தமிழகமே தமிழ் மறந்தால் தமிழ்மொழியை யார் படிப்பார்? கவிஞர் இரா. இரவி. (மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு)




தமிழகமே தமிழ் மறந்தால் 
தமிழ்மொழியை யார் படிப்பார்? 
கவிஞர் இரா. இரவி. 

(மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் 
கவிமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு) 

****** 

தமிழை விருப்பப் பாடத்தில் ஒன்றாக்கி 
தமிழைத் தவிர்த்திட சதி நடக்குது! 

அரசுப்பள்ளிகளில் வாழ்ந்திட்ட தமிழ்வழிக் கல்வியை 
அதற்கும் மூடுவிழா நடத்தி வருகின்றார்! 

தமிழ்நாடு என்று பெயர் வைத்துக் கொண்டு 
தமிழுக்கு கேடு செய்வது முறையோ? 

ஆங்கில மோகம் தலைவிரித்து ஆடுகின்றது 
அறிவுகெட்ட செயலுக்கு முடிவு கட்டுவோம்! 

ஆங்கிலம் என்பது ஒரு மொழி அவ்வளவுதான் 
அறிவை வளர்க்க தமிழே உதவிடும்! 

ஆங்கில வழிக்கல்வி படிப்பதை பலரும் 
அறிவுடைமை என்று கருதுகின்றனர் மடையர்! 

அப்துல் கலாமின் ஆரம்பக்கல்வி என்பது 
அழகுதமிழில் அமைந்ததை அறிந்திடுங்கள்! 

மயில்சாமி அண்ணாத்துரையின் ஆரம்பக்கல்வி 
மண்ணில் தமிழ்வழிக்கல்வி அறிந்திடுங்கள்! 

சாதித்த சாதனையாளர்கள் அனைவரும் 
சாதாரணமாக அரசுப்பள்ளியில் பயின்றவர்களே! 

தமிழ் நாட்டில் தமிழ் படிக்கவில்லை என்றால் 
தரணியில் தமிழ்நாட்டை யாரும் மதிப்பார்களா? 

தமிழர்களின் அடையாளம் தமிழ் அறிந்திடுக 
தமிழர்களின் முகவரி தமிழ் அறிந்திடுக 

தமிழ்நாடு என்றால் தமிழை நாடு என்று பொருள் 
தமிழை நாடாமல் ஆங்கிலம் நாடுவது மடமையிலும் மடமை!

கருத்துகள்