.மூங்கில்வனம் ! நூல் ஆசிரியர் : முனைவர் கவிஞர் கூடல் தாரிக், பேச : 99425 30284 நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.





http://www.tamilauthors.com/04/497.html  

.மூங்கில்வனம் !

நூல் ஆசிரியர் : முனைவர் கவிஞர் கூடல் தாரிக், 
பேச : 99425 30284
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி. 
 ஓவியா பதிப்பகம், 17-13-11, சிறிராம் வளாகம், 
காந்தி நகர் முக்கியச் சாலை, வத்தலக்குண்டு – 624 202.
பக்கம் : 88, விலை : ரூ.70.
*******
      நூலாசிரியர் முனைவர் கவிஞர் கூடல் தாரின் அவர்கள் கம்பம் இலாகி ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணிபுரிந்து கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு வருபவர். இந்த நூல் இவருக்கு மூன்றாவது நூல் முத்தாய்ப்பாக வந்துள்ளது.

      பதிப்பித்துள்ள இனிய நண்பர் வதிலை பிரபா அவர்களுக்குப் பாராட்டுக்கள். இந்த நூலை திருவள்ளுவப் பெருந்தகைக்கு காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு. வான்சிறப்பு படைத்தவர் வள்ளுவர். இந்த நூல் கவிதைகள் முழுவதும் மாமழையைப் போற்றியே எழுதி உள்ளார்.

      மழையின் சாயலில் தான் 
      இருக்கின்றார்கள்
      கருணை கொண்ட 
      மனிதர்கள் யாவரும்!

      நல்லோர்க்கு பெய்யும் மழை எல்லோர்க்கும்   
   என்பார்கள் ஆனால் இவரே நல்லோரே மழை என்கிறார் சிறப்பு!

      காய்களால் நிறைந்த 
      வெண்பாவை விடவும்
      சுவை மிகுந்து விளங்கும் 
      கனி தரும் மழை!

‘கவி மழையை விட கனியைத் தரும் மழை சிறப்பு என்ற ஒப்பீடு சிறப்பு. இலக்கணத்தையும் இயற்கை மழையையும் ஒப்பீடு செய்து வடித்த கவிதை நன்று.

காகமிட்ட எச்சங்கள் 
நீக்கப் போகும் மகிழ்ச்சியில்
      புன்னகைக்கின்றார்கள் 
சிலையாக மாறியிருந்த தலைவர்கள்.

காக்கா, புறா எச்சங்களால் தூசி படிந்த தலைவர் சிலைகள் மழை பெய்தால் சுத்தம் செய்யப்படுவதை உற்றுநோக்கி வடித்த கவிதை நன்று.

நாலு வயிறு நெறஞ்சா போதும்
      என்று வழக்கமான வார்த்தையை
      பக்கத்து வீட்டு அக்காவிடம்
      இன்றும் சொல்பவள்
      மழைக்காலத்தை 
மெருகூட்டுகின்றாள்!

பனியாரம் விற்கும் பெண் மற்றவரின் பசியாற்றி மகிழும் உயர்ந்த உள்ளத்தை பொதுநலம் புரிந்திடும் மழையோடு ஒப்பிட்டு வடித்த கவிதை சிறப்பு.

முகம் நிறைய மஞ்சளுடனும்
      குலுங்கும் வளையல்களுடனும்
      மழையற்ற இரவில்
      வீட்டை விட்டு வெளியேறியிருந்தான்
      அவளாக மாற நினைத்த அவன்!

திருநங்கையாக தனக்குள் இயற்கை மாற்றம் நிகழ்வதை உணர்ந்து அதனை அங்கீகரிக்காத பெற்றோர்களிடமிருந்து பிரிந்து தனியே வெளியே பயணப்படும் வலியை கவிதையாகப் பதிவு செய்துள்ளார்.  பாராட்டுக்கள். கடைசி வரி முத்தாய்ப்பு.

“அவளாக மாற நினைத்த அவன்

      ஒரு கவிதையைப் போல்
      சட்டெனத் தோன்றுகிறது மழை. 
      ஈரமடைகின்றது
      மனம் முழுவதும்!

கவிதையைப் போல் என்று மழையை ஒப்பிடுகின்றார். இயற்கை நேசர் என்பதால் மழையை  துளித்துளியாக ரசித்து மழைக் கவிதைகளை கவிமழையாக வழங்கி உள்ளார். கவிதைகளை படித்து முடித்ததும் மழையில் நனைந்த உணர்வை வாசகர்களுக்கு உண்டாக்கி வெற்றி அடைந்துள்ளார். நூலாசிரியர் முனைவர் கவிஞர் கூடல் தாரிக்.

மழையைப் போலவே 
இனிமையாகத் தான் இருக்கின்றது
மழைக்காலத்து 
நிகழ்வுகளும்!

      மழை பெய்து கொண்டு இருக்கையில் மழையை ரசித்துக் கொண்டே சூடான   தேநீர் பருகினால் அந்த நேரமும்   மிக இனிமையாகி விடும். தேநீரும் ருசியாகி விடும். 
                
மழையைப் போலவே மழைக்கால நிகழ்வுகளும் இனிமை என்பது உண்மை தான்.

      மழையற்ற காலங்களிலும் 
      பொழிந்து
      கொண்டிருக்கின்றன 
      அன்பு மழைகள் ஏதேனும்!

      காதலியின் அன்பு, 
 மனைவியின் அன்பு   மழலையின் அன்பு ,பெற்றோரின் அன்பு,  சகோதரியின் அன்பு,இப்படி அன்பு மழையில் நனைவதும் சுகம் தான்.
             
என்பதை உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள்.

நீண்ட கரங்களால் 
வானம் நம்மை அள்ளும்
      பெருநிகழ்வைத்தான் 
கடந்து செல்கின்றோம்
      மழை என்னும் 
ஒற்றைச் சொல்லால் !

      வானிலிருந்து பல்லாயிரும் மைல்கள் பயணித்து பூமிக்கு வரும் மழை   அதிசயம் தான். 
     
      
வரும் மழையால் பட்டமரங்கள் துளிர்க்கின்றன.  கடலில் பெய்த மழைத்துளிகளோ பயனற்றவையாகி விடுகின்றன. நினைத்துப் பார்த்தால் மழை ஒரு பிரமாண்டம் தான். ஒற்றைச் சொல்லில் சுருக்கி விடுகிறோம் என்பது உண்மையே.

நீயே மழையானபின்
      எப்படி
      குடை பிடிப்பது?

காதலியை நீயே மழையானபின் நான் எப்படி குடை பிடிப்பேன் என்ற கேள்வி காதலிக்கு மகிழ்ச்சி தருகம் கேள்வி. குடை பிடிப்பது என்பது மழைக்கான கருப்புக்கொடி என்று கவிப்பேரரசு சொன்ன வைரவரிகளும் நினைவிற்கு வந்து போயின. கற்பனையில் எண்ணத்தில் கவிதை படிக்கும் போது மழைக்காட்சிகளும் வந்து போயின.

வனத்தின் இருப்பை 
உயிர்ப்பிக்கிறது
      அமைதியாய் ஆர்ப்பரிக்க்ம் 
பேரருவி!

காட்டில் உள்ள அருவி என்பது காட்டின் இருப்பை உயிர்ப்பிக்-கின்றது என்பது உண்மை தான். அந்த பேரருவி உருவாவதற்கு காரணம் மழைத்துளிகள் தான் என்பதையும் நினைவூட்டுகின்றார் கவிதையில்.

பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம் குறியீடு படிமம் என்று புரியாத கவிதைகள் எழுதாமல் படிக்கும் வாசகர்களுக்கு எளிமையாகப் புரியும் வண்ணம் இயல்பான சொற்களின் மூலம் இயற்கையின் பிரமாண்டமான மழையை பல்வேறு கோணங்களில் படம்பிடித்துக் காட்சிப்படுத்தி மழையின் மகத்துவத்தை கவிதை வரிகளில் வடித்துள்ளார் பாராட்டுக்கள். மாமழை போற்றிய முனைவர் கூடல் தாரிக்கை போற்றுவோம்.


கருத்துகள்