படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! நன்றி .திரு .தமிழ் அரசு !



படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
நன்றி .திரு .தமிழ் அரசு !
இன்றைய சிந்தனை..(11.05.2019)..
..........................................................

'' நம்மிடம்தான் உள்ளது.....’’
................................................

ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அதிக வசதிகளோ, பொருளோ தேவையில்லை.மகிழ்ச்சி என்பது ஒருவரின் மனதைப் பொருத்தது.

எதற்கு எடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டு கவலைப்படுபவனை உல்லாச மாளிகையில் வைத்தாலும் அவன் முகத்தை தொங்க வைத்துக் கொண்டு கவலையோடுதான் இருப்பான்.

ஒரு அரசனுக்கு அரசு போகங்கள் இருந்த போதிலும் மன மகிழ்ச்சி ஏற்படவில்லை.அவன் ஒரு ஞானியை சந்தித்து மகிழ்ச்சியாக வாழ வழி சொல்லுங்கள் என்றான்.ஞானி அவனுக்குஅறிவுரை சொல்ல விரும்பவில்லை.

அனுபவத்தில் அவன் உண்மையை அறிந்து கொள்வதற்கு ஒரு வழி செய்தார்.

மன்னனைப் பார்த்து அரசே,

”மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கும் ஒருவனது சட்டையை நீ அணிந்து கொண்டால் அந்த மகிழ்ச்சி உன்னையும் தொற்றுக் கொள்ளும்.வேண்டுமானால் அதற்கு முயற்சி செய்து பார் என்றார்.

விடுவானா அரசன்,தன் நாட்டிலும்,பிற நாட்டிலும் மகிழ்ச்சியோடு இருப்பவர்களைத் தேட ஆரம்பித்தான்.
யாருமே தான் மகிழ்ச்சியோடு இருப்பதாக சொல்லவில்லை.

ஒவ்வொருவரும் வரும் தங்களுக்குள்ள ஒரு கவலையை,ஏக்கத்தை.துன்பத்தை அவனிடம் சொன்னார்கள்.

மனமுடைந்துபோன மன்னன்,ஒரு நாள் தன் குதிரையில் ஏறி ஒரு கிராமத்தின் பக்கமாக சென்றான்.உச்சி வேலை.சித்திரை வெயில் மண்டையை பிளந்தது.அந்த நேரத்தில் ஒரு விவசாயி.தன் நிலத்தை உழுது கொண்டு இருந்தான்.

அத்தோடு தன் கட்டைக் குரலில் ஒரு பாட்டை வேறு பாடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டான்.அதைப்பார்த்த மண்ணுக்கு தகித்த சூரியன் அவனுக்கு நிலவு காய்வதைப் போன்ற குளிர்ச்சியைத் தந்ததோ என்று தோன்றியது.

இவன் இல்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றானே?என்று வியந்த மன்னன் அவனை தன் அருகில் அழைத்தான்.விவசாயியும் பணிவோடு அரசனிடம் வந்தான்.

நீ மகிழ்ச்சியோடு இருக்கிறாயா..? என்று அவனைப் பார்த்து கேட்டான் மன்னன்.ஆமாம் ஐயா,நான் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றேன் என்றான் அந்த விவசாயி.

அதற்கு என்ன காரணம் என்ன..? உன்னிடம் நிறைய பணம் உள்ளதா?

பணமா?அதை நான் கண்ணால் கண்டு பல நாள் ஆயிற்றே என்றான் விவசாயி.

ஏராளமான நிலபுலன் வசதி இருக்கிறதா..?

இல்லை.ஐயா ,அதோ தெரிகிறதா ஒரு துண்டு நிலம். அது மட்டுமே என்னுடையது.அதை உழுவதற்கு கூட என்னிடம் மாடுகள் இல்லை.என் உறவினர்களிடம் இருந்து இரவல் வாங்கி வந்து நிலத்தை உழுது வருகிறேன் என்றான்.

வசதியே இல்லாத நீ எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றாய்..?

தெரியவில்லை ஐயா,ஆனால் நான் மகிழ்ச்சியுடன் தான் இருக்கின்றேன் என்றான் அந்த விவசாயி.

அப்படியானால் எனக்கு நீ ஒரு உதவி செய்வாயா?
என்றான் அரசன்.

என்ன செய்ய வேண்டும் என்றான் அந்த விவிசாயி.

உனது சட்டை ஒன்றை எனக்குக் கொடு என்று அவனிடம் கெஞ்சிக் கேட்டான் அரசன்.

இதைக் கேட்ட அந்த விவசாயி,சிறிது நேரம் விழித்தான்.பிறகு சட்டையா,அதை நான் ஒரு போதும் அணிந்தது இல்லையே.என்னிடம் சட்டை என்று ஒன்று கூட இல்லையே என்று சொல்லிவிட்டு குழுந்தையை போல சிரித்தான்.

மகிழ்ச்சியாக இருப்பவன் சட்டை போட்டு இருப்பான்.
அந்த சட்டையை போட்டுக் கொண்டால் தனக்கும் மகிழ்ச்சி வரும் என்ற அரசனின் நம்பிக்கை அந்த நிமிடத்தில் தவிடு பொடியானது.

மகிழ்ச்சியாக இருப்பதற்கு வசதி தேவையில்லை என்பதைப்போலவே,சட்டையும் தேவையில்லை.

அவற்றில் எல்லாம் மகிழ்ச்சியை யாரும் கட்டி வைத்துக் கொள்ள முடியாது என்று அவனுக்கு அப்போதுதான் புரிந்தது..

ஆம் நண்பர்களே...

மகிழ்ச்சி என்பது வேறு எங்கும் இல்லை.நம்மிடம்தான் இருக்கிறது..

உங்கள் வாழ்வின் மிக அழகான கணங்கள் நீங்கள் மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டு இருந்த கணங்கள் அல்ல.

நீங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கணங்களே..

ஒவ்வொரு நிமிடமும் ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்போம்.

கருத்துகள்