்கியத்தை வடித்து வந்தவர்!
மனிதநேயம் எனும் மதுரை மாத இதழில்
மாண்புகள் மிக்க தகவல்கள் தந்தவர்!
நேரத்தை திட்டமிட்டு செலவழித்து வந்தவர்
நேரத்தை எப்போதும் விரையம் செய்யாதவர்!
சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி
சிரித்த முகத்துடன் அன்பு செலுத்தியவர்!
பேராசிரியராகப் பெரும்பணி ஆற்றிய பெருந்தகை
பைந்தமிழுக்கு அணி செய்திட்ட பேரறிஞர்!
கருத்துகள்
கருத்துரையிடுக